சிறுகதைச் சுருக்கம் 65: க.சீ.சிவகுமாரின் *குரங்குப் பணியாரம்* சிறுகதை

Writer Ka. Si. Sivakumar (க.சீ.சிவகுமார்) Short Story Kurangu Paniyaram (குரங்குப் பணியாரம்) Synopsis Written by Ramachandra Vaidyanath.கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

உழைப்பையே மூலதனமாகக் கொண்ட மக்களும்  அவர்கள் சார்ந்திருக்கக்கூடிய சந்தைப் பொருளாதாரத்தின் நுட்பமும் கதைக்கீற்றாய்  வெளிப்படுகிறது. 

குரங்குப் பணியாரம்

க.சீ.சிவகுமார்

கிளைகள் எங்கும் காம்புகள் வைத்து காய்களைச் சுரக்கின்றன மரங்கள்.  முன்பின் என்ற பேதம் இல்லாது எதிர்பாராத இடங்களில் காம்புகள் வைத்த மரங்கள்.  முருங்கை மரங்கள் நிறையக் காய்ப்பதாய் இருக்கிறது இப்போதைய தோட்டம்.  இந்த மலிவுக்காலத்தில் வாய்க்காலின்மீது பச்சை சிறுகுன்றுபோல் அம்பாரமாய்க் குவிந்து கிடக்கின்றன.  குச்சிப் பச்சையைத் துருத்தியவாறு பொருத்திய கேரியரோடு டீவிஎஸ் 50 வாய்க்காலுக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.  தென்னம் பாளையைக் கோணி ஊசியால் வகிர்ந்து சணல் பருமன் உள்ள நாராக்கி காய்களைக் கந்தசாமியும், குங்குமலட்சுமியும் கட்டிக் கொண்டிருந்தனர்.  

“பறிச்சது போதும் வாடா”  என்ற கந்தசாமியின் குரல் கேட்டதும், அன்புச் செல்வனும் வாய்க்கால் அருகில் வந்தமர்ந்து காய்களைக் கட்ட ஆரம்பித்தான்.

குங்குமலட்சுமி “கத்தை ரண்டு ரூவாயிக்குப் போனால்கூட தேவுல” என்றாள்.

“நம்ம சந்தையிலேயே ஒர்ரூவாயிக்குத்தான் போச்சு.  இன்னிக்கு மாலமேட்டுலயாவது பாப்பம்” என்ற கந்தசாமி அன்புச்செல்வனைப் பார்த்து “டே, விலைய உட்டுக்குடுத்துப் போட்டுடாத” என்றார்.  

அவனுக்கு சந்தைக்குப் போகவே மனசில்லை.  கொண்டுபோகிற கூலிக்குக்கூட கட்டாது.  என்ன பண்றது காய் மூணுரூபா நாலு ரூபா விக்கும்போது நம்ம தோட்டத்திலே காய்க்கறதில்ல.  இப்படி சீப்பட்டு சீரழிஞ்சு கிடக்கியில மானாங்கண்ணியா எக்களிக்குது.  காய்களை கட்டி முடிக்கவும் நாற்பது கத்தைகள் ஆயிற்று.  கத்தை ஒவ்வொண்ணுக்கும் சுமார் இருபத்தைந்து காய்கள் இருக்கும்.  டீவிஎஸ்ஸின் கோரியரில் வைத்துக் கட்டியானதும் காய்களின் முழுப்பொறுப்பும் இருபத்து மூன்று வயதுள்ள அன்புச் செல்வனைச் சார்ந்தது.  

“மாலமேட்டு வரைக்கும் பெட்ரோல் இருக்குமாங்கப்பா?”

“இப்பத்தான் ரிசர்வ் விழுந்தது.  பத்து கிலோமீட்டர்தான் இருக்கும்,  போ வரும்போது பெட்ரோல் அடிச்சிட்டு வந்துரு.”

ஒவ்வொருமுறை வண்டி ஓட்டிப் போகும்போதும் பாதியில் நின்றுபோய் கழுத்தறுத்து விடக்கூடாது என்று பயமாகவே இருக்கும்.  நல்ல வேளையாய் இதுவரை அப்படி ஆனதில்லை.  அன்றைக்கு அப்படித்தான்.  ஒரு ஐம்பத்தைந்து வயதுக்காரர் மாமரத்துப்பட்டிக்கு அருகில் சண்முகசித்தாறின் ஓடுபாலத்தில் ஏராள முருங்கைக்காய்களோடு மொபட்டைத் தள்ளிக் கொண்டு போனார்.  கொண்டு சேருவதற்குள் சந்தை முடிந்துவிடக்கூடாது என்ற பதற்றம் நெற்றிப் பொட்டில் வியர்வையாய்  வழிந்து கொண்டிருந்தது.  தொடுவானம் வரை நீண்டிருந்த கருத்த தார்த்தடத்தில்  மூச்சிரைக்க அவர் நடந்து கொண்டிருந்தார்.  சந்தையை அடைந்து விட்டால் பிறவிக்கடலைக் கடந்த ஆசுவாசத்தை அவர் பெறக்கூடும். 

Writer Ka. Si. Sivakumar (க.சீ.சிவகுமார்) Short Story Kurangu Paniyaram (குரங்குப் பணியாரம்) Synopsis Written by Ramachandra Vaidyanath.
Writer Ka. Si. Sivakumar (க.சீ.சிவகுமார்)

காய்களை விற்றுவிட்டுத் திரும்புகிறவர்களுக்கென்று தனிமுகம் உண்டு.  அப்படி முகத்தில் தெரியாவிட்டாலும் சைக்கிளிலோ மொபட்டிலோ பின்னால் உள்ள கேரியர், மூங்கில், தப்பை, கயிறுகள் இவைகளைக் கொண்டு அறியலாம். எதிரில் தென்பட்ட சைக்கிள் ஆசாமியிடம் அன்புச்செல்வன் பெருவிரலை உயர்த்திக் காண்பித்தான்.  அது வெற்றி மமதையின் அறிகுறி ஒன்றுமல்ல. கத்தை என்ன ரேட்டுக்குப் போகுது என்ற விசாரிப்புதான். “அது எட்டணா, எட்டணா” என்றவாறு அவர் எதிர்கடந்து போனார்.

மாலமேட்டுக்கான கடைசித் திருப்பத்தில் திரும்பினான். ஆளுங்கட்சி ஊர்வலம்போல ஏராளம் வண்டிவாசிகள் நின்றிருந்தன. கொடிகளுக்குப் பதிலாக முருங்கைக்காய்க் கற்றைகளுடன் நின்றிருந்ததுதான் வித்தியாசம்.  கோரிக்கையற்றுக் கிடந்தன மரத்தில் செடித்த காய்கள். எதிர்பார்ப்பு பூத்த முகங்களோடும் பொடித்த வியர்வையோடும் விவசாயிகள் நின்று கொண்டிருந்தனர். பின்னும் ஆட்கள் வந்து கொண்டிருந்தனர் காயும் கையுமாக. பார்வையிடல்களோடு வியாபாரிகள் இந்த வியூகத்திற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.  

“காய்ச்சாலும் இப்படி அநியாயத்துக்குக் காய்க்கப்படாது.”

“ஆய்க்கவுண்டன்பாளையம், நஞ்சத்தலயூருன்னு ஆத்துப்பாசனத்துக்காரனங்களெல்லாம் முருங்கமரம் வெச்சுத்தே, இப்படி சம்பலாகிப் போச்சு.”

“இப்ப இந்த கருமாந்தரம் ஆந்தராவுலயும் வெளைய ஆரம்பிச்சுருச்சாம்ப்பா, அதான் இப்பிடி”.

“இந்தெட்டு ஒண்ணும் பாத்துட்டு மரத்த வெட்டி எறிஞ்சுட வேண்டியதுதான்.”

உலகத்தைத்  தொழுது பின்வரச் செய்கிற உழவர்கள், விலை மலிவுக்கெதிரான கலகக் குரல்களைக் காற்றில் பதிவு செய்து கொண்டிருந்தனர். வாங்குகிறவர்கள் கடந்து போகிறபோது “ஏப்பா நம்முளுத வந்து பாரு” என கிராக்கிக் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உரிமையில் அழைத்துக் கொண்டிருந்தனர்.  

அன்புச்செல்வனுக்கு அருகில் ஒரு பெண் சைக்கிளில்  வந்து நின்றாள்.  கேரியரில் முருங்கைக்காய் வைத்திருந்தாள்.  முகத்தில் வசீகரம் வைத்திருந்தாள். அன்புச்செல்வனுக்கு இந்தநேரம் யாரும் விலைகேட்டு வந்துவிடக்கூடாதே என்றிருந்தது.  இப்படியான சமயங்களில் அடிமாடு பழைய இரும்பு இப்படி எதன் விலைக்கும் அவன் பொருளை விற்றுவிடுவான்.  பணத்திற்கு முன்னால் சிறு சலனங்களை வெல்லுகிற பக்குவம் இன்னும் வாய்க்கவில்லை.  இந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணி அம்மாவுக்கு துணையாய் விவசாயத்தில் போட்டுவிட்டால் என்ன என யோசித்தபோது நெஞ்சுக்குள் மஞ்சளாய் ஆவாரம் பூவொன்று ஆடியது.  அவன் முறுவலித்தான்.

கத்தைகள் நாப்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாய் வரையிலும் போய்க் கொண்டிருந்தன.  

பொங்கும் காலம் என ஒன்றிருந்தால் மங்கும் காலம் என ஒன்றிருக்கும்.  காய்கள் குறைந்து விலை கிராக்கியான நாளில் இவ்விவசாயிகளே உற்பத்தி செய்து தர வேண்டுமாகையில் ஏதோ ஒரு ரேட்டுக்கு வியாபாரிகள் வாங்கித்தான் ஆக வேண்டும.

கிட்டத்தட்ட ஆயிரம் காய்களுள்ள நாற்பது கத்தைகளையும் இருபத்திரெண்டு ரூபாய்க்கு விலை முடித்தான்.  அருகாமைப் பெண்ணை மனம் கழுவிவிட்டு ஆமை வேகத்தில் வழிவகிர்ந்து சந்தைக்குள் ஓட்டினான்.  வாதநாராயண மரத்தடி ஒன்றில் நிழல் சாட்சியாக காயை இறக்கிப் போட்டுவிட்டு இருபத்திரெண்டு ரூபாயை பெற்றுக் கொண்டு திரும்பினான்.  சந்தை ஒப்பந்ததாரர் என்.ஆர்.பியிடம் சுங்கத் தொகை ரூ 4 கொடுத்தான்.

சந்தையிலிருந்து வெளிவந்து மேற்குப் பக்கத்திலிருக்கிற தேநீர்க்கடைக்குள் நுழைந்தான்.  போண்டா தின்று டீ குடித்து கோல்ட் பில்டர் புகைத்தான்.  திட திரவ வாயு நிலையிலான இவ்வினங்களுக்கு ஐந்து ரூபாய் செலவானது.  பஞ்சர் கடையில்  முறைசாரா விற்பனையின் கீழ் அரை லிட்டர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டான் பதினெட்டு ரூபாய்க்கு.  முருங்கைக்காய் இருபத்திரெண்டு ரூபாய்.  மொத்தச் செலவு இருபத்தியேழு ரூபாய்.  நிகர நட்டம் ஐந்து ரூபாய்.  இந்தச் செவ்வாய்கிழமையில் இவ்விதமாக மூன்று பேரின் உழைப்பு முடிந்திருக்கிறது.  இந்தப் புதிரை விளக்க முடியாதபடிக்கு வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறத்தான் போகிறது.  

இந்த முருங்கைக்காய் விலை நிலவரத்தை அம்மா எப்படி ஏற்றுக்கொள்வாள் எனச் சங்கடமாய் இருந்தது.  இந்த காய்களைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டிருந்தால் என்ன என்றும் தோன்றியது.   ஆடு கறக்கவும் பூனை பருகவுமான இந்த நிலையேதான் என்றென்றும் தொடருமா எனக் கேள்விகள் முன் அசைந்தன.

தோட்டம் வந்து சேர்ந்தான்,  குங்குமலட்சுமி எதிர்கொண்டாள்.

“எவ்வளவுக்குடா வித்தது?.

“அது வித்தது ஒரு தூத்துக் கூடைக்கு.  இத பாரும்மா இவ்வளவ கம்மியாவெல்லாம் விக்கும்னா நாம காயே பறிக்க வேணாம்”,

“அலட்சியம் பண்ணினா மரம் பூக்கறத நிறுத்திரும்டா” என்றாள் அம்மா

@இந்தியா டுடே மார்ச் 2000

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.