Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented 19th Series Article (Sri Lankan Tamil Muslims) By Writer Manimaran.



இந்த எளிய வாழ்க்கையின் மீது தீவிரமான விசாரணைகளை நிகழ்த்துபவர்களாக எப்போதும் கலைஞர்களே இருந்து வருகிறார்கள். ஞாபகங்கள் எல்லோருக்குள்ளும் தான் அசைகின்றன. கடந்து சென்ற மணித்துளிகளை நினைவினில் மீட்டி கதையாக்கிடும் திறன் கொண்டவர்கள் யாவற்றையும் கதையாக்கித் தருகிறார்கள். எழுதுபவர்கள் மட்டுமல்ல வாசகனும் அறிந்த கதைதான். ஆனாலும் அதற்குள் உருகி ஓடும் கதைச்சொற்கள் வாசகனின் மனதைத் திறக்கின்றன. பிறகு அவரவர் மனதிற்குள் விதவிதமாக கதைகள் நகர்கின்றன. எப்படி இந்தக் கதைக்குளுக்கு நாம் மட்டுமே அறிந்த ரகசியமான பக்கத்தைக் கண்டறியவும், திறக்கவும் முடிகிறது.

எழுத்தாளனால் வாசகனை அதிர்ச்சியுறச் செய்திடவும், தனித்து அவனுக்குள்ளே பயணப்பட வைக்கவும் நிச்சயம் முடியும். அப்படியான கதைகளை எப்போதாவது தான் வாசிக்க முடிகிறது. அப்படியான மிக அபூர்வமான வாசிப்பனுபவத்தைத் தருவதாக இருக்கிறது பூனை அனைத்தும் உண்ணும் எனும் சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர் ஹஸீன் தன்னைப்பற்றிக் கூறுகிற போது நான் போரின் குழந்தை என்கிறார். போரும், நானும் சற்றேறக்குறைய ஒரே காலத்தில் தான் பிறந்து வளர்ந்தோம் என்கிறார். போர் குறித்த எந்த மயக்கமோ தனித்த பிரக்ஞையோ அவருக்கு எழுதுகிற போது ஏற்படவில்லை என்பதை அவரின் கதைகளே கூட நமக்கு உணர்த்துகின்றன. போர் மிக மிகப் பழமையானது. வரலாற்றின் துவக்கத்திலிருந்தே அது களத்தில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் இது பகுதி உண்மை மட்டுமே. நிஜத்தில் போரின் புள்ளிகள் மனித மனத்திலும் முகிழ்த்து மூர்க்கமாகி வெளிப்படுகிறது. அது இறந்து போன மனிதர்களின் உணர்வுகளையும் கூட குத்திக் கிழிக்கிறது. இந்த மனதின் கதைகளையே ஹஸீன் சிறுகதைத் தொகுப்பாக்கியிருக்கிறார்.

அப்படியானால் நரகத்தைக் காட்டு என்றாள் அந்தக் கூட்டத்தின் தலைவி என தொடங்குகிறது ஒரு கதை. தத்துவ தர்க்கங்களை ஒற்றைச் சிறுகதைக்குள் நடத்திட முடியுமா?. ஹஸீனால் முடிகிறது. சொர்க்கம், நரகம். கடவுள், சாத்தான். நல்லது, கெட்டது என்பதான இரண்டு கச்சிதமான நேர் எதிர்வுகளுக்கு இடையேயான தர்க்கங்களை தன்னுடைய ஊழிக்குச் சில நாட்கள் முன்பாக எனும் கதையில் நிகழ்த்துகிறார். அதற்குள் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் நிறுவனத்தன்மை குறித்த சின்ன சின்ன கேள்விகளையும் நிகழ்த்துகிறார். இந்த உலகில் கடவுளின் இடம் எது எனும் கேள்வியை எவர் எழுப்பாமல் இருந்திருக்கிறார்கள். தேடுபவர்களுக்கும், முற்றாக மறுப்பவர்களுக்கும் இடையில் சிக்காமல் போக்குக் காட்டி விளையாட. கடவுளர்களுக்குக் கதையே சரியான ஊடகம் என்பதை ஹஸீன் கண்டு சொல்கிறார். உயரம் குறைவானவனாக இருந்தபோதும், கடவுளுக்குரிய திடகாத்திரம் கொண்டவனாக இருக்கிறான். ஒற்றைக் கண்ணனைக் குறித்த சித்திரம் வாசகனுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.” ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு நானே இறைவன் என்று சொல்லி வஞ்சிப்பார்கள் என்று இருந்தது. இது பைபிள் வாசகம். இதுவே வேறு ஒரு சொற்களில் குரானுக்குள்ளும், ஹதீஸ்களாகவும் வெளிப்படுகின்றன. மதங்கள் எப்போதும் அச்சப்படு, அப்போதுதான் சொர்க்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

பூனை அனைத்தும் உண்ணும் - ஹஸீன் - அடையாளம் பதிப்பகம் | panuval.com

நீ இதுவரை எங்கிருந்தாய். அப்போ என்ன மயித்துக்கு நீ வேதங்களில் உன்னை அறியும் படி வேண்டினாய். மனிதனை ஏன் படைத்தாய்… இப்படி மனிதர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கடவுளிடம் விடையிருக்கவில்லை. பதில் தெரியாமல் போகிற போது அதிகாரம் எடுக்கும் ஒற்றை ஆயுதம் வன்முறை. அதனால் தான் கடவுள் எனச் சொல்லிக் கொண்டிருந்தவன் கதைக்குள் இப்படிச் சொல்கிறான். உங்களைத் தண்டனைக் கப்பல்களில் அடிமையாகப் பூட்டுவேன். மதத்தின் பெயரால் சண்டை மூட்டிவிட்டு வென்றவர்கள் தோற்றவர்களின் பெண்களை வெற்றுடம்பில் ஆயுதங்கள் கொண்டு தாக்கி, பலாத்காரமாக உடலுறவு கொண்டிருந்த போது மௌனமாகவோ அல்லது மகிழ்ந்தோ இருந்த உங்களின் கடவுளர்களை விட நான் மேலானவன் இல்லையா என்று கேட்டான் ஒற்றைக்கண்ணன். கடவுள் குறித்த வித விதமான தர்க்க மொழிக்குள் அந்த நிலத்தின் மனம் கதைக்குள் சுருள்சுருளாக விரிகிறது.

விழித்துக்கொண்டே உறங்குவது எத்தனை துயரமானது. மொத்த நிலமே எப்போதும் என்ன நடக்குமோ எனும் பதைபதைப்புடன் இருக்கிறது. நாம் நிஜம்தானா என மன அவஸ்தைக்குள்ளாகும் காட்சிகளை ஈழத்துப் படைப்பாளிகள் கதைகளை எழுதி கடக்கிறார்கள். துவக்குகள் தோளில் ஏறிய பிறகு இந்த நிலத்தில் யாருக்கும் உறக்கம் இல்லை. நிம்மதியாக உணவு உண்ணக் கூட நேரமில்லை. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். யாரும் உறங்கவில்லை எனும் கதைக்குள் இஸ்லாமான சிங்களவர் ஒருவர் வருகிறார். அவரோடு மல்லுக்கு நின்ன போலிஸ்காரர்கள் குடிகாரர்கள். அந்த முதியவரின் சிங்களச் சொல்லுக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். நிலைமை தலைகீழாகிறது. ஊரே குத்திக் கிழிக்கப்படுகிறது. எங்கும் ரத்த வாடையும் மனித ஓலமும் நிறைகிறது. யுத்த நாட்களில் தண்டனை முறைமைகளில் ஒன்றான போஸ்ட் கம்பங்கள் எவரையோ சுமக்கத் தயாராகக் காத்திருக்கின்றன. விளக்கு கம்பங்களில் துரோகிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டுக் கட்டித் தொஙக விடப்படுவதும், ட்ரக் வண்டிகளில் பிணமாக மனிதக்கூட்டம் எடுத்துச்செல்லப்படுவதும் இங்கே தினசரியும் நடந்தேறுகிறது. இந்த நிலத்தின் மனிதர்கள் யாவருடைய நினைவிலும் போர் உக்கிரமாகச் சுழன்றடிக்கிறது. பலரும் உள்ளுக்குள் உக்கிச் சாகிறார்கள். வெகு சிலர் கதைகளாக்கிக் கடக்கிறார்கள். ஹஸீன் கதைகளுக்குள் இயங்கும் மனிதர்களின் அகவெளிக்குள் பயணித்துக் கடக்கிறார்.

மனிதர்கள் ஒருபோதும் நிலையானவர்களில்லை. தன்னுயிரைக் காத்திட நண்பர்களை, ஏன் உயிரைக் காப்பாற்றியவனைக்கூட பலி தர தயங்காத மிருதன்கள். கம்பத்தில் கட்டியிருக்கும் போலிஸ்காரர்களை கட்டிவைத்திருக்கும் இடத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை அவனுடைய வீட்டை நோக்கி இழுத்துக்கொண்டு ஓடுகிறான் நண்பன். போலிஸின் வேட்டுச் சத்தத்திற்கு நடுவிலும் ஓட்டம் தொடர்கிறது. ஒருவனுடைய வீட்டை நெருங்குகிற போது ஒரு கரம் அவனை உள்ளே இழுத்துக்கொண்டு மற்றவனை வெளியே தள்ளுகிறது. காப்பாற்றியவனை வெளியே தள்ளி கதவைச் சாத்தும் குரூரத்தை உயிர் மீதான பயமும், சித்திரவதைகளின் மீதான அச்சமும்தான் ஏற்படுத்துகிறது. இந்த சம்பவங்கள் யாவும் வரலாறாகப் படிந்திருக்கிற குறிப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்டவைதான். தெருவில், வேலிக்கு மேலாக ஒரு வாழை இலை விழுந்து கிடந்தது. ஒரு ஆள் அசைவதுபோல் இருந்தது. என்னோடுதான் சுத்திக்கொண்டு இருந்தான். அவனுடைய மூத்த சகோதரனைச் சுட்டு விட்டார்கள். பாரூக் புலியில் பெரிய ஆளாக இருந்தார். அவருடைய அஞ்சலி நோட்டீஸ், பள்ளிவாசல் மதிலிலும், கிடுகு வேலிகளிலும், அபுசாலியின் கடைத்தட்டியிலும் ஒட்டப்பட்டு இருந்ததை, ஒரு அதிகாலையில் பரபரப்பாய்க் கைகளை இடுப்பில் குத்திக்கொண்டு கூட்டம் கூட்டமாய்ப் பார்த்தோம்.

ஈழப்போராட்டத்தில் முதன் முதலில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்களின் தளபதி பாரூக். அக்கரைப்த்தைச் சேர்ந்தவர் பாரூக் என்கிற ஹனீபா. யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தை 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந்தேதி விடுதலைப்புலிகள் தாக்கியபோது பாரூக் மரணமடைந்தார். இது வெறும் குறிப்பாகக் கதைகளுக்குள் அசையவில்லை. வரலாற்றின் தீராத பக்கங்களை நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறது. போர் உக்கிரங்களை மட்டும் கதையாக்கிட மாட்டான் கலைஞன். மனதின் நுன்பகுதிகளுக்குள் பயணிக்கும் கதைச் சொற்களால் கட்டித்தந்திருக்கிறார் ஹஸீன்.

இன்றைக்கும்கூட பள்ளிவாசல் மௌலவிகளின் அதிகாரம் கேள்விக்கு உட்படுத்த முடியாததாக இருக்கிறது. அதிகாரத்தையும் அசைத்துப் பார்க்கும் ஆற்றலை மதம் இவர்களுக்கு வழங்கியிருக்கிறது. வீட்டைவிட்டு விலகி நிற்கும் இவர்களின் பாலியல் உளச்சிக்கல்கள் குறித்த கதைகள் தனித்துப் பேசப்பட வேண்டியவை. இதனையே ஹஸீன்தன்னுடைய ஆட் கொண்டு விடுதல் அது என்னும் கதையின் வழியே வாசகனுக்குள் கடத்துகிறார். மௌலவிகளின் ஓரினச்சேர்க்கை குறித்த கதைகளுக்குள் பேசப்படுவதாக இருப்பது அவர்களுடைய வக்கிர மனதையும், பாலியல் பிறழ்வையும்தான். இங்கே பள்ளிவாசல் போகிற சிறுவர்கள் வீடுகளில் பதுங்கி அழுது கிடக்கிறார்கள். மௌலவிகளின் வக்கிரத்தைப் புரிந்து கொண்ட இளைஞர்களால் கூட. இந்த முறைகேட்டைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவற்றைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டுமோ, அவர்களே கூட ஒழுங்கில்லை எனும் போது என்னதான் செய்வது. “தடிமாட்டின் தாடியையும், ஜிப்பாவையும் அவர் கழற்றி எறியாமல் இன்னும் ஏன் அதற்குள் இருந்து கொண்டு அதை அவமரியாதைப்படுத்துகிறான். அந்த தசைப்பிண்டத்தினால் எவ்வாறு ஆசானாக இருக்க முடியும். நபியின் வயிறு வாடி வதங்கி அல்லவா இருந்தது..”

நூற்றைம்பது பக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பிற்குள் சரிபாதிக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கதையொன்றை எழுதியிருக்கிறார். பூனை அனைத்தும் உண்ணும் எனும் கதை பேசுவது அந்த நிலத்தில் சுற்றித் திரிந்த, திரிகிற இளைஞர்களின் கதையைத்தான். அதற்குள் அவர்களின் பால்ய காலத்தின் சேட்டைகள், கொண்டாட்டங்கள், போராளிகளாகப் போவது எனும் உளவிருப்பத்தை, பாலியல் சிக்கல்களை, முற்றாத காதலையும், காமத்தையும் துளித்துளியாக கதையாக்குகிறார். கதைகளுக்கு நடுவே முஸ்லீம்களின் போர் பங்களிப்பையும், இலக்கியம், எழுத்து என்றிருக்கிற அந்த நிலத்தின் சகலத்தையும் காட்சிகளாக்கியிருக்கிறார்.

எஸ்.எல்.எம். ஹனீபா, ஹஸீன்

நிஸ்தார், உபைத், ஹிஸான், நஜீம் எனும் நான்கு இளைஞர்களின் வாழ்க்கைப்பாடுகளை ஒரு ஆட்டோகிராப்பின் குறிப்புகளாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன். இமையம், புது உணர்வு, கூர்மை என்று பல இலக்கிய சஞ்சிகைகளை இவர்கள் நடத்துகிறார்கள். பத்திரிக்கைகளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்களே அவர்களுடைய மொழியையும்,அரசியலையும் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. எப்போதும் கதைக்குள் காலத்தைக் காட்டித்தர எழுத்தாளனுக்குக் கைவசமிருக்கும் தந்திரம் திரைப்படப்பாடல்கள் மட்டுமே. கதைகள் எங்கும் திரைப்படப்பாடல்கள் வாசிப்பவனின் மனதை வருடியபடி செல்கின்றன. வரலாற்றின் பக்கங்களைப் புரிந்து கொள்ள ஹஸீன்இந்தக் கதைக்குள் வேறு ஒரு முறைமையையும் உருவாக்குகிறார். கதைக்குள் வருகிற இளைஞர்கள் அவர்களுடைய மனதின் குரலை இலக்கியங்களில் தேடிக்கண்டடைகிறார்கள். அவர்கள் எஸ். பொவின் ஆண்மை கதையையும், ல.ச.ராவின் த்வனி கதையையும் உரத்த குரலில் குழுவாக வாசிக்கிறார்கள். இலக்கியம் எப்போதும் தன்னுணர்வு குறித்த மயக்கத்தில் கிடப்பவர்களைக் கலைத்து வெளியேற்றுகிறது. அதனால்தான் இவர்கள் காலம் முன்வைக்கும் அரசியலை எதிர்கொள்ளும் மனிதர்களாக வளர்கிறார்கள். பின்வரும் இரண்டு குறிப்புகள் இந்த தொகுப்பிற்குள் அலையும் மனதைப் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.

நிஸார், உபைத் எனும் பத்திரிக்கையாளனைப் பார்த்துக் கேட்கிறான். நீர் இயக்கத்துக்குப் போனதற்குக் காரணம், இன அரசியலா? அல்லது துவக்குகளின் மீதான கவர்ச்சியா?. ஏற்கனவே உமக்குத் தத்துவத் தெளிவிருந்ததா அல்லது இயக்கத்தின் பக்கம் போன பிறகு உருவானதா… இப்படியாகப் பல கேள்விகள் அப்போதைய ஈழத்து இஸ்லாமிய இளைஞர்களின் மனதில் முகிழ்த்துக் கொண்டேயிருந்தது.

“என்பத்தியேழுகளிலெல்லாம் ஜிகாத் இல்லையென்று சொல்ல ஏலாது. முஸ்லீம் குழுக்கள் ஜிஹாத் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் இருக்கிற ஊர்களிலிருந்தாலும் ஒருவொருக்கு ஒருவர் தொடர்பில்லாமல்தான் இருந்தார்கள். இதனை ஒருங்கிணைக்கவும் யாரும் முயற்சி செய்யவில்லை. தமிழ் இயக்கங்களின் நெருக்குவாரத்தால் வந்ததனால் பெரியதொரு ஐடியோலொஜி இருக்கவில்லை. காசுப்புழக்கம் வந்தவுடனே அமைப்புகளுக்குள் பிளவுகள் உருவாகத் தொடங்கிவிட்டன. இவையாவும் வெறும் குறிப்புகளில்லை என்பதை நாம் உணர்கிறோம். இரண்டு வரிகளுக்கிடையே ஊதி, ஊதி உருவாகுகிற பள்ளங்களில் அந்த நிலத்தின் மனிதர்கள் யாவருக்கும் சொல்வதற்கு ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.

நாங்க அவர்களின் நியாயமான விசயங்களின் பக்கம் இல்லையென்றில்லை. யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை வந்து மீண்டும் குடியேறுங்க என்று பிரபாகரச் சொல்லச் சொல்லுங்கோ. காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகளை இன்றுவரையிலும் கூட புலிகள் பகிரங்கமாக ஏற்கவில்லையே. எங்களையும் ஒரு தனித் தேசியம் எண்டு ஒத்துக்கொள்ளனும். முஸ்லிம்களும் ஒரு தனியினம். ஒரு சிறுபான்மையை இன்னுமொரு சிறுபான்மை ஏற்றுக்கொள்ளாட்டி தமிழர்களின் போராட்டத்தை எப்படி நாங்கள் நியாயம் என்று சொல்ல முடியும். …

போரைப் பற்றியதாக மட்டுமில்லாது மனிதக் குலத்தின் தனித்த பண்புகளான அன்பு, பெருங்காதல் வேடௌடை என யாவற்றையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன். இந்த தொகுப்பில் இருக்கும் செங்க வெள்ளை கதை உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. வேட்டையின் தடங்களை மனதெங்கும் நிறைத்திருக்கும் இனக்குழு இது. வேட்டையின் போதான இருளையும் நிலத்தையும் நுனுகி, நுனுகி விஸ்தாரமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர். முயல் வேட்டைக்கான பயணம்தான். ஆனால் கிடைத்ததோ செங்க வெள்ளை எனும் பறவை. இவனுகள்ள பிள்ளைகள் காட்டக் கலக்கி கலக்கி எல்லாம் பொய்த்து. யாருக்காக நடக்கிறது இந்த வேட்டையெல்லாம். இது இவர்களால் ஒருபோதும் விடமுடியாத தொல் சடங்கு.. எனக்கு ஒரு மாதிரியாப் போனது. எவ்வளவு கஷ்டப்பட்ட போதும், இதில் தாஜீதினுக்கு எந்த இரணம் இல்லை…

பறவையும், மீனும் நிறைந்திருக்கும் பையை வேட்டையில் உடன் வந்த தாஜீதின் எடுத்துப் போவார் என்றுதான் கதைசொல்லியை போல நாமும் நினைக்கிறோம். அத்தனை துயரமும் வலியுமான பயணம் அது. ஆனால் வேட்டைக்காரர்களுக்கு வேட்டையின் சாகசம் மட்டுமே போதுமானது. அதனால்தான் தாஜிதீன் உங்களுக்குத்தான் எல்லாவற்றையும் கொண்டு போங்கள் என்று உலகிற்கே தன்னுடைய வேட்டையின் பொருட்களைத் தருகிறார்.

காதல், வீரம், வேட்டை, பிரியம், துரோகம், யுத்தம் என அனைத்தையும் பூனைகளின் கண்ணொளியின் கதையாக்கித் தந்திருக்கிறார் ஹஸீன்..

( பூனை அனைத்தும் உண்ணும் எனும் ஹஸீனின் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுதப்பட்டிருக்கும் வாச்சியம்)

நேசத்துடன் எதிர்பார்த்து
ம. மணிமாறன்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *