இதுதான் தொடக்கம் இதுதான் பயணம் இதுதான் முடிவு என்று வழக்கமான சுபம் போடும் கதைகளைப் போலில்லாது, வழக்கமான திரைப்படங்களைப் போலில்லாது புதிதாகச் சொல்கிறது “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல். ஆனால் அத்தனையும் எதார்த்த உலகில் நிகழ்வதாக இருக்கிறது.
அப்பா ஒருமுறை ராதிகாவை வழியில் மறந்து போய்விட்டார். அவளுக்கு அன்று 10 வயது. இந்த இடத்திலிருந்து ராதிகாவின் துயரக்கதை தொடங்குகிறது. செருப்போ, குடையோ மறந்துவைத்து விட்டுப் போவது போல் அவளை அப்பா மறந்து விடுகிறார். மகளை வழியில் மறந்துவிட்ட அப்பா எங்கு போய்விட்டார். பெருவழியம்பலம் என்ற பெயர் உள்ள மதுவருந்தும் பாருக்கு போய் குடித்துவிட்டு பைங்குளம் பார்வதி என்ற வேசியுடன் சல்லாபிக்க போய்விட்டார்…
இப்படித்தான் தொடங்குகிறது ராதிகாவின் கதை. இளம் பிராயத்திலேயே ஒரு மரம் வெட்டுபவனால் துயருக்குள்ளான ராதிகா, நெடுஞ்சாலையில் அம்மா.. வென அழைத்து அழுதபடி உடையேதும் அணியாமல் ஓடும் ஒரு பத்து வயது சிறுமியின் சித்திரத்தோடு தொடங்குகிறது. அந்தச் சித்திரம் மற்றொரு காலத்தில் இன்னொரு படிவம் நோக்கி நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.
வியட்நாம் போர்க்காலத்தில் அமெரிக்கா பொழிந்த நெருப்பு குண்டுகளால் தீக்காயம் பட்டு உடையேதுமின்றி பாதையில் ஓடுகிற சிறுமியின் சித்திரம், அப்பாவின் மறதியிலும், அமெரிக்காவின் நெருப்பு குண்டிலும் இரையாகிப் போவது எப்போதும் பெண்ணாகவே இருப்பது ஏன் எனும் கேள்வி எழுப்புகிறது.
இந்த கதையின் கதாபாத்திரம் ராதிகா முழுவதுமாக நம்மை ஆக்கிரமித்து நிற்கிறது. ஆண்கள் எல்லாம் ஆங்காங்கு உதிர்ந்து விடுகிறார்கள். நாவலை படித்துக் கொண்டுபோக ராதிகா வெறும் கதாபாத்திரமாத்திரமாக இல்லாமல் பெண்ணினம் முழுவதற்குமான பெருந்துயராக மாறுவதை அமைதி இழந்தவர்களாக காண்கிறோம்.
மீண்டு திரும்பி, காயங்கள் சரியாகி, மீண்டும் அந்த ஏமாற்றும் வார்த்தைகளிடமே ஏமாந்து நிற்கிறாள் பெண் என்று காலம் காலமாய் புரிபடாத சூட்சுமத்தின் சூழலுக்குள் இட்டுச் செல்கிறது இக்கதையும்.

ஒவ்வொருத்திக்குள்ளும் ஏன் இப்படி என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனாலும் காலம் காலமாக யாருக்கும் புரிவதில்லை. பெண்ணாகிய எனக்கும் கூடத்தான். இந்நாவலில் வரும் இன்னொரு கதாபாத்திரம் கிறிஸ்டி ஒரு மன நோயாளி. பைத்தியமாவதை தடுக்க மின்சார அதிர்வு தரப்பட்டதால்தான் மனநோயாளி ஆகிவிட்டதாக அவன் சொல்கிறான். என்ன ஒரு முரண்.
ஒரு பெண்ணை இப்படித்தான் ஒரு உலகம் அணுகுகிறது என்பதை பூடகமாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு கட்டத்தில் ஏமாற துணிபவளாகவே இருக்கிறாள். ஏமாற்றத்தின் பின்னான பாதிப்புகள் அதன் பிறகு நிகழும் கொடுமைகள் அதற்குப் பிறகான வலிகள், குருதி படிந்த காயங்களுக்கு பின்னும் அந்த மருந்திடும் வார்த்தைகளை நம்பத் தொடங்குகிறாள். எல்லாவற்றையும் மறக்க தொடங்குகிறாள். மீண்டும் காயப்படுகிறாள். ஆனால் காயம் செய்பவர்களோ எப்போதும் காயம் செய்ததை மறந்து விடுகிறார்கள் மீண்டும் மீண்டும் காயப்படுத்தவே பார்க்கிறார்கள். கிறிஸ்டி அப்படித்தான். அதோடு அவன் மறதியும் வேறு…
மகளை மரம் வெட்டுபவனிடம் தூக்கிக் கொடுத்து விட்ட ராதிகாவின் அப்பா பைத்தியம் ஆகி தன் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கிறான். கிறுக்கும் பாலுணர்வும் இங்கே ஒரே உணர்வின் இரண்டு பக்கங்கள் அங்கு மரணத்தின் இன்னொரு பக்கமும் ஏற்படும் போது அது முழுமை அடைந்து விடுகிறது.
மாடியின் வெளிமுற்றத்தில் கிறிஸ்டியோடு சேர்ந்து உறங்கிய ராதிகா விடியலில் கண்விழிக்கிற போது நாவல் முடிகிறது. அப்போதுதான் அவள் தான் முழு நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து கொள்கிறாள். அவள் உடுத்தியிருந்த ஆடையும் எடுத்துக் கொண்டு வெளி கதவை பூட்டிவிட்டு கிறிஸ்டி போய் விட்டிருந்தான். மாடியின் வெளி முற்றத்திற்கு சுற்றிலும் உள்ள பலமாடி கட்டிடங்களின் கதவுகளும் ஜன்னல்களும் அவளுடைய நிர்வாணத்தை நோக்கி திறந்து இருந்தன. உடலை மறைக்க துணி எதுவும் இல்லாமல் வெளியே போக வழியும் இல்லாமல் ராதிகா அந்த மாடியில் வெளிமுற்றத்தில் திடுக்கிட்டவளாய் நிற்கிறாள். ஒளிந்து கொள்ள ஓரிடத்தையும் காணவில்லை. எந்த நிழலும் மறைவும் இல்லை. தன் இரு கைகளாலும் உடலை மறைக்க முயன்றவள் ஒரு மூலையில் சுருண்டு கிடக்கிறாள். வெட்கம் கொண்டவளாய் ஆதரவற்று நிற்கும் ராதிகாவின் காட்சி தன் தீவிரத்தால் நம்மை பதற செய்கிறது. ஆதரவற்றவளும் துன்புறுத்தப்பட்டவளுமான ஒரு பெண்ணின் அக்கோலம் எல்லா தத்துவ விளக்கங்களையும் கடந்து நிற்கிறது.
மரவெட்டியின் கைகளில் மாட்டிய போதும் சரி கிறிஸ்டியினால் கைவிடப்பட்டு கிடக்கும் போதும் சரி அவள் நிர்வாணமாகவே கைவிடப்படுகிறாள். என்றோ பகிர்ந்த அன்பான ஒரு சில வார்த்தைகளுக்காகவும், ஆதரவற்ற வேளைகள் நீண்ட அந்த கரங்களுக்காகவும் அந்த பைத்தியக்காரனின் பாதக செயலுக்கு பிறகும் அவன் கைகளில் மீண்டும் தன்னை ஒப்படைத்து நிற்கிறாளே அதுதான் இந்த ஒட்டுமொத்த பெண்ணினத்தின் பிரதிபலிப்பாகிறது.
அவளுக்கு எங்கும் தீர்வுகள் கிடைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அவள் நிர்வாணமாகவே கைவிடப்படுகிறாள். ஆடைகள் மட்டுமல்ல ஆதரவுமற்ற நிர்வாணம் அது.
யாராலும் ஆற்ற முடியாத.
யாராலும் தேற்ற முடியாத
யாராலும் காப்பாற்றி விடமுடியாத அந்த நிர்வாணத்தின் மீதுதான் அவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது.
நூலின் விவரங்கள்:
நூல்: “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல்
ஆசிரியர்: கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்)
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை: ரூ.150
எழுதியவர் :
✍🏻 – சுமித்ரா சத்தியமூர்த்தி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

