வாழ்தல் இனிது…
கோவிட் 19…
உலகெங்கும் உயிரச்சம்…
சாவு எண்ணிக்கை 90000 ஆயிரத்தை தாண்டி நிற்கிறது…
மானுட குலத்திற்கு எதிராக கரோனா தொற்றும்… அதற்கெதிராக மானிட குலமும் போரிட்டு வரும் சூழலில்…
யாரோ சொன்ன இந்த வாக்கியத்தை வாசிக்கையில் அவ்வளவு எளிதாக கடந்து விட முடிகிறதா என்ன??
” வாழ்க்கை மரணத்தை பார்த்து கேட்டது மக்கள் என்னை விரும்புவது ஏன்?
உன்னை வெறுப்பது ஏன்?
மரணம் சொன்னது ஏனென்றால் நீ ஒரு அழகிய பொய்..
நான் ஒரு தீர்க்கமான உண்மை …”
தீர்க்கமான உண்மைதான் மரணம்..
ஆனால் இந்த எளிய உண்மையை யோசிக்கையில் அது மனித வாழ்வின் சாரத்தை நம் பரிசீலனைக்கு விரித்து வைத்து விடுகிறது…
வாழ்வின் நிறைவு என்பது எது வரை?
இயற்கை மரணம் நிகழும் வரை…
அத்தகைய நிறைவினை அனைவரும் பெற வேண்டும் என்பதே தற்போதைய விருப்பம்..
அந்த நிறைவு பெறுவது வரை வாழ்வின் மீதான பற்றுதலிருந்து வீழ்ந்து விடாமல் துணிவைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்வது தான் மகத்தான சவால்…
என்கிறது திருவண்ணாமலையைசார்ந்த எழுத்தாளர் கு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் எழுதியுள்ள “சா ” ( ஆதி வெளியீடு) எனும் புத்தகம்…
புத்தகத்தின் தலைப்பே வாங்கவும் / வாசிக்கவும் தூண்டியது…
” சா ” சாதல் — சாவு மரணித்தல்….
எனும் பொருளைக் குறிக்கிறது..
வாழ்வின் குரூரத்தை தொடர்ந்து சந்தித்து உறவுகளை எல்லாம் சாவுக்கு பறி கொடுத்துவிட்ட துயர் தாளாத ஒருவன் தற்கொலைக்கு முயல்வதும்..
அந்த முயற்சியின் வழியே வாழ்வு / மரணம் இரண்டும் தொடர்பான விசாரணையை மேற் கொள்ளுவதுமே இக் குறுநாவல்…
பத்தாவது மாடியில் நின்று குதித்து தற்கொலை செய்து கொள்ள நிற்கும் அவனுக்கு அங்கிருந்து கீழே பார்த்தவுடன் தெரியும் காட்சி சுவாரஸ்யம் தந்து விடுகிறது…
அந்த சுவாரசியமே குதித்து என்ன ஆகிவிடப் போகிறது? என தற்கொலை முடிவை அப்போதைக்கு தள்ளிப்போட வைத்து விடுகிறது..
“பத்தாவது மாடியில் இருந்து கீழே பார்ப்பது சுவாரசியமாக தான் இருக்கிறது.இங்கிருந்து பார்த்தால் பெரிய மனிதர்கள் எல்லாம் சிறியவர்களாக தெரிகிறார்கள்.. பெரியவர், சிறியவர் என்ற எந்த வேறுபாடும் தெரியவில்லை.. மனிதர்கள் அணிந்திருக்கும் விலை உயர்ந்த ஆடைகளின் வேலைபாடுகள் எதுவும் தெரியவில்லை.. அதனால் யார் எளியவர்கள்
யார் செல்வந்தர்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை அதேபோல் கீழே இருக்கும் மனிதர்களின் முகங்களும் எனக்கு சரியாக தெரியாத காரணத்தினால் அவர்களின் முகங்கள் வெளிப்படுத்தும் எந்த குணமும் எனக்கு தெரியவில்லை”
தற்கொலைக்கு தேர்ந்தெடுத்த பத்தாவது மாடியே சுவாரஸ்யத்தையும் தந்துவிடுகிறதே…
தற்கொலை செய்துகொள்ள விரும்பும் அவன் நாவல் முழுவதும் தனது மனசாட்சியுடன் மரணம் தொடர்பாக உரையாடிக்கொண்டே வாழ்ந்தும் கொண்டிருக்கிறான்…
தனது விருப்பத்தினூடே மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் அவன் வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும் சாவதற்கு கோழைத்தனம் தான் வேண்டுமென உணர்ந்தவனாக,
உயிர் வாழ்தலின் தேவையை ருசிக்க விரும்புகிறவனாக,
வாழ்தல் என்பது அனுபவித்தல் என அறிந்தவனாக,
வாழ்வின் நிறைவு இயற்கை மரணம் தான்…
மரணிப்பது வாழ்வதைக் காட்டிலும் சிறப்புடையது அல்ல…
வாழ்வை அதன் இயல்பான போக்கிலே சந்திப்பது எனும் புள்ளியை வந்தடைகிறான்..
நாவலின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்திலும் மரணம் தொடர்பான ஆளுமைகளின் மேற்கோள் வாசகங்கள் கையாளப்பட்டு இருப்பது பொருத்தமாக இருக்கிறது..
நாவலின் வடிவமைப்பு கச்சிதம்..
கதை மாந்தனின் மனசாட்சியுடனான உரையாடலின் வழியே வாழ்வின் நிறைவு இயற்கை மரணமே என்பதை லாவகமாக வெளிப்படுத்தியுள்ள எழுத்தாளர் கு.ஜெய பிரகாஷ் அவர்களின் கதையாடல் எதிர்காலத்தில் அவரை இன்னும் கவனத்திற்குரியவராக உயர்த்தும் என்பது உறுதி…
வாழ்தல் இனிது