சில பெயர்களின் மீது நம்மில் பலருக்கு இயல்பாகவே பிரியம் கூடி விடும்.அது வாசிப்பின் வழியாகவும் நிகழலாம்.வழிவழியாக சொல்லிச் சொல்லி நம் மனங்களை நிறைத்திருக்கலாம். எதுவாயினும் நம் யாவரின் பிரியத்திற்குரிய பெயர் ஜீவா. தமிழகத்தின் முற்போக்கு முகம் ஜீவா. ஒருவிதத்தில் அவர் நம்முடைய இலக்கிய மூதாய்.. அவர்தான் காப்பியங்களை, அதன் இலக்கிய வெகுமதிக்காக எப்படியெல்லாம் அணுக வேண்டும் என்று நமக்கு கற்று தந்தவர். ஜீவாவின் பெயரை தன்னோடு இனைத்துக்கொண்ட டொமினிக் ஜீவா ஒரு இலக்கிய இயக்கம். ஐம்பதுகளில் துவங்கி பத்தாயிரம் கடந்த பின்னும் தீவிரமாக இயங்கியவர். தன்னுடைய தொண்ணூறு அகவை வரையிலும் இலங்கையின் முற்போக்கு முகமாகவும் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் வகை மாதிரிகளை உருவாக்கியும் தந்த மாஸ்டர் அவர். அவருடைய இலக்கிய பங்களிப்பு மல்லிகை எனும் சிறுபத்திரிக்கையைத் துவங்கி நடத்திய போது புதுவேகம் பெற்றிருக்கிறது. சிறுகதைகளிலும் கூட மிகக் கச்சிதமான கதைகளை எழுதியவர் அவர். மல்லிகைக்கு முன்பாகவே அவர் கதைகளை எழுதத் துவங்கிவிட்டார்.
அவருடைய கதைகளின் வார்த்தைகள் வீட்டுக்குள் சுற்றிக் கொண்டு அலைபவையல்ல. கதையின் முதல் சொல்லே வீதியில்தான் பிறக்கும். சாலைகளில், தெருவில், திண்ணைகளில் மிதந்தலையும். தெருவோரத்து மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளே அவரின் கதைகள். மிகுந்த துணிச்சல் காரர் டொமினிக் ஜீவா.. அவருடைய பாதுகை எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருப்பவர் முத்து முகம்மது. யார் இந்த முத்து முகம்மது?. எத்தனை கதைகள் எழுதியிருக்கிறார்.
இலங்கைத் தமிழ் இலக்கிய உரையாடல்களில் முத்து முகம்மதுவின் பெயர் கண்ணில் கூடப் பட்டதில்லையே?என யோசித்தால் ..அடுத்தடுத்து வாசகர்களை வந்தடையும் செய்தி பெரும் சுவாரஸ்யமானது. முத்து முகம்மது டொமினிக் ஜீவாவின் வாசகராம். வாசகரை கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுத வைப்பதையெல்லாம் அன்றைய நாட்களில் எந்த எழுத்தாளரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படிச் செய்ததின் மூலம் இலக்கியம் ஒரு அதீத வஸ்து,எல்லோராலும் முடியும் செயல் அல்ல என்று அலம்பிக் கொண்டிருந்தவர்களை ஒரு அசை அசைத்திருக்கிறார் ஜீவா. முத்து முகம்மது வாசகர் மட்டுமல்ல. அவர்தான் பாதுகை எனும் கதையின் மையக் கதாபாத்திரம். தமிழில் இதுவரை நிகழ்ந்திராத,ஏன் உலக அளவிலும் கூட நடந்திருக்க சாத்தியமற்ற செயல்தான் இது. கதைகளிலிருந்து கதாபாத்திரங்கள் தொலைந்து போயிருக்கின்றன. தொலைந்தவர்களைத் தேடிப் போவதையே கதைகளாக எழுதியிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். என்னைத் தேடிவந்த என் கதாபாத்திரம் எனும் கதையைத் தஞ்சை ப்ரகாஷ் எழுதியிருக்கிறார்.
ஆனால் தன்னைப் பற்றி எழுதப்பட்ட கதைத் தொகுப்பிற்கு தானே முன்னுரை எழுத வாய்ப்பு பெற்ற கதா மாந்தர்கள் அதுவரையிலும் இருந்திருக்க மாட்டார்கள்.. இது ஒரு மிக முக்கியமான அரசியல் செயல்பாடு. கதைகள் எழுதுவது, மதிப்புரைகள் வழங்குவது, முன்னுரைகள் எழுதுவது, இவை யாவுமே மதிப்புமிக்கோருக்கு மட்டுமேயானது எனும் எலைட் மனநிலையை அடித்து நொறுக்கியிருக்கிறார் ஜீவா.. அதனால்தான் நிச்சயமாக டொமினிக் ஜீவா ஒரு இலக்கிய இயக்கம்…
தெருவிலேயே கிடந்து உழல்கிற மனிதர்களின் கதைகளைச் சொல்வதற்கு எளிய மொழிப் பிரயோகமே போதுமானதாக இருக்கிறது.பாதுகையின் கதைக்குள் வருகிற முத்து முகம்மதுவினை அவர் அறியாது கவனித்து எழுதுகிறார் ஜீவா. ஜீவாவோடு சேர்ந்து வாசகனையும் சொற்களை பின் தொடர்ந்து வரச்செய்யும் வலிமையான கதைநகர்வு பதினொரு கதைக்குள்ளும் இருக்கிறது. ரோட்டோரத்து துண்டுப்பீடியின் அணையாத கங்கில் கால் வைத்ததைப் போன்ற எரிச்சல் ஏற்படும் வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதையே பாதுகை. முகம்மது ஒரு செருப்புக்கடைக்காரன். நேர்மையானவன். எவர் பொருளுக்கும் ஆசைப்படாதவனும்தான். ஆனாலும் வாழ்க்கை மனிதர்களை இருப்பதைப் போலவே எப்போதும் இருந்திட அனுமதிப்பதில்லையே..தன் முன் வைக்கப்படும் சவால்களை எளிய மனிதர்கள் எப்படி எதிர்கொண்டு மேலேறி வருகிறார்கள் என்பதே பாதுகை… முகம்மது தன்னிடம் பழுது நீக்க வந்த அழகிய செருப்பினை வீட்டிற்கு எடுத்துப் போகிறான்.. உரியவர் நீண்ட நாளாக வரவில்லை என்பதால் மட்டும்தான் எடுத்துப் போகிறான். வீட்டிலிருக்கும் புது மனைவிக்கு அதை வரப்போகும் ஹஜ் பெருநாளுக்கான பரிசாகத் தருகிறான். தன்னுடைய மனைவி பெருமைப்படட்டுமே என்று எடுத்துப் போகிறான். எதிர்பார்த்ததைப் போலவேதான் கதை நகர்கிறது..
உரியவன் வந்துவிடுகிறான். தடுமாறுகிறது முகம்மதுவின் மனம். நீண்டநாள் காத்திருந்து பார்த்தும் வராததால் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாகச் சொல்கிறான். பொய் எப்போதும் அலங்காரமானது. அது சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் பொய்தான் என்று நிச்சயமாகத் தெரிந்துவிடும்.வாய்ப்பில்லை நீ பொய் சொல்கிறாய், எனக்கு செருப்பு வேண்டும் என அவன் மல்லுக்கட்டுகிறான். எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ எனும் பதட்டம் தொற்ற தடுமாறுகிறான். கேட்காமலே எங்க அம்மா மேல சத்தியமா குப்பைக்குத்தான் போயிருச்சு சார் என்கிறான். சத்தியம் பொய்யை உண்மையாக்கும் தந்திரம் என்பதை நாமும் அறிவோம்… அப்படியா அல்லா மேல சத்தியம் பண்ணு என்ற கேள்வியை மிக எளிதாக சத்தியம் செய்து கடத்துகிறான்.கதை முடிந்துவிட்டது. முகம்மது விதிவைத்த பொறியிலிருந்து பொய் சத்தியத்தால் வெளியேறிவிட்டான் என நினைக்கும் போதுதான் கதையின் மையம் திறக்கிறது.”அப்படியா நீ உனக்கு சோறு போடும் இந்த செருப்பு மீது சத்தியம் பண்ணு” என்கிறான். பதட்டமடைகிறதுமுகம்மதுவின் மனம்.தாயின் மீதும்,கடவுளின் மீதும் எளிதாக சத்தியம் செய்து கடந்த முகம்மதுவால் ஏன் செருப்பின் மீது சத்தியம் செய்ய முடியவில்லை..
செய்யும் தொழிலே தெய்வம் எனும் தர்க்கத்தைக் கொஞ்சம் நீட்டிப் பார்த்த கதையிது. செய்யும் தொழில் மட்டும் தான் தெய்வம் என்பதே எளிய மனிதர்களின் கடவுள் கோட்பாடு. எளிய மனிதர்களின் சொந்த நியாயங்களை அவர்களின் சார்பாகப் பேசிய கதை பாதுகை…
சாதி குறித்தும், அதன் மூர்க்க வன்மம் குறித்தும் தமிழ் நிலத்தில் கதைகள் எழுதத் துவங்கியிருக்காத நாட்களில் அப்படியான கதைகளை எழுதியவர் ஜீவா. தமிழில் அம்பேத்கர் நூற்றாண்டிற்குப் பிறகு, அதிலும் குறிப்பாக அறிவரின் தொகை நூல்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட பிறகே இங்குத் தலித் இலக்கியமும், தலித் அழகியலும் துளிர்விடத் துவங்கியது. ஜீவா எழுதிய கதைகள் யாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனதின் சொற்கள்தான். ஒருவிதத்தில் தமிழ்ச்சிறுகதைகளில் தலித் இலக்கியம் எனும் சொற்பதம் விவாதத்திற்கு உள்ளாகியிருக்காத நாட்களிலேயே அவற்றில் மகத்தான சாதனை நிகழ்த்தியவர் டொமினிக் ஜீவா. அதற்கான இரண்டு சாட்சிகள் பாபச்சலுகை, கைவண்டி எனும் இரண்டு கதைகள்.
பாபச்சலுகை எனும் கதை அரசு மருத்துவமனை காட்சிகளால் நகர்கிறது. அதிலும் குறிப்பாக அது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நிகழும் சம்பவங்களால் விரிகிறது.சுற்றிலும் பார்க்கிறான் ஒரு இடைச்சாதியான். அவனுக்குத் தெரிகிறது. இங்கு இருப்பவரின் சரி பாதிக்கும் மேலானவர்கள் யாரென்று.ஆனாலும் உள்ளுக்குள் ஓடுகிறது. இவர் என்ன சாதியாக இருக்கும்,அவர் என்ன சாதியாக இருக்கும் எனும் எண்ணம். அப்போதைய பிற்படுத்தப்பட்ட சாதியரின் மனநிலையை நடேசன் எனும் கதாபாத்திரத்தின் வழியே கடத்துகிறார்… நான் நடேசன் சங்கானைக்காரன். உபாத்தியார் வேலை பார்க்கிறேன். ஆணைக்கோட்டை ஊரில் மாஸ்டராக படிக்கேக்க எல்லா சாதிப்பிள்ளைகளும் ஒண்டாத்தான் கெடந்து உழப்புதுக.பள்ளிக்கூடத்திலயும் படிப்பிலயும் ஒரு மட்டில்ல மரியாதையில்ல.சிங்களவன்ட்ட ஒடி வந்தது கூட பெரிசில்ல. இருக்கிற ஊரில ஒரு மரியாதை வேண்டாமா?.எளிய சாதிக்காரனோட ஊராப் போயிட்டது. கண்ட சாதியளும், நிண்ட சாதியளும் ஒண்டா படிக்கிற பள்ளிக்கூடத்தில எண்ட புள்ளைங்களும் படிக்கிறத நினைச்சாத்தான் எரிச்சலா வருது. இந்த வரிகளை கடந்தும் கதை நகர்கிறது. ஒரு தேர்ந்த கதையை விரைந்து கடக்க முடியாது. வார்த்தை, வார்த்தையாக நமக்குள் அது இறங்கும் போதான மனநிலை தனித்தது. தேர்ந்த வாசகப்பரவசம் அது. கதை எழுதிய பகுதிகளுக்குள் மட்டும் நகரவில்லை. யாழ்ப்பாணத்துக் காரர்களின் சாதியம் குறித்து விரிவான தேடலை நோக்கி வாசகனை நகர்த்தும் கதையிது. அதன்பிறகு எனக்குள் டொடேமினிக் ஜீவா, டேனியல் தெனியான் என அதுவரையிலும் நீங்களும் நானும் படித்திருக்கும் அல்லது அறிந்திருக்கும் கதைப்பரப்புகள் விரியவே செய்யும்.. ஈழத்தின் தலித் இலக்கியத்திற்கு தமிழ் இலக்கியத்தில் தனித்த இடம் உண்டு. அதை உருவாக்கிய முன்னோடி ஜீவா
இப்போதும் கூட அய்யோ பாவம் அவர்கள் மலக்குழிக்குள் கிடந்து உழல்கிறார்கள்..பார்க்கவே பாதரவா இருக்கு…எனும் இளக்காரமான தொனியில் கதைகளை எழுதிக் கொண்டு, அதனை தலித் கதை என உரிமை கோருகிறார்கள்.. அல்லது கெட்டவார்த்தை பேசுவது, அழுக்குக்குள் உழல்வதே ஒடுக்கப்பட்டோர் வாழ்வு எனும் பிம்பத்தை கட்டமைப்பது. இது இன்றுவரையிலும் தமிழ்ச்சிறுகதைகளில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது…
தன்னுடைய கைவண்டி எனும் கதையின் வழியாகக் கதையின் தன்மையை வேறு ஒரு இடத்திற்கு நகர்த்திக் காட்டுகிறார் டொமினிக் ஜீவா.. கைவண்டி என்றால் அது உலர் கக்கூஸ் எனப்படும் மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றிச் சேர்க்கும் தள்ளுவண்டி.யாழ்ப்பாணத்து வீதிகளைத் தெருவோரத்து வாகனங்களே உயிர்ப்பிக்கின்றன. வாகனங்களோடு வாகனமாக வருகிற கைவண்டியைக் கண்டதுமே அலங்கார அம்மணிகள் மூக்கைத் தொடுகிறார்கள். மூக்கைப் பிடிப்பதாலேயே எல்லா வாசமும் மறைந்து விடுமா?எனும் கேள்வி செபமாலைக்கு வருகிறது. செபமாலை, கைவண்டி ஒட்டும் துப்புரவுத் தொழிலாளி. அவர் தெருச் சுகாதாரத்திற்கு மட்டும் பொறுப்பானவனில்லை. செபமாலை ஏன்ட வேலை எடுத்த வேலை செய்கிறவனாகவும் இருக்கிறான். ஒருவிதத்தில் அவன் இந்தத் தெருக்காரன்தான். தீர்க்கவே முடியாத சிக்கலான குடும்ப உறவுகளைக்கூட தன்னுடைய சாதுரியமான பேச்சால் சரி செய்கிறான். ஒரு தொழிலாளி எப்படியெல்லாம் இருக்கச் சாத்தியம் என்பதை எழுதிய கதையே கைவண்டி. இதுதான் தலித் கதை .புத்தி கேட்டு நடப்பவர்களாக மட்டுமே.. காட்சிப் படுத்தப் பட்டிருந்த தலித் வாழ்வியல் பகுதிக்குள்ளிருந்து புத்தி சொல்லும் மனுஷன் இருக்க வாய்ப்பில்லையா?.அதிலும் குறிப்பாகக் குடியானவர்கள் என்று பெருமை கொண்டலைகிற மனிதர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் உபாயங்களைச் சொல்கிறவராக வருகிறார் செபமாலை. நாங்கள் யோசனை சொல்கிற ஆட்கள் இல்லையா எனக்கேட்ட மிகத்துல்லியமான கதை கைவண்டி.. செபமாலை என்கிற சோமாலை அந்த தெருக்களின் நல்லது கெட்டதுகளை நடத்துகிறவராக டொமினிக் ஜீவா எழுதியிருக்கும் காலம் அறுபதுகளின் துவக்கம் என்பதுதான் நமக்கு மிகமுக்கியமாகிறது.தலித் அரசியல் கதையாடல்களைக் காத்திரமாக நிகழ்த்திப் பார்த்த நம்முடைய முன்னோடி ஜீவா.
நாய்களைக் குறித்து ஒருநூறு கதைகள் எழுதப்பட்டு விட்டன.கு.அழகிரிசாமியின் வெறும் நாய் வர்க்க அரசியலைப் பேசிய கதை.ஜீவா முற்றிலும் புதிய தொனியில் அணுகியிருக்கும் நாய்க்கதைகளில் ஒன்று மிருகத்தனம்.நகுலேஸ்வரனைக் கொன்றது நாய்.அவன் அந்த நாயைக் கட்டிக்கொண்டு வீமா..வீமா எனத் தடவிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தவன்தான். அந்த நாயால்தான் அவனுக்கு மரணம் நேர்கிறது. வீடே அந்த நாயைக் கரிச்சுக் கொட்டுகிறது. இரவெல்லாம் அது ஊளையிடுகிறது.தனக்குப் பிரியமானவனைத் தேடுகிறது என்று வைத்துக் கொள்வதா அல்லது எதற்கு இந்த விசித்திர சத்தம் என கதையைத் தொடரும் வாசகனுக்கு ஒரு அதிர்ச்சி முடிவைத் தருகிறார். அது கிட்டத்தட்ட ஒ ஹென்றி பானிக்கதைதான். மாப்சானும்,ஹென்றியும் டொமினிக் ஜீவாவும் பல கதைகளின் வழியாக ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கிறார்கள். நாய் வீமன் அந்த வீட்டின் உணவை எடுத்துக் கொண்டு போய் பலவீனமான பிறிதொரு நாய்க்கும் குட்டிக்கும் தருகிறது. விலகி நின்று கண்ணீர்உகிக்கிறது. கதைக்கு மிருகத்தனம் என்று பெயர் வைப்பதன் மூலம் கதையை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்துகிறார்.மரபான பல விசயங்களைக் கலைத்து அடுக்கி பிறிதொன்றாக்குபவனே கலைஞன்.
இலக்கியம் வரலாற்றுப்பிரதியில்லை. அது வரலாற்றின் வழிபயணித்து புதிய வரலாற்றை அல்லது நிகழ்ந்திருக்க வேண்டிய ஏதோ ஒரு அதீத தருணத்தை தன்னுடைய கதைமொழியால் கண்டு சொல்லும்.. நகரத்தின் நிழல் கதைக்குள் காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களைத்தான் பேசுகிறார். கைரிக்ஷாவை புதுமைப்பித்தன் நரவாகனம் என்று எழுதிப் பார்த்திருக்கிறார்.. மனிதனை மனிதனே இழுக்கும் இந்த செயலை நிறுத்த வேண்டும் எனும் வாதத்தைக் கதைக்குள் நகர்த்தும் போது அமிர்தலிங்கம் காரில் போனபடி ரிக்ஷா ஓட்டியை திட்டியபடி நகர்கிறார். அமிர்தலிங்கம் என்பதே இலங்கை அரசியல் சரி,தவறு நிலைகளை விளக்கும் ஒரு குறியீட்டுப் பெயர்தான்.
ஒருகாலத்தில் குதிரைவண்டிகள் இருந்த இடத்தை ரிக்ஷாக்கள் பிடித்துக்கொண்டன.ரிக்ஷாவிலிருந்து ஆட்டோவிற்கும்,ஆட்டோவிலிருந்து காருக்கும் மனிதர்கள் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். தத்துவம் வாழ்க்கையை நேர் செய்வதற்குத்தானே தவிர அதுவே எல்லாவுமாக ஆகிவிடுவதில்லை. மனிதனை மனிதன் சுமக்கும் ரிக்ஷாவில் ஒரு நாளும் ஏறுவதில்லை என்றிருந்த தத்துவப்பித்து எப்படிக் கலைந்தது என்பதே கதை. கதைக்குள் வருகிற சின்னட்டி என்கிற ரிக்ஷா ஓட்டி எப்படியாவது தன்னுடைய வாகனத்தில் ஏறச் சொல்லி நிர்ப்பந்திக்கிறான். கொள்கை தடுத்திட அவர் ஏற மறுக்கிறார். ஆனாலும் அவன் தன்னுடைய சூழலை விளக்குகிறான். தடுமாறிப் போன கதை சொல்லி தொழிலாளியின் கையில் காசைத் திணித்து விட்டு நகர்கிறார்… அடுத்த நொடியில் அந்த வாகன ஓட்டி சொல்கிறார். சார் நான் பிச்சைக்காரனில்ல, தொழிலாளி தொழிலாளிகள் ஒருபோதும் தன்னுடைய சுயமரியாதையை எதற்காகவும் விட்டுத்தராத வர்க்கம் எனக் கதையை நகர்த்துகிறார் ஜீவா என்றும் இந்தக்கதையை வாசிக்கலாம்.
இந்தக் கதைக்குள் வீசி எறியப்பட்ட காசுகளின் சப்தம் எனக்குள் புதுமைப்பித்தனின் அம்மாளுவையும், குஅழகிரிசாமியின் திரிபுரத்து நாயகிகள் நாரணம்மாவையும், வெங்கட்டம்மாவையும் நினைவூட்டி நகர்கிறது. இப்படி தொகுப்பின் பதினொரு கதைகளும் எழுதிச் செல்லும் வாழ்வு எளிய மக்களின் வாழ்வு. முற்போக்கு கதை மரபு எனும் தனித்த கதைகூறல் முறையை நிஜத்தில் உருவாக்கிய நம்முடைய மூத்த கதைமகன் டொமினிக் ஜீவிவின் எல்லா படைப்புகளைக் குறித்து மிக விரிவாகப் பேச வேண்டும். அப்படி பேசுவதன் வழி முற்போக்கு கதைமரபிற்கான முன்மாதிரிகளை நிச்சயம் கண்டடையலாம்.
உடனே மனக்கதைக்கோஷ்டி கிளம்பி வந்து இந்த முற்போக்குகளால் அகத்தின் துல்லிய மாற்றங்களை எழுதவே முடிட்யாது என இப்போது சொல்லிக் கொண்டலையும் குரலை டொமினிக் ஜீவாவும் நிச்சயம் எதிர் கொண்டிருப்பார்.அதனால் தான் ஒருபேருந்திற்குள் பயணிப்பவர்களின் மனம் அடையும் பாய்ச்சல் வேக மாற்றங்களை தாளக்காவடி எனும் கதைக்குள் நடத்தியிருக்கிறார். மனத்தத்துவம் என்ற கதைக்குள் நிகழும் முக்கோண மனநிலை மௌனிகளின் பிரக்ஞையை கலைக்கும் கதை… எங்களால் எப்படியும் கதை எழுத முடியும்.. ஆனால் யாரின் கதையை,யாருக்காக எழுதவேண்டும் என்பதில் டொமினிக் ஜீவாவிற்கு இருந்த தெளிவு மிகவும் முக்கியமானது….
(டொமினிக் ஜீவாவின் பாதுகை எனும் சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதப்பட்ட வாச்சியம்)..
ம.மணிமாறன்.
பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….
விருதுநகர்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.