வாழ்க்கை என்பது எப்போது மெய்யாகிறது. அவரவர் தன்னையும் தன்னிலையையும் அறிந்து கொள்ளும் போதா. இல்லையெனில் வேறு எப்போது . இப்படி ஒரு கேள்வி உதிக்கும் போதே கிளை கிளையாகப் பல இணை துணை கேள்விகளும் எழுவது எதார்த்தம் தானே. இந்த உலகத்தில் தன்னை முற்றாக அறிந்தவர்கள் யாரிருக்கின்றனர். அப்படி முற்றாகத் தன்னை உணரத்தான் முடியுமா மனதினால். மனதின் குரலைக் கேட்கும் வல்லமை வாய்க்கும் போது உணரலாம் என்று வைத்துக் கொள்ளலாமா. மனதின் குரலாய் ஒலிப்பதற்குள் நகர்வது எக்காலம்.. நிகழ்காலத்தின் துயரங்களை மட்டும் பிரதிபலிக்குமா மனம். அல்லது கால தேச வர்த்தமானங்களைக் கடந்ததா. மனதின் அசைவிற்கு நிறம் உண்டா. மனம் தன்னை விட்டு வெளியேறவே முடியாத ஞாபகங்களைச் சுமந்து கொண்டிருந்தால் என்னவாகும். இது ஒரு விடையறியா கேள்வி. இதற்கான பதிலை நோக்கிய நகர்வே கதைகள்.
மனதின் துயருறு குரலைக் கலைத்து வெளியேற்றிடவே இங்குப் பலரும் கதை எழுதுகிறார்கள்.
போர் என்றாலோ புரட்சி என்பது எதுவெனவோ தோராயமாகப் புரிந்து கொள்ளச் சாத்தியமற்ற வயதில் ஆயுத தாரியாக ஆனவர் எழுத்தாளர். போர்க்களத்தில் அவருக்கு மட்டுமல்ல, எல்லாப் போராளிகளுக்கும் இப்படித்தான் சொல்லப்பட்டது. போர் புரிவதும் நாட்டைக் காப்பதும் மீட்பதும் சத்திரியன் கடமை. நீ உன் கடமையைச் செய்யாது ஒதுங்கும் பட்சத்தில் பெரும்பழி உன்னை வந்தடையும். யுத்தம் இடல் உன் கடமை. பலனைப் பற்றி கவலை கொள்ளாதே. இன்னும் இதைப் போலான போர்த்தொழில் குறித்த வியாக்கியானத்திற்கு மயங்கி தன்னை போராளியாக ஆக்கிக் கொள்வதில் இருக்கும் அல்லது இருந்த,இருந்து கொண்டிருக்கும் மன உளைச்சலையே கதைகளாக்கிக் கடக்கிறார் சக்கரவர்த்தி.
எண்பதுகளின் ஒரு கொடூர நாளில் புலம் பெயர்ந்து நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து அகதி வாழ்க்கை எனும் தனித்த இருண்மையான வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகும் கூட துவக்கும் அதன் வெடிச் சத்தங்களும் குய்யென அவருடைய மூளைக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. வேறு வழியே இல்லை. இனி எல்லாவற்றையும் எழுதிக் கடக்க வேண்டியதுதான் என்ற முடிவில் பிறந்ததுதான் யுத்தத்தின் இரண்டாம் பாகம் எனும் சிறுகதைத் தொகுப்பு. எண்பதுகளின் ஞாபகங்கள் யாவற்றையும் தொண்ணூறுகளின் கடைசி நாட்களில் எழுதியிருக்கிறார் சக்கரவர்த்தி. பத்து கதைகளும் படுவான் கரையெனும் நிலத்தின் போர்க் கதைகளாகத்தான் இருக்கின்றன. ஆற்றின் இருகரைகளாக இருக்கும் சிற்றூர்ப் பகுதிகள் படுவான்கரை எழுவான்கரை எனும் இருவேறு தன்மை கொண்ட நிலப்பகுதிகள். வன்முறையும் போர்க்கருவிகளும் எப்படி இந்த நிலத்தின். மனிதர்களை மிகவும் குறிப்பாக படுவான்கரை முஸ்லிம் வாழ்க்கையைச் சிதைத்து வீழ்ச்சிக்கு உள்ளாக்கின என்பதையே கதைகளெங்கும் சக்கரவர்த்தி காட்சிப்படுத்தியிருக்கிறார்….
கதைகளுக்கான மொழியையும், வெளிப்பாட்டு வடிவத்தையும் நிச்சயமாகக் கதைகளே கோரிப் பெறுகின்றன. எழுத்தாளனுக்குக் கதைகளின் குரல் கேட்டுவிட்டால் போதும், அதன் பிறகு கதைக்கான வடிவத்தை எழுத்தாளன் மிக எளிதாகக் கண்டடைவான். பத்துக்கதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு கதையை மட்டும் இரண்டாக உடைத்து ஒன்றைத் தலையாகவும், மற்றதை வாலாகவும் ஆக்கியிருக்கிறார். நடுவில்தான் மீதம் ஒன்பது கதைகளும் தொகுப்பின் உடலாகியிருக்கின்றன. ஆச்சரியமாகத் தலையும் வாலும் போரின் துக்கத்தையும் அதன் வன்மத்தையும் வாசகனுக்குள் கடத்துகின்றன. நடுவில் நிரவியிருக்கும் உடல் பகுதி பத்தாயிரமான இரண்டாயிரம் ஆண்டுகளின் பாடுபொருளாக உலகெங்கும் இருக்கிற உடலரசியலைத் தர்க்கம் செய்து பார்க்கின்றன.
ஒரு விதத்தில் உடலரசியலைக் கச்சிதமான மொழியில் கடத்திய முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு என்றும் கூட யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பைச் சொல்லலாம். யுத்தம் எனும் கதைப் பகுதிக்குள் வன்னி நிலத்தின் முன் வரலாறும் அதன் அரசியல் சூழ்ச்சிகளும் கதையாக வாசகனுக்குள் கடத்தப்படுகின்றன. அதன் இரண்டாம் பாகம் எனும் பகுதிக்குள் தீராத துயரமாக தொண்ணூறுகளில் நீடித்திருந்த முஸ்லிம் அழித்தொழிப்பின் துயரங்களை, துள்ளத் துடிக்க வெட்டி வீழ்த்தப்படும் மனிதப்பலிகளைக் கொண்டும் காட்சிப்படுத்துகிறார். ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் சக்கரவர்த்தி எழுதியிருக்கும் கவிதை வரிகளை மட்டும் தனித்து விவாதிக்கலாம். ஒருவிதத்தில் கதை நிலத்தைத் திறந்து உள்புக எழுத்தாளனே உருவாக்கித் தந்த சாவிகள் அவை என்பதை வாசகன் கதைக்குள் நடந்திடும் போது உணரத் தலைப்படுவான்.
பெண் மனம் குறித்து, அதன் உடல் அசைவியக்கம் குறித்து தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள். முதிர் கன்னி என்னும் சக்கரவர்த்தியின் கதை முற்றிலும் வேறு தன்மையானது. அவரே தன்னுடைய பேட்டி ஒன்றில் குறிப்பிடுவதைப் போல முதிர் கன்னி வெளிவந்த நாட்களில் இயக்கத்திற்கு எதிரானது என்றும்,இயல்புக்கு மாறானது எனவும். ஒழுக்க விதிமுறைகளைக் கலைக்கிறது எனவும் பல குற்றங்களை ஒரு சேர எழுத்தாளன் மீது சுமத்தியிருக்கின்றனர். நிச்சயம் முதிர்கன்னிக்குள் வருகிற அமுதாக்கள் போர் எனும் வன்முறையின் உப விளைவு என்பதில் துளியும் சந்தேகமில்லை
முதிர்கன்னி எனும் கதையை வாசகனுக்குள் கடத்திடச் சக்கரவர்த்தி நமக்கு மிகவும் பழக்கமான விக்கிரமாதித்தியனுக்கும் வேதாளத்திற்கும் இடையே நூற்றாண்டுகளாக நடந்தேறிக் கொண்டிருக்கும் கதைப் போட்டி எனும் வடிவத்தைக் கையில் எடுக்கிறார். தலை வெடித்துச் சிதறிவிடுமோ எனும் அச்சத்தில் இந்த கதையைக் கேட்டுக் கொண்டிருப்பது விக்கிரமாதித்தியன் அல்ல, நாம் தான்.
யார் இந்த அமுதா?. போராளியா?.போராளியாகப் போகிறவளா?. போராளியை மணக்கப் போகிறவளா?.அமுதாவின் கதையைக் கண்ணீர் சொற்களால் சொல்கிறது வேதாளம். ஒரு விதத்தில் எல்லாக் கதைகளும் போர்க்களத்தில் விளைந்த கதைகளே. போரில் மனைவியையும், குழந்தையையும் இழந்தவனைத்தான் மணக்கப் போவதாக நம்புகிறாள். அதற்காகச் சொந்த நிலத்தை விட்டு வெளியேறுகிறாள். கடல் கடந்து வந்து திருச்சியில் தன்னை ஐரோப்பாவிற்கு அகதியாக்கிக் கடத்த காத்திருக்கும் ஒருவனிடம் தன் கதையைச் சொல்கிறாள். குறித்த காலத்திற்குள் கல்யாணம்,ஆண் பந்தம் ஏற்படாவிட்டால் அவ்வளவுதான் இந்த உலகம் பெண்களைப் பாடாய்படுத்திவிடும். அமுதாவின் வயதுக்காரிதான் என்றாலும் தேவி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே காதல் வசப்படுகிறாள். பிள்ளையும் பெற்றுக் கொள்கிறாள்.
அமுதாவிற்கும் கூட நேசன் எனும் இளைஞனோடு பிரியம் முகிழ்க்கிறது. ஆனாலும் அவள் உடன் போகவில்லை. ஆனால் தன்னுடைய தோழியின் மகனைத் தூக்கிச் சுமக்கிறாள். எப்போதும் அவனின்றி இருப்பதில்லை அவள். ஊர் கண்டதையும் சொல்லும் காணாததையும் சொல்லும். ஆனால் அவனுடைய தாயே ஒருநாள் “அமுதா எம்பிள்ளைய விட்டுறு அவன் பாவம் பொடியன் “எனச் சொல்கிற போது தடுமாறுகிறாள். இவ்வளவு கேவலமா தன்னை நிறனைச்சுட்டாளே என உருகி மறுகுகிறாள். பேசாமா நேசனோடவே போயிருக்கலாம். இப்படி வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நேசனோடு போயிருக்கலாம் எனும் சொல் அவளை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. திருச்சியில் குணசீலனிடம் போர் தன்னை சிதைத்துத் துப்பிய கொடூரத்தைச் சொல்கிறாள்…
இலங்கையின் போர்த்துயரத்தை நிகழ்த்தியதில் இலங்கை ஆர்மிக்குச் சமமாக இந்திய அமைதிப் படையும் சொல்லில் வடிக்க முடியாத பெருந்துயர்களை விளைவித்திருக்கிறது. அப்படி ஒரு நாளுக்குள் நுழைகிறது கதை. வீடு தேடி வருகிறது அமைதிப்படை. உங்கள் விசாரிக்கனும் என அப்பாவைத் தள்ளி ட்ரக்குக்குள் ஏற்றுகிறார்கள். . பீடி நாத்தமும் பெட்ரோல் வீச்சமுமாக வழியும் ஒருவன் அமுதாவைக் கிடத்தி தோலுரிக்கிறான் .அமுதாவிற்கு முதல் ஸ்பரிசம் நிகழ்கிறபோது வயது முப்பதைக் கடந்து விடுகிறது. பெண் உடலை வெறி கொண்டு தேடி அலைந்திருக்கிறார்கள் ஈழநிலத்தில் அமைதிப்படையினர். விருப்பத்தின் பேரில் நிகழ்ந்ததில்லைதான். கற்பழிப்பே. எல்லாம் முடிந்த பிறகு ஆமிக்காரன் ஒரு சீட்டில் அவனுடைய முகவரி எழுதித் தருகிறான். நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்கிடுறேன். சொந்த இனத்துக்கு நான் செய்த துரோகத்தை நானே சரி செய்கிறேன் என்கிறான். இதைப் போல எத்தனை பெண்களுக்குத் துண்டுச் சீட்டுக் குடுத்தானோ..
இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் குணசீலனுக்குள் இருக்கும் ஆண் துருத்தி விழிக்கிறான்.
அமுதாவிடம் அதன் பிறகானா அவனுடைய உரையாடல் என்னவாகப் போகிறது என்பதை நாமும்தான் புரிந்து கொள்கிறோம். “என்னோட பொஞ்சாதியோட பாஸ்போர்ட்டில்தான் உங்களைக் கூட்டிப் போகப்போகிறேன். பெண்சாதி எண்டு கூட்டிப்போறது எண்டால் ஒருநாளாவது என்னோட நீங்கள்……
இப்படி அழைப்பு விடுக்கும் குணசீலன் ஈழத்தமிழர்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ஏஜென்ட். வேதாளம் அமுதா என்ன செய்வாள் எனக் கேட்பதாக நகர்கிறது கதை. போர் பெண்களை வஞ்சித்ததைக் குறியீடாகக் கடத்திய கதையிது..
இறகுகள் எனும் கதை ஒரு அபூர்வ மொழிதலில் நகரும் கதை. ஒரு சிறுகதைக்குள் இத்தனை தத்துவ தர்க்கங்களை நிகழ்த்த முடியுமா எனும் பெருத்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. கதைக்குள் அவன், அவனுடைய காதலியா,தோழியா எனத் தெரியாது அலை,அலையாய் தென்படும் இரண்டு பெண்கள். அவர்களுடன் போர் குறித்து ஆண், பெண் சமத்துவம் குறித்து,பெண் விடுதலை என்பதைக் குறித்தும் வித விதமான தர்க்கங்களை நடத்துகிறான்.
நான் கொஞ்சம் அப்பிடி இப்படித்தின். சகலமும் இராக்கால அகாலப் பொழுதில்தான். முடிவு எடுத்தல், எழுதுதல், சிந்தித்தல், படித்தல், போன் பேசுதால் தொழில் பார்த்தல் எல்லாமும். தூக்கமும், கனாக்காணுதலும் பகலில். அவனுடைய குரு அவனுடன் விவாதித்த விசயங்கள் எல்லாம் அவனை முடிவு எடுக்க விடாது துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன.
“வாழ்க்கை என்பது ஒரு போதும் நம்மேல் கருணை கொண்டு மாறப்போவதில்லை. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும். உணக்கு எதற்கு ஒரு கூட்டம். தனித்திரு. ஒத்த இறக்கையை கொண்ட கூட்டமாக இருந்தாலும் சரி அல்லது முரணான இறக்கையைக் கொண்ட கூட்டமாக இருந்தாலும் சரி நீ தனித்திரு. உனக்கு எதற்கு கூட்டம். இப்படி குருவும் ஆண் எனும் எழுத்தாளனும் பேசுகிற எல்லாவற்றையும் மிக எளிய சொற்களில் கடந்து விடுகிறார்கள் கதைக்குள் வரும் பெண்கள்.
ஒருத்தி சொல்கிறாள் “மட்டக்களப்பான் ஒரு மடையன். மூன்று ஊத்தும் சோறு தின்ற மடையன். அரிசியையும், தயிரையும் தின்டு, தின்டு அவன்ட மன்டைக்குள் சக்குப் பிடிச்சுக் கிடக்குது. அவன ஏமாத்துறது லேசி. இவனுக்கு நாமதான் ராசா. இதுதான்டா தம்பி யாழ்ப்பாணிக்கு மட்டக்களப்பானுகளப் பத்துன அபிப்ராயம். பதின் மூன்று வயதை தாண்டினா நாங்க உடம்போட நடத்துற போராட்டம் எவ்வளவு தெரியுமா?. எவ்வளவு கொடுமை தெரியுமா?. கற்பு, பத்தினி, பிற புருஷன் பாக்காத, அது பாவம் இது மோசம் எண்டு எங்களைச் சாடுகிற சமூகத்தைச் சாடு. அதை விட்டுட்டு புரட்சி, விடுதலை, புண்ணாக்கு எண்டு எங்களை வதைக்காதே…
கதை முழுதும் நடக்கும் தர்க்கங்களும்,தத்துவ விசாரணைகளும் அந்த நிலத்தின் போர்ச்சூழலை மொத்த சமூகமும் எதிர் கொண்டு கடந்ததை புரிந்து கொள்வதாற்கான கருவியாக இருக்கிறது.
மனசு எனும் கதையும்கூட ஒரு விதத்தில் இறகுகள் கதையின் தொடர்ச்சிதான். மொத்த மனதிற்கும் இரட்டைவாசல்தான். ஒன்று பூந்தோட்டம். மற்றது வாசல் மட்டுமே அழகாயுள்ள குகைப்பொறி வாசல். குடிக்கிற பொம்பளையோட எப்பிடிடா வாழ்றது. அசிங்மான பழக்கவழக்கம் உள்ள பொஞ்சாதியோட குடும்பம் நடத்துறது எவ்வளவு கொடுமை…
இவையாவும் இறகுகள் கதைக்குள் பேச நினைத்த சொற்கள்தான். மனித மனம் எல்லாவற்றையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி விடுமா என்ன?. காத்திருக்கிறது. தன்முறை வரும்வரை காத்திருந்து, எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கிறது. அவற்றையே மனசு எனும் கதையாக்கி தந்திருக்கிறார் சக்கரவர்த்தி.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் எனும் தொகுப்பு வாசகனுக்குள் விஸ்தரிக்கும் மிகவும் முக்கியமான கதையுலகம் என்பது முஸ்லிம் சமூகத்தின் வெளியேற்றத்தைக் குறித்தும் அவர்களைச் சோனகர் எனச் சுட்டி இன ஒதுக்குதலுக்கு உள்ளாக்கியதையும் தான். யுத்தம் எனும் முதல்கதையின் கடைசிப்பக்கம் அதன் இரண்டாம் பாகம் எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. முதல் கதையில் இலங்கையின் வரலாற்றைப் பதிவு செய்கிறார். தளபதியாகக் காட்டு தெய்வங்களை வழிபடுபவன் ,தேர்வாவதும்,வன்னி நிலத்தின் சதியை அவன் முறிப்பதும், காஞ்சியிலிருந்து பிராமணன் வந்து அரசனை தன் வசப்படுத்துவதுமாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய நிலத்தோடு, மிகவும் குறிப்பாக தமிழ் நிலத்தோடு இலங்கைக்கு இருந்த உறவையும், மனித விரோத சூழ்ச்சியை நிகழ்த்திய அதிகாரத்தின் உன்மத்தத்தை கதைக்குள் வரலாறாகக் கடத்திய கதை. எல்லாம் முடிவை நோக்கி நகர்கிறது எனும் துயரத்தின் மனநிலையையே கதையாக்கி அதன் இரண்டாம் பகுதியாக உருமாற்றித் தந்திருக்கிறார் சக்கரவர்த்தி.
” ஆயுதம் மானுடத்தின் விரோதி. அது ஒரு போதும் மனித குலத்திற்கு மீட்சியைக் கொடுத்தது கிடையாது. ஆயுதமும்,மானுடமும் முரண்பாடானவை.”
யாரோடு யுத்தம் எதற்காக யுத்தம்.நம் விதிகள் யார்? எப்படி நிற்கப் போகிறது? என எந்த கேள்விகளுக்கும் உட்படாத உயிரற்ற ஆயுதங்களே போரை நடத்திக் கொண்டிருந்தன. போர்க்கருவிகாளை வசப்படுத்த முடியாத மனிதர்கள் போர்க்கருவிகளின் கைப்பாவையாகிப் போனார்கள். ஒருவிதத்தில் முட்டாளாகவும் ஆனார்கள்.முட்டாளாக இருப்பதில் ஒரு பெரிய சௌகரியம் இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை,இவனைக் கொல் என்றால் கொள்ளலாம்,கொஞ்சு எனில் கொஞ்சலாம். அதனால்தான் போரின் குரல் இப்படி ஒலிக்கிற போதும் எந்தக் கேள்வியும் எழவில்லை…
“காத்தான் குடியைக் கொழுத்து- சரி
எல்லா சோனகனையும் துரத்து-சரி.
மக்காவுக்கு போறவனை ஒரேயடியாய் மக்காவுக்கே அனுப்பு. சரி.சரி.சரி..
தொழும் நேரம் வெட்டிக் கொல்..சரி.
நம் மொழி தமிழ் நாம் தமிழர்கள்-சரி
.அவன் மொழி தமிழ். ஆனால் சோனகன்- ஆமாம்.
நம் சாமி பிள்ளையார்.
அவன் சாமி அல்லாஹ்..
சோனகன் காட்டிக் கொடுக்கிறான்.
என்பத்தி மூன்றிற்கு முன்பு வரையிலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். யார் இட்ட தீ இது?. எப்போதும் மக்களின் சார்பாகப் பேசுகிற பணியைத்தான் எழுத்தாளர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். சோனகரும் நாங்களும் ஒன்றாக ஸ்நேகமாகத்தானே இருந்தோம்.ஒரு மொழிதானே பேசினோம்.அவர்கள் என்ன அரபும் நாங்கள் சமஸ்கிருதமுமா பேசினோம் .ஒரே பள்ளிக்கூடத்தில் தானே படித்தோம். சிங்களவன் சிறுபான்மையான எம்மை இம்சிக்கிறான். நாம் நம்மிலும் சிறுபாண்மையிரான சோனகரை நிந்திக்கிறோம்…கதைகள் போரோடு துளியும் தொடர்பில்லாதவர்களின் வாழ்க்கையை எப்படிச் சிதைக்கிறது என்பதைக் காட்சிப்படுத்துவது என்பதே சக்கரவர்த்தியின் துடிப்பான செயல்.
பிசாசுகளின் வாக்கு மூலம் கதையை விஸ்தாரமாக விளக்க வேண்டியதில்லை. அங்கங்கு கதைக்குள் பரவியிருக்கும் சொற்கள் போதுமானதாக இருக்கிறது.
துவக்கு
காசு
அதிகாரம்
ஆடை
உணர்ச்சி
உயிர் என்று எதுவுமே இல்லை.
கொலை
கொள்ளை
ஆள்கடத்தல்
பாலியல் வன்முறை
பூமியில் நடப்பவையாகவும் தெரிந்தது.
துவக்கு சிறுவர்கள்
துவக்கு மிருகங்கள்
துவக்கு பயந்த குருட்டுச் சனம்
வீரவணக்கம் செலுத்தப்படும் என் உடல்.
சகலமும் தெரிந்தது.
என்னைத்தான் யாருக்கும் தெரியவேயில்லை.
பிசாசுகளின் வாக்குமூலம் எனும் கதை இறந்த பிறகாவது தன்னுடைய செயலுக்கு வருந்துவானோ போராளியாக இருந்தவன் எனும் தொனியில் நகர்ந்து போகிறது.
பிசாசுகள் பேசிக் கொள்வதும் கூட யுத்தத்தின் கொடுந்துயரைத்தான். பிசாசாக உருமாறிப் போன றஞ்சனிடம் மற்றொரு பிசாசு கேட்கிறது. அதுவா அல்லது அவனா எனத் தெரியவில்லை.
றஞ்சன் பாவம். என்னுடன்தான் இந்தியாவில் பயிற்சி எடுத்தவன். நாட்டுக்குப்போறேன் என்று கடல் கடந்தவன்தான். மூன்று மாதத்தால் தட்டிப் போட்டான்கள் என்று படகு வழியாக வேதாராணியம் வந்தது சேதி. சிலநாட்கள் கவலைப்பட்ட பிறகு மறந்து போனேன். ..மறுபடியும் பத்துவருடம் கழித்து பிசாசாய் அவனை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை…இங்க இருக்கிற எல்லோருக்குள்ளேயும் கனக்க கனக்க கதையிருக்கு. நாங்க எல்லாரும் பிசாசாகினதுக்கு தமிழும்,ஈழமும்,துவக்கும்,யுத்தமும்தான் காரணம்.
படுவான் கரை, என்ட அல்லாஹ் எனும் இரண்டு கதைகளும் மிக மிக முக்கியமான கதைகள். இங்கு மட்டுமல்ல இலங்கையிலும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமானவர்களுக்கும் துல்லியமான வேறுபாடு இருக்கவே செய்கிறது. தங்க ராசா ஹாஜியார் எனும் பெயரை ஒரு முஸ்லிம் பெரியவருக்கு வைப்பதன் மூலம் மதம் குறித்த தனித்த கேள்விகளை முன் வைக்கிறது கதை. வெளிவந்த நாளிலிருந்து பலரும் தங்களுடைய தொகுப்பினில் என்ட அல்லாவைச் சேர்த்திருக்கின்றனர். ஈழத்திலும் சரி புகலிடத்திலும் கூட இன்றுவரையிலும் கவனம் பெற்று வருகிறது. நேர்மையான மனிதன் தான் வாங்கிய வெங்காயத்திற்கான பணத்தைக் கொள்முதல் செய்த வியாபாரியிடம் கொடுக்க நினைப்பதும் அதை ஒட்டி நகரும் சம்பவங்களுமே கதை.
கலவரங்களும் ஆள்கடத்தலும், துவக்குகளின் ராட்சியமும் துவங்கிவிட்டால் அவ்வளவுதான் எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்துவிடும். யாரைப் பார்த்தாலும் ஒற்றன்,காட்டிக் கொடுப்பவன். சிங்களப் படையின் கைக்கூலி என்றே எல்லோரையும் அணுகிய காலமது. எப்போது கடைகளை மூடுவது, சந்தையை இயல்பு நிலைக்குத் திருப்புவது எப்போது என்பதையெல்லாம் துவக்குகளே முடிவு செய்யும். கண் எதிரே கரைகிற மனித நிழலைக்கூடச் சந்தேகம் அப்பியிருக்கும். இந்த கண்ணுக்குத் தெரியாத வலைகளையெல்லாம் கடந்து தப்பிப் பிழைத்து ஹாஜியார்வீடடைகிறார். வரும் பாதையெங்கும் வான் நோக்கிக் கையுயர்த்தி என்ட அல்லாஹ் என்று அவர் வைத்த வேண்டுதலே தன்னை உயிருடன் கொண்டு வந்து சேர்த்திருப்பதாக அவர் நம்புகிறார். அவர் நினைத்துக் கூட பார்க்காதது எல்லாம் நடக்கிறது. தன்னுடைய மகனை காட்டிக் கொடுப்பவன் என்று போர்க்கூட்டம் கொன்று போடும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். பணம் மனித மனதினில் சுனைவிடும் அன்பை இரக்கமேயில்லாமல் வற்றிப் போகச் செய்து விடும் என்பதையே என்ட அல்லாஹ் நமக்குச் சொல்கிறது.
சாதாரண மனிதர்கள் தங்களுக்குத் துளியும் தொடர்பேயில்லாத போரின் வன்மத்திற்கு எப்படிப் பலியிடப்படுகிறார்கள் என்பதைப் படுவான் கரை எனும் கதைக்குள் சரசுவதி என்கிற பெண்ணின் குரல் வழி உணர்த்துகிறார். விசாரணை இந்த நிலத்தில் ஒற்றை முனையில் நிகழ்வதில்லை. ஆமிக்காரன் விசாரிக்கனும் என்கிற குரலோடு அள்ளிப் போகிறான். அதன் பிறகு போராளிக் குழுக்கள் நீங்கள் எங்களைக் காட்டிக் கொடுக்கிறீர்கள் தானே என்று ஈவிரக்கமின்றி அள்ளிப் போகிறார்கள். இதில் புலிகள், டெலொ என எந்தப் பேதமும் இல்லை.
உசிரோட எண்ட புள்ளைய தந்திருங்க சாமிமாரே.
உசிரும் மசுரும் ஒங்களுக்கு ஒண்டுதான்.
எண்ட புள்ளதாண்டா பாதகனுகளே
எனக்கு உசிரு…
எனும் இந்தக்குரல் மொத்தக் கதைகளையும் படித்து மூடி வைத்த பிறகும் வெகு நேரம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது….
எல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை ரத்தப்பலிகளும், தியாகங்களும், அவமானங்களும் சாதித்தது என்ன எனும் கேள்வி களத்திலிருந்தவர்களை நிச்சயம் துரத்திக் கொண்டுதானே இருக்கும். தனக்குள் துக்கித்து நிம்மதிக்குழைவிற்கு உள்ளாகும் மனிதர்களுக்காக எழுத்தாளர் சக்கரவர்த்தி எழுதிய கதை உரத்துக் கேட்கும் மௌனம். அது இருபதாண்டுகள் கழித்து அவர் எழுதியிருக்கும் கதை. இரண்டு தன்மைகளைப் போராளிகள் எதிர்கொண்டே கடக்க வேண்டியிருக்கிறது. மகள் சக்கரவர்த்தியை ஹூரோ என்கிறாள். மகனோ போர்க்குற்றவாளி என்கிறான். கதைக்குள் வருகிற வலசைப் பறவைகளும், ஆப்கானிஸ்தான் தப்பி போராளியாகப் போய்விட்ட அன்வரும் வேறு வேறு அல்ல. எல்லா உயிர்களுக்கும் தங்கள் பிறந்த இடத்தின் வாசம் மரபணுவால் பின்னி விடுது இயற்கையின் அதிசயம். ..
இலங்கையிலிருந்து தப்பிப் பிழைத்து கனடாவில் தஞ்சம் புகுந்த பிறகும் கூட நித்தமும் போரின் துயரங்கள் பின் தொடவே செய்கின்றன. மகன் கேட்கிற கேள்விகள் அவரை இம்சிக்கின்றன.
Have you ever killed anyboody
Are you a war criminal?
ட்றக்குல பாம் பொருத்தி, வெடிக்க வைத்து, 150 அப்பாவி பொது மக்கள கொண்ணத கனடா அரசுக்கு நீங்க சொன்னீங்காளா..
அப்பா ஒரு போர்க் குற்றவாளிங்கிறது உங்களுக்காவது தெரியுமாம்மா?…இப்படி நிம்மதிக் குழைந்த மகனை எப்படி எதிர் கொள்வது?….
தன்னுடனே இருந்து ஆப்கானுக்கு ஆயுத. குழுவிற்காகப் போன அன்வரைக் குறித்த சக்கரவர்த்தியின் மனப்பதிவு இந்தக் கதையை வேறு ஒரு அர்த்த தளத்திற்கு நகர்த்துகிறது.
அன்வர் குறித்து விசாரிக்கிறார்கள். தாலிபான் என்கிறார்கள்.ஐ.எஸ்.ஐ.எஸ். என்றும் சொல்கிறார்கள். எனக்குத் தெரியும் அன்வருக்கு என்ன நடந்திருக்கும் என. பதினைந்து வயதில் எனக்கு என்ன நடந்ததோ அதுதானே அன்வருக்கும் நடந்திருக்கும். பள்ளிக்கு போன பையன் வீட்டுக்கு திரும்பாததையிட்டு என் அப்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும். என்னால் பொங்கிவரும் அழுகையையும்,கண்ணீரையும் அடக்க முடியவில்லை. நான் எனக்காக அழுகிறேனா.அல்லது அன்வருக்காகவா. எனக்கு நன்றாகத் தெரியும் மிக மிக எளிய வழியில் அன்வருக்கு மூளைச்சலவை நடந்திருக்கும். லாகிரி வஸ்துக்களை என்னைப் போலவே அவனும் கூட சுகித்திருப்பான். நிலம்,இனம் மதம்,மொழி எனும் லாகிரி வஸ்துவின் அதீத போதையை நான் அறிவேன்…அன்வருக்கும் அறியத் தருவார்கள்.
என் உணர்வின் எல்லை கடந்தும் துயரம் வழிகிறது. சாபமிடுவதற்கு ஒரு உருவத்தைத் தேடுகிறேன். இயற்கையின் கட்டற்ற நியதியைத் தவிரச் சபிப்பதற்கு வேறு ஒன்றும் தெரியவில்லை…..
போர்ச் சூழலுக்கு அப்பால் வாழ்கிற நம்மைப் போன்றவர்கள் உணர்ச்சி மிகுதியால் தடுமாறவே செய்கிறோம். போரின் பின் விளைவுகளை நியாயம் , அநியாயம் எனும் இரட்டை எதிர்வுகளுக்குள் மட்டும் சுருக்கி வைத்துப்பார்க்க முடியாது. எல்லையற்று விஸ்தாரமாக விரியும் ஒரு மாயச்சுருள் திரைப் போர்.
ஒரு புத்தகம் வாசகனுக்குள் ஒரு சிறிய பக்கத்தையாவது திறக்க வேண்டும். சக்கரவர்த்தி எழுதிய யுத்தத்தின் இரண்டாம் பாகம் நமக்குள் பக்கம் பக்கமாகத் திறந்து கொள்கிறது.
கண்ணீருடன் கலங்கி
ம. மணிமாறன்.
(கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர் சக்கரவர்த்தி எழுதிய யுத்தத்தின் இரண்டாம் பாகம் எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட வாச்சியம்..)
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.