எழுத்தாளர் கல்யாணராமன் எழுதிய “மனோநிலைகள்” சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை
ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் மனோநிலைப் பயணம்
– வீ.விஜயகுமார்
மனோநிலைகள் என்பது ஒருவரின் உணர்வுகளின் நிலை, சிந்தனைகளின் போக்கு, மற்றும் நடத்தைகளின் ஒரு கலவை ஆகும். இவை நம் இலக்கியங்கள் வழியே பார்த்தால் சமுதாயத்தில் பல்வேறு உண்மை கதைப்பாத்திரங்களின் மனோநிலைகள் கதைகளின் உள்ளே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. ஒரு இளைஞனின் மனோநிலையைப் பற்றி உணர்வுப்பூர்வமாக மனதைத் தொடும் வகையில் கதையை வாசிக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே கதையின் கதைப்பாத்திரம் நம்மையும் அழைத்துச் சென்றுவிடுகிறது, எழுத்தாளர் கல்யாணராமனின் “மனோநிலைகள்” என்ற சிறுகதை.
மனோநிலைகள் என்ற சிறுகதை, மனித உணர்வுகளின் மாறுபட்ட நிலைகளை நுட்பமாக ஆராயும் ஒரு மனோதத்துவ ஆழமுள்ள படைப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கதையின் மையக்கருத்தாக, முக்கியப்பாத்திரமான கதை நாயகனின் உள் உழைப்புகள், எதிர்பார்ப்புகள், புத்தகம் படிக்கும் ஆர்வம் மற்றும் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளால் அவன் எதிர்கொள்ளும் உள்மனதின் போராட்டங்களைப் பிரதிப்பலிக்கின்றன.
கதையின் வடிவமைப்பு மற்றும் கதை நடப்பு
கதை ஒரு எளிய நிகழ்வை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதைநாயகன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து இருக்கும்போது அவனுடைய அக்கா, அவர்களுடைய சித்தியை பஸ் ஸ்டாப்பிற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறாள். இதை அவன் மிகவும் விருப்பமின்றி ஏற்றுக்கொள்கிறான் இந்தப் பயணம் ஒரு சாதாரண நடப்பாக இருந்தாலும், அதன் பின்னணியில் கதைநாயகனின் மனோநிலைகள் ஆழமாக வெளிப்படுகின்றன.
கதையின் அமைப்பு முற்றிலும் நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் பயணிக்கிறது. இவன் வெளியே செல்லத் தயங்குகிற மனநிலையும், தனது முடிவுகளை மற்றவர்கள் கட்டுப்படுத்தும் போது ஏற்படும் எரிச்சலும், அவனுடைய செயல்களில் நுட்பமாக வெளிப்படுகின்றன. குறிப்பாக, சைக்கிளை ஓட்டும்போது அவனுக்கு ஏற்படும் மனஅழுத்தம், சித்தியின் வினோதமான பேச்சுகளுக்கு அவனின் எதிர்வினை, இவர்களுக்குள் இருக்கும் உறவுகளின் உணர்வுகள், வாசகர்களின் மனதில் மறைமுகமாக இல்லாமல் நேரடியாகப் பதிய வைக்கின்றன.
உளவியல் வெளிப்பாடு
கதையின் பெயருக்கேற்ப, கதை நாயகனின் மனோநிலைகள் பல்வேறு அடுக்குகளில் திறக்கப்படுகின்றன. அவன் தனிமையில் வசிப்பதற்குப் பழகியவன்; குடும்பத்தினரின் கட்டுப்பாடுகள் அவனுக்கு எரிச்சலூட்டுகின்றன. அவனுடைய வாழ்க்கையில் ஒரு திசைமாற்றம் ஏற்பட வேண்டுமென்றாலும், அவன் அதை எதிர்கொள்ளாமல் ஒதுங்கி நிற்க விரும்புகிறான். இதை, அவனின் வேலைவாய்ப்புகள் குறித்த பேச்சுக்களில் தெளிவாக உணரமுடிகின்றன.
அவனுக்கு சித்தியின் தொணதொணப் பேச்சுகள் பிடிக்கவில்லை. அவன் அவளின் குரலுக்கு எதிர்ப்பாராத விதமாக பதிலளிக்காமல் இருக்கிறான்.
அந்தப்பேச்சுகளை அவன் திசைத்திருப்புகிறான். அவள் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பேசுவதும், இருவருக்குள் ஒரு யதார்த்தமான குடும்ப உறவு வெளிப்படச் செய்கின்றன. அதே நேரத்தில், சித்தியின் பாசத்தை அவன் நேரடியாக ஏற்கத் தயங்கும் தருணமும் மிக உணர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பஸ்சில் ஏறுவதற்கு முன், அவள் அவனுக்கு இருபது ரூபாய் நோட்டை கொடுக்க முயற்சிக்கும் போது சித்தியின் தீவிரமான பாசம் உணர்வுகள் அங்கு வெளிப்படுகிறது. அந்தக் கணத்தில், அவனுடைய மனம் ஒரு சாதாரண மனநிலையில் இருந்தவனின் மனம், வாழ்க்கையின் உணர்ச்சிப்பூர்வமான உண்மை நிலைக்கு திரும்புகின்றன.
மொழி மற்றும் வர்ணனை
இக்கதை முழுவதும் மிக அழகாக நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. எழுத்து நடை எளிமையாகவும், ஒவ்வொரு காட்சிகளும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. உதாரணமாக, சைக்கிளின் தடுமாற்றம், லெவல் கிராஸிங்கில் அவன் தன் உடம்பைச் சுருக்கிக் கொண்டு கடக்க வேண்டிய நிலை ஆகியவை நம்மை நேரடியாக கதை நாயகனின் நிழலுடனே பின் தொடர வைக்கின்றன.
சமூகத்திற்குள் அடங்காத மனதின் தற்காலிக கலக்கம், குடும்ப உறவுகளில் இருக்கும் அடக்குமுறைகள், மனித உணர்வுகளின் பரிமாணங்கள் ஆகியவை எளிமையான நிகழ்வுகளின் பின்னணியில் மிக அழுத்தமாக இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, “இனியொருமுறை, இதுபோல் யாரையும் பஸ் ஸ்டாப்பிற்குக் கொண்டுவந்து விடும்படி, தனக்கு நேரவே கூடாது” என்று கதைநாயகன் மனதிற்குள் நினைப்பது, அவன் தன் வாழ்வில் எந்த நிலையிலும் ஒரு கட்டாயத்திற்குள் சென்று வாழ விரும்பாத மனநிலையை காட்டுகிறது.
கதையின் இறுதி மற்றும் விளைவுகள்
கதையின் இறுதியில், அவனுக்காகவே பஸ்ஸை தவறவிடுகிறாள். அவனின் பாக்கெட்டில் இருபது ரூபாய் பணத்தை மட்டுமல்ல தன்னுடைய பாசத்தையும் சேர்த்தே வைத்துவிட்டு போயிட்டு வரேன்டா என்று செல்லியபடி வந்து நின்ற அடுத்த பஸ்ஸில் சென்றுவிடுகிறாள். இதுவே, கதை நாயகனின் மனதில் ஒரு உணர்ச்சி மிகுதியை ஏற்படுத்தி, அவன் விழிகளில் நீர் வடிக்கிறது. அவன் இதுவரை ஒதுக்க முயன்ற உணர்ச்சி, அவனைக் கட்டிப்போடும் தருணமாக அந்த இடம் மாறுகிறது. குடும்ப உறவுகள் எவ்வளவு சாதாரணமானவை போல தெரிந்தாலும், அவை உள்ளுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்பதை இந்த ஒரு நிகழ்வின் மூலம் கதையாசிரியர் கல்யாணராமன் அவர்கள் எளிய நடையில் ஆழமாகவும் அழுத்தமாக படைத்திருக்கிறார்.
முடிவுரை
மனோநிலைகள் என்ற சிறுகதை ஒரு சாதாரண பயணத்தின் பின்னணியில், ஒரு இளைஞனின் மனதளவிலான போராட்டங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கதை. குடும்ப உறவுகள், சமூகக் கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தனிமையின் தற்காலிகமான சூழ்நிலைகள் கதையின் மூலமாக வாசகர்களுக்கு மிகத் தீவிரமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. கதையின் மொழிநடை, உணர்வுப்பூர்வமான வருணனைகள், மற்றும் யதார்த்தமான நிகழ்வுகள் இணைந்து, இதை ஒரு சிறப்பான உணர்வுபூர்வமான கதையாக மாற்றுகின்றன.
எல்லோருடைய வீடுகளுக்கும் உறவினர்கள் வந்திருப்பார்கள். அப்படி வந்த உறவினர்களை சைக்கிளில் அழைத்துச்சென்று பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வந்த ஒவ்வொரு உண்மை கதைப்பாத்திரத்திற்க்கும் இந்தக் கதையை வாசித்தவுடன், நிச்சியமாக நாம் அனைவரும் ஒரு நொடிக்காவது நம் சொந்த மனோநிலைகளில் ஒரு பயணம் மேற்கொள்ளும் நினைவுகளில் மிதந்துபோய் விடுவோம்!
எழுதியவர்
வீ.விஜயகுமார்
Mail- [email protected]
உதவிய நூல்:
விபரீத ராஜ யோகம் (சிறுகதைத் தொகுதி)
எழுத்தாளர் கல்யாணராமன்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
669, கேபி. சாலை, நாகர்கோவில் -629001
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.