சுழற்றியடிக்கிறது வாழ்க்கை. பசியைத் துரத்திட வறண்ட காடுகளிலிருந்து கால் கிளப்பி இடம் பெயர்ந்தது தமிழ்க்கூட்டம். முழங்கால் அளவு கடல் நீரில் மூழ்கியும் மிதந்தும் பயணித்து, உப்புக்காற்றைக் குடித்தே பயணித்தனர் முதல் தலைமுறை மூதாதையர் நிஜத்தில் வறள் காடுகளிலிருந்து பசியைத் துரத்த வெளியேறிய கூட்டமே நம்முடைய மூதாதையர்கள்.. கங்காணிகளால் அழைத்து வரப்பட்ட பெரும் கூட்டம் தலைதிருப்பி வெகுதொலைவில் கரும் புள்ளியாகக் கரைந்திருக்கும் தன்னூரை ஏக்கத்தோடு பார்த்தபடி நகர்கிறது. ஒரு நாளும் திரும்ப முடியாத ஊர் அதுவென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பசியாறிய பின் திரும்பிடலாம் எனும் அவர்களின் நினைப்பு கடைசிவரை கைகூடப் போவதில்லை என்பது அவர்களின் புரிதலுக்கு உள்ளாகியிருக்கவில்லை. பசியைத் துரத்திட இருக்கும் கடைசி வாய்ப்பையும் தவறவிடத் தயாரில்லாது பயணத்தைத் தொடர்கின்றனர்.
கிளம்பி வந்து அறிவிக்கப்படாத எல்லைக்கோட்டினில் விழுந்த பிறகு மலையகத்தை தன்னூராக வரித்துக் கொண்டது பெரும் கூட்டம். அங்கேயே விழுந்து கிடந்தது தமிழ்ச்சனம்..உழைப்பால் மலைகளை வளப்படுத்தினர். தோட்டக்காட்டான் என்றும்,கள்ளத்தோணி எனவும் இன்றுவரையிலும் இழிசொற்களை சுமந்தலையும் கூட்டமது.வாழ்க்கை இற்றுப் போய் கண்காணாத இடத்தின் தேயிலைச் செடித்தூர்களுக்கு உரமாகிப் போன பெரும் மக்கள் திரளான நம் மூதாதையர்களின் கதையை எழுதி எழுதித் தீர்க்கவே முடியாது.ஈழம் என்றால் வடக்கும் கிழக்கும்தான்.இதுவரையிலும் எழுதி கவனம் பெற்றவை யாவும் யாழ்ப்பாணத்துக் காரர்களின் விருப்பமும் துக்கமுமே.. சமாதான காலமானாலும்,போர்க்காலம் ஆனாலும்,போருக்குப் பிறகானாலும் கூட எழுத்தில் வந்தவை வடக்கும் கிழக்குமே..
தென்பகுதி மலையகத்தின் வாழ்க்கைப்பாடுகள் இதுநாள் வரையிலும் மிகவும் குறைவாகவே பதிவாகியிருக்கிறது.தேயிலை,காப்பி உற்பத்திக்கு ஆறு ஏழு தலைமுறைகளாக வாழ்க்கையைத் தத்தம் செய்த தமிழ் சனங்களின் வாழ்வின் துக்கமோ, பெரும் கொண்டாட்டங்களோ இது நாள் வரையிலும் கூட படைப்பாகவில்லை. மலையக மக்களின் நான்காம் தலைமுறை துவங்கி ஐம்பது வருட வாழ்க்கைப் பகுதியை “குறு நதிக்கரையில்” எனும் நாவலாக வடித்தெடுத்திருக்கிறார் மு.சி.கந்தையா.. ஈழத்தின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் வந்து சேர்ந்த இடமாக இருப்பது வால்பாறை டீ எஸ்டேட்களும், நீலகிரி காப்பித் தோட்டங்களுமாகவே இருந்திருக்கிறது. பல தலைமுறைகளாக. சமதள விவசாயத்தை மறந்து போனவர்கள் இப்படி மலைக்காடுகளில் தஞ்சம் புகுந்தது தவிர்க்க முடியாது என்பதே மெய்.மு.சி.கந்தையா நீலகிரியிலிருந்து கொற்ற கங்கையின் பாடுகளை எழுதியிருக்கிறார். ஒருவிதத்தில் இரண்டிற்கும் ஒரு படித்தான வாழ்நிலை இருப்பதும் கூட எழுத்தில் இயங்கிடக் காரணமாகியிருக்கலாம்.
நக்கிள்ஸ் மலைத் தொடரில்,கொற்ற கங்கை நதிக்கரையில் படுத்துக்கிடக்கிற தேயிலைத் தோட்டத்தின் கதை.இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த வனங்களாக இருந்த இந்த பகுதியில் வாழ்கிற தமிழ்ப் பூர்வ குடிகளின் பாடுகளைப் பாடுகிற கதையிது. கொற்ற கங்கை தோட்ட உருவாக்கத்தையும்,தோட்டத்தில் குடியேறியவர்களின் வரலாற்றுக் காலத்தையும் பேசுகிறது நாவல்.. நாவலின் மையப்புள்ளியாகப் புத்தகத்தில் விரிவது இதுதான். வனத்தை பண்படுத்திச் செழிக்க வைத்த பெரும் கூட்டத்தின் வாழ்வு வறுமைக்குள் மூழ்கிக் கிடக்கிறதே ஏன்?. இதற்கான பதிலாக நகர்கிறது காட்சிகள். மலையக மக்களின் பெரும் துக்கத்தை ராமு என்கிற தனி மனித வாழ்வைப் பின் தொடர்வதன் வழியாக எழுத்தாளர் கண்டுரைக்கிறார். நாவல் எனும் இலக்கிய வடிவம் கதைகூறும் முறைமையில்தான் தொக்கி நிற்கிறது.நான்காம் ஐந்தாம் தலைமுறை காலத்தின் கதையிது.வெள்ளைக்காரர்கள் தோட்டம், துறவு, நாடு என எல்லாவற்றையும் விட்டு நிர்ப்பந்தத்தால் வெளியேறிய பிறகு முதல் தேர்தல் நடக்கிறது. தேயிலைத் தோட்டத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்திருக்கிறது என்பதை நாவல் குறிப்பாகத் தருகிறது.ஒட்டு என்பதோ,அரசியல் என்பதோ, தேவை, இவை இவையெனக் கேட்டுப் பெறும் உரிமை இருக்கிறது என்பதையும் கூட அறிந்திருக்கவில்லை அவர்கள். காப்பி, தேயிலைத் தோட்டங்களில் விழுந்து கிடப்பதைத் தவிர வேறு எதுவும் அறியாத பெரும் கூட்டத்திற்கு அரசியல் புரிதல் வரத்துவங்கிய புள்ளியை நாவல் காட்சிகளால் வாசகனுக்குள் பல இடங்களில் கடத்துகிறது.
தமிழர்களே ஆனாலும் கங்காணிகள் ஆகிவிட்டால் அவர்களுக்கு ஒரு சிற்றதிகாரம் வந்துவிடுகிறது.அவர்கள் தோட்டத்தை நிர்வகிப்பவர்களின் கையாட்களாக உருமாறிவிடுகிறார்கள்.அறிவிக்கப்படாத கொத்தடிமை முறையை அமல்படுத்துவதும் இவர்களே..சிங்களவர்களின் குடியேற்றம்.அரசதிகாரத்தின் வன்முறை வெறியாட்டம். திடீரென தோட்டத்தின் லயத்திற்குள் போலிஸ் புகுந்து வகை தொகையில்லாமல் வன்முறை வெறியாட்டம் போட. தோட்டக்காட்டிற்குள் பதட்டம் தொற்றத் துவங்குகிறது. திடீரென போலீஸ், மிலிட்டரி வாகனங்கள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்த நிர்மூலமாகிப் போனது தோட்டம். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை புரிதலுக்கு வருகிற போது புதிய புதிய தொழிற்சங்க நடவடிக்கைகள், அரசியல் கருத்துக்கள் என யாவும் முகிழ்க்கத் துடங்கியது.. அரைகுறை படிப்பாளிகளான தோட்டுக்காட்டுக் குடிகள் அரசியலை எப்போதாவது சமதளம் சென்று திரும்பி வருபவர்களின் கதை வழியாகவே உணரத் தலைப்பட்டனர்…
நாவல் என்றால் காலத்தின் காட்சிகளைக் கட்டித்தரும் இலக்கியமே என்பதை நாவல் சிற்சில குறிப்புகளின் வழியாக உணர்த்துகிறது.கடல்கடந்து மலை ஏறி நிலை பெற்ற பிறகும் தங்களுடைய இதிகாச மரபைத் தொடர்பவர்கள் தமிழர்கள். தோட்டத்தின் லயங்களின் வெளிகளில் விரிந்திருக்கும் வெளிகளில் அடிக்கடி பாரதக் கதைகள் படிக்கப்படுகிறது. அவர்கள் தன் உடலோடு கதைகளையும் கட்டி எடுத்து வந்த கூட்டம் என்பதையே அந்த காட்சிகள் வாசகனுக்கு உணர்த்துகிறது. கங்காணியின் கட்டளையை ஏற்க மறுத்து வீட்டை விட்டு வெளியேறி சமதளம் நோக்கி வெளியேறிய ராமுவின் கதையே நாவல். பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் தமிழ்ச்சிறுவர்கள்.. ரொம்ப படித்துவிட்டால் உடம்பு வளையாது.பிறகு காப்பி,தேயிலைத் தோட்டங்களில் அவர்களின் கால் தரிக்காது என்பது கங்காணிகளின் வாய்ச் சொல்லாக எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து கிடந்தது..எப்போதாவது தமிழகத்தின் உறவுகளிடம் இருந்து வரும் கடிதத்தைப் படிப்பவர்களாக இந்த அரைகுறை படிப்பாளிகளே இருந்திருக்கின்றனர். அந்தளவிற்கு இது போதும் என குடும்பங்களும் நினைக்கிறது. எது தன்னூர் எனும் ஏக்கம் அவர்களை விட்டுவைப்பதேயில்லை. தோட்டக் காடுகளில் தமிழகம் பற்றி அவரவர் கிராமங்களைப் பற்றிச் சொல்லப்பட்டு, சொல்லப்பட்டு மனங்களுக்குள் தலைமுறை தலைமுறையாக ஏற்றப்பட்ட கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் ஆறு தலைமுறை வயதாகிவிட்டது. அதுவே கடிதங்களின் உள்ளடக்கம்.
மூன்றாம் தலைமுறைக் காலத்தில்தான் தோட்டத் தொழிலாளிகள் தங்களுடைய தேவையை நிறைவேற்றச் சங்கம் அமைக்க முயற்சித்தனர். சங்கம் உருவானால் ஏற்குமா அதிகாரம்.. தொழிலாளி வர்க்கம் முரண்பட்டுக் கிடந்தால் மட்டுமே தன்னால் நீடித்திருக்க முடியும் என்பதை மிகச்சரியாகப் புரிந்த அதிகார வர்க்கம் போட்டி சங்கத்தை உருவாக்கி வளர்க்கிறது. சங்கங்களுக்கு இடையேயான மோதலில் தோட்டக்காடே ரெண்டு பட்டுப் போகிறது. ஒரு சங்கத்தை சேர்ந்தவர்களுடன், மற்ற சங்கத்துக்காரர்கள் பேசுவது கூட இல்லை.நல்லதையும்,பொல்லதையும் இருவரும் தள்ளி வைக்கின்றர். இதற்குள் முதலாளிகளின் சூது ரகசியமாக படிந்திருக்கிறது.இங்கு முகிழ்க்கிற காதலும் கூட சங்கங்களின் பெயரால் காவு கொடுக்கப்படுகிறது.மெதுவாக அவர்களின் அடியாழத்திற்குள் புதைந்திருந்த சாதியும்,துவேசமும். மேல் எழும்பி பேயாட்டம் போடுகிறது.அது இங்கு மட்டுமில்லை நாடற்று இந்தியாவின் தோட்டக்காடுகளுக்குப் போன பிறகும் பின்தொடரும் கொடு நிழலாகவே இருக்கிறது. அதனால் தான் தன்னுடைய காதலியைத் தேடி விராலி மலை வந்தவனிடம் எப்படி உணக்கு பழக்கம்.சொந்தமா?. இத்தனை காடு மலை கடல் கடந்து வரக் காரணம் என்ன? எனத் துளைத்தெடுக்கிறார்கள். எல்லாவற்றிற்குள்ளும் சாதிய வன்மம் படிந்தே கிடக்கிறது. இந்திய மனங்களில் படிந்திருக்கும் சாதியின் ஆணிவேரை அசைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை…
தோட்டக்காட்டில் இருந்து சமதளம் போனால் கூட அவர்களை தோட்டக்காட்டான், கள்ளத்தோணி எனும் வசைகள் பின் தொடரவே செய்கிறது. ஆனாலும் அவர்கள் தோட்டுக்காட்டிற்கு எப்போதாவது தான் திரும்பிச் செல்கிறார்கள்.மலைவாழ் மக்கள் நகரக் கிராம தெருக்களில் நடமாடும் போதுதான் அவர்களுக்கு நாட்டின் நிலையே தெரிய வருகிறது. தங்களைக் கடந்து செல்லும் ராணுவ டாங்குகளும், மிலிட்டரி வாகனங்களும் அவர்களை அச்சமூட்டுகிறது.தமிழகத்தின் தெக்கே இருந்து ஊரை விட்டுப் போகிறவர்கள் எல்லோரும் ஓட்டல் தொழிலாளிகளாகவே இருப்பதைப் போலவேதான் மலையக மக்களும் ஓட்டல் தொழிலாளிகளாகத்தான் சமதளத்தில் வாழ்வைத் துவக்குகிறார்கள்.. இப்படிப் பல ஒருமைகள் தோட்டக்காட்டிற்கும் தமிழ் நிலத்திற்கும் இருப்பதை நாவல் பல இடங்களில் நமக்கு உணர்த்துகிறது.
சமதளத்தில்தான் அவர்களுக்கு அரசியல் குறித்த புரிதல் ஏற்படுகிறது.எல்லாவற்றையும் தர்க்க அடிப்படையில் விவாதித்து அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறார்கள். அரசியல்,புரட்சி,தேசியம் என யாவற்றையும் குறித்த புரிதலும் கூட. அவர்களுக்கு அங்குதான் ஏற்படுகிறது.
கொற்ற கங்கை தோட்டத்து வாழ்க்கையைக் கலைத்துப் போட்ட முக்கிய அரசியல் நடவடிக்கையே இந்த நாவலின் மையம். குறு நதிக்கரை கரையில் எனும் நாவலைத்தவிர வேறு எந்த படைப்பிற்குள்ளும் விவாதிக்கப்பட்டிருக்காத மிக முக்கியமான வாழ்க்கைப் பகுதி இடம்பெயர்தல்.லட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாகவும், குடியுரிமையற்றவர்களாகவும் ஆக்கிய அரச அதிகாரங்களின் கதையைப் பேசுகிறது நாவல்.சொந்த ஊர் குறித்த ஏக்கம் இருக்கிறது.இது ஒன்றும் நம் ஊர் இல்லையே எனத் தடுமாறிக் கிடந்த கூட்டத்தின் மன அவசத்தை பயன்படுத்திக் கொண்ட அரசதிகாரத்தின் கதையை விவரிக்கிறார் மு.சி.கந்தையா.
“உழைப்பு, வீடு, உறங்கி விழித்தால் தேயிலை என்று இருந்தவர்கள் மத்தியில் ஒரு புயலைப் போலக் கிளம்பி பூதாகாரமாக வடிவெடுத்தது இலங்கையும்,. இந்தியாவும் செய்து கொண்ட சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம். அது சின்னா பின்னமாக்கியது மலையக மக்களின் வாழ்க்கையைத்தான். கொட்டாங்கந்தை தோட்டத்தையும்கூட அது புரட்டிப் போட்டது. இலங்கையில் இருப்பதா? அல்லது இந்தியாவிற்குச் செல்வதா?எனும் விவாதத்தை நடத்தாத தமிழ்க்குடும்பமே இருந்திருக்க வாயப்பில்லை.இந்தியா போனால் இங்கே இருப்பதைப் போல ஏதாவது ஒரு பொழைப்புல ஒட்டிக்கிடலாம். இருக்க இடம் பொழைக்க தொழில் எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க என்ற நம்பிக்கையில் ஒருபுறமும்,ஒன்னுமே தெரியாத நாட்டுக்குப் போயி என்னத்த செய்யிறது எனும் தர்க்கங்களும் நடந்தபடியே இருந்தது.முடிவில்லா விவாதங்களும், வினாக்களுக்கும் இடையில் பலரும் இந்தியா செல்வதற்கான கடவுச்சீட்டிற்காக முயற்சித்துக் கொண்டும் இருந்தனர். லட்சக்கணக்கான மக்கள் திரளை நிம்மதியற்ற மனநிலைக்குள் தள்ளியது இந்த ஒப்பந்தம்.இது மட்டுமல்ல இந்தியாவும், இலங்கையும் தொடர்ந்து செய்து வந்த எல்லா ஒப்பந்தங்களும் தமிழ் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்திருக்கவில்லை. மாறாக பெரும் நிம்மதிக்குலைவையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதே வரலாறு. இதற்கு மலையகம் சமதளம் என்று எந்த பேதமும் இருக்கவில்லை.
கண்ணீர் வடிய பலரும் இந்தியப் பயணத்திற்குத் தயாராகினர்.நிலமெங்கும் யாருக்குக் கடவுச்சீட்டு வந்திருக்கிறது.இந்தியா போகப் போகிறவர்கள் யார்? எனும் கேள்வி பெரும் பாறையாக மனங்களை அச்சமூட்டி மிரட்டுகிறது…சும்மா பதிந்து வைப்போம் என இந்தியப் பயணத்திற்காகப் பெயரை பதிஞ்சவர்கள் கூட சட்டென கடவுச்சீட்டு வந்தவுடன் திகைத்தனார்.தடுமாறினர்.தரையில் கால் பாவாது தடுமாறினர். தாயைப் பிரிந்து பிள்ளை, மனைவியை விட்டு கனவன், காதலைத் துறந்து காதலர்கள் என குடும்பத்தையே பிய்த்துப் போட்டது ஒப்பந்தம். கடலையும் தாண்டிய கண்ணீரால் நிறைந்து நகர்ந்தது இந்தியப்பயணம்.பயணத்தைத் திட்டமிட்ட பிறகு எல்லாவற்றையும் மலையகத்தில் விட்டுப் போவது அவர்களுக்குள் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.பண்ட பாத்திரங்கள், ஆடு, கோழிகள், நிலபுலன்கள் என யாவற்றையும் கண்ட விலைக்கு விற்றோ அல்லது யாரிடமோ ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.பிரியமாக வளர்த்த நாய்களை என்ன செய்வது என்பது அவர்களுக்கு கடைசி வரையிலும் கூட புரிபடவில்லை. எல்லோரும் கிளம்பி கப்பல் ஏறிய பிறகு காபராக்களிலும், லயங்களிலும் நாய்க்கூட்டத்தின் பெரும் கதறல் கேட்டபடியே இருந்தது. கண்ணீர் உதித்தடி கடந்த கூட்டம் வாழ்க்கையின் நிச்சயமின்மையைச் சபித்தபடி கடந்தது.…
மனித வாழ்வினில் தற்செயல் நிகழ்வுகளுக்கு இருக்கும் பெரும் பங்கினை நாவல் பல இடங்களில் காட்சிப்படுத்துகிறது. அப்படித்தான் நகரத்தில் தற்செயலாகச் சந்தித்த மகேஸ் எனும் இளைஞனால் ராமுவின் மொத்த வாழ்க்கையும், சிந்தனை முறையும் அடியோடு மாறிவிடுகிறது.”பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது அநேகம். அதிலும் அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியது, மனித இனம் தோன்றி வளர்ந்த வரலாறாகும். அந்த வரலாற்றுத் தடத்தில்தான் இன்றைய வளர்ச்சி அடங்கியுள்ளது. முந்தைய சமுக அமைப்புகள் தோன்றி மறைந்ததற்கான சமுகக் காரணிகளைப் பற்றிய புரிதலின் வழிதான் நிகழ், எதிர்காலங்களைக் கணிக்க முடியும் எனும் எளிய புரிதலுக்கு வருகிறான். எல்லாவற்றையும் சமூக இயங்கியல் விதிக்குள் பொருத்தி வைத்துப் பார்க்கும் வழக்கமும், அதைப் பரீட்சித்துப் பார்க்கும் நடைமுறையும் கூட ராமுவிற்கு கைவரப் பெறுகிறது.
கள்ளத்தோணி என்றால் யார்?. தேர்தல், ஓட்டு என்றால் என்ன?. நம்முடைய கால் தரித்து நிற்கப் போவது எங்கு இலங்கையிலா?இந்தியாவிலா?அல்லது தோட்டக்காட்டிலா?எனும் கேள்வி மரங்கள் முளைப்பதும்,யாவற்றையும் சமூக இயங்கியல் விதிகளின் அடிப்படையில் பதில்களை நோக்கி நகர்த்துவதும் ராமுவிற்குள் நிகழ்ந்தபடியே இருக்கிறது…
போராளிகளை விடப் பொதுமக்களைத் தாக்குவதில் ஏன் அரசின் படைகள் இவ்வளவு தீவிரமாக இயங்குகின்றன?…
புல்லு வெட்ட வந்த நீங்க எங்களுக்கு முதலாளி ஆகப் பாக்குறீங்களா? என போலிஸும், ராணுவமும் மலையக மக்களைப் பார்த்து எழுப்பும் கேள்விகளின் பின் உள்ள அரசியல் எது?.
யாழ்ப்பாணத்துக் காரவுங்களால நமக்குத் தொல்லை என்பது உண்மைதான்…நமக்குத் தொல்லை வருதுன்னு அவுங்க உரிமையைக் கேட்காமலும்,அதற்காகப் போராடாமலும் இருக்க முடியுமா?.
தோட்டம் முன்னப்போல இல்லப்பா. தோட்டத்தில வேலப் பார்த்து வந்த கங்காணிகள் எல்லாரையும் சொல்லாமலே வேலையிலிருந்து நிப்பாட்டிடானுங்கஅது மட்டுமா. அரசாங்கம் தோட்டத்த எடுத்தா நல்ல காலம் வருமுன்னு பேசிக்கிட்டாங்க. ஆனா இப்பப் பார்த்தா நாட்டுல கிடந்த சிங்களப் பொடியங்கள சூப்பர்வைசர்னு போட்டு இருக்காங்க..
தோட்டத்தில இருந்த பாதிபேரு இந்தியா போய் சேர்ந்திட்டாங்க. இருக்கிற கொஞ்ச பேரும் வாய் இருந்தும் ஊமையாகயிருந்தா இப்படித்தானே நடக்கும்…
விடுதலையைப்பேசும் எல்லா அமைப்புகளும் ஜனநாயக மறுப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சிறைக்குள்ளும் காண முடிகிறது. இவைகள் எந்த இடத்தில் முட்டி மோதி பெரும் அழிவை ஏற்படுத்தப் போகிறதோ?
வெள்ளையர் அதிகாரம் பஞ்சத்தையும் பட்டினியையும் உருவாக்கிய காலத்தில்,கால்நடைகளைப்போல் இந்த மண்ணிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டோம்.அந்த மண்ணில் வேர்விட்டதும் வெள்ளையர் வெளியேறியதும் அகதிகளாக்கப்பட்டோம்.. இலங்கையும், இந்தியாவும் போட்ட சாஸ்திரி..பண்டார நாயகா ஒப்பந்தம் மலையக மக்களை நாடற்றவர்களாகவும், குடியுரிமையற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறதே. எப்போது தொலையும் இந்த பாதரவு?…
இவையாவும் ராமுவின் கேள்விகளாக நாவலுக்குள் தெறிக்கிறது…. இது ராமுவின் கேள்வி மட்டுமல்ல.. வாசகனின் கேள்வியும்தான்……
(மு.சி.கந்தையா எழுதியிருக்கும் குறு நதிக்கரையில் எனும் நாவலை முன் வைத்து எழுதப்பட்ட வாச்சியம்..)
ம.மணிமாறன்.
பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.