Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article (Tea Plantation workers) By Writer Manimaran.

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்



வாதைகளை மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்கொள்வது எத்தனை துயர்மிக்கது. உடலில் ஒட்டி ஒடுங்கியிருக்கும் வயிறு எப்போதும் தன்னை நினைவூட்டிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் நகர்த்துவது பொழுதுகளை. வாழ்வின் வெற்றி,தோல்விகளைத் தீர்மானிக்கும் ஒற்றை சக்தியாகப் பணம் மட்டுமே இருக்கும் எனில், இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தமிருக்கிறது. கடவுளுக்கும், சாத்தானுக்கும் நடக்கும் யுத்தத்தில் சாத்தான்கள் அடைகிற வெற்றி குறிப்பிடுவது எதை . பணம் அதிகாரத்தைக் கையகப்படுத்தும் கருவியாக இருக்கும் இந்த உலகில் கடவுளை நம்பி இறைஞ்சி வேண்டினால் எல்லாம் சித்திக்கும் எனும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க இயலுமா என்ன?..,, இன்னும் இப்பிடி அடுக்க, அடுக்கத் தொடரும் தொடர் கேள்விகள் எனக்குள் முளை விடத் துவங்கியிருக்கின்றன. இவை யாவற்றையும் எனக்குள் முகிழ்க்கச் செய்தது மக்கத்து சால்வை எனும் சிறுகதைத் தொகுப்பு.

அறுபதுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையேயான இஸ்லாமிய வாழ்க்கையையும், அதன் பாடுகளையும் துளித்துளியாக வெளிப்படுத்தும் கதைகள் இவை. அதிலும் குறிப்பாக இலங்கையில் தன்னைத் தனித்த தேசிய இனமாக முஸ்லிம்கள் உணரத் தலைப்பட்ட காலத்தின் கதைகள் இவை என்பதைத் தொகுப்பிற்குள் இருக்கும் பதினைந்து கதைகளையும் வாசித்த பிறகான நிமிடங்களில் நம்மை உணரச் செய்கின்றன. தன்னுடைய முன்னுரையில் எஸ். எல். எம். ஹனிபா ஏன் இந்தக் கதைகளையெல்லாம் எழுதினேன் என்றும், மட்டக்களப்பு மனிதர்களின் வாழ்க்கை பொது இலக்கியத்தளத்தில் விடுபட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். மக்கத்து சால்வை ஒரு விதத்தில் ஒட்டமாவடியின் உப்பங்காத்தைக் குடித்தும், கணுக்கால் வரையிலும் குருமணலில் கால் பதிய நடக்கும் மனிதர்களின் அன்றாடத்தைப் பதிவு செய்திருக்கும் கதைத் தொகுப்பு.

முஸ்லிம்கள் வாழ்க்கை குறித்து இது வரையிலும் இருந்து வருகிற எல்லாக் குறை புரிதலையும் சரி செய்கிறது கதைகள். இந்தக் கதைகளுக்குள் உடலின் அவஸ்தையினால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கதைகள் கவனத்துடன் நம்மை வாசிக்கக் கோருகின்றன. கதைகளெங்கும் பள்ளிவாசல் பாங்கு ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது..

மனித மனம் துல்லியமானது. எளிதில் குலைந்து விடவும் கூடியது. சலனம் அடைவதும்,நிம்மதிக் குலைவுக்கு உள்ளாவதும், இதுவே மனப்பிறழ்வை நோக்கி நகர்த்துவதும் நடக்கிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு நடக்கவே செய்கிறது. அதிலும் குறிப்பாக ஹனிபா கண்டு சொல்லும் இளம் இஸ்லாமியப் பெண்குழந்தைகள் தடுமாறித் தத்தளிக்கின்றனர்.

No description available.
எஸ். எல். எம். ஹனிபாவுடன் எழுத்தாளர் கோணங்கி

சலனம் கதைக்குள் வருகிற ஆமினா, நிலவோடு பேசிக் கொண்டேயிருக்கிறாள். நிலவோடு மட்டும் பேசுகிறாள். பள்ளிவாசலில் அல்லாஹ் அக்பர் எனும் குரல் ஓங்கி ஒலிக்கும் நொடியில் எல்லாம் திகைத்து நிற்கிறாள். ஆமினா அந்த நொடியில் ஏன் திகைத்து நிற்கிறாள் என்பதைத் தேடுகிறது கதை. அவளுடைய வாப்பா முஅத்தினுக்கு ஆமினா ஒரே பிள்ளை. ஆண் மூளையைக் கழட்டாது சுமந்து திரியும் வக்கிரர்களை திகைக்க வைக்கும் பேரழகி. பள்ளிவாசலின் ஓதுவாரான வாப்பாவிற்கு முட்டைக்கறி கொண்டு போன நாளில்தான் நடந்தேறுகிறது துயரம். வாப்பாவும், உம்மாவும் வேண்டாத பள்ளிகள் இல்லை, செய்யாத நேர்ச்சைகள் இல்லை. பிசகிய மனம் ஆமினாவிற்கு இயல்நிலைக்கு திரும்பவேயில்லை.

ஓதுவாரான வாப்பா ஆயத்துக்குரூஸ், மன்ஜில் து.ஆ என சகல வழிகளிலும் முயற்சித்து விட்டார். இன்னும் அவளுக்கு சித்தமாகவில்லை. ஆமினாவின் அடுத்தவீட்டு இஸ்மாயிலின் ஆண் தடித்தனத்தின் விளைவிது என்பதை கதைமொழி அறியத் தரும் போது நமக்கு பெரும் கோபம் ஏற்படுகிறது. அவனுடைய நெருக்குதலுக்கு தன்னையிழந்த ஆமினாவின் காதுகளில் ஓங்கி ஒலித்த குரல் அல்லாஹ் அக்பர் . அது பள்ளிவாசலின் பாங்கு ஒலி. அவளுடைய வாப்பாவின் கணீர்க்குரல். அந்தக்குரல் ஒலிக்கும் போது பிசகிய மனம் சமநிலைக்கு வந்து சேரவேயில்லை. எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆட்படாது பெண்களைப் பண்டமாக்கி நுகரும் குரூர ஆண்களிடம் கேள்விகளை எழுப்ப வல்ல கதை சலனம்.

ஆமினாதான் பிறவிகள் கதைக்குள் மணப்பெண்ணாக உருமாறியிருக்கும் சுபைதா. ஆமினா தடுமாறி,தத்தளிக்கிறாள். சுபைதா கருவுற்று,மகப்பேற்றில் பிள்ளை பெறுகிறாள்.பதின்மூன்று வயதில் பிள்ளை பெற்று தொப்புள் கொடியை அறுத்த மறுநொடியில் பள்ளிவாசல் கூட்டிற்குள் அவளால் குழந்தையைத் தூக்கி எறிய முடிகிறது. அவள் என்றால் அவளுடைய குடும்பம். .ஆமினா திகைத்து மனம் பிசகியதிற்கும், சுபைதா எல்லாவற்றையும் கடந்து நிக்காவிற்கு தயாராகி நிற்பதற்கும் பணத்தையும்,பொருளாதார பின்புலத்தையும் தாண்டி வேறு பெரிய காரணம் இல்லை. ஆமினாவின் வாப்பா ஒரு ஓதுவார். சுபைதா ஊர்ப் பெருந்தனக்காரரின் மகள். வறுமைப்பட்ட வாழ்க்கைக்காரி பேதலித்து நிற்கிறாள். காசு மாற்றவளுக்குச் சௌகரியத்தை ஏற்படுத்தித் தருகிறது. வர்க்க வேறுபாட்டைத் துல்லியமாக நமக்குள் நகர்த்திய கதையிது.

இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதைகளில் ஒன்று பிறவிகள்..

பிறந்ததிலிருந்து பெற்ற தாய் யார் எனத் தெரியாது அலையும் சிறுவனின் கதையே பிறவிகள். . எல்லா ஊர்களிலும் பள்ளிவாசலே கெதியெனக் கிடக்கும் சிறுவர்கள் என்னை எழுதுங்கள் என எழுத்தாளர்களை நோக்கிக் கண்ணசைக்கிறார்கள். ஒருவிதத்தில் அவர்கள் கடவுளின் குழந்தைகள்.

ஈஸா லெவ்வைப் போடியாரின் மகளுக்குக் கல்யாணம் எனத் துவங்குகிறது கதை. கதைக்குள் ஒரு சினிமாப்பாடலை வைப்பதன் மூலம் காலம் குறித்த பிரக்ஞையை வாசகனுக்குள் கடத்துவது இன்றைக்குப் பழைய நடைமுறை போல தோன்றினாலும் ரசமானதாகவே இருக்கிறது. நிக்காஹ் வீட்டில் ஜமுனா ராணியின் குரலில் ஒலித்த சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எனும் பாடல் பிறவிகள் கதை படித்து முடிக்கும் வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

No description available.
ஊர் விசேச வீடுகளில் சாப்பிட்டு மட்டும் வாழப் பழகியிருக்கும் ஏழுவயது மம்முசுமாயிலை நான் எங்கள் ஊரிலும் கூட பார்த்திருக்கிறேன். அதிலும் இவன் ஏன்ட வேலை எடுத்த வேலை செய்து பசியாற்றுபவன். மீராவோடைக் கிராமத்தின் வடபகுதி சந்தை தொடங்கி,பாசிக் குடாக் கடற்கரையின் ஓரங்கள் ஈறாக ஓடித்திரியும் கால்கள் அவனுடையவை.

விசேஷ வீடுகளின் விருந்தை ஒழுங்குபடுத்துவதில் துவங்கி எல்லா வேலைகளையும் தன் தலைமேல் தாங்கிக் கொள்ளும் பெரும் பொறுப்பை அவர்களாகவே எடுத்துக்கொள்ளும் மனிதர்களை நமக்குத் தெரியும். அப்படியான மனிதர்தான் அசன் காக்கா. காக்காவின் பச்சை விளார் யாருமற்ற பசித்த வயிருடன் விருந்தின் கடைசிப் பந்திக்குக் காத்திருக்கும் ஏழைச்சிறுவர்களின் முதுகைப் பதம் பார்க்கும். அடிபிடிச்ச தேங்காய் சோறும்,மீந்த கறி ஆணமும் திங்கிற ஆசையில் விசேச வீடுகளின் வாசலில் தொன்னாந்து நிற்கும் மம்முசுமாயிலுக்குத் தெரியாது நடந்து கொண்டிருப்பது தன்னைப் பெத்தெடுத்த தாயின் கல்யாணம் என்று. தன்னுடைய தாயின் கல்யாணம் என்று தெரியாமல் வாசலில் காத்துக் கிடக்கும் ஏழுவயதுச் சிறுவனின் காட்சிச் சித்திரம் நம்மை நிலைகுலையச் செய்கிறது. கல்யாணப்பெண் சுபைதா கட்டை வாத்தியாரிடம் அரிவரி வகுப்பும். கறுவக்குட்டி ஆலிமிடம் அம்மெஜீஸம் ஓதியிருக்கிறாள். அதுமட்டுமல்ல வீட்டில் உம்மாவிடம் முழுக்கு இருப்பதற்கான து ஆவும் மனப்பாடம் செய்திருக்கிறாள். மாப்பிள்ளை கிழக்கின் சிங்கப்பூரான காத்தான்குடி மாப்பிள்ளை…..

இந்த கல்யாண ஜோடிகள் மட்டுமல்ல, ஊரே அறிந்திராத ரகசிய உண்மை ஏழுவயது நிறைந்து ஊரின் பிள்ளையாக தொன்னாந்து கிடக்கிறது….பிறவிகள் கதை அநாதையாக்கப்பட்ட வாழ்க்கையின் நியாயங்களைத் துயருறு மொழியில் வாசகனுக்குள் கடத்துகிறது. ஆண் மனம் வஞ்சனை செய்வதன்றி வேறு ஒன்றும் அறியாதது என்று இதற்குப் பொருள் இல்லை. ஹனிபாவின் பேய்களுக்கு ஒரு வாழ்க்கை எனும் கதை காட்சிப்படுத்துவது தனக்குள் தடுமாறும் ஆண் ஒருவனை. ஊரில் பரவுகிறது ரகசியம். ஆணைகள் அலையத் துவங்கும் பொழுதில் ஆற்றில் ஒரு பெண் பேய் தினமும் நிர்வாணமாகக் குளிக்கிறது என்பதே அந்த ரகசியம். பேய்களின் மீது நம்பிக்கை அற்றவன் இவன். இரவில் போய் பார்த்து அது பேய் இல்லை என நிரூபிக்கிறேன் எனச் சவால் விடுகிறான். ஆற்றை நெருங்கும் போது பெண் உருவம் தெரிகிறது. பேயாக இருக்குமோ எனத் தடுமாறுகிறான். அந்தப் பெண்ணின் துணிகளுக்குக் காவல் இருக்கிறது குட்டிப் பேய். அந்தக் குழந்தையை இவன் பார்த்த நினைவு வருகிறது, பேயாக நம்பப்படும் அவளையும் அவன் பார்த்திருக்கிறான். பேய் இல்லை என்று சொல்லிடலாம், நமக்குத்தான் ஆள் யார் என்று தெரிந்து விட்டதே. உற்சாகமாகிறான்.சில நாட்களுக்கு முன் தங்கிட நிழல் தேடிய உசுருகள் இவை. பேய் இல்லை. ஊர்க்காரர்களின் முட்டாள் தனத்தைக் கலைத்திடலாம் என நினைத்திடும் போது அந்த பிஞ்சுக்குரல் ஒலிக்கிறது.” உம்மாக்கு தண்ணி வாக்கை உடுத்தாடெல்ல மாமா, அதான் நாங்க ராவிலே வந்து குளிக்கெம், ஆணைகள் வாறதுக்கு முந்திப் போவணும் “. அந்தக் குரலில் திகைத்தவன் ஊருக்குள் திரும்பி விட்டான். உடுத்த மாற்றுத் துணியில்லாத அந்த தாயும் பிள்ளையும் நல்லா குளிக்கட்டும். அவர்கள் குளிப்பதற்காக இல்லாத பேய் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே என முடிவு செய்து ஊருக்குள் திரும்பி விட்டான். வாழ்க்கையின் குரூரம் தத்துவத்தையும் தவிடு பொடியாக்கவே செய்யும். அதன் பிறகு அவனைப்பார்த்து ஆளு பேயப் பாத்து பயந்திட்டாப்ள என ஊரே சொன்ன போது மௌனமாகக் கடந்து போகிறான் அவன்.

No description available.

இவன் வேலி எனும் கதைக்குள் வருகிற ராஹிலாவின் கணவனாகவும் இருக்கக் கூடும். தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் வாழ்க்கை எல்லோருக்கும் வழங்கவே செய்கிறது. அதை நாம் முழுமையாய முறைப்படுத்திக் கொள்கிறோமா என்பதே மிக முக்கியமான கேள்வி. விரும்பி நடந்த திருமணம்தான். துவக்கத்தில் கொண்டாட்டமும் களியுமாகத்தான் இருந்தார்கள். வேலைத்தளத்தின் விபத்தில் ஒரு கால் துண்டாகும் வரை எந்த சிக்கலுமில்லை. நேசித்த கணவன் இயலாதவன் ஆனபிறகு இவளே அவனுக்குக் கஞ்சி ஊற்றுகிறாள். உடல் கோரி நிற்கும் அவஸ்தையிலிருந்து மீள முடியாமல் தடுமாறுகிறாள். எழுபதுகளின் துவக்கத்தில் எளிய இஸ்லாமிய வாழ்க்கைக்குள் இருந்து இப்படி ஒரு கதையைக் கண்டுசொல்லும் துணிச்சல் ஹனிபாவிற்கு இருந்திருக்கிறது. அவரே தன்னுரையில் சொல்வதைப் போல இந்தக் கதைகளை எழுதியதற்காக ஊரால் நிந்திக்கப் பட்டிருக்கிறார்

” சஞ்சலமும் துயரமும் நிறைந்த தன்வாழ்க்கை எனும் சிறையிலிருந்து மீள வேண்டுமென்ற நினைவை இவ்வளவு காலமும் இல்லாது கரீமீன் பார்வை ஊடாடியது. கரீம் இவளுடன் விதானையார் வீட்டில் வேலை செய்கிறவன். அவளுடன் அவனுக்கு யாருமற்ற சந்தர்ப்பத்தில் போகம் நடந்தேறுகிறது. போகம் முடிந்தவுடன் அவளுடைய கையில் ஐந்து ரூபாயை திணிக்கிறான். அவள் தடுமாறுகிறாள். நான் சம்பாதிக்கிற காசெல்லாம் இனி உனக்குத்தானே. நீ கிளம்பி வந்துரு நாம வேறு எங்காவது போய் சந்தோசமா இருக்கலாம் என்கிறான். “அரண் முற்றாகத் தளர்ந்து விட்டது. கனவு நிலையில் தன் உடலை அவனுக்கு ஒப்படைத்து அனுபவிக்கும் ஊமை இன்பம் அவளுக்கு உடலெங்கும் பரவத் தொடங்கியது”..

இனி கரீமோடுதான் வாழ்க்கை என முடிவு செய்து கிளம்பத் தயாராகிறாள்.

அதிகாலை. வாழ்க்கைப்பட்ட கணவனை ஒருமுறை பார்க்க வேண்டும் என நினைக்கிறாள். இறுதியாகப் பார்க்கிறாள். அவனுடைய வாயின் முணுமுணுப்பு இவளுக்கு நன்றாக கேட்கிறது. “,ராஹிலா என்னால உணக்கு எம்புட்டு கஷ்டம். ஆண்டவன் உணக்கு நெடுகிலும் கஸ்டத்த மட்டுமா தறப் போறான். ஒரு நாளைக்கு உன்டெ பொழுது விடிஞ்சிரூம்”..ராஹிலாவிற்கு பகீர் என்கிறது மனது. அவனைக் கவனித்துப் பார்க்கிறாள். “நோயின் அழுத்தத்தால் சூம்பிப் போன கைகளிரண்டும் மேல்நோக்கி இறைஞ்சுகின்றன. படைச்செறப்பே நான் தெரிஞ்சும்,தெரியாமலும் செய்த பாவத்தையெல்லாம் பொறுத்து என்னை நரகத்த விட்டு தூரப்படுத்து றெஹ்மானே. என்டெ மனைவி என்னால படுற கஷ்டத்தையெல்லாம் குறைச்சி இந்த உலகத்தில் வாழ வழி கொடு அல்லாவே”

மனித சுபாவமும் நடத்தையும் பேரன்பினால் கட்டப்படட்து. ஒரு துளி மாசற்ற அன்பினை உணர்ந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும். இறைவனிடம் இறைஞ்சி ஆற்றாது அழுத கண்ணீரில் எல்லாம் கரைந்தோடி விடுகிறது.உடலின் அவஸ்தையை சரிசெய்யும் ஆற்றல் மிக்கது மனம் என்பதையே கதைகள் எப்போதும் வாசகனுக்குள் கடத்துகின்றன. மருமக்கள் தாயம், மருத்துவம் எனும் இரண்டு கதைகளும் தொண்ணூறுகளில் எழுதப்பட்டிருக்கும் கதைகள். ஹனிபாவின் பின்னாளைய கதைகளும் கூட. கதைகளுக்கு எப்போதும் ஒற்றைக் குறிப்பினில் ஒரு நிலத்தின் வரலாற்றையே கடத்திடும் ஆற்றல் உண்டு.

No description available.
எஸ். எல். எம். ஹனிபாவுடன் எழுத்தாளர் முத்து கிருஷ்ணண்

சந்தூக்கை சுமந்து வருபவர்களில் மஜீத்தும் உண்டு. அவனுடைய மனைவி செய்னம்பூ தான் மவுத்தாகிப் போனாள். நிறைமாத கர்ப்பிணி அவள். பிரசவத்தின் போது மவுத்தாகிப்போனாள். அவள் மரணம் நிகழ்ந்ததல்ல. நிகழ்த்தப்பட்டது. வீட்டுப்பிரசவம். இதில் சிக்கல் ஆனால் எட்டாம் வகுப்பு கூட தாண்டியிராத மன்சூர் எனும் கம்பவுண்டர் டாக்டர் வேஷம் கட்டி வைத்தியம் பார்க்கிறான். பல வைத்திய முறைகள் நோயாளிகளை மாரணத்தில்தான் தள்ளுகிறது. ஆனாலும் அவர்கள் ஆஸ்பத்திரி செல்லவில்லை. ஏன்?.

“ஆஸ்பத்திரிக்கெல்லாம் போவ மாட்டோம். மவுத்தானாலும் வீட்டோடயே கிடந்துக்கிறோம். குழப்பம் துடங்கினதில இருந்து ஆரும் ஆஸ்பத்திரி பக்கம் போறதில்ல. அங்க யாரு போறது. அது தமிழன்ட ஆஸ்பத்திரி. எல்லாம் புலிகள். இரண்டு மணிக்குத்தான் செஞ்சிலுவைச் சங்கத்தோட ஜீப்பு பொலனறுவைக்குப்போனது. நேர காலத்தோட வந்திருந்தா அந்த ஜீப்பிலேயே பாடியக் கொண்டு போயிருக்கலாம். மருத்துவம் எனும் கதைக்குள் நகரும் இந்த வரிகள் வாசகனுக்கு உணர்த்துவது பிசகிக் கிடந்த வாழ்வின் பகுதிகளை. தமிழை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் அவர்களை புலிகள் முஸ்லீம்களாக மட்டும்தான் பார்த்தார்கள் எனும் வரலாற்று உண்மையை வாசகனுக்கு கோடிடட்டு காட்டும் வரிகள் இவை. மருத்துவம் கதைக்குள் கோடிடப்படும் குறிப்புகள் மருமக்கள் தாயம் கதைக்குள் மிக மிக துல்லியமாக வெளிப்படுகின்றது.

அவள்தான் ஊர்.அவளின் குரலில்தான் ஊர் விழிப்பதும்,அடங்குவதும் நிகழ்கிறது. வயது முதிர்ந்த கால் நடக்க முடியாத மாமி அவள். ஆனாலும் கெந்தி கெந்தி ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி வருபவள். ஊரின் கதைகளை பேசிக் கொண்டே திரிபவள். அவளுடைய பேச்சே மருமக்கள் தாயம் எனும் கதையாக வெளிப்படுகிறது. இனி அவளுடையய குரலை மட்டும் பதிவு செய்கிறேன். கதையெதுவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

“பட் பட் பட் பட்… மெய்தான். பொடியனுகள்ன்றெ துவக்குச் சத்தம்தான் இது. எத்தனை தடவை கேட்டுப் பழகின காது இது. இந்த காபிர்கள் படுத்தும் பாடு தாங்கல. காணாத்திக்கு நம்மட ஹராங்குட்டிகளும் போய் சேந்திட்டானுகள். அதோ,அதோ, பறவைக் கப்பல் குண்டு போடுது. ஆமிக்காரன் வந்துட்டான். இப்பிடித்தான நாலஞ்சு வருத்திற்கு முந்தி இங்கிட தமிழ்க்குழப்பம் வந்ததப்பயும் நடந்தது. இன்டைக்கி பள்ளியில பாங்கும் கேக்கயில்ல, அல்லாவோட பள்ளிக்கும் வந்த சோதனையா இது. றஃமானே இந்த பூமிக்கு எதுகௌகு இத்தனை சோதனையய தாற. ஆமிக்காரன் வந்துட்டான். பறவைக்கப்பல் குண்டு போடுது. எல்லாரும் பள்ளிவாசலுக்கு ஓடுங்க. அடடா கீழ விழுந்துட்டேனே. எவனாவது, அல்லது எவளாவது தூக்கி விடுறாங்களாப் பாரு. அவனவ ஓடுறா. இந்த மாமியக் கேட்க,பார்க்க யாருமில்ல. அங்கபாருங்க மெய்தான் நம்ம பொடியங்கட ஜீப்புத்தான் வருது போல, அவனுகளுக்கு எத்தினி தரம் பானை,பானையா தேயில தண்ணி வச்சுக் கொடுத்திருக்கே..எப்பிடியும்,நம்மள ஒரு கை புடிச்சு தூக்கிவிட்டுறுவானுக..

No description available.

இதுதான் தொண்ணூறுகளின் தமிழ் நிலம். தடுமாறிக் கிடக்கும் முதிய கிழவி ஒரு குறியீடு. சிங்கள ராணுவத்தாலும், போர்க்கருவிகளோடு நிலம் அலையும் தமிழ் ஆட்களாலும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் காட்சிப்பகுதியிது. தமிழ் பேசுகிறவர்களாகவே இருந்தாலும் ஒரு பெரும் கூட்டத்தை முஸ்லிம்கள் என்று ஒதுக்கித் துரத்திய வரலாற்றின் துவக்கப்புள்ளியைக் கோடிட்ட கதைத் தொகுதியிது.

ஹனிபா தன்னுடைய எல்லாக் கதைகளிலும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிற ஏழை,எளிய உழைப்பாளிகளின் பக்கம் நின்றே பேசுகிறார். பொம்மைகள் கதைக்குள் தன்னுடைய குடும்பத்திற்காகக் கிழவனை மணக்கத் துணிகிற ஆசியாவோட சோகமானாலும், பெரும் வெள்ளத்தில் தன்னுடைய போடியாரின் துவக்கைத் தேடியலைந்து பிணமாக மருத மரத்தில் தொங்குகிற மாணிக்கம் எனும் முல்லைக் காரனின் மரணத்தை தன்னுடைய திசைகள் எனும் கதையில் காட்டுவதிலும் அவர் எளிய மக்களின் சார்பாகவே நிற்கிறார். சன்மார்க்கம் கதையில் மண்ணைப் பிசைந்து சட்டி பானைகள் செய்து குழந்தைகளை மேடேற்றும் தனித்து வாழ்கிற பெண்ணை பணக் கொழுப்பில் திரியும் மனிதர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலாகட்டும் எழுத்தாளர் துல்லியமாக வர்க்க வேற்றுமைகளை,அது நிகழ்த்தும் வன்முறைகளைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான் இந்த தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரையில் எஸ். பொ. இதுவொரு சோசலிச யதார்த்தவாத கதைத் தொகுப்பு என்கிறார்…தென்தமிழகத்தில் கி.ராவிற்கு சிஷ்யர்கள் உருவானார்களோ இல்லையோ. அவருடைய ஆத்மார்த்தமான சிஷ்யன் தான் என தன்னுடைய கதைகளின் மூலமாக நிரூபித்திருக்கிறார் ஹனிபா என்கிறார் எஸ்.பொ. மட்டகளப்பு மாகாணத்தின் ஒட்டமாவடி மனுஷிகளின் சொற்களாலேயே கதையனைத்தும் கட்டித் தரப்பட்டிருப்பதால் ஈழத்தின் வட்டார வழக்காற்று இலக்கியத்தின் துவக்கப் புள்ளி இத் தொகுப்பு எனவும் மதிப்பிடலாம்.

இந்த தொகுப்பின் தலைக் கதையான மக்கத்து சால்வை உலகின் ஆகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. மனிதனின் மேன்மைகளைக் கண்டடையும் நுன்பணியை கதைகள் எப்போதும் செய்து வருகின்றன. முப்பது வருடத்திற்கு முன்பாக சிலம்ப போட்டியில்தான் கதை நகர்கிறது.

அப்போதெல்லாம் எனில், அது ஐம்பது வருடங்களுக்கு முன்பாக என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

90.JPG

அப்போதெல்லாம் மூன்று, நான்கு நாட்களுக்கு முன்பாகவே பெருநாள் மனக்கத் துவங்கிவிடும். அசர் தொழுகைக்குப் பிறகு கம்பு விளையாட்டு துவங்கியது. பிரபல சீனடி வாத்தியார் நூகுத் தம்பிக்கும், அகமது லெவ்வைக்கும் போட்டி. வெற்றி பெறுபவர்களுக்குப் பறங்கி வாழைப்பழம் ஒரு குலையும், மக்கத்து சால்வையும் பரிசாக வழங்கப்படும். கதைக்குள் கரையான் எனச் சொல்லி கூட்டத்தில் சல்லித்தனம் செய்து வெற்றியைப் பணக்காரர்கள் அவர்களுடையதாக்கி விடுகிறார்கள். இதுவல்ல கதை. கதையே முப்பது வருடத்திற்குப் பிறகுதான் நடக்கிறது. தோற்றதாக அனுப்பப்பட்ட நூகுத்தம்பி லெவ்வையை தேடி வருகிறார். பெருநாளில் அதே அசர் தொழுகைக்குப் பிறகு கம்புச் சண்டை என்கிறார். ஊர் சிரிக்கிறது. எழுபது வயது கிழவர்களுக்கு இதெல்லாம் தேவையா என நினைக்கிறது. சண்டையைத் துவக்கிய நொடியில் தெரிந்து விடுகிறது நூகுத்தம்பிக்கு,அகமது லெவ்வைக்கு கண்ணில புகைச்சல் என்பது. இருவரும் ஒருவரை ஒருவர் கவனிக்கிறார்கள். கண்பார்வை புகைச்சல்ல கிடக்கிற மனுசனோட மோதுறது நீதியில்ல… இரண்டு போர்க் காகங்களும் முசாபர் செய்து கட்டிப் பிடித்துக் கொண்டன.

அவ்வளவுதான் ஒரு சின்ன தொடுதலில், எளிய கனிவில் எல்லாமும்தான் சரியாகிவிடும். மக்கத்து சால்வை இப்போது நூகுத்தம்பியின் தோளில் கிடக்கிறது. மனிதன் மகத்தானவன். அப்படியாக தன்னை நிறுத்த சந்தர்ப்பங்களைக் காலம் யாவருக்கும் வழங்கிடவே செய்கிறது….

(எஸ். எல். எம். ஹனிபா எழுதிய மக்கத்து சால்வை எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட வாச்சியம்)

.. ப்ரியங்களுடன்

எதிர்பார்த்து

ம. மணிமாறன்.




முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்



போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *