கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதும் அதன் வழியே நிகழ்காலத்தின் புதிய தடங்களைக் கண்டுணர முயற்சிப்பதும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் நினைவுக் குளத்திற்குள் அலைந்தே கதையெனும் வசீகரத்தைக் கண்டடைகின்றனர். எழுதிச் சேர்த்திருப்பதில் தன்னையும், தன் மன விருப்பங்களையும் கொந்தளிப்பான மன நிலைகளையும் கதைகளாக்குகின்றனர். கருப்பும் வெள்ளையுமாக வாழ்வின் சுக துக்கங்களையே கதைகளாக்குகின்றனர். ஒரு எழுத்தாளனுக்குள் நான் ஏன் இந்தக் கதையை எழுதுகிறேன். கதை எழுதாவிட்டால் கதை என்னவாகும். அல்லது நான்தான் என்னாவாவேன். இப்படி தனக்குள் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கும் எழுத்தாளனின் குரல் ஒருவேளை இப்படிக்கூட அசையலாம்.
“நான் தான் கதை சொல்கிறேன். என் கதைக்குள் நான் நிச்சயம் தட்டுப்படுவேன். ஒரு நான் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தால் அது எப்படி கதையாகும். நிச்சயம் ஒரு புள்ளியில் தவறி விழத்தானே செய்யும். எனவே தான் கதைக்குள் உங்களுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் கூட நீங்களும் வந்து விடுகிறீர்கள். உங்களுக்கு ஒரு போதும் பிடிக்காத தொனியில் உங்களை நான் முன் வைத்திருக்கலாம். அதற்காகவெல்லாம் நீங்கள் கோபப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நான் அறிந்தவரை இதுதான் நீங்கள். உங்களைச் சொல்வதென்றால் எப்படி நான் உங்களோடு நிறுத்திவிட முடியும். நீங்கள் வரும்போது உங்களின் நிழல் போல இருக்கும் அவளோ அல்லது அவருக்கேயான இடத்தை தராவிட்டால் அது எப்படி கதையாகும். கலையாகும்.
நால்வரைப் பற்றிப் பேசுவது என்றான பிறகு அவர்கள் இயங்கித் தெறிக்கும் நிலத்தின் வண்ணமும், வாகும் கட்டாயம் வரத்தான் வேண்டியிருக்கிறது. அப்போதுதான் தேர்ந்த கதைக்களம் கைகூடி நகர்ந்து விரிந்து செல்கிறது கதை,கதையாக. இப்படி எல்லா எழுத்தாளர்களையும் போல திக்குவல்லை கமால் தன்னுடைய ஊரைப்பற்றி எழுதியிருக்கும் கதைத்தொகுதியே ஊருக்கு நாலு பேர் எனும் நாவல். ஊர்களைப் பற்றி தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் இருக்கும் அழகிய ஊர் எனத் துவங்கி அதன் புவியியல் எல்லைகளை விஸ்தரிப்பது ஒருகதை கூறும் முறை. இந்த ஊர் இப்படித்தான் இருந்தது. உலகில் நடந்த மாற்றங்களை உள் வாங்கி இப்படி வளர்ந்து உருமாறித் திரண்டு இதுபோல் நிற்கிறது எனச் சொல்வது மற்றொரு முறை. ஊருக்கு நாலு பேர் எனும் கமாலின் நாவலுக்குள் காட்சிப்படுவது வல்லையூரின் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே. அந்த நாட்களில் ஊருக்குள் என்ன என்ன புதினங்கள் நடந்தது. அது நல்லதாக நடந்தேறியதா இல்லை எனில் எங்காவது தடைப் பட்டு நின்றதா. நின்றது எனில் அந்தத் தடையும் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா?… இப்படி சின்ன சின்ன காட்சி மாற்றங்களோடு நகர்கிறது நாவல்.
இரண்டாயிரத்தில் நகரும் கதையிது. ஈழப் புலத்தில் இரண்டாயிரத்தின் கதையில் போராளிக் குழுக்களின் சின்ன நடமாட்டம் கூடவா இல்லாமல் இருந்திருக்கும். துவக்குகளும் கன்னி வெடிகளும் துளியாகக் கூட தென்படாத நாவல் இது. ஒரு நாவலை வாசிக்கிறோம். அந்த நாவல் வாசகனுக்குள் உள்நுழைந்து அறிந்த பக்கங்களை நினைவூட்டியும் புதிய பகுதிகளைத் திறந்து காட்டியபடியும் நகர்கிறது.. கதை அந்தரத்தில் சுழலாது நிலத்தில் கால் ஊன்றி நிற்கிற போது அதன் மொழி, மக்கள் மொழியாகவே வெளிப்படும். எனவேதான் கமால் நாவலை அந்த நிலத்தின் பேச்சு வழக்கு உரையாடலின் வழி எழுதியிருக்கிறார். போர்ச் சூழலுக்கு நடுவிலும் கூட. பொடியங்கள், சண்டை சச்சரவுகளை விலக்கி ஊரை ஒரு படி மேலேற்றிட முயற்சிக்கும் நால்வரைப் பற்றியும் அவர்களின் பேருழைப்பைப் பற்றியும் பேசுகிறது கதை.
தன்னூரைக் குறித்தும், அதன் தனித்த வளர்ச்சி குறித்தும் தீவிரமாக இயங்குபவர்கள் யார்?. யார். .
இப்படிப் பட்டியலிட முயற்சித்தால் வரும் பெயர்கள் என்னவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. கேசவன், குமரேசன், சேவியர், யூசுப்.. இப்படியும் இன்னபிறவுமாக முழுக்க ஆண்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெறும். இதுவரையிலுமான கதைகளில் ஊரைக் குறித்த அக்கறை கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இருப்பதாகவும், இருந்ததாகவும் நம்ப வைக்க முயற்சித்திருக்கிறது தமிழ் படைப்புலகம். இது ஒன்றும் முழு நிஜம் இல்லை என பலருக்கும் தெரியும். கமால் தன்னுடைய ஊருக்கு நாலு பேர் என்கிற நாவலின் வழியாக முழுமைக்குள் பகுதியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உண்மைகளைக் கதை, கதையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நாவலின் மையமான பாத்திரங்கள் மரீனா, றம்ஸியா,ஃபர்வீனா, அம்ரிதா ரீச்சர். அவ்வளவுதான். நாலு பேர் என்றால் அத்தனையும் பெண்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள்.. ஊருக்காக அவர்கள் முன் நின்று செய்யும் காரியங்களும்,அதை ஊர் எதிர்கொள்ளும் தன்மையுமே மொத்த நாவலாக வடிவம் பெற்றிருக்கிறது.”ஓ..எங்கமூரிலே ஒத்துமில்லேன். என்னத்தையு செய்தேமில்ல,செய்யுடுதீயுமில்ல. ஒரு ஜாதி வெருவாக்கில கெட்ட ஆள்கள்.. பொடியன் மாருக்க உடுகியில்ல. பொம்புளயளுக்கா உடுகியா?..கொஞ்சம் பேரிரீக்கேன். ஊரு அவங்கட மாதிரி. அவங்களுக்க கிட்ட கேட்டுத்தின் எல்லாம் செய்யோனும்” அலுத்துச் சலித்துப் போன இந்த ஊரின் குரலைக் கலைத்தவர்கள் இந்த நால்வரும். சின்ன முயற்சிகளையே துவக்குகிறார்கள். எதிரும்,புதிருமாக ஊர் திருகி நிற்கிறது.
நால்வரும் படித்த பிள்ளைகள். ஊருக்குள் தானாக முன்வந்து சங்கம் அமைக்க நோட்டீஸ் தருகிறார்கள். வீடு வீடாகப் போய் கணக்கு எடுக்கிறார்கள். சுயதொழில் செய்ய விருப்பமுள்ள பெண்களின் கூட்டம் துவங்குகிறது. நால்வர் எதிர்பார்ப்பிற்கும் மேலாகப் பெண்கள் கூட்டமாக வரத் துவங்கிவிட்டனர். “பாருங்கடா,புதினத்த நம்மூரு பொம்பிளிய சங்கம் கட்டுதாகலா..என சொல்லிக் கொண்டே பள்ளிவாசலை நோக்கி ஆண்கள் தொழுகைக்காகச் செல்கிற போது பெண்களின் மாதர் முன்னேற்றச் சங்கம் அங்குசாப்ணமாயிற்று…
பிறகென்ன வல்லையூரின் போக்கடிச்சந்தின் மம்முது நாணா டீக்கடையில் அறிவிக்கப்படாத ஊர்க்கூட்டம். ஆளாளுக்கு கருத்துச் சொல்லத்துவங்கினர்.” சும்மா,பொம்பள கூத்து. இந்த சங்கம் கிங்கமல்லாம் இங்க சரிவரல்லா. ஆம்பிளையாள செய்யயேலாதது பொம்பளையால ஏலுமோ. இன்ன பாருங்க நான் ஒண்டு சொல்லியன், பொம்பள தலையெடுத்தா ஒன்டும் சரிவரலா. இவளிய மிச்சம் படிச்சா முஸீபத்துதான்”….ஊரின் சுடுசொல் யாவற்றையும் புறமொதுக்கி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கின்றனர் பெண்கள். முதலில் ஊருக்குள் சங்கங்கள் துணை கொண்டு கோழிக் குஞ்சுகளை வளர்க்கத் தருகின்றனர். கிண்டலும் கேலியுமாக எதிர்கொண்ட ஊர்,கொஞ்சம் தடுமாறுகிறது. வயற்காடுகளில் மட்டைப் பந்து விளையாடும் இளவட்டங்கள் நக்கல் அடித்து எரிச்சலூட்டுகின்றனர்.
காரியத்தில் மட்டும் கவனமாக இருக்கின்றனர் நால்வரும். அடுத்தடுத்து புதிய முயற்சிகளை நோக்கி நகர்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் தையல் பயிற்சி. தொழில் செய்ய கடன் உதவி எனப் பெண்களைப் பொருளாதார ரீதியிலான பலத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றனர். ஊரெங்கும் பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் போதும்,அவர்கள் தன்னையும் ஊரையும் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் எனும் பேச்சு துவங்கியது. இப்போது ஊரின் நிறமும் குணமும் மாறுகிறது. அதுவரையிலும் தான் மட்டும்தான் ஊர். இங்கே என் விருப்பம் போலத்தான் எல்லாம் நடக்கும் என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்தை வசப்படுத்தி வைத்திருந்தவர்கள் தடுமாறுகிறார்கள். அறிவிக்கப்படாத ஊர்ப் பெரியவர்களின் கூட்டம் நடக்கிறது .மொம்மது ஸித்திக் ஹாஜி வீட்டில் துவங்குகிறது. ஏதோ விளையாட்டுப் பிள்ளைகன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தா, பெரிய, பெரிய காரியமெல்லாம் செய்யிறாப்ல இருக்கே… இத இப்படியே விடக்கூடாது.” யோசனையெல்லாம் சரிதான். ஆணாக்க ஊருக்குள்ள பொம்பிளியகிட்ட இப்ப நாலுபேருக்கும் மவுசு கூடிப்போச்சு. பொருத்தமா சமயம் வரும். அப்பிடி வரும்போது தலையிடலாம். கலைந்தது ஹாஜியார் வீட்டிலிருந்து ஊர்.
லோன் வாங்கித்தரேன். தையல் சொல்லித்தாரேன். ஆபிஸிற்கு போறோம்.டவுனுக்கு அதிகாரிகள பார்க்கப் போறோம். சங்கத்தில இருந்து டூர் போறோம்.இப்படி அதிகாரத்தை அசைக்க வலுவற்ற நடவடிக்கைகளில் மாதர் சங்கம் ஈடுபாடு காட்டிய வரை எந்த சிக்கலும் இல்லை. பொருளியல் காரணிகளை விடவும் சக்தியும்,வலுவும் மிக்கவை சமூகக் காரணிகள். திடீர்னு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஊருக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ” பெண்களுக்குப் பயிற்சி. மையத்துக்களைக் குளிப்பாட்டப் பெண்களுக்குப் பயிற்சி. அதுவரையிலும் எழும்பாத சிக்கல் மெல்லத் தலை தூக்கியது. மதம் நிறுவி வைத்திருக்கிற கட்டுப்பாடுகளைக் கலைத்தால் என்ன ஆகுமோ,அது துவங்கியது.

“இங்க பாருங்க கொஞ்ச நாளா சலசலப்பு உண்டாக்கிப் போட்டா அந்த ஜமீல் நானாவோட மக. ஆம்புளப்பிள்ளைக செய்த மாதி அவ செய்த ஒவ்வொரு ஜாதியும் சகிக்கல பாத்துக்கிடுங்க. நாமளே முக்காடு போடுத ஆளுக. இவளுக என்னடான்ட அழகுப் படுத்த பயிற்சின்டுறாளுக. அதிலயும் சிங்கள களவானியளக் கூட்டியாந்து பயிற்சி தருராளுக. சுட்டதும், தொட்டதுமெல்லாம் மறந்து போச்சான்டு தெரியல்ல. கேட்டா சிங்களச் சகோதரிகளுன்டு வசனம் பேசிட்டு திரியுறாளுக என ஊர் கண்ட மாதிரியும் பேசத் துவங்கியது. அதிலயும் பெண் மையத்து குளிப்பாட்டலுக்கான செய்முறை விளக்கம். வயது வந்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேட்டதும் மத்திச்சமமாருக்கு கடுங்கோபம் தலைக்கேறியது. “”இன்டைக்கு மையத்த குளிப்பாட்டனும்னு சொல்ற பொம்பிளிங்க நாளைக்கு கலீமா சொல்லப் போறமுன்டு வருவாளுங்க. இதப்பத்தி பள்ளிவாசல்ல பேசனும் என முடிவு செய்கிறார்கள்.
அதிகாரம் எப்போதும் ஒரு பெரும் போதை. சின்ன பொறுப்பு கைவிட்டு அகல்வதைக்கூடச் சகிக்க முடியாதவர்கள். திட்டமிடுகிறார்கள். சூழ்ச்சி செய்கிறார்கள். முதலில் இந்த நால்வரையும் சேர்ந்து இயங்கவிடக்கூடாது. அதுவே ஊர்ப் பெரியவர்களின் திட்டம். பெண்களை பொதுவாழ்விலிருந்து அகற்றுவதற்கும்,தள்ளி வைப்பதற்கும் பொதுமைச் சமூகம் கண்டுபிடித்து வைத்திருக்கும் ஒற்றை ஆயுதம் திருமணம். அந்த ஊரிலேயே முதல் பட்டதாரி பெண்பிள்ளை ஃபர்வீனா. அவளுடைய பெயரே கொம்பஸ் பர்வீனா. அவளுக்கு மத்திச்சமாரெல்லாம் கூடி திட்டமிட்டு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளையாக வந்த பையன் வேறு யாருமல்ல மம்முது ஸித்திக் ஹாஜியாரின் தம்பி பையன். திருமண நிச்சயதார்த்தம் எல்லோரும் கூடித்தான் நடத்துகிறார்கள். மாதர் சங்க தோழிகளும் சிரிப்பும் கழிப்புமாக உடன் வருகிறார்கள். பர்வீனாவின் குரலில் மாற்றத்தை கண்டு வருத்திடவில்லை மரீனா. அவள் எதிர்பார்த்திருந்த குரல் இப்படி வெளிப்பட்டது.
“கலியாணம் முடியங்காட்டீம் ஒரு வெடத்துக்கும் பொக வேணாம். வீட்டிலயே இருக்கட்டும்னு அவரு சொல்லி அனுப்பிருக்கி.”.வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள் பர்வீனா.
பர்வீனாவுக்கு கலியாணம் என்றால் அம்ரிதா டீச்சருக்கு டிரான்ஸ்பர். மொட்டக்கடுதாசி அவ்வளவுதான். பள்ளிக்கூட அதிபர் ஸித்திக் ஹாஜியின் உறவினர். இங்கும் எதிர்பார்த்த விசயம் நடக்கவே செய்கிறது. ஆனாலும் டீச்சர் பள்ளிக்கூடத்திலிருந்துதான் டிரான்ஸ்பர், ஊரிலிருந்து என்னை யாரும் விளக்கிட முடியாது. நான் உங்களோடுதான் இருப்பேன். இதை யாரும் தடுத்திட முடியாது. இந்த தைரியமும் துணிச்சலும் சங்கம் தந்தது என்று ஊரில் இருக்கும் பெண்களும், இளைஞர்களும் சொல்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. .
ஊரில் நிகழும் எளிய சின்ன மாற்றங்களை பதிவு செய்த வகையில் திக்குவல்லை கமாலின் நாவல் மிக முக்கியமான ஆவணமாகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் களச் செயல்பாடுகளை பதிவு செய்த வகையில் இவரின் ஊருக்கு பத்து பேர் எனும் நாவல் தேர்ந்து வரலாற்று ஆவணம்..
(திக்குவல்லை கமால் எழுதியிருக்கும் “ஊருக்கு நாலு பேர்” எனும் நாவலைக் குறித்து எழுப்பட்ட வாச்சியம்)..
மிகு எதிர்பார்ப்புடன்
ம. மணிமாறன்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்
போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.