எடுத்துரைக்க ஆளில்லை. ஏனென்று கேட்பாருமில்லை. வாழும் நிலத்தில் வாழ வகை தொகையற்று கசங்கிக் கிடக்கும் கந்தலைப் போலான மனிதர்கள் இவர்கள். சடங்குகளை நிறைவேற்ற நடு வீடு வரையிலும் போய் திரும்பும் வழிவகை தெரிந்தவர்கள். ஆனாலும் சேவை சாதி எனும் கட்டுத்தளையை அறுக்க முடியாமல் தடுமாறிக் கிடப்பவர்கள். நிலம், நீட்சி, காடு, கரை, வீடு, வாசல் என இவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை. அவர்களுடைய ஒரே சொத்து அடித்துத் துவைக்கப் பயன்தரும் இறுகிய உடல்களும்,துடிப்பான கைகளும் மட்டுமே. இழப்பதற்கு உழைப்பைத் தவிர எதுவுமற்ற உதிரிப் பாட்டாளிகள். இவர்களில் யாரும் விரும்பி வெள்ளாவிப் பானையைக் கட்டிக் கொண்டு அழவில்லை. இந்தக் கட்டுத்தளையிலிருந்து விலகி வெளியேறவே விரும்புகிறார்கள். தலைமுறை தலைமுறையாக முதுகில் துணிகளை இறுக்கி சுமையேற்றும் மாராப்பையும், அதனால் ஏற்படும் கொடுந்தழும்பையும் அகற்றவே முடியவில்லை இவர்களால். அதற்கு இந்த நிலத்தில் இனக்குழுப் போர் நடக்க வேண்டியிருந்தது.
விருப்பமே இல்லாவிட்டால் கூட விட்ட குறை தொட்டகுறையாக ஒட்டிக்கொள்கிறது. சதுவர்ணம் வரைந்த கோட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட மனிதக் கூட்டமிது. ஊரையே வெளுப்பாக்கிடும் குடிகளின் கதைக்குள் படிந்திருக்கும் துயரத்தை எப்படிச் சொல்வது. அசப்பில் தமிழ் நிலத்தைப் போலவேயான வாழ்நிலைகளையும், வாழ்க்கை முறைகளையும் கொண்டிருக்கும் ஒரு சிற்றூரின் கதை. தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து போனவர்கள் மலையகத்தில் மட்டும் கொத்தாக குடியிருக்கவில்லை. மட்டக்களப்பு போன்ற சமதளத்திலும் கூட தொட்டகை முனு, எல்லாளன் காலத்திற்கு முன்பிருந்தே குடியிருக்கிறது தமிழ் சனம், அதற்கேயுரிய எல்லாவிதமான ஏற்ற இறக்கங்கங்காளோடும், தனித்த நடைமுறைகளோடும்.. சாதிய ஆதிக்க கோட்டுருவை அழிக்க முடியாமலும் கூட.
ஊரென்றால் எது நில உடமையர் குடியிருக்கும் மேலகக்குடி மட்டும்தானே. அதுதானே ஊர். அங்குதானே எல்லாவிதமான சௌகரியங்களும் நிறைந்திருக்கும். ஒரு ஊரில என்று கதை சொல்லத்துவங்கிய நாளிலிருந்து ஊர் என்றால் அது தெருக்களின் கூட்டுத்தான். ஒதுக்குப்புறமாகக் கொட்டப்பட்டிருந்த சேரிகள் குறித்த கவனம் இருக்க வேண்டுமா?. அப்படியே இருந்தாலும் திருமணத்திலும், இறப்பின் போதும் சடங்காச்சாரங்களை செய்யும் சேவை சாதிகளைப் பற்றி எழுத என்ன இருக்கிறது. எப்போதாவது, எங்காவது ஒன்னு, ரெண்டு பிரதிகள் உருவானதும் கூட சமீபத்தில்தான். எல்லோரும்தான் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஏன் சொல்ல வேண்டும். விரிந்து கிடக்கும் அந்த ஊருக்குள் ஒதுங்கி கிடக்கும் சலவைத்தொழிலாளிகளின் வாழ்க்கையை மட்டும் சொல்லுவோமே என எடுத்துரைக்கப்பட்ட எளிய கதைதான் வெள்ளாவி எனும் நாவல். வண்ணார் சமூகத்தின் துயரப்பாடலை எளிய பேச்சு வழக்கில் நாவலாக்கித் தந்திருக்கிறார் விமல் குழந்தைவேலு. கடல் கடந்து வெகுதூரம் விலகி வந்திட்ட பிறகும் தன் மனதிற்குள் விழுந்து கிடக்கும் கோரக் காட்சிகளை, துயருற்றுக் கிடந்த மனிதர்களின் வாதையை கதை,கதையாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர்.

தீவுக்காலை எனும் சிற்றூரைப் பற்றிய கதை. குடும்பக் கதையை நாவலாக்கும் வித்தை கைகூடி வந்திருக்கிறது விமலுக்கு. ஒற்றை வார்த்தையில் தீவுக்காலையின் குளத்தங்கரையில் அடிகள்ளில் சு..ஸப்பா, சு..ஸப்பா எனும் பெருங்குரலெடுத்து ஊர் ஏகாலிகள் துணியைத் துவைத்துக் கொண்டிருந்தார்கள் என எழுதியிருக்கலாம்.ஆனால் விமல் அப்படி எழுதவில்லை.விஸ்தாரமாக எழுதுகிறார். தீவுக்காலையின் உருவாக்கத்தையும்,அதன் தோற்றத்தையும் அதன் பொருளாதார பின்புலத்தையும் கூட எழுதுகிறார். அப்போது பேச்சு வழக்கில் என்றாலும் பகடியும், கிசும்புமாக படர்கிறது மொழி.
ரெண்டு மூண்டு கட்டை போய் மொட்டையா மலையிலோ முருங்கை மலையிலோ ஏறி நிண்டு பாத்தா சீதை நிண்ட நிலத்துண்ட ராவணன் பேத்தெடுத்து கொண்டு போனானே அந்த நிலத்துண்டு மாதிரி தனிச்சிப் போய் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகாத் தெரியும். இப்படித்தான் ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர் ஊர்பற்றிய பெருமிதத்தைத் திறக்கிறது நாவல். ஆனாலும் நிஜம் இதுமட்டுமில்லையே. ஒரு பொருளை விலகி நின்று பார்ப்பதற்கும்.,அருகில் போய் பார்ப்பதற்கும் இருக்கிற வித்தியாசத்தை நாவலை வாசிக்கிற போது உருவாகும் காட்சிகள் நமக்குக் காட்டுகின்றன. இருக்கிற ஒவ்வொரு வீட்டு மூலையிலும் கொதித்துக் கொண்டிருக்கும் வெள்ளாவிப் பானைகளும்,குவிந்து கிடக்கும் அழுக்குத் துணிகளும்தான் உண்மையில் தீவுக்காலை எனும் சிற்றூரின் வண்ணாரக்குடி…இதுதான் வெள்ளாவி எனும் கதை நிகழும் இடம்.
விடிஞ்சா ஊடு ஊடாகப் போய் ஊத்த உடுப்புகள எடுத்து வந்து பின்னேரத்துல வெள்ளாவி கொதிக்க வைச்சி, துணிகளுக்கு குறி வைச்சு, அவிச்சி,ஆத்துக்கு எடுத்துக் கொண்டு போய் அடிச்சிக் கழுவி, காய வைச்ச, மடித்துக் கொடுத்து உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிற வருமானத்துலயும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏத்த இறக்கம் இல்லாமல் இல்ல.
இது மட்டுமல்ல ஊரின் தொகுதி.இதே தெருவில் குடியிருந்தாலும் கோளாவில் எனும் பனங்காடு ஊருக்குள்ள போய் புடவையெடுத்து வெளுத்துக் குடுத்து கூலி வாங்குகிறவர்கள் சாதாரன வருமானம் உள்ளவர்கள். இதற்கு அடுத்து சிறுநகரான அக்கரைபத்துக்கும் சோனக வட்டைக்கும் போய் புடவை எடுத்து வந்து துவைத்து தருகிறவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் கூடுதல் வருமானம் உள்ளவர்கள். ரோட்டோரத்தில் சலவைக்கடை போட்டு தொழில் செய்கிறவர்கள் இந்த ஊரில் வசதி படைத்தவர்கள். சில்லறை சிக்கல்களுக்கு கடன் கொடுத்து உதவுவர்களும் கூட இவர்கள்தான். இதோடு சேர்ந்து ஊரின் நல்லது,கெட்டதில் முன்நின்று உத்தரவிட்டு,எல்லாவற்றையும் செய்து முடிக்கிற அதிகார வர்க்கமான போடியார்கள். இவர்களிடம்தான் ஊரின் விவசாய நிலமெல்லாம் இருக்கிறது…ஒருவிதத்தில் இந்த எளிய மக்களின் ஒரே உடமையான உழைப்பின் மீதும், உழைப்புக் கருவியான அவர்களின் உடலின் மீதும் அதிகாரம் கொண்டவர்களாக இந்த போடியார்களே இருக்கிறார்கள். ஆண் என்றால் உழைப்பைச் சுரண்டி கொழுக்கவும்,பெண் என்றால் வகை தொகையில்லாமல் பாலில் வன்புணர்வை இயல்பைப் போலவும் நடத்துகிறார்கள்.
நாவலாக இந்த எளிய ஊரின் கதையை உருமாற்றிட நாவல் எங்கும் நுண்ணிய விவரனைகளை அடுக்குகிறார் எழுத்தாளர். ஒருகாட்சியில் குட்டிநாயொன்று ஒடுகிறது.அதற்கு றோவர் என்று பெயர். இது நாயின் வெறும் பெயர் மட்டுமல்ல. நாய்களின் இத்தொகுதிக்கே றோவர் என்று பெயர். ஏன் இப்படி பெயர் தெரியுமா? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் காடு மலைகளில் ஒட்டித் திரிந்த ஜீப்பின் பெயர் றோவர். கச்சிதமாக வருசம் தெரியாத முன்னாடி ஒரு பொழுதில் வேட்டை நாய் ஒன்று அந்த வெள்ளைக்காரப்பய ஜீப்ப விரட்டி தாண்டிருக்கு.அன்னைக்கில இருந்து ரோவர் ஜீப்த் தாண்டிய நாய் வகைக்கு றோவர் நாய்னு பெயர் வந்ததாம். இப்பிடி நாவல் முழுக்க வித விதமாக நுண்ணிய தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. இதே போலான அபூர்வமான தகவல் மற்றொன்று பாம்புகள் தன்னுடைய இணையுடன் கூடிச் சேர்வது குறித்தது. இரவென்றாலும் பகல் என்றாலும் காட்டிற்குள் குழந்தைகள் போவதற்கு பெரும் தடை விதிக்க பெற்றோர்கள் செய்த தந்திரமா,அல்லது நிஜத்தில் அப்படித்தானா என்று சொல்லிவிட முடியாத மர்மம் அது. கள்ளிப்பத்தைக்குள் தாமரைக் கிழங்கு அவிச்ச வாசம் பரவினால் அவ்வளவு சனமும் தீவாலையூரில் விலகி தெறித்து ஒடி விடுகிறார்கள் ஏன் தெரியுமா,?..தாமரைக் கிழங்கு அவிச்ச வாசம் பாம்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து புணர்ச்சிக்கும் போது மட்டும் தான் வரும். இதை நேரில் பார்த்தவர்கள் கூறுவது,அப்போது அந்த கள்ளிப் பத்தைக்கு அருகில் இருக்கும் மரத்தில் பாம்புகள் நிச்சயம் சட்டையை கழட்டி தொங்கவிட்டுத்தான் போயிருக்குமாம்.புனைவு எத்தனை வசீகரமானது என்பதை உணர்த்தும் விசித்திரக் குறிப்புகளால் கட்டித் தந்திருக்கிறார் நாவலை விமல்.

இது யாரின் கதை?.. குடி வண்ணாத்தியாக வீடு வீடுகளுக்குப் போய் துணிகளை எடுத்து வந்து ஆண்களைப் போல முதுகில் மாராப்பு போட்டு ஊரையே துவைத்து சுத்தப்படுத்தும் மாதவியின் கதையா?. தகப்பன் பேரு தெரியாமலே பெத்துப் போட்டுட்டு, ராத்திரியில குசு குசுன்னு பேச்சு சத்தமும் பீடி நாத்தமும் ஏன் வந்ததுன்னு புரிஞ்ச வயசலிருந்து தாயான மாதவியோட எலியும் பூனையுமா மல்லுக்கட்டி நிக்கிற பரஞ்சோதியின் கதையா?. ஒருநாளும் தாயும் தகப்பனும் செய்கிற வெள்ளாவித் தொழிலை செய்ய மறுக்கிற மூன்றாம் தலைமுறையின் பிரதிநிதி அரவிந்தன். திடிரென ஒருநாளில் தன்னுடைய சைக்கிளை விற்ற காசை அப்பனிடம் தந்துவிட்டு, லெட்டர் எழுதிவைத்து விட்டு அப்போதுதான் முகிழ்த்த இயக்கத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிப் போய்க் கொண்டிருந்த இளைஞர்களின் கதையா? ஆம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரின் கதையும்தான். அல்லது யாவரின் கதையினூடாக விரியும் நிலத்தின் கதையும்தான்.
கண்ணகி தெய்வமாக வந்து சேர்கிறாள் இந்த நிலத்திற்கு. பூசைகளும் குளிப்பாட்டு பாடல்களுமாக அவளுக்கு எல்லா நேர்ச்சைகளையும் செய்கிறது இந்த ஊர். அத்தோடு கண்ணகி இங்கு வந்த சேர்ந்த கதையையும், கடவுளாக்கி அவளுக்கு கோயில் கட்டி மகிழ்ந்ததையும் விமல் குழந்தைவேலுவின் சொற்களில்தான் வாசிக்க வேண்டும். எத்தனை கிண்டலும், கேலியுமாக கடவுளையும் கண்டவர்கள் இந்த வெள்ளாவி வைக்கும் வெள்ளந்தி மனிதர்கள் என்பது புரியும். “கோவலண்ட தலை வெட்டுப்பட்ட விசளம் அறிஞ்ச கண்ணகி அப்பதான் முளுகிக்கொண்டு தலைகாயப் போட்டுக் கொண்டிருந்திருப்பா போல,” “கண்ணகி பைத்தியக்காரி போல சத்தம் போட்டு சிரிச்ச சிரிப்புல எப்படா உளுவமெண்டிருந்த அரண்மனைத் தூணெல்லாம் இடிஞ்சி உள, சின்னப்புள்ளையும்,சாகக்கிடந்த பெரியாக்களையும், ஆடு, மாடு, கோழியெல்லாம் விட்டுப்போட்டு மதுரையை பத்தவச்ச கையோட எங்க போறோம் ஏன் போறோம்னு தெரியாம நடந்தே வந்து ஒரு இடத்தில குந்தியிருக்கா அது இலங்கையின்னு அவளுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சிருக்கு.”
இப்படி புனிதங்களை எல்லாம் பகடித்து நகரும் வசீகர பேச்சு வழக்கில்தான் மொத்த நாவலையும் எழுதியிருக்கிறார். இப்படி இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் வெள்ளாவியை எழுதுவது எனும் விமலின் அக்கறைதான், இந்த நாவலிற்கு வெளிவந்த நாட்களில் கிடைத்த வாசக கவனத்திற்கு மிகவும் முக்கியமான காரணம். மழையும், வெள்ளமும், வறட்சியும்,உக்கிரமான போரும் கூட மனித வாழ்க்கையை எப்படிக் கலைத்துப் போடுகிறது என்பதைக் குறியீட்டுக் காட்சிகளால் எழுதியிருக்கிறார். இந்த நாவலின் பல இடங்களில் வருகிற புளியமரத்தின் நிழலில் நடக்கிற புதினக் காட்சிகளை மட்டும் தனித்துப் பேசலாம், அதன் வழியாக ஊரின் சின்ன, சின்ன மாற்றங்களையும் கூட விரிவாக உணரத்தருகிறார்.
நாவலுக்குள் புளியமரம் ஊரின் சாட்சியாக உயர்ந்து நிற்கிறது. அது மட்டுமல்ல புளியமரம் எளிய மக்களின் குருட்டு மூடநம்பிக்கையையும் கூட பல இடங்களில் பகடி செய்கிறது. பலரும், குறிப்பாக இளம்பெண்கள் புளியமரம் ஒடுது. புளியமரத்தை பேய் கூட்டிட்டு போகுது என வட்டுக்கட்டிக்கு போகும் போதெல்லாம் பிள்ளைகள் சொல்கிறார்கள். எல்லோரும் ஒடிப்போய் பார்க்கிறபோது புளியமரம் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது. புளியமரம் சொல்கிறது. நான் என்னைக்கு ஓடினேன். ஆனாலும் ” எமனும் பேயும் கன்னியாகப் போற புள்ளர கண்ணுக்கும் நாயிர கண்ணுக்கும் மட்டுந்தான் தோத்தரவாகும். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. வாயை மூடிக் கொண்டு சும்மா நில்லுங்கோ” என்கிறான் ஊர்ப்பூசாரி. அதென்ன வட்டுக்கட்டு. பெண்குழந்தைகள் தங்களைப் பற்றிமட்டும் பேசிக் கொள்வதற்கான இடம். இங்கு போய் மலம் கழிக்க ஒதுங்குவதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் ஊர் பற்றியும், ஊரின் ரகஸிய பக்கங்களைக் குறித்துப் பேசி மகிழும் இடம். எல்லா தாய்மாரும் அடியே சாமத்தியப்பட்ட பெட்டை எதுக்குடி வட்டுக்கட்டுக்குப் போறங்கிறத ஒரே குரலில் சொல்கிறார்கள். எல்லாப் பெண்களும் தங்களுடைய இளம் பிராயத்தில் வட்டுக்கட்டுப் பக்கம் நித்தமும் போய் ஒதுங்கி கிடந்தவர்கள்தானே. வழிவழியாக தொடரும் ஒரு ரகசிய ஓட்டம் இது.

மனிதமனம் ஞாபகங்கள் நிறைந்து வாழும் பெருங்கூடு. அது எப்போதாவது திறந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. சின்னப்புள்ளி போதும்,மனித மனம் சட்டென விழித்துக் கொள்ளும். இப்படித்தான் ஊரையே புரட்டிப் போட்ட பெரும் வெள்ள நாளில் மாதவி எனும் தீவுக்காலையின் மூதாயின் ஞாபகமும் திறந்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக முதலை கரை ஒதுங்கியதாக புதினம் பொறந்த நாள் அவளுடைய பெரும் துக்கநாள். அவனோடுதான் வாழப் போகிறோம், அவனோடுதான் வாழ்க்கையே என நம்பி இருவரும் இணைகிறார்கள். பெருவெள்ளத்தில் முதலைக்குப் பலியான பிறகு என்ன செய்ய முடியும் ஏழை, தாய், தகப்பன் இல்லை… பிறகு என்ன போடியார்கள் போக்கு வரத்து வைக்கும் இடமாகிவிடுகிறது. தன்னுடைய மகள் பரஞ்சோதியாவது நன்றாக வாழட்டும் என அவளை வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கிறாள். வறுமையில் இறுகி மரணித்த பிறகு பரஞ்சோதி தீவுக்காலையின் மாற்றொரு மாதவியாகிவிடுவதுதான் பெரும் சோகம்.
நாவலை இரண்டு பாகமாக எழுதியிருக்கிறார் விமல் குழந்தைவேலு. முதல் பாகம் முழுக்க தீவுக்காலை எனும் ஊரின் எளிய வெள்ளாவி மனிதர்களைப் பற்றிய மூன்றுதலைமுறை கதையாக வளர்கிறது. அவர்கள் அழுக்குத் துணிகளில் இடும் குலக்குறிகள், அந்தக் குடும்பங்களின் கதைகளைச் சொல்லக்கூடியவை. குடிமக்கள் இவர்கள் என்பதால் சாமத்தியசடங்கின் போது ருதுவான குமருப் பொன்னு சலவைத்தொழிலாளியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பழம் பொருட்கள், பணம் தருவது தீவுக்காலையில் தொடரும் தொன்மச்சடங்கு. அதற்கு அவர்கள் முட்டுவீட்டு தீட்டுத்துணிய முகஞ்சுழிக்காம கழுவுறா, நித்தமும் மாத்துச் சேலை கொண்டு வாறா, ஊரே மெய்க்க கூரை கட்டுறா.. இவுகளுக்கு செய்யிறது தகும் அப்பிடின்னுதான் நினைக்கிறது ஊர்.
நாவலின் இரண்டாம் பாகம் சட்டென இருபது வருட வாழ்வினை வாசகனின் ஊகத்திற்கு விட்டுவிட்டு பாய்ந்து நகர்கிறது நாவலுக்குள் வருகிற அரவிந்தன் தன் பெற்றோரிடம் உங்களைப் போல ஊத்தத்துணியெடுக்க ஊருக்குளௌள போக மாட்டேன்.நீங்களும் ஆச்சு,உங்களோட தொழிலும் ஆச்சு என விலகி பள்ளிக்கூடம் போகிறான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் தன்மகளை வஞ்சித்த போடியாரிடம் நியாயம் கேட்கிற போது. மாதவி பெத்த பிள்ளைதான அவ. என்ன நடக்காதது நடந்த மாதிரி துள்ளுற,” பேசாம பரஞ்சோதிய பப்பாசிப் பிஞ்சையும், அன்னாசிப் பிஞ்சையும் சப்பித் தின்னக்குடு.. ஒரு பங்கு சூர முன் வாங்கி ஆக்கித்தின்னக் குடு, ஒரு துவாலையோட எல்லாம் போயிரும்” இப்பிடி வன்புணர்வு என்பது தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை என்பதாக உதாசீனம் காட்டுகிறார். ஆனாலும் காலம் மாறத்தானே செய்யும். அரவிந்தனைப் போன்றவர்களுக்கு இயக்கங்கள் மீதும்,துவக்குகளின் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது. இனி இப்பிடியே அடங்கி கிடப்போம் என்று நினைக்காதீர்கள் என பகிரங்மாக சொல்வது மட்டுமல்ல. இயக்கங்களை நோக்கியும் நகர்கிறார்கள். காலம் குறித்து மிகக் கச்சிதமாக சொல்லாவிட்டாலும், நாவலின் காலம் என்பதாம் வருடத்திய நாட்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
“மூண்டு நேரம் கேக்குற மணி ஓசையும்,கோயில் பீகௌகர் சத்தமும் அடங்கிப்போய், எப்போதாவது ஒருநாள்லதான் அந்த சத்தங்களையும் கேக்கமுடியுது.
எப்ப எந்த திக்குல இருந்து துவக்குச் சத்தமும்,வெடிச்சத்தமும் கேட்குமோ எண்டுற பயத்திலதான் மனிச வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கு.
எந்த லைட்டுக்கட்டையில இண்டைக்கு ஆர்ர உடம்பு தொங்குதோ எண்ட எதிர்பார்ப்போடதான் பொழுது விடியுது.
…காணாமப் போன மகன் இண்டாவது கிடைப்பானென்டு ஒவ்வொரு நாளும் முகாமுக்கும் கோயிலுக்கும் நடையா நடக்கிற தாய்மார்….
இப்படி தொடரும் துயரங்களின் நாட்களாகி விடுகிறது அவர்களின் வாழ்க்கை. எல்லா வீடுகளிலும் நான் இயக்கத்துக்கு போயிருவேன் பாத்துக்க என்று சிறுவர்கள் பெற்றோர்களை அரட்டுவதும் தொடர்கதையாக இருப்பதை நாவலின் குறிப்புகள் அரவிந்தன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக உணர்த்துகிறது.. எளிய வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட போரின் வருகையை அரவிந்தன் வீட்டைவிட்டு வெளியேறினான் எனும் சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது….
கண்ணகியின் பிள்ளைகளான வெள்ளந்தி மனிதர்களின் வம்ச சரித்திரமே மட்டக்கிளப்பு பேச்சு வழக்கில் எழுதப்பட்ட வட்டார வழக்காற்று நாவலான வெள்ளாவி…
(விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவி எனும் வட்டார வழக்காற்று நாவலை முன் வைத்து எழுதப்பட்ட வாச்சியம்)
எதிர்பார்த்து
ம.மணிமாறன்..
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

