எம்.எம்.தீன் எழுதிய “செவ்வருக்கை” ஆணவச் சிறுகதைகள் புத்தகம் | Writer M M Deen's Sevvarukkai Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

எம்.எம்.தீன் எழுதிய “செவ்வருக்கை” ஆணவச் சிறுகதைகள் – நூல் அறிமுகம்

செவ்வருக்கை: சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படைகளைக் காட்டும் ஆவணம்
– முத்து ஜெயா

சமூகச் சூழலை ஒட்டிய புத்தகங்கள் வருவது இலக்கிய உலகத்தில் இயல்பான ஒன்று. ஆனால் ஜாதி மற்றும் மதப் பாகுபாடுகளை களையும் நூல்கள் கடந்த சில வருடங்களாக நிறைந்திருப்பது இலக்கிய உலகத்திற்கு அவசியமான ஒன்று.

சமூக சமநிலைக்கு எதிரான போக்கை விமர்சிக்கவும் அதன் தவறுகளை ஆராயவும் நிகழ்வுகளை எந்த மன மாச்சரியங்களுக்கும் உள்ளாக்காமல் வெளிப்படுத்தவும் தொடர்ந்து நூல்கள் வழியாகச் சமூக வலைதளங்கள் வழியாகவும் எழுதியும் பேசியும் வருகிறோம்.

ஆனால் ஜாதிய குணாதிசயங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் பெரிய அளவில் நிகழவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மதங்களில் நிகழும் அடிப்படைவாதம் ஜாதியை விடவும் சமூகப் பார்வையில் படாமல் அப்படியான வேற்றுமையை மூடி மறைத்து வைத்துக் கொள்கிறது. இரண்டு மதங்களுக்குள்ளான பிரிவினையைத் தவிர்க்க முற்படும் இக்காலத்தில் அவரவர் மதங்களுக்குள்ளான பாகுபாட்டையும் நாம் பேச வேண்டியதாக உள்ளது.

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற ஐயப்பாட்டை நீக்கும் விதமாக எம். எம்.தீன் அவர்கள் எழுதிய ஆணவச் சிறுகதைகள் என்ற மேற்கோளுடன் உருவான “செவ்வருக்கை” என்ற சிறுகதை நூல் வெளிவந்திருக்கிறது.

முதல் கதையில் துவங்கி பன்னிரண்டு சிறுகதைகளும் ஜாதி மற்றும் மத அடிப்படைவாதம் செய்யும் தீங்கைப் பேசுகிறது. பெரும்பாலான கதைகள் என்றில்லாமல் எல்லாக் கதைகளுமே ஆவணமாக எடுத்துக் கொள்ளப்பட்டவை தான். தமிழ் நிலத்தில் இருக்கும் ஜாதிய வேற்றுமையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த நூலை வாசிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

கூலித் தொழிலாளர்களுக்கு என்றில்லை, சமூகத்தின் மிகப் பெரிய உயரங்களைப் பொருளாதார அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தால் கூட அவர்களின் ஜாதியை வைத்தே அவர்கள் பார்க்கப்படுவார்கள் என்ற கதையை வெறும் கதையாகப் பார்ப்பதை விட அந்த மனோபாவம் எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஜாதியக் கட்டமைப்பின் இறுக்கம் தாள முடியாமல் மதம் மாறியவர்களுக்குள்ளாகவும் திருமணம் என்று வரும்போது பழைய வாழ்விடம் வழியாக ஜாதியைக் கண்டடைதலைப் பார்க்கும்போது இந்தப் பன்னிரண்டு ஆவணங்களைத் தாண்டிய பார்வை நமக்கு வேண்டும் என்பது முக்கியம்.

அதே நேரத்தில் அரசு அதிகாரத்திலும் அரசியலிலும் இருக்கும் இந்த ஜாதியப் போக்கு மிக வேகமாகத் தீர்க்கப்பட வேண்டும். சமீபத்தில் ஒரு சமூகத்திற்கான இணையப் பக்கத்தில் அப்படி உயர் பதவியில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களோடு அவர்களின் தொலைபேசி எண்ணும் பதியப்பட்டு இவர் நம் சமுதாயத்திற்கு உதவுவார் என்பதையும் பார்த்தேன்.

எப்படியும் ஜாதி நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் இந்தச் சமூக அவலம் காட்டும் முனைப்பு நம்மை சற்றுத் தளர்ச்சி அடையச் செய்தலுக்கு எதிராக, எம்.எம்.தீன் போன்ற படைப்பாளர்கள் அவர்களின் செயல்களைத் தோலுரித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பது
ஆறுதல் மட்டுமல்ல உத்வேகமும் அளிக்கக் கூடியது.

அந்த வகையில் செவ்வருக்கை என்ற இந்த நூல் சமூக ஏற்றத் தாழ்வுகளின் இருப்பிடங்களைத் தெரிந்து கொள்வதற்கான முகவரியாக விளங்குகிறது.

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “செவ்வருக்கை” ஆணவச் சிறுகதைகள்
ஆசிரியர்: எம்.எம்.தீன்
வெளியீடு:
விலை: ₹.130
அறிமுகம் எழுதியவர்:   
முத்து ஜெயா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *