எழுத்தாளர் மாலனின் (Writer Maalan) தப்புக்கணக்கு (ThappuKanakku) - சிறுகதை (Shrt Story) - https://bookday.in/

எழுத்தாளர் மாலனின் தப்புக்கணக்கு – சிறுகதை

எழுத்தாளர் மாலனின் தப்புக்கணக்கு – சிறுகதை

 

காலைச் சூரியனைக் கண்மறைக்கும் மேகங்கள்
(எழுத்தாளர் மாலனின் ‘தப்புக்கணக்கு’ என்னும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)

– மணி மீனாட்சிசுந்தரம்

‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ பற்றி அன்றே சிந்தித்தவர் திருவள்ளுவர். குழந்தைப் பேறு பற்றிக் கூற வந்த வள்ளுவர் குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி பற்றியும் கூறுகிறார்.அக்கால அறிவார்ந்த சமூகத்தின் எண்ணப்படிவாகவே அவரது வரிகளை நாம் காணமுடிகிறது. தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையோராக ஆக வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமுமாகும்.அதற்கான முதற்படி பள்ளிகளே என்பதில் யாருக்கும்

மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் மாறிவரும் உலகிற்கேற்பவும், புதிதுபுதிதாய்ப் பூமியில் பிறந்து மலரும் குழந்தைகளுக்கேற்பவும், பள்ளிகளின் பாட அமைப்பும் கற்பித்தல் நடைமுறையும் மாறிக்கொண்டே இருக்கிறதா? ஒரு தந்தை கற்ற அதே கல்வியும் கற்றல் நடைமுறையும் அவரது மகனுக்கும் வாய்ப்பதை வளர்ச்சி எனக் கருதமுடியுமா? எந்தத் தலைமுறையினருக்காவது தாம் கடந்துவந்த கல்விமுறை பற்றி எந்தவித விமர்சனமும் இல்லாதிருக்கிறதா?

இப்படியான வினாக்களுக்கு உடனடியாகத் தோன்றுகின்ற ‘இல்லை’ என்கிற பதிலே கல்விமுறை குறித்துக் கவலையோடு சிந்திக்கவைக்கிறது.

குழந்தையின் உள்ளார்ந்த திறன்களைக் கண்டுணர வழியற்று, போலச்செய்யும் செக்குமாடுகளாய்க் குழந்தைகளை உருவாக்க முயலும் கல்விக்கூடங்கள் ஆபத்தானவை ; மாற்றப்பட வேண்டியவை.

எழுத்தாளர் மாலன் எழுதிய ‘ தப்புக் கணக்கு ‘ என்னும் சிறுகதையும் இது குறித்தே விவாதிக்கிறது.

Stalin congratulates Maalan - The Hindu

தொடக்கப் பள்ளியில் படிக்கும் ஜனனி புத்திக்கூர்மையுள்ள சிறுமி ; சுறுசுறுப்பானவள் ; எதையும் எதற்கு? ஏன்? என்று கேள்வி கேட்டு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முயலும் ஒருத்தி. அவளை நன்கு புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தவும் எதையும் வேறுபட்ட கோணத்தில் அணுகவும் அவளது தாத்தா உடனிருந்து உதவுகிறார்.

அவளது தேர்வுத் தாளில் ‘ஒரு வாரத்திற்கு ஏழு நாள்கள்.இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்கள்? என்ற வினாவுக்கு 7 × 2 = 14 என்று எழுதியிருந்ததற்குக் கணக்கு டீச்சர் தப்புப் போட்டுவிடுகிறார்.

தாத்தாவிடம் கொண்டு வந்து காட்டுகிறாள் ஜனனி.//சரியாகத்தானே எழுதியிருக்கிறாய்.எதற்காக ஆசிரியர் தப்புப் போட்டார்//என்ற தாத்தா, பள்ளிக்கு வந்து கணக்கு டீச்சரைச் சந்தித்துக் காரணம் கேட்கிறார்.

“ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள்.அப்படியானால் இரு வாரத்திற்கு 2 × 7 = 14 என்றுதான் எழுதவேண்டும்”என்கிறார் கணக்கு டீச்சர்.

“சரி.7 × 2 = 14 என்று குழந்தை

எழுதினால் அது தப்பா?”

“தப்புதான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதனும்.2 × 7 = 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கும்போது 7 × 2 = 14 என்று எழுதியது தவறுதான்” என்கிறார் கணக்கு டீச்சர்.

தாத்தாவுக்குக் கோபம் வருகிறது,பிரின்ஸ்பாலிடம் போகிறார். பிரின்ஸ்பால் டீச்சரை அழைத்து விசாரிக்கிறார்.தனது கிட்டப்பார்வைக் கண்ணாடியை அணிந்துகொண்டு ஜனனியின் கணக்கு நோட்டையும், வினாத்தாளையும், விடைத்தாளையும் மாறிமாறிப் பார்க்கிறார்.

“இது ஒரு மாணவர் வகுப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைக் கண்டறிவதற்காகக் கொடுக்கப்பட்ட கணக்கு.ஐ’ம் சாரி சார்.உங்கள் பேத்தி வகுப்பில் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.நீங்கள் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்” என்கிறார் பிரின்சிபால்.

தாத்தா விடுவதாக இல்லை.நேரே பள்ளிக்கல்வி அலுவலகத்திற்கே சென்று விடுகிறார்.இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்து பள்ளிக்கல்வி அலுவலரைப் பார்த்து நடந்ததைச் சொல்கிறார்.”இதெல்லாம் என் ஆளுகைக்குள் வராது சார்”என்கிறார் அவர்.

தாத்தா,” அது இருக்கட்டும் சார்.ஆனா இது அநியாயம்னு உங்களுக்குத் தோணலையா? என்கிறார். “உங்க குழந்தை எழுதினது முற்றிலும் தப்புன்னு சொல்ல முடியாது. பார்ஷியலி கரெக்ட். முடிவுகள் மாத்திரமல்ல,வழிகளும் சரியாக

இருக்கணும்னு காந்திஜியே சொல்லியிருக்கார் இல்லையா?” என்று கூறிவிடுகிறார் பள்ளிக்கல்வி அலுவலர்.

தாத்தா இந்தப் பிரச்சனையை மந்திரி வரை கொண்டுபோக வேண்டுமா? என யோசிக்கிறார்.”குழந்தைக்கு அப்பட்டமாக ஒரு அநியாயம் நடக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க அவருக்கு மனமில்லை”அதற்கு முன் இதைப் பற்றி ஜனனியைப் பெற்றவர்களிடம் பேசி விடுவோம் என்று அன்றைய இரவில் சாப்பாட்டு மேசையில் ஜனனியின் பெற்றோரிடம் விசயத்தைப் போட்டு உடைக்கிறார்.

“அவ டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா.ஆனா அவங்க‌ சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையிலே எழுதுறதுக்கு இவளுக்கு

என்ன கேடு?” என்கிறார் அப்பா. ஜனனியை அழைத்து விசாரிக்கிறார் அவர்.”ஒரு வாரத்துக்கு ஏழு நாள் என்றால் இரண்டு வாரத்திற்கு 2 × 7 = 14 தானே.நீ ஏன் 7 × 2 = 14 என எழுதினாய்?” எனக் கேட்கிறார் அப்பா.

ஜனனி அதற்கு, ” ஒரு வாரத்திலே ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு ட்யூஸ்டே இப்படி ஏழு நாள்.இரண்டு வாரத்திலே இரண்டு சண்டே,இரண்டு மண்டே…
ஒவ்வொண்ணும் இரண்டு தடவை.அதான் 7 × 2 = 14 ” என்கிறாள்.

” கிரேட்” என்றுக் கூவினார் தாத்தா.

“இது வித்தியாசமான சிந்தனை.மொத்த கிளாசும் டீச்சர் போட்டுக் கொடுத்த பாதையில் குதிரைக்குப் பட்டை கட்டின மாதிரி போறச்சே, மூளையை உபயோகிச்சு நீ கணக்குப் போட்டிருக்க பாரு. இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்!” என்று உற்சாகத்தில் பூரித்தார் தாத்தா.

உண்மையில் ஜனனியின் இந்தப் பதிலுக்கு முதலில் மகிழ்ச்சியில் பூரித்து, அவளது அறிவை மெச்சியிருக்க வேண்டியவர் கணக்கு டீச்சர்.ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. கற்றல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் அவரிடமில்லை. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளைகளை உருவாக்குவதே கல்வி என்ற மனநிலை உடையவராக இருக்கிறார் அவர்.ஜனனிக்குப் பிரின்சிபால்,கல்வி அலுவலர்,அவளது பெற்றோர் என யாரும் உதவ முன்வரவில்லை.

ஒரு குழந்தையைச் சிந்திக்கவிடாமல் செய்யவும் அதன் சிந்தனையை மழுங்கச் செய்யவும் ஒரு கூட்டமே இருக்கிறது. அவளது அறிவுத்திறனை‌
முன்மொழிய வயதான தாத்தா மட்டுமே இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? ஐனனிக்கு நடந்தது ஒரு சின்ன விசயம் தானே என நினைக்கத் தோன்றுகிறதா? ஆனால் கதை, கற்பித்தல் நடைமுறையில் ஏற்படும் ஒரு சிறுபிழை, கற்பித்தலில் நிகழ வேண்டிய மையமான செயலை அழித்துவிடும் ஆபத்தை உணர்த்துகிறது. அத்துடன் கற்பித்தல் நடைமுறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அறியாமையையும் மெத்தனங்களையும் சுட்டிக் காட்டுகிறது.

ஜனனியின் அறிவுக்கூர்மையை எண்ணி மகிழ்ச்சியடையும் தாத்தாவைப் பார்த்து ஜனனியின் அப்பா,

“சந்தோசப்படாதீங்கப்பா.இது கவலைப்பட வேண்டிய விஷயம்” என்கிறார்.

“என்னடா சொல்றே?”

” இது பெண் குழந்தை.ஞாபகம் வச்சுக்குங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேட்பா.இதுநாள் வரைக்கும் நடைமுறையில் இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பாள்.வித்தியாசமா சிந்திக்கிறதினாலேயே காயம் படுவா.ஊரோட உலகத்தோட ஒத்து வாழலாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை.மற்றவர்களுக்கும் இம்சை”.

ஜனனியின் அப்பா சராசரிக்கும் கீழான மனிதராகத் தெரிகிறார். பெண் என்பவள் சமூகத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்ற ஆணாதிக்க மனநிலை கொண்டவராக இருக்கிறார். பெண்ணின் அறிவாற்றலை ஊக்குவிப்பது அவளுக்கும் அவளைச் சார்ந்தவர்களுக்கும் எதிராக முடியும் என்று அவர் கூறுவது பெண்குழந்தை வளர்ப்பு குறித்த பிற்போக்குத் தனமான அவரது எண்ணத்தைக் காட்டுகிறது.பாவம் ஜனனி.சிறுமியான அவள் தன் தந்தையை மீறி எண்ண செய்துவிட முடியும்?!

” ஏய், டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்குப் போடு.அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் பண்ணாதே” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் அப்பா.

பெண்ணின் அறிவுக்கூர்மையை அதிகப்பிரசங்கித்தனமாகப் பார்க்கும் சமூகம் அழிந்து ஒழியட்டும்!

ஜனனி கண்ணீருடன் தாத்தாவை அணைத்துக் கொள்வதுடன் கதை நிறைவுக்கு வருகிறது.

கற்பித்தலிலும் பெண் குழந்தை வளர்ப்பிலும் ஒரு சமூகத்திற்கு இருக்கக்கூடாத அறியாமையையும் பிற்போக்குத்தனங்களையும் ஒரு சிறு நிகழ்வை முன்வைத்து அதிர்வை ஏற்படுத்துகிறது எழுத்தாளர் மாலனின் ‘தப்புக்கணக்கு’ சிறுகதை.

பயன்பட்ட நூல் :

1.மாலன் சிறுகதைகள் (மாலன்),கவிதா பதிப்பகம்,சென்னை – 600017

எழுதியவர் : 

மணி மீனாட்சி சுந்தரம்
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. ஆய்வு நோக்கம் கொண்ட அறிவு கட்டுரை. வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

  2. நாகேந்திரன் இ

    கல்வி கற்பித்தலில் மாற்றம் அவசியம் என்பதை உணர்த்துகிறது இக்கதை. அதனை அழகான உளவியல் பாங்கில் விமர்சனம் செய்த உங்கள் பார்வை மிகவும் சிறப்பு ஐயா.வாழ்த்துகள்.

  3. வை. லெட்சுமி

    🙏
    விமர்சனம்
    அருமையிலும் அருமை.

    சரியான கணக்கு
    தப்பு கணக்காகியது என்பதை
    ஐயாவின் விமர்சனம் மூலம்
    முழுமையாக கதை படித்த உணர்வே கிடைத்தது.

    மாலன் அவர்கள்
    வித்தியாசமாக உண்மை நிகழ்வை கதையாக்கி
    உள்ளார்,என்றே கூறலாம்.
    ஏனெனில் கிட்டதட்ட 40 – 60
    வயதை பயணித்துக்
    கொண்டிருக்கும் அனைவரது
    பிள்ளைப் பருவத்திலும்
    ஆசிரியர் நடத்தியதில்
    சந்தேகம் எழும்.
    ஆனால் கேட்க மாட்டோம்.
    ஜனனி போல் நிறைய பேர்
    உண்மையிலையே
    யோசித்திருப்பார்கள் வெளிக் கொணர மாட்டார்கள்.
    ஒரு வித பயம் எழும்.
    வேண்டாம் என்று விட்டு விடுவார்கள்.
    வெளிக் கொணர்ந்தாலும்
    ஜனனியின் நிலைதான்
    நமக்கும் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
    சரியான விடையை ஒருவருக்கு
    சரி என்று திருத்தி இருப்பார்கள்.
    அதே விடை எழுதிய மற்றொருவற்கு தப்பு போட்டு
    இருப்பார்கள்.
    கேட்க முடியாது.
    கேட்டாலும் நம்மை
    அடக்கி
    அதிகப்பிரசங்கித் தனம் செய்யாதே என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.
    இதெல்லாம்
    தற்காலத்தில் செல்லுபடியே
    ஆகாது.

    தற்போது மாணவர்களிடையே
    ஆசிரியர்கள் வைத்திருக்கும் ஓர் உறவு பாலம்
    அப்பொழுது இல்லை என்பதே
    உண்மை.
    சிலர் இருந்திருக்கலாம்.

    ஜனனியின் மனமும்
    தாத்தாவின் துடிப்பையும்
    ஐயா மீனாட்சி சுந்தரம்
    அவர்களின் கதை விமர்சனம்
    மூலம் நேரில் காண்பது போல்
    செதுக்கிய விதம் அருமை.

    முக்கியமாக ஐயா ஆற்றும் பணிக்கேற்ப ஆசிரியர் -மாணவர்
    உறவை பல விமர்சனங்களில்
    அழகாக கூறிச் செல்வதோடு
    ஆசிரியர்களுக்கு எதுஅழகு
    என்பதையும் இலைமறை காயாக
    கண்டிப்போடு கூறிச் செல்லும்
    விதம் அருமை.
    அருமை ஐயா.
    வாழ்த்துகள்👏💐

    மாலனின்
    கதையை படிக்கவில்லை எனினும் ஐயாவின்
    விமர்சனத்தில்
    தப்புக் கணக்கு
    தங்கமாய் ஜொலிக்கிறது.🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *