Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimanran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்



                  தொப்புள்கொடி உறவுகள் எனும் சொற்பதம் உண்மையில் அர்த்தம் பெறுவது எங்கு?. இவையாகவும் அதீத உணர்ச்சியில் ஒலிக்கும் கூடற்ற வார்த்தைகளா ?.. தூரத்து  நிலத்தில் கால் பாவிய நம்முடைய மூதாதைகள் நிஜத்தில் யாராக இருக்கும்…..காடே தேசமாகிக் கிடந்த நம்முடைய வம்சாவழியினர் எவர்? .. தீராத கேள்விகள் இன்றுவரையிலும் நம்முடைய மனச்சுவர்களை ஆக்கிரமித்துக்கிடக்கிறது…

தொட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவந்த யுத்தத்தின் தொடர்ச்சியே ஈழப்போராட்டம் எனச் சொல்வதும், அதையே வரலாற்றைப் போலக் கட்டமைத்திடவும் பெரும் முயற்சிகள் இன்றுவரையிலும் ஈழப்புலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருவகையில் யாழ்ப்பாண மையக் கதையாடலின் சொல் முறைதான். இந்த புகழ் தரும் வெளிச்சச் சொற்களால் ஒருபோதும் அறியமுடியாது பசித்துக்கிடந்த அந்த பஞ்சமக்கூட்டத்தை.. வடக்கு, கிழக்குப் பிராந்திய கதைகளின் காட்சி எல்லைக்குள் வரவே சாத்தியமற்ற விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகள் எப்போதாவது தான் கதைகளாகியிருக்கின்றன. பசித்த வயிறோடும், உழைத்துச்சலித்த உடலோடும் வீழ்ந்தே கிடந்த உழைப்பாளிகளான மலையக மக்களின் வாழ்க்கைக் கதையை எழுதிய இலக்கியங்களைத் தேடி, தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. துளியும் தொடர்பற்ற நிலத்தில் வாழ்ந்து மடிந்து அந்த நிலத்திலேயே மக்கி மண்ணாகிப் போன அவர்களின் மூன்று தலைமுறைக் கதைகளை நாவலாக ஆக்கியிருக்கிறார்கள். வலியும் வேதனையும் துயரமும் துரத்துகிறது நம் தமிழ்ச் சொந்தங்களை. எப்படியாவது வாழத்தானே வேண்டும். பசிக்கிறது. உயிர் இருக்கிறது.வேறு என்னதான் செய்ய…

Image

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வம்சாவழி வாழ்க்கையை “தூரத்துப் பச்சை எனும் நாவலாக எழுதியிருக்கிறார் கோகிலம் சுப்பையா… நாவலுக்குள் வள்ளி எனும் தோட்டத் தொழிலாளியின் காலடித் தடத்தில்தான் சொற்கள் நகர்கின்றன. நாவலைச் சுமந்து செல்பவள் பெண். அதைத் தனித்த சொற்களால் அவளின் முதுகில் ஏற்றி பின் தொடர்பவரும் பெண்.தூரத்துப் பச்சை நாவலுக்குள் மூன்றுவிதமாக எளிய மக்களின் வாழ்வியல் பகுதிகள் பதிவாகிறது.. தமிழகத்திலிருந்து பிஞ்சுக்குழந்தையாக  வள்ளி தன்னுடைய தாய்,தந்தையுடன் கிளம்பி கண்டிக்குப் போவது. அங்குத் தோட்டத் தொழிலாளியின் குடும்பப் பிள்ளையாக வளர்வது. அவளே அருகாமையிலிருக்கும் தோட்டக் காட்டிற்கு மணமாகிப்போவது எனத் தொடர்கிறது கதை. 1964 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் மலையக மக்களின் வாழ்வாவணமாக வெளிப்பட்டிருக்கிறது.1817ல் துவங்கி,இருநூறு ஆண்டு காலமாக மலையகத்தில் வாழ்ந்துவரும் மக்களின் கதைப்பாடல் என்றே தூரத்துப்பச்சையை அவதானிக்க வேண்டும்….

ஆயிரத்து எந்நூறுகளின் துவக்கத்தில் முப்போகம் விளைந்து கொண்டிருந்த தஞ்சைத் தரணியிலே கூட பஞ்சம் தலைவிரித்து ஆடியது.கஞ்சிக்கும் கூழுக்கும் ஏங்கித் தவித்தலைந்தனர் மக்கள். தஞ்சையே அப்படி என்றால். பிற பகுதிகளின் நிலை மோசத்திலும் மோசம்..தமிழகத்தின் வரைபடத்தின் வறள் காடான ராமநாதபுர மாவட்டத்திலிருந்து  கொத்துக் கொத்தாக மக்கள்  கண்டிக்குப் போகத் துவங்கிய காலம் அது. கையகல நிலமில்லை. கால் வயிற்றுக் கஞ்சிக்காவது வழிவகை செய்யலாம் என்றால் உழைத்துப் பிழைக்க ஒருபொட்டு மழையில்லை. உழவுக்காக வைத்திருந்த எருமைகளையும், உணவளித்து வந்த பசுவையும், ஆடு, கோழிகளையும் விற்று தீர்த்தாச்சு. எத்தனை காலத்திற்குத்தான் பாப்பாத்தியம்மா எங்களக் காப்பாத்துன்னு குலதெய்வத்தை கும்பிட்டுக்கிட்டே இங்கேயே கிடக்கிறது.. பசியில துள்ளத் துடிக்க பச்சிளங்குழந்தைகள் சுருண்டு விழுகிறதும். இன்னைக்கு விடியறப்ப எந்த வீட்டில இருந்தும் ஒப்பாரி ஒங்காரம் கேட்டுறக்கூடாதுன்னு சாமிய கும்பிடுகிறதுமாகக் கடக்கும் பொழுதுகளைச் சகித்துக் கிடப்பது இன்னும் எத்தனை நாளைக்கு. இந்த குரூர காட்சிகளே அந்நாளைய முகவையின் துயரம். துயரத்தைத் துரத்த புலம்பெயர்தலைத் தாண்டி யோசிக்கவெல்லாம் முடியாத எளிய மக்கள் அவர்கள். ஊரெல்லாம் இந்த வருடம் ஏமாற்றிய மழை, இவர்களை மட்டும் மூன்று வருசமாக வராமல் மிரட்டிக் கொண்டிருந்தது. பஞ்சத்தின் குரூர வலையை அறுத்தெறிந்து வெளியேறுவதைத் தவிர அந்த உழவுகுடி  மக்களுக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. கண்களுக்கு எட்டிய தூரம் வரையிலும் பற்றிக்கொள்வதற்கான கொழுகொம்புகள் இல்லாத போது அவர்கள் வெளியேறத்துவங்கினர். சுட்டெரிக்கும் இந்த யதார்த்தத்தை விட்டுக் கடக்க முடியாத கிராமத்துச் சம்சாரிகள்,இங்கிருந்து மட்டுமல்ல,தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் குடிகிளப்பிச் செல்லத் துவங்கினர்.. ஆசையில் செல்லவில்லை. பசியைக் கடத்தி,உயிரைக்கையில் பிடித்திருந்தால் போதும் என்பது மட்டும்தான் அவர்களின் புலப்பெயர்விற்கான காரணம்.

தூரத்துப் பச்சைக்குள் வாழ்ந்திருப்பது தொண்டி போகும் பாதையில் இருளுக்குள் பதுங்கிக் கிடந்த சேந்தூர் கிராமத்துக் கூலிகளே… சேதுச் சீமையிலிருந்து எறும்புகள் கூட ஊறாத வறட்டுக் கடுகளில் இருந்து பெரும் கூட்டம் கொழும்பு நோக்கிக் கிளம்புகிறது.. அங்கிருந்து மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லாக் கிராமங்களிலிருந்தும் பெரும் கூட்டம் வாழ்க்கையைத் தேடிப் போகிறது கண்டி நோக்கி… அவர்களுக்கு தங்களைத் தவிர வேறு எந்த வழிவகையுமில்லை. எதுவுமற்றவர்கள்.உழைத்துப்பிழைக்க கை,கால்களைத் தவிர ஒன்றுமில்லை. ஆனாலும் இங்கிருந்து ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லவே விரும்புகின்றனர்.”ஏப்பா கம்பரிசி கிடைக்காதாம்பா எடுத்து முடிஞ்சுக்கோங்க.”..கப்பல் பயணத்தில் பாய் அழுக்கு மூட்டைத் தலைகாணி எல்லாம் சாத்தியமில்லை என்ற போதும் எடுத்துப் போகிறார்கள். இதற்கு முன்பாக இங்கிருந்து போனவர் எவரும் திரும்பவேயில்லை எனும் குரூர நிஜம் அவர்களை வாட்டியது.பசியில சாகிறதுக்கு பதிலா கால் வயித்து கஞ்சியக் குடிச்சிட்டு மனசா செத்துப்போவோம். கண்காணா தேசத்திலதான் உசுர புடிச்சி வைச்சுக்கிட்டு இருக்கோம்னு நம்பிக்கிட்டாவது இருக்கட்டும் இங்க இருக்கும்ஜனங்க. தலைமுறை, தலைமுறை யாக வாழ்ந்திருந்த நிலத்தை விட்டு அகல்வதும்,புதிய இடங்களில் தங்களைப் பொருத்திக் கொள்வதும் எத்தனை வலியானது. கண்டிக்கிக்கு வருவதற்கான சம்மதத்தைப் பெறும் வரையிலும் நயந்து நைச்சியம் பேசிக் கொண்டிருந்த கங்காணியின் குரல் முதன் முதலாக அதிகாரத்தின் குரூரத்தை வெளிப்படுத்துகிறது.”ஏம்பா,எல்லாரும் வரிசையா நில்லுங்க கணக்கெடுக்கனும்,”எதுக்கப்பா இம்புட்டுச் சாமான தூக்கி வாறீங்க, கப்பல்ல ஏறும்போதுசுமை சாஸ்தின்னா, கீழே இறக்கி கடல் தண்ணியோட போக விட்டுறுவாய்ங்க, பேசாமா அதுக்கு இங்கேயே விட்டுறுங்க . குறைந்த சுமையோட நடந்தாத்தான் வெரசாக நடக்க முடியும்…”தேவிப்பட்டிணம் போய்ச் சேரும் வரையிலான. கால்நடைப் பயணம் வலியும்,வேதனையும் மிக்கதாக இருக்கிறது..வழிநெடுக பாதசாரிகள் தங்கிப் பயணிக்க அம்பலம் என்கிற தற்காலிக தங்குமிடத்தையும் வெள்ளைக்காரன் உருவாக்கி வச்சிருந்திருக்கிறான். அந்த அம்பலத்தில்தான் நாலாதிசையிலும் இருந்து வந்து சேர்ந்திருக்கும் தமிழ் சணங்கள் ஒன்றாக இனைகிறார்கள். வெட்டவெளிப் பொட்டலில் கண் எட்டும் தூரம்வரை அடர்ந்த வெளியைத் தவிர வேறு எதுவும் இல்லை.குடிசைகளால் மூடப்பட்ட மண்சுவர். இதுவே அம்பலம். அம்பலம் வந்தடைவதற்குள் கொட்டித் தீர்க்கிறது மழை.நின்று திரும்பி பார்க்கிறார்கள் அவரவர் பிறந்து வளர்ந்த ஊரை. அத்தனையும் தூரத்தொலைவில் ஒற்றைப்புள்ளியாக விழுந்து கிடக்கிறது…வந்து சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்டும்,அடிமைப்படுத்தப்பட்டும் கிடந்த உழைப்பாளிகள்.

Tea plucking, Nuwara Eliya area, | Stock Photo

கிளம்பும் போது இருந்த உற்சாகமும் நம்பிக்கையும் சட்டென ஒருகணத்தில் உடைந்து விடுகிறது. வள்ளி அப்போதுதான் முதன்முதலாக தன் அப்பன் வேலனிடம் கேட்கிறாள். “எப்பா,பேசாம நம்ம ஊருக்கே, திரும்பி போயிரலாம்பா. இங்கின பெய்யிற மழைக்கழுத நம்மூரிலயும் பெய்யுமில்ல. அங்கிட்டு போயி பொழைக்கிறதுக்கு வீட்டுக்கே போவோம்பா என்கிறாள் வள்ளி.. திரும்பவே முடியாத பயணம் இது என்பது ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்காதுதான்… வேலனின் கனவுக்காட்சிகளின் வழியாக வாசகனுக்கு நினைவூட்டப்படுவதும் கூட இதைத்தான்… “இலங்கைக்குப் போய் பணத்தைக் குவித்துக்கொண்டு வந்து இங்கே பெரிய வீடுவாசல் கட்டிக்கொண்டு நிம்மதியாகப் பசி, பட்டினியின்றி இன்பமாக வாழ்ந்து அடிக்கடி ஊருக்கு வந்து போகலாம். தேயிலை, காப்பிச் செடிகளின் தூர்களில் பொற்காசுகள் குவிந்து கிடப்பது போலவும், அதை அள்ளி அள்ளி ஊருக்குக் கொண்டுவந்து சேர்ப்பது போலவும் சேந்தூர் கிராமத்தில் எல்லோரும் இவனையே அதிசயமாகப் பார்ப்பது போலவும் முதல்நாள் இரவில் கனவோடே தூங்கிப் போனான்”… ஆனால் அத்தனையும் வெற்றுக்கனவுகளே என்பதை முதல்நாளிலேயே உணர்ந்துவிடுகிறார்கள். நாம் அனைவரும் அடிமைகள். கூலிகள் எனும் துயர உணர்வு மேலிடும் போது தடுமாறுகிறார்கள். பெரும் காற்றில் வாழ்க்கையே அசையும் போது செத்தாலும் பொழைச்சாலும் பரவாயில்லைன்னு பொறந்த ஊரிலேயே விழுந்து கிடந்திருக்கலாம் எனும் ஏக்கப்பெருமூச்சுடனே நகர்கிறார்கள் நித்தமும்…

அம்பலம் எனும் வழிப்பயண புகலிடத்தில் துவங்கிய துயர்,வழிநெடுக தொடர்கிறது. தோணியில் புளிமூட்டையை அடைப்பதைப் போல  எல்லோரையும் அடைக்கிறார்கள். ஒருவர் மூச்சை ஒருவர் வாங்கி விடவேண்டிய கொடூரத்தோடு நகர்கிறது . கப்பல் பயணமும் மரணத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திக் கடக்கிறது. பாதியிலேயே இறந்து போனவர்களைச் சமுத்திரத்தில் ஜலசமாதி ஆக்கிவிட்டுப் பயணிக்கும் போதெல்லாம் கங்காணிகள் ராட்சஷர்களாக நடந்து கொண்டார்கள். அவர்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள்தான் வாழ்க்கை முழுவதும் இருக்கப்போவதை கப்பல் பயணமே உணர்த்திவிட்டது.. எல்லாம் முடிந்து நடந்து களைத்து,மிதந்து நடந்து தோட்டக்காட்டை வந்தடைந்த போது வாழ்க்கை பிரகாசிக்கும் எனும் அவர்களின் கனவு முளையிலேயே கருகிப் போகிறது. தீவாந்திரம் வழங்கப்பட்ட குற்றவாளிகளைப் போல ஹாமில்டன் தோட்டத்தில் அடைக்கப்பட்டுக் கணக்கெடுத்த போதுதான் அவர்களுக்கு தங்கள் மீது விழுந்திருக்கும்விஷவலையின் குரூரம் புரியத்துவங்கியது. அதிலும் வெள்ளைக்காரனைப் பார்த்த மறுநொடியில் பதறிய ஈரக்குலையின் பதட்டம் நிற்கவேயில்லை…

இனியான நாவலின் பக்கங்கள் முழுக்க அந்த சேதுச்சீமையின் மக்கள் எப்படி மலையைத் திருத்தி விளைநிலமாக்கினர் தேயிலை, காப்பித் தோட்டங்களின் பின் வாழ்வின் சூட்சமங்கள் என்ன என்பதையே விரிவாகப் பேசுகிறது.. வேலைக்களத்தில் ஆண்களுக்கான வேலை இது. பெண்களுக்கான வேலை இதுவென தனித்துப் பிரித்து வைத்திருந்தார்கள். இயந்திரங்களின் வருகைக்கு முன்பிருந்த காலம் அது. “அந்தக்காடுகள் சாமான்யமான காடுகள் அல்ல. தங்களுடைய கிராமத்து வறண்ட நிலத்தைப் போலவோ அல்லது கடந்து வந்த பாதையில் இருந்த வேலிக்காத்தான் மரக்காடுகளைப் போலவோ இல்லை. பயங்கரமான காட்டு விலங்குகள் நடமாடும் வனப்பகுதியது. மழைக்காலத்தில் கொசுவும் சகதியும் மன்டிக்கிடக்கும். தோட்டக்காடுகள். ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் பஞ்சமின்றி அலையும். புகையிலைத்தடையின்றி பயணிக்க முடியாத தோட்டடக்காடுகள் அவை.. காப்பிக்கொட்டை பழுக்கும் காலத்தில் காப்பிப்பழம் பறிப்பதும், பழம் ஒய்ந்துபோன காலத்தில் புல்வெட்டும் வேலையையும் பெண்கள் செய்து வந்தனர். ஆண்கள் காடுவெட்டும் வேலையும். முள்ளு குத்தி உரம் போடும் வேலையும். கவ்வாத்து வெட்டும் வேலையும் செய்து வந்தனர். காடுகளில் வேலை செய்து வந்த தொழிலாளிகள் கொடிய விலங்குகளுக்கோ, அல்லது கொசுக்களுக்கோ, அட்டைப் பூச்சிகளுக்கோ ஒருநாளும் பயந்ததில்லை.அவர்களை அச்சமூட்டிக் கொண்டிருந்ததெல்லாம் இங்கிருந்த கங்காணிகளும். கணக்குப்பிள்ளைகளும் தான். அதிகாரிகளாக இருந்த வெள்ளைக்காரர்களின் பெண் இச்சைக்குப் பழியான பெண்களின் கதைகள் ஒருநூறு தேயிலைத்தூரின் வேர்களில் புதைந்து போயிருக்கிறது.

வேலைத்தளத்தில் கங்காணிகளும், கணக்கர்களும் நிகழ்த்திய வன்மங்களின் கதைகள் சாட்சியமற்றுப் போனதை மலையகம் மட்டுமே அறியும். இங்கே உடன்பட மறுக்கும் பெண்களின் கணக்குச்சிட்டைகள் சரிபார்க்கப்படும். குளிரில் நடுங்கிக் கிடக்கும் மனிதக்கூட்டம் கம்பளிக்குள்தான் தங்களைப் பொருத்திக்கொள்ளும். பிறகென்ன.அவர்களுடைய கம்பளிகளின் விலை எட்டவே முடியாத உயரத்திற்குப் போகும்.குடும்பத்திற்காக அனுசரிக்கும் பெண்கள் உள்ளுக்குள் அழுகிறார்கள். சிலர் தன் உடலையே ஆயுதமாக்கி கங்காணிகளை வீழ்த்துகிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் திரும்பி ஊருக்கே போயிரலாம் எனும் மனநிலைக்கு பத்து வயதில் ஹாமில்டன் தோட்டத்தில் வேடிக்கை பார்த்த சிறுமி வள்ளி, வளர்ந்து பக்கத்துத் தோட்டத்தில் வாழ்க்கைப்பட்டுப் போன பிறகும் நினைக்கிறாள்.தோட்டங்களை உருவாக்கி காப்பியும், தேயிலையையும் கும்பினிகளுக்குக் கொட்டிக் கொடுத்த தமிழ்க்குடும்பங்களுககு காலம் கொடுத்த பரிசு அம்மை நோய். “ஹாமில்டன் தோட்டத்தில் உள்ளவர்களை அம்மை நோய் மிகக்கடுமையாகப் பாதித்தது.வேனிற் காலத்தின் வெப்பம் தாளாமல் காலரா காட்டுத்தீயைப் போல பரவியது. தோட்டத்தொழிலாளிகள் இருநூறு பேருக்கு மேல் காலராவிற்குப் பலியானர்கள். யாவரும் தேயிலைத் தூருக்கு உரமானார்கள். நோய் கொண்டு போனது மட்டுமல்ல.பெண்கள் மீதான துரைகளின் குரூரத்தை கேள்வி கேட்டவன். கணக்கு கேட்டவர்கள்.எங்கள விட்டுறுங்க என நாட்டுக்கு தப்பிப் போனவர்கள்.இப்படி பலரின் உயிரும் தேயிலைத்தூரில் தான் ஆடிக்கொண்டிருக்கிறது.

Image

கோகிலம் சுப்பையா

பத்துவயதில் சேந்தூரில் அப்பனோடு தோட்டக்காட்டச்சியாக ஹாமில்டன் தோட்டத்திற்கு வந்தவள் வள்ளி.ராசிக் கொள்ளை ராசாத்தோட்டத்திற்கு கல்யாணம் கட்டிக்கொண்டு போகிறாள். இடம்தான் மாறியதே தவிர, வேறு எதுவும் மாறவில்லை. அதே கங்காணிகள்,கணக்குப்பிள்ளைகள். கவாத்துகள். காபரா வாழ்க்கை… கனவுகளில் மட்டுமே வந்து போகும் சேந்தூருக்கு அவளால் போகவே முடியாது. சொந்த ஊருக்கு மட்டுமில்லை. தாயும் தகப்பனும் செத்த போதும் கூட ஹாமில்டன் தோட்டத்திற்குக் கூடப் போகவில்லை. அவ்வளவுதான்… காலம் மகா அரக்கன். நாட்டை விட்டு,ஊரை விட்டு,உற்றாரை விட்டு, பஞ்சத்தைத் தீர்க்க இங்கு வந்தவர்கள். இலங்கைதான். அதுவும் மலையகம்தான் அவர்களின் நாடாகிப் போனது… உலக யுத்தம் படுத்தி எடுத்தது மலையகத் தமிழ்க்குடிகளை. “மழை நிற்காமல் கொட்டு கொட்டென்று கொட்டியதோடு,ஆற்றிலே வெள்ளமும் பிரவாகமாக ஓடியது. அந்த வாடைக்குளிரில் வேலை செய்வது துயரக்குளத்தில் அவர்களை வீழ்த்தியது. யுத்தம் தந்த நெருக்கடியில் சாப்பாட்டிற்கே பஞ்சம் வந்தது.அரிசி கிடைப்பதே அரிதாகிப்போனது.கங்காணி, கணக்குப்பிள்ளைமார்களின் கணக்குகளும் உயர்ந்து கொண்டே போனது.எதைப்பற்றிக் கேட்டாலும் யுத்தம்.யுத்தம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர் வெள்ளைக்காரர்கள்.”… 

மலையக வாழ்க்கையின் துவக்கக் கால மாற்றங்களை நாவல் துளித்துளியாக காட்சிப் படுத்தி நகர்கிறது. அடர் வனங்களைத் திருத்தி காப்பி, தேயிலைத் தோட்டங்களாக உருமாற்றியவர்கள் தமிழர்கள். போக்கிடமின்றி காடுகளிலேயே விழுந்து கிடந்தனர் வறட்டுக் காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்கப் போன தமிழ்க்குடி.இங்கேயே பிறந்து,வளர்ந்து வாழ்க்கைப்பட்டு , தேயிலைத்தூருக்கு உரமாகிப் போனார்கள் என்பதை மட்டும் எழுதியிருந்தால் ,அது வழக்கமான கதைத்தொகுதியாக கடந்து போயிருக்கும்.நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றங்களையும் பதிவுசெய்கிறது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க இயக்கம் உருவாகி வளர்வதற்கான புறச்சூழலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. தேயிலைத்தூரினில் ஆடும் உயிரின் வாதை படித்து முடித்த பலநாட்கள் வாசகனைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது மட்டும் நிஜம்……..

பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….

ம.மணிமாறன்……

விருதுநகர்



முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்



போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. jananesan

    போர் சிதைத்த நிலத்தின் கதை எனும் இத்தொடர் இலங்கை மலைத்தோட்ட த்தொழிலார் களின் வாழ்வியலை மிதித்து மூச்சுத் திணற விட்டு தம்மை மட்டுமே தமிழர்களாக பறை சாட்டிக்கொண்ட இலங்கை யின் வடக்கு, கிழக்கு தமிழர்களை நோக்கிக் கேள்வி எழுப்புவதாக உள்ளது. இவர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் யார் ? இத்தொடர் காலம் தாழ்த்தி தொடங்கப்பட்டாலும் , இன்றைய போர்சிதைந்த இலங்கைத் தமிழர் வாழ்நிலைச் சூழலிலும் பல காத்திரமான கேள்விகளை கிளர்த்த வல்லது . தொடருக.வாழ்த்துக்கள் தோழர் மணிமாறன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *