Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்



துவக்குகளும்,வெடிகளும்.

எல்லாம் முடிந்து விட்டது என  பெரும் விருப்பத்துடன் அறிவிக்கவே நிமிட நிமிடமாக காத்திருக்கிறது அதிகாரம்.எப்படி முடியும் .இது காலாதி காலமாக துவந்து தொடர்ந்த யுத்தம்.உலகில் மனித குலம் தோன்றிய நாளில் இருந்து அதன் வளர்ச்சியும் தேய்வும் யுத்தத்தின் பாற்பட்டது தான்.ஒடுங்கிக் கிடந்த மனிதக்கூட்டம் ஒடுக்குவோருக்கு எதிராக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிற யுத்தத்தின் கதையே நிஜத்தில் மனித குலத்தின் வரலாறு.இங்கு எதுவும் முடிந்த முடிவில்லை.நிறுவன மயமான மதங்களுக்கும் அதன் தீவிர விசுவாசிகளுக்கும் தான் கடைசி நாளின் மீதான அச்சமும் மயக்கமும் இருக்கும்.இம்மை நாள் மறுமை நாள் என அவை இட்டுக்கட்டும் கதைகள் யாவும் மக்களை பயங் கொள்ளச் செய்யும் தந்திரங்களன்றி வேறு எதுவும் இல்லை.ஆனால் வரலாறு இப்படியான குயுக்திகள் அற்ற பேராறு.நிற்காது சுழன்று ஒடி நகர்வதே வரலாற்றின் வழிவகை.ஈழத்தினுடைய வரலாற்றின் பக்கங்களை ரத்தமும் நினமும் நனைத்த நாட்களை மறக்க இயலுமா.கொத்து கொத்தாக மக்கள் திரள் செத்து மடிந்த பெருந்துயரத்தின் தீரா மனவலியை எதன் வழி அகற்ற.துட்டகை முனு எனும் சிங்கள அரசனுக்கும் எல்லாளன்  எனும் தமிழ் மன்னனுக்கும் கி.மு.161ல் துவந்த யுத்தம் இன்று வரையிலும் நீடித்து நகரவே செய்கிறது.கி.பி.ஐந்தாம்  நூற்றாண்டில் புத்த பிக்கு மஹானமா இயற்றிய மகாவம்சம் எனும் சிங்கள  காவியத்தின் காட்சிகளே  நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கை அவர்களுக்குள் ஒரு தொன்மச் சடங்காக இறங்கியிருக்கிறது..நம் காலத்தின் பெருந்துயர வடுவாகி விட்டது முள்ளி வாய்க்கால்.யுத்த களத்தில் போராளிக் குழுக்களை மட்டுமல்லாது மொத்த சனத்தையும் முள்ளி வாய்க்கால் நோக்கி  நகர்த்திக் கொண்டு போனதிற்குள் பதுங்கியிருக்கும் பேரினவாத  தந்திரத்தை எதன் வழியே புரிந்து கொள்வது.காலத்தை எழுதியவர்களாக கலைஞர்கள் தான்  இருப்பார்கள்.இதுவரையிலும் எழுதப்பட்ட பிரதிகளுக்குள் கொதித்துக் கிடக்கும் போரின் வன்மத்தையும்,யுத்தம் நிகழ்த்திய மனிதகுல வரலாற்றின் அழியாக் கறையின் துயரங்களையும் அவர்கள் பெரும் படைப்பாக முன்வைத்திருக்கிறார்கள்.நம்காலத்தின் ஆகச் சிறந்த 

 புனைவிலக்கியங்களாக ஈழத்து படைப்புகள் உருப் பெற்றிருக்கின்றன.போர்,சமாதானம் பேச்சு வார்த்தை என சுழன்ற சூறாவளியின் நாட்களே ஈழப் படைப்புகள்..ஈழப் பெருந்துயரத்தின் வலிகளையும் துயரங்களையும் புனைவுப் பரப்பிற்குள் ஊடாடி கண்டறிதல் எளிதில்லை.எத்தனை தந்திரங்கள்,காட்டிக் கொடுத்தல்கள் ,கீழறுப்புகள்,.சர்வதேச வியாபாரிகளின் ஆயுத வியாபாரம் என படைப்பின் எல்லைகள் சுருள் சுருளாக மடங்கி கிடக்கிறது. ஆயுதம் தாங்கிய. அரசியல்  குழுக்கள்.சூழலின் நிர்பந்தத்தில் அரசியல் நீக்கம் பெற்ற போராளிக் குழுக்கள்.போர்க் களத்தில் கயமைகளை பகடையாக்கித் திரிந்த ஆயுத தாரிகள்.தேர்தல்அரசியலின் வழி தீர்வு சாத்தியம் என நம்பித் தொடரும் அரசியல் இயக்கங்கள்.எல்லாவற்றிற்கும் நடுவில் குழிகளுக்குள் பதுங்கி நெஞ்சக் குழிக்குள் நித்தமும் உயிரை பிடித்துக் கிடந்த மக்கள் என சலத்தையும் படைப்புகளின் வழி கண்டுரைப்பதே இந்த தொடரின் நோக்கம்….

 வரலாற்றுக் குறிப்புகள் எனில் காலவரிசையை நிச்சயிக்க வேண்டும்.ஆனால் இந்த தொட.ர் புனைவுகளை ஊடாடி காட்சிப் படுத்தவே விரும்புகிறது.எனவே நேற்று இன்று நாளை எனும் கால ஒழுங்கை கலைத்து கலைத்து அடுக்கித் தொடரலாம்.அப்படியாயின் முதலில் எதை எழுத வேண்டும்.எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது முக்கியம்.இதுவரை எழுதப்பட்ட  இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை படித்துப் பார்க்கிற போது புறக்கணிப்பும்  விடுபடல்களும் இருப்பதை உணர முடிகிறது.ஈழதௌதின் பொது இலக்கிய விவாதங்களில்.டேனியல் எனும் பெயரே இடம் பெறவில்லை.மிகக் காத்திரமான பங்களிப்பை ஈழ. இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தோழர் டேனியலை புறக் கணிப்தில் உள்ள அரசியல் மிக மிக எளிமையானது.அவருடைய படைபுகள் மூலமே இதனை அறிய முடியும்.யாழ்ப் பாணத்தின் கதையை எழுதிக் கொண்டிருப்பவர்கள் எவரும் டேனியல்  போல எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை  எழுதியிருக்கவில்லை.ஏன் என்றால் இந்த நிலத்தில் மட்டுமல்ல இந்திய நிலத்திலும் நீடித்து இறுகிப் போயிருக்கும் சாதி,” குறித்த தர்க்கங்ளே டேனியலின் கதையுலகம்.அரசையும் அதிகார நிழல் தாதாக்களையும் கமக்காரர்கள் என்று அழைக்கப்டுகிற நில..உடமையாளர்களையும் கதைகளின் மூலம் கேள்விக்கு உட்படுத்தியவர் டேனியல்.எனவே அவருடைய “பஞ்சமர் “எனும் நாவலில் இருந்து என்னுடைய வாச்சியத்தை எழுதுகிறேன்…இனி தொடர்க…

நிலத்தின் தன்மையில்’ பண்பாட்டு நடவடிக்கைகளில், ஐதீகங்கள், குலமரபுகளில் இலங்கைத் தமிழருக்கும் நமக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. வர்ணாஸ்ரம தர்மத்தை பின் பற்றி வாழ்க்கையை வடிவமைத்திருப்பதிலும் கூட இரண்டு நிலப்புலத்திலும் வேறுபாடுகள் இல்லை.”பஞ்சமர்” எனும் டேனியலின் நாவல் எழுபதுகளின்  ஈழ நிலத்தின் காட்சி.பஞ்சமர் எனும் சொல்லிற்கு டேனியல் தந்திருக்கும் விளக்கம்கூட புதியது.நான்கு வருணங்களையும் இறைவன் படைக்க அவரால் படைக்க முடியாமல் போன அவர்ணர்களையே பஞ்சமர் என அழைக்கிறோம் என்பது பொதுப் புரிதல். தோழர் டேனியல் துல்லியமாக இன்னார் இன்னாரைத் தான் பஞ்சமர் என அழைக்கிறார்கள் எனும் பட்டியலை படைப்பபின் ஊடாக தந்து விடுகிறார்.ஐந்து சேவைச் சாதிகளையும் அவர்களுடைய குடிமைப் பணிகளை காரணமாக்கி அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் சாதி அடையாளங்களையும் உள்ளடக்கி அவர்களையே பஞ்சமர் என்று காட்சிப் படுத்தியிருக்கிறார்.சாதியும், வர்க்கமும் ஊடாடிக் கிடக்கும் காட்சிப் பகுதிகளை புனைவெங்கும் உருவாக்கியுள்ளார். தங்களுடைய குலக்குறிகளை அகற்றிட பஞ்சமர்கள் ஒன்றினைந்து நிகழ்த்திய போராட்டங்களே நாவலாக வடிவம் பெற்றிருக்கிறது.

நாவலின் கடைசிப் பகுதியில் நாட்குறிப்புகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.அது டேனியலின் டைரிக் குறிப்பாகவும் கூட இருக்கலாம்.பத்திரிக்கை செய்திகளைப் போல சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளில் சிலவற்றை நினைவூட்டுவது மிக முக்கியம்.அது கட்டுரையின் அடுத்தடுத்த பக்கங்களை வாசித்திட பெரும் உதவி செய்யும்.நாவலின் காலத்தையும் காட்சிகளையும் துல்லியமாக்கிய குறிப்புகள் அவை.

14/04/68

1.ஆலயப்பிவேசக்காரர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது பெருங்கலவரம்.துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்காகி ஐயாண்ணன்,மாயாண்டி, என்போர் ஸ்தலத்திலேயே மரணம். எறி குண்டுத் தாக்குதலுக்கு முத்து,சின்னாச்சி என்ற இரு பெண்கள் பலி.நாய் ஒன்றும் பிணமாகிக் கிடந்தது.

10/06/68

2.வடபகுதியில் நான்கு இடங்களில் தேனீர்க்ககடைப் பிரவேசம்.கைகலப்பில் ஒருவர் மரணம்.ஐவருக்குக் காயம்.கடைகளை மூடிவிடும்படி உரிமையாளர்களிடம் பொலிஸார் வேண்டுகோள்.

24/07/68

3.பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த பஞ்சமர் மேல் கடுந்தாக்கு.வடபகுதியில் 

இரண்டு கிராமங்களில் பதட்டநிலை.தண்ணீர் எடுக்க விடும்படி கோரிக்கை வைத்துக் கிணற்றடியில் உண்ணாவிரதம் இருந்த எழுத்தாளர் ஒருவர் மேல் தாக்குதல்.

25/03/69

4.வடபகுதி சாதிக் கொடுமைகளை விவரித்து தென் இலங்கையில் சித்திரக் கண்காட்சி.வரைபடங்களையும்,புகைப்படங்களையும் பார்த்து சிங்கள மக்கள் அதிர்ச்சி.

23/04/69

5.வடபகுதி எங்கும் மா ஒவின்  பாதம்.வடபகுதியின் சங்கானை சீனத்தின் சங்கானையாக மாறுகிறது.இதை அரசு உடனே தடுத்து அழித்துவிட வேண்டுமெனப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தளபதி வேண்டுகோள்.

05/06/69

அம்பலத்தாடிகள் நடத்திய கந்தன் கருனை நாடகத்தில் அமளி துமளி.

   பஞ்சமர்” ————— 'மக்கள் எழுத்தாளர்' கே ...            

மேற்கண்ட குறிப்புகளில் இருந்து நாவல் எதை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.அறுபதுகளில்  நடந்த மிக முக்கியமான வரலாற்றுப் பகுதியை நாவலாக்கி தந்திருக்கிறார் டேனியல். இலங்கைப் பகுதியின் தமிழர் வாழ்க்கை முறையில் சாதி எப்படி முக்கியமான பங்கை செலுத்தி வந்தது.மிகவும் குறிப்பாக நிலஉடமை வர்க்கமாக இருந்த கமக்காரார்கள் என்று அழைக்கப்படுகிற சைவ வேளாளர் சமூகத்தவர் சாதியமைப்பை கட்டிக் காக்க எப்படி தீவிரமாக இயங்கினார்கள். குடிமைச்சாதிகளான பஞ்சமர்(நளவன்,பள்ளன்,பறையன்,வண்ணான்,அம்பட்டன்) சாதிக் குடிகளை எப்படி அடிமையாக வைத்திருந்து தங்களுக்கான சேவைக் குலமாக நெறிப்படுத்தி வைத்திருந்தனர்என்பதை துல்லியமாக்கி காட்டுகிறது நாவல்.அவர்களும் கூட இது நியாயம் தானே.நாம் அவர்களுடைய குடிமகன் தானே என்று நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர்.கிராம்ஸி தன்னுடைய கலாச்சார மேலாதிக்கம்  எனும் கருத்தியலில் எப்படி அதிகார வர்க்கம் தன்னுடைய ஆதிக்கத்திற்கு ஒப்புதலைப் பெறுகிறது.  பண்பாட்டு மேலாதிக்கம் எப்படி அடிமை முறையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை கட்டமைக்கிறது என்பதை விவரித்திருப்பார்.அதற்கான இலக்கிய காட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது பஞ்சமர் எனும் தோழர் டேனியலின் நாவல். மாற்றங்களுக்கான முயற்சிகள் சட்டென ஒற்றைப் புள்ளியில் உருவாகி விடுவதில்லை.. நாவலுக்குள் வருகிற ஐயண்ணன்,குமாரவேல் போன்ற தோழர்கள் சாதியாக பிரிந்து கிடக்கிற மக்களை நிலமற்றவர்களுக்கான சங்கம் எனும் கூட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.வர்க்கம் சாதி குறித்தும் சாதியே இங்கு வர்க்கமாகி இருக்கிறது என்பதையும் தன்னுடைய நாவலின் காட்சிகளின் வழியாக வாசகனுக்குள் கடத்துகிறார் எழுத்தாளர். நிலமற்றவர்கள் ஒரு குடையின் கீழ் அதுவும் சிவப்புக் குடையின் கீழ் திரள்கிறார்கள்.எப்படி சகிக்கும் அதிகார வர்க்கம். கமக்காரர்களும் தங்களுக்குள்  ஒரு இனைப்பை உருவாக்குகிறார்கள்.சாம பேத தான தண்டம் என நாலு வழிகளிலும் உழைப்பாளி  மக்களை நெருக்குகிறது கமக்காரர் கூட்டம்..உழைப்பாளிகளான பஞ்சமர்களும் விடாமல் மல்லுக்கட்டி போரை நடத்துகிறார்கள்.இந்த வர்க்கப் போரே பஞ்சமர் எனும் நாவலாக வடிவம் பெற்றிருக்கிறது. 

அறுபதுகளின் நிகழ்வே நாவல்.ஆதிக்க சாதியினர் எப்போதும் காதலுக்கு அதிலும் சாதி மறுப்புக் காதலுக்கு உக்கிரமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறது.. நிலைமை கைமீறிச் செல்கிற போது தந்திரமாக அவர்களை பலியெடுக்கிறது.இன்றைக்கு பொதுத் தளத்தில் பெரும் விவாதத்திற்கு வந்துவிட்ட பிறகும் கூட ஆணவக் கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.சாதியை பெண்களின் கற்புநெறி,ஒழுக்கம் எனும் மித்களுக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. அதுவரையிலும் இருந்து வந்த அதிகாரப் படிநிலை காதலால் கரைவதை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.ஆணவக்கொலைகளை விதவிதமாக செய்கிறார்கள். அப்படியான மூன்று ஆணவக் கொலைகளின் காட்சிகள் வருகிறது.இவை யாவற்றையும் அந்த. ஊரின் கள்ளுக்கடையில் ஐயண்ணன் இன்னைக்கு என்ன புதினம் எனக் கேட்கிற போது சம்பந்தப் பட்டவர்கள் அல்லது தவிர்க்க இயலாமல் தன்னுடைய கமக்காரன் செய்த கொலைகளுக்கு…சாட்சியாக இருந்தவர்கள் கதைகளாகச் சொல்கிறார்கள்.கதையொன்றில் கமக்காரரின் மகன் பள்ளர் குலப் பெண்ணை விரும்புகிறான்.அன்னம் எனும் அ ந்தப் பெண்ணும் விரும்புகிறாள். எப்படி சகிக்கும் உடமை மனம்.உடமையின் பெருமை சாதியில் தானே நீடித்துக் கிடக்கிறது.தந்திரமாக குடும்பம் நடத்த வைக்கிறார்கள்.திடீரென பையன் ஒரு நாள் காணாமல் போகிறான்.இரண்டாவது நாளில் குருட்டு மதகுக்குள் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடக்கிறது.அது அவன் தான் .அழுகியநிலையில் சிதைந்த நிலையில் கிடக்கிறது பிணம்.அடையாளம் காட்ட வந்த பெற்றோர்கள் இது என் மகன் இல்லை என்கிறார்கள்.அன்னம் தன்னுடைய காதலன் தான் என்கிறாள்.

 அந்த சம்பவத்தை ஒட்டி நடக்கும் கள்ளுக்கடை உரையாடல் மிகவும் முக்கியமானது.”சாதிக்காக பெத்தவங்களே தன்னோட பிள்ளைய இது எங்கட மகனல்ல என எப்படி சொல்லினம்.அதிலயும் தமிழர்கள் என்ன காடுகரையக்க கிடக்கிற சிங்களவங்களோ”…என்கிற குரலை நுட்பமாக ஐயண்ணன் தன்னுடைய விவாதத்தின் மூலம் சொல்கிற இடம் முக்கியமானது.வரலாற்று சம்பவங்களை புனைவாக்கும் போது கலைபெறுமதி அடைவதற்கான சொற்களை எழுத்துக்கலைஞர்கள் கண்டடைகிறார்கள்.

“,ஆயிரம் கழுத்தறுத்த கோழிக் குஞ்சுகளுக்கு நடுவே வெட்டப்பட்ட கோழிக் குஞ்சைப் போட்டுப் பாருங்கள் நான் கண்டு பிடிக்கிறேன்” என்பார்….இது மாதிரியான உரையாடல்கள் நடைபெறும் இடம் கள்ளுக்கடையாக இருக்கிறது.இதைப் போலான இருவேறு ஆணவக் கொலைகளைக் குறித்த விவரனைகளும் கூட நாவலுக்குள் வருகிறது.சொற்களுக்கு மனதின் கறையகற்றும் மனநிலைகளை உருமாற்றும் ஆற்றல் இருக்கிறது.அதனால் தான் பஞ்சமர் என ஒதுக்கி வைக்கப்பட்ட குடிகளின் ஆண்களும் பெண்களும் இனி வேலைத் தடங்களில் தட்டுவத்தில் சோறு வாங்குவதில்லை.வேலை முடிந்தவுடன் கூலியை காசாக தந்து விட வேண்டும் என நிர்பத்திந்து வெற்றியும் பெறுகின்றனர்.

வேலை செய்வதும் குடியிருப்பதும் எங்களிடத்தில் என உடமையாளர்கள் மிரட்டுகிறார்கள். குடிகிளப்பிட முடிவு செய்து தண்டாரோ போடுகிறார்கள்.நீங்கள் எங்களை நிர்பந்திக்க முடியாது. நாங்கள் நிலத்தில் இறங்கமாட்டோம்.குடிமைப் பணிகளை செய்ய மாட்டோம் எனச் சொல்வதோடு நிற்காமல் அதை உறுதியாக பின்பற்றுகிறார்கள். சங்கமும் கட்சியும் அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாகிறது. ஐயாண்ணன்,குமாரவேலன் எனும் இரண்டு கொம்யூனிஸ்ட்களும் நாவலை நகர்த்திச் செல்கிறார்கள். மக்களைத் திரட்டும் யுத்திகள் விதவிதமாக காட்சிப் படுத்தப்படுகின்றன.சிவப்பு வண்ணத்தின் மீது ஈர்ப்பு வந்த நாட்களில் முதலாளி மார் எப்படி பஞ்சமர்களுக்கு இருப்பதற்கு வீட்டு வாசலில்  கதிரைகளை போட்டு வைத்தனர். அதிலயும் லண்டனுக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்புகிற ஆறுமுகம் பிள்ளையின் மருமகன் தன்னைக் கம்யூனிஸ்ட் என்றே ஏன் சொல்கிறார். கோயில் திருவிழாவிற்கு பஞ்சமரையும் பங்கேற்க வைப்பதற்கான கூட்டத்தையும்கூட எதனால்  நடத்துகிறார்.எளிய மக்கள் குழம்பி போகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஐயண்ணனும் கூட தடுமாறுகிறார். குமாரவேலு உறுதியாகச் சொல்கிறார் சொந்த வர்க்கத்தின் நலனுக்காக அவர் செய்திருக்கும் சமரசம் இது என்கிறார். அப்படித்தான் உண்மையும் கூட. வரப் போகுற தேர்தலில் நின்று பார்லிமென்ட்டுக்கு போகேக்க அனைத்தையும் சட்டமாக்கிப் போடலாம் என அவர் பசப்புகிற போது விசயம் வெட்ட வெளிச்சமாகிறது. அவர்தான் நாவலின் கடைசிப் பகுதியில் நிகழும் படுகொலைகளை நிகழ்த்துகிறார். எந்த கருத்தியல் மக்களை ஈர்க்கிறதோ அதற்குள் தங்களையும் கரைத்துக் கொள்வதாக காட்டிக் கொள்வது ஆளும் வர்க்கத்தின்  ஒருவித தந்திரம் என்பதையும்  கூட நாவல் பாரிஸ்டர் எனும் கதாபாத்திரத்தின் மூலம் கட்டுடைக்கத் தவறவில்லை.

நாவலுக்குள் சாதியையும் அதன் பெயரால் கிடைக்கிற பொருளாதாயத்தையும் விட்டுத்தர மறுக்கிற சண்முகம் பிள்ளை வருகிற பகுதிகள் அந்நாளின் கலாச்சார அடையாளம் என்னவாக இருந்தது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.அவருடைய இளவயது நடவடிக்கைகள் ஐயாண்ணனின் ஞாபகத்தின் வழியாக காட்சிப் படுத்தப் படுகிறது. ஊரின் கோவில் திருவிழாவில் கமிட்டித் தலைவராக ஆன நாளில் சண்முகம் செய்த செயல் வழியாக படுகொலைகளும் கலவரங்களும் நடக்கிறது. திருவிழாவில் நாடகம் பார்க்க பார்வையாளர்களுக்கு தனியிடம் ஒதுக்குவதில் ஆண் பெண் என்பதோடு பஞ்சமர் அமரும் இடம் என கயிறு கட்டுகிறான். எதிர்ப்பை சின்ன அளவில் தான் காட்டுகின்றனர் பஞ்சமர்கள். இளைஞன் ஒருவன் அந்த போர்டை எடுத்து குண்டிக்கடியில் போட்டு உட்காருகிறான். யாரும் கயிறை அறுக்கவில்லை. எல்லை தான்டி வரவில்லை. ஆனாலும் கூட போர்டை மறைத்த இளைஞனை சாதி ஆதிக்கர்கள் படுகொலை செய்கிறார்கள். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் சண்முகம் சிறுவனாக இருந்த போது அவனுக்கு முலைப் பாலூட்டிய பொன்னியின் மகன். பொன்னி  கத்திக் கதறியதெல்லாம் சாதிக் காதுகளை எட்டவேயில்லை.இந்தக் காட்சிக்குள் ஒரு வரலாற்றுக் குறிப்பிருக்கிறது.பாலூட்டிகளாக பஞ்சமர் வீட்டுப் பெண்களை வெள்ளைக்காரப் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுய்க்கு பயண்படுத்திக் கொள்ளும் வழக்கம் இந்திய நிலத்திலும் இருந்ததற்கான  வரலாற்றுக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன. இரக்கமற்றது சாதிவெறி எனவே அது படுகொலை நிகழ்த்துகிறது. எல்லாம் முடிந்த பிறகும் கூட ஆட்சியதிகாரம் அதிகாரத்திற்கு அனுக்கமாகத் தான் இருந்திருக்கிறது. காவல் துறைக்குள் இருக்கும் சாதிய மனமும் வெறியும் சண்முகத்தை காப்பாற்றி விடுகிறது.இவையாவற்றையும் சண்முகத்தின் மரண நாளில் நினைக்கிறார்கள் பஞ்சமர்கள்.வட இலங்கையில் பஞ்சமர் என பெயர்ப் பலகையை முதன் முதலில் வைத்த கமக்காரனின் மரணமுமம் மரண நாளின் காட்சிகளும் நாவலின் இரண்டாம் பாகத்தின் மிக முக்கிய பகுதியாகும்..

சங்கானையில் முதன் முதலாக பஞ்சமர் என முதன் முதலாக போர்டு வைத்திட்ட சண்முகம் முதலாளியார் செத்துப் போனார் எனும் செய்தி ஊருக்குள் பரவுகிறது.இன்னும் சில நாடௌகளில் நடத்தப்பட இருக்கிற போராட்டத்திறௌகான முன்நிபந்தனையாக்குகின்றனர் உழைப்பாளிகள்.காத்திருக்கிறது பிணம்.காக்க வைக்கிறார்கள் சேவைக் குடியினர். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல.அழுகி பிணம் ஊதி நாறிப் போகும் வரை காக்க வைக்கிறார்கள்.இது எங்கட நேரம் நாங்கள் இப்பிடித் தான் செய்யினம் அவுங்களுக்கு மட்டுமில்ல இனி கமக்காரன்களின்ட நாறிப் புழுக்கட்டும் என்கிறாள்.ந்நாளில் கமக்காரன்களின் உரையாடல் இப்படி இருந்திருக்கிறது…

“கோவியன்கள் சவந்தூக்க மாட்டனெண்றாங்கள்.பந்தல் கிந்தல் போடுற காரியங்களுக்கு முறையான கூலி தரவேணுமெண்டு கேக்கிறாங்கள்.அம்பட்டன் சவத்துக்கு சவரம் பண்ண மாட்டான் பொரிப்பெட்டியும் நெருப்புச்சட்டியும் தூக்க மாட்டான் கொள்ளிக்குடம் கொத்த மாட்டானெண்டுறான்.வேணுமெண்டா செத்த வீட்டுக்கு ஆளோட ஆளா வாறன்.என்னைப் பரியாரி எண்டு சொல்ல வேண்டுமெண்டும் சொல்றான்.காட்டாடி சொல்லுறான் பந்தலுக்கு சீலை கட்டுறன்.சீலைக்கு ஐஞ்சு ரூபாவாம்.சாம்பன் மேளம் தட்டலாம்.ஆனா காச சுடலையிக்க வச்சு தந்து போடனுங்கான்பொறவு அவரு கைமண்டையில தணௌணி குடிக்க மாட்டோம்.குஞ்சுக் கடகங்களிலை சோறு வேண்ட மாட்டோம் என்னுங்கிறாங்க…”

இப்படியான உரையாடல் மேலகக் குடிகளின் எரிச்சலின் சொற்கள்.அதுவரையிலும் நிலைத்திருந்த குடிப்பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து ஊரையே நிலைகுலையச் செய்தனர்.இதற்குள் கட்சித் தோழர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இருந்தது.உத்வேகம் பெற்ற  பஞ்சமர் கூட்டம் அடுத்தடுத்த போராட்டங்களை வட புலத்தில் நடத்தியது.குடிமைப் பணிகளைச் செய்ய மாட்டோம்.அப்படியே செய்தாலும் வேலை முடிந்த மறுநிமிடமே கூலி கொடுக்க வேண்டும்.கைமண்டையில் தண்ணீர் குடிகௌக மாட்டோம். இழிவான சாதிப் பட்டங்களை வைத்து எவரும் எங்களை விளிகௌகக் கூடாது.இப்படியான சமூகப் போராட்டங்களையும் பொருளாதார போராட்டங்களையும் ஒன்றினைத்தது நடத்தினர்.வெற்றியும் பெற்றனர்.அப்போதைய களத்தின் நிலையை கிழவியின் ஒப்பாரி புரிய வைக்கிறது.”வடிவழகு ராசாவே..

                       வட்டுக்கோட்டை மன்னவனே

                       அடிமை வச்சு ஆண்டவனே

                        ஆருமற்றுக் கிடக்கிறியே

                        துரையே துரையரசே

                       குடிமைகட்டி ஆண்டவனே

                இந்த செம்பாட்டான் காட்டுக்குள்ளே

                உன் சீர் குலைஞ்சு போச்சுதடா”

இரண்டு பாகமாக எழுதப்பட்டிருக்கிறது நாவல்.முதல் பாகத்தில் குடிமைச்சாதிகள் விதியென யாவற்றையும் நம்பித் தொடர்கின்றன.முதல் காட்சியில் நகரத்தில் இருந்து செல்லப்பன் எனும் சலவைக்காரர் வீட்டிற்கு வருகிற பையன் சொல்கிறான்.இந்த சட்டுவங்களையும் சவக்காரங்களையும் ஒழிச்சுப் போடனும்.எல்லாத்துக்கும் மெஷின் வந்துருச்சு என்கிறான்.நாவல் எதை நோக்கி நகரப் போகிறது என்பதற்கான குறியீட்டுக் காட்சியது.நாவலுக்குள் பல இடங்களில் பாலியல் இச்சைக்கு சாதி தடையாக இருந்ததில்லை என்பதை காட்சிப்படுத்துகிறது.இதில் பபால்பேதம் இல்லை.கமக்காரன் வீட்டு அம்மனிகளுக்கும் பஞ்சமர் வீட்டு பசங்களுக்குமான பழக்கங்களும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யாவற்றையும் அதிகாரத்தினால் அசைக்கிறார்கள் கமக்காரரர்கள். நிலைமை தலைகீழாக மாறுகிறது இரண்டாம் பாகத்தில். எத்தனை இரத்தப்பலிகள். கலவரங்கள் வீரமரணங்கள் வெற்றிகள். எதையும் இழக்காமால் எதையும் பெற முடியாது என்பதையே அனைத்து சம்பவங்களும் நமக்கு உணர்த்துகிண்றன.

நாவல் வெளிவந்த நாளில் தமிழ் பண்டிதர்களால் நாவலை ஏற்க முடியவில்லை.கடும் விமர்சனங்களை படைப்பின் மீதும் படைபௌபாளியின் மீதும் வைத்தனரௌ. இவற்றையெல்லாம் தோழர் டேனியல் பதட்டமின்றி எதிர்கொண்டார்.

“இந்த மக்கள் எல்லோரும் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, நிமிர்ந்து நின்று,நில ஆதிக்கக்காரர்களால் சுமத்தப்பட்டிருக்கும் நுகத்தடியை உடைத்தெறிய வேண்டும் என்ற எனது வேட்கை நாவலுக்குள் பீறிட்டு நிற்கிறது. பஞ்சமரில் நானும் ஒருவன் தான். இதில் நடமாடும் பாத்திரங்கள் எதுவும் நான் கற்பனையில் சிருஷ்டித்தவையல்ல.யாவரும் நிலத்தில் ஜீவித்திருந்தவர்கள்….

வாழ்க்கையின் கடைசிப் படியிலிருந்து முன்னேறி சென்றவர்கள் எதிர்கொண்ட துயர நாட்களின் காட்சிகளே நாவல். நாவலுக்குள் தொழில்படும் கொச்சை மொழி பஞ்சமர்களின் பேச்சு வழக்கிலேயே அமைந்திருக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கையைச் சொல்ல பண்டித மொழியால் சாத்தியமிலௌலை எ அவர் உறுதியாக இருந்திருக்கிறார். இதே எழுபதுகளின் துவக்கத்தில் தான் தமிழில் பூமணியின் “பிறகு” நாவல் வெளிவந்தது. பிறகான நாட்களில் துவங்கி இன்றுவரையிலும் தமிழின் முதல் தலித் நாவல் என கொண்டாடப்படுகிறது. ஈழப்புலத்தில் இதே காலத்தில் வெளிவந்த “பஞ்சமர்” ஈழப்புலத்தில் வெளிவந்த முதல் தலித் வர்க்க நாவல். இந்தக்கருத்தை இனியாவது நாம் முன் வைக்கத் துவங்க வேண்டும்….

                                    ம.மணிமாறன்

(கே.டானியலின் பஞ்சமர் நாவலைக் குறித்த வாச்சியம்)



முந்தைய தொடர்களை வாசிக்க: 

தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்



தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 10 Comments

10 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *