வெள்ளி இறகுகள் முளைத்த பறவை
எல்லாவற்றையும் கால வரிசைப் படுத்தி பார்ப்பதற்கே மனம் பழகி வந்திருக்கிறது.இது முப்பதின் கதை.நாற்பதில் கதை எழுத வந்தவர்கள் இவர் இவர் என இரண்டாயிரம் வரை பட்டியலிடுவதும்,அவற்றை எழுதுவதையுமே வழக்கமாக்கி வைத்திருக்கிறது விமர்சன உலகம். எனவே சின்ன விலக்கத்தைக் கூட மனம் ஏற்பதில்லை. இங்கே போர் சிதைத்த ஈழ நிலத்தின் கதையை நிரல்வரிசைப் படுத்த வேண்டியதில்லை. எழுபதிலிருந்து இரண்டாயிரத்திற்கு, இரண்டாயிரத்திலிருந்து தொன்னூறுக்கு,தொன்னூறிலிருந்து சம காலத்திற்கு என முன்னும் பின்னுமாக எழுத வேண்டும். போரால் நிலைகுலைந்து கலங்கிக் கிடக்கும் கதையை வரிசைப்படுத்தித் தான் எழுதவேண்டுமா என்ன?ஆகவே காலத்தை கலைத்து கலைத்து முன்பின்னாக எழுதலாம் என நினைக்கிறேன்.
படைப்பு, எழுத்தாளன்,வாசகன் என கலை செயல்படுகிற எல்லா புள்ளிகளிலும் கட்புலனாகாத தனிக்கையின் கை ரகஸியமாக பதுங்கியே இருக்கிறது. அதிலும் ஈழ தமிழ் படைப்பாளிகள் மிகுந்த மன உளைச்சலுக்குள் நீடித்துக் கிடக்கின்றனர்.. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான இலக்கிய பிரதிகளில் போரின் துயர ரேகை படிந்த எழுத்துக்களை மட்டுமே எழுத முடியும். அல்லது எழுத வேண்டும். இதை தவிர வேறு எதை எழுத்தாக்குவதையும் போர்ச் சூழலில் எழுத வந்த எழுத்தாளர்கள் விரும்புவதில்லை. கன்னி வெடிகளும்,பதுங்கு குழிகளும் ,துவக்குகளும் தான் இனியான ஈழப் படைப்புகளுக்குள் தொழில்படும் என்பது எழுதப்படாத விதியாகி இருக்கிறது. அதைப்பற்றியும் எழுத வேண்டும். அதன் அரசியலையும் தான் எழுத வேண்டும். கலை எப்போதும் விலகிப் பயணிக்கும் தன்மையிலானது.
பழகிய பாதையில் பயணிப்பவர்களுக்கு எந்த சிக்கலும்விளையப் போவதில்லை.மாறாக விலகி பயணிப்பவர்களே புதிய திசையை கண்டடைகிறார்கள். ஈழ எழுத்து என்றால் அதற்கு இரண்டு வய்ப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது கலை உலகம்.. அது புலிகளின் அரசியல் சரிகளை பேச வேண்டும். அல்லது அவர்களின் தவறுகளைப் பேச வேண்டும். இதைத் தவிர ஈழத்தின் மற்றைய வாழ்வின் பாடுகளை சமகால ஈழப் படைப்புலகில் பார்க்க முடிவதில்லை. கடைசி யுத்தத்திற்கு பிறகான பெரும்பாலான கதைத் தொகுதிகள் இந்த வரைகோட்டை தாண்ட முடியாமல் திகைத்து நிற்கின்றன. போர் ஏற்படுத்திய வலியும் ரனமும் எளிதில் கடக்கவியலா துயர் தான். ஆனாலும் கடக்கத் தானே வேண்டும்.. கடந்திடும் சிறு முயற்சியே பணிக்கர் பேத்தி எனும் நாவல். சற்றே விலகிய கதைத் தொகுதியாக ஸர்மிளா ஸெய்யித் எழுதியிருக்கும்”பணிக்கர் பேத்தி” எனும் நாவல் சிறு ஆசுவாசத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது. ஏன் படைப்பாளிக்கும் கூட ஏற்படுத்தியிருக்கும். அப்படியானால் நாவலுக்குள் அந்த நிலத்தின் அரசியல் தொழிற்படவில்லை என எடுத்துக் கொள்ளளலாமா. நிச்சயமாக அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. சிங்கள பவுத்த அரசிகாதிரம் சிதைத்த கதையின் காட்சிகள் படைப்பிற்குள் ஊடாடி நகரவே செய்கின்றன.
வெகுகாலத்திற்கு முன்பு இப்போதைய இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு சிலோனாக இருந்த போது என முதல் வரி துவங்குகிறது. முதல் வரியிலிருந்து இறுதிப் பகுதி வரையிலும் மெல்லிய கோட்டுச் சித்திரமாக அந்த காலத்தின் காட்சிகள் நாவலுக்குள் நகர்கின்றன. போரினால் சிதையும் தினசரி,இயற்கை பேரிடர்களால் நெறிபடும் கடைகோடி மனித வாழ்வு என நாவல் காலத்தை பதிவு செய்தே நகர்கிறது. சகர்வான் எனும் யானை மக்காரின் பேத்தி தன்னுடைய கதையத்தான் சொல்கிறாள். அது அந்த நிலத்தின் கதையாகவும்,தமிழ் இஸ்லாம் சமூகத்தின் ஆவணமாகவும் உருப்பெறுகிறது. சகர்வான் அலிமுகம்மது சக்காரியா எனும் கதை சொல்லி தன் பேத்திக்கு தன் கதையை சொல்கிறாள். அதை யாவருக்குமான கதையாக உருமாற்றிடும் வித்தை ஸர்மிளாவின் மொழி வழி நிகழ்கிறது. பால்யகால ஞாபகங்களை மீட்க முடிவது ஒரு வரம். ஒரு விதத்தில் அதுவே படைப்பின் மூல ஊற்று. இங்கே கதை கேட்கும் பேத்தியே கதையை நகர்த்துகிறாள். பேத்தி அயனா மற்ற பேரன் பேத்திகளைப் போலானவள் இல்லை. வழக்கமான ராஜா ராணி கதைகளையோ,பூதங்கள்,மலக்குகள்,இப்லீசுகளின் கதைகளையோஅவள் தன் பாட்டியிடம் இருந்து கேட்க விரும்புவதில்லை.தன்னுடைய உம்மம்மாவின் கதையை கேட்கவே விரும்புகிறாள். அவளின் சொந்த வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை,அதன் வலிகளை,கொண்டாட்டங்களை ஆண்களின் பொறுப்பின்மையாலும் திமிராலும் நிலைகுலைந்த தன் குடும்பத்தின் கதையை வலிக்க வலிக்க சொல்கிறாள் சகர்வான் தன்னுடைய பேத்திக்கு…
தன்னுடைய உம்மம்மாவின் உப்பப்பா ஒரு யானை வேட்டைக்கார் தெரியுமா என்று மட்டும் சொல்லியிருந்தால் அது வழக்கமான குடும்பம் ஒன்றின் கதையாக கடந்திருக்கும்.”பணிக்கர் தத்திடி நாங்க. எங்கட மூத்தாப்பா ஒரு பணிக்கர். காட்டு யானைகளையே வேட்டையாடி பிறகு அடக்கி வசக்குகிற பணிக்கர்.அதிலயும் காடுகளில் இருந்து பிடித்து வரப்பட்ட யானைகள். எந்த வழியிலாவது தப்பிப் போகவே நினைக்கும். யானைகளை கட்டி வைக்கும் இலைதழைகளளால் ஆன மரக்கொடிகள் ஏறாவூர்க் காட்டிற்கு என்னுடைய மூத்தாப்பா உமர்லெப்பை பணிக்கரின் கொடையாகும்… கம்பிகளில் கட்டி வைக்கிறப்ப தப்பிப் போக துடிக்கும் யானைகள், பச்சை இலைக்கொடியின் பிடிக்குள் சிக்கி மீள முடியாது தடுமாறும் பிறகு நிலத்தில் வாழ பழகிக் கொள்ளும் தெரிஞ்சுக்கோ…”
உமர்லெப்பை பணிக்கரின் கதை ஒரு தொன்மக்கதையைப் போல முன் வைக்கப்படுகிறது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதைகள் தொன்மக் கதையாடலாக வரலாற்றின் பக்கங்களில் படிந்து விடுகின்றன. உமர் லெப்பை பிடித்துவந்த ராஜா எனும் யானை அரசாங்கம் அச்சடித்து வெளியிட்ட ஆயிரம் ரூபாய் நோட்டில் இடம் பெற்ற பெருமையை பேத்திக்குச் சொல்கிறாள்…” “வரலாறு தெரியாம பேசுறீயே மகளே. ந்தா பொறு…ந்தா பாரு… ஆயிரம் ரூபாய் நோட்டு…””ஆயிரம் ரூபாய்தான் அதில என்ன தெரியுது பாரு””.ஆ ஒரு யானை இருக்கு உம்மம்மா” “யானை மட்டுந்தான் தெரியுதா. அது பக்கத்தில ஒரு மனுஷன் நிக்கிறது தெரியலியா? “நிக்கிறாரு,நல்லாத் தெரியுது உம்மம்மா” “அது வேற யாருமிலை. எங்கட மூத்தாப்பா உமர்லெப்பை தான்.”
சட்டென பேத்தி திகைக்கிறாள். வாசகனுக்கும் கூட திகைப்பு வரவே செய்கிறது… திகைப்பையும் கூட நாவலின் அடுத்டுத்த பக்கங்களில் கலைத்து சமநிலைக்கு கொண்டுவருவதும் கூட படைப்பிற்குள் சன்னதம் கொண்டாடும் பனிக்கர் பேத்தியான சகர்வான்தான். சகர்வானின் உப்பப்பாவான யானை மக்கார் ராஜா எனும் அந்த யானையை பிடித்துக் கொண்டு வரும் போது இந்த யானை தான் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை. 1925 ல் ஏறாவூர் காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த கொம்பன் யானை அந்த ஆண்டின் ஜனவரி 5ஆம் தேதி தலதா மாளிகைக்கு பரிசளிக்கப்படுகிறது. தலதா மாளிகை இலங்கையின் கலாச்சார அடையாளம்.சிங்கள பௌத்த தொன்ம வரலாற்றில் தலதா மாளிகைக்கு தனித்த இடம் இன்றுவரையிலும் இருப்பதை நாவல் பதிவு செய்கிறது. அங்கு தான் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனிதப்பல் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்றைக்கும் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள பௌத்த நெறியை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள்..
நாவலுக்கு எப்போதும் வரலாற்றில் உறைந்திருக்கும் தொன்மங்களை கட்டுடைக்கும் பேராற்றல் உண்டு என்பதை தன் படைப்பின் வழியாக கண்டுபிடித்து தருகிறார் ஸர்மிளா ஸெய்யித். உமர் காட்டில் இருந்து யானையை மட்டும் கொண்டு வரவில்லை. ஈரானில் இருந்து சிங்கள அரசதிகாரிகளுக்கு கொண்டு வரப்பட்ட பெண்ணை நடுக்காட்டில் இருந்து மீட்கிறார். ஏறாவூருக்கே அழைத்து வருகிறார். அவள் பேசுவாளா அல்லது பேச்சுத்திறன் இல்லாதவளா என ஊரே திகைத்துப் பார்க்கிறது. ஊரில் பேசிக் கொள்கிறார்கள்”அந்த காட்டு யானைகளை வசக்கிப் பழக்கின உமர் லெப்பைக்கா இந்த ஈரான் பொம்பளைய வசக்கத் தெரியாது”எந்த வரலாற்றுப் பிரதியையும் சமகாலப் டுத்துவது தான் எழுத்துக்கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால். அதை நேரிடையாக வார்த்தைகளால் சொல்வது ஒருமுறை. சொல்லாமல் பிரதிகளில் விடப்படும் மௌனங்களிலும் இடைவெளிகளிலும் எழுதிக் கொள்ள வாசகனை பழக்குவது ஒருமுறை. இங்கே வழக்கமான சங்கிலிகளில் கெட்டுவதில்லை யானையை குழைவான இலைதழைகளால் கட்டுகிறார் யானனை மக்கார் எனும் காட்சியே நமக்கு போதுமானதாக இருக்கிறது. அந்த ஈரான் பெண்ணை குடும்பம் எனும் குழைவான கயிறால் கட்டியிருக்கிறார் என எழுத்தாளர் எழுதவில்லை.மாறாக வாசிக்கிற வாசக மனம் நிச்சயம் எழுதிக் கொள்ளும். இப்படியான வாசக பங்கேற்பிற்கான இடைவெளிகள் நாவலெங்கும் நிறைந்திருக்கிறது…
சகர்வான் எனும் பெரும் கிழவியின் ஞாபகங்களின் பெரும் தொகுப்பே இந்த நாவல்.அவள் தான் பணிக்கர் பேத்தி. அவள் ஊரே மெச்ச வாழ்ந்த குடும்பத்துக் காரிதான். ஆனால் அவளுடைய பால்யமே வறுமையில் தான் துவங்குகிறது. தந்தை நாடோடியாக எங்கோ போய்விட,தாய் மரணிக்கும் போது தவழும் குழந்தை அவள். வானமே கூரையாகிட நிற்க நிழலுமின்றி நின்றடைய கொப்புமின்றி உழன்று கிடக்கிறாள். அவள் எப்படி உழைப்பினால் ஏறாவூரே மெச்சிட வாழ்ந்தாள் என்பதே நாவல். அதற்குள் போரும் அரசியலும் நிகழ்த்தும் அலைக்கழிப்புகள்.மத நம்பிக்கைகள் தரும் மன நெருக்கடி. எளிய மனிதர்கள் எப்படி மத அடிப்படைகளை எளிமையாக எதிர் கொண்டு கடக்கின்றனர். மாற்று சமயத்தவருடன் எப்படி இயைந்து நகர்கிறது வாழ்க்கை .எப்போது இந்த வாழ்க்கைப்பொழுது நிர்மூலமாகிடுமோ எனும் அச்சம் .அதைக்கடந்து வரும் எளிய மக்களின் வாழ்வியல் என இவையே நாவலின் பகுதிகள்.
அவளுடைய வாழ்க்கைப் பயணம் அவளுடைய மரணத்தைப் போல அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்பதையே நாவல் நமக்கு உணர்த்துகிறது.பதின்மூன்று வயதில் அவளுக்குத் திருமணம்.குடும்பத்தின் சூட்சமங்களை அறியாத வயதில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பிரசவிக்கிறாள். அவளுடைய கணவன் சக்காரியாவும் அவளுடைய தந்தையைப் போலத்தான். நாடோடி வாழ்க்கையில் லயிக்கும் மனுஷன்.ஒவ்வொரு பிரசவத்தின் போதும் இதுவும் பொட்டையா. போச்சு போ என நடையை கட்டி போய்விடுகிறான். பைகளைக் கட்டி வெளியேறினால் எப்போது திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாது. அவன் வரும் வரை இந்த வேலை அந்த வேலை என்றில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து குடும்பத்தை நகர்த்துகிறாள் சகர்வான். நவலுக்குள் வருகிற ஆண்கள் யாவரும் ஒவ்வொரு நொடியிலும் பொறுப்பற்ற மனிதர்களாகவே இருக்கிறார்கள். ஏறாவூர் பெண்களே அந்த ஊரின் அடையாளம். முக்காடிட்டு வீட்டுவாசலை கடக்க முடியாது மதம் வரைந்திருக்கும் மாயக் கோட்டை எளிதில் கலைத்து வெளியேறுகிறாள் சகர்வான்.ஊரின் நட்ட நடு வீதியில் தள்ளு வண்டி உணவகத்தை நடத்துகிறாள். வழக்கம் போல புறம் பேசிட ஊருக்கு விதவிதமான சம்பவங்கள் நடக்கவே செய்கிறது.
எதைப் பற்றியும் துளி கவலையின்றி தன்னுடைய பெண் பிள்ளைகளுக்காக தீவிரமாக உழைத்துக் கொண்டேயிருக்கிறாள். அவளுடைய கணவன் பெண் குழந்தையை கடைசியில் பிரசவித்த நாளில் “ஆம்பள புள்ள பெக்க துப்பில்லாத பொம்பளையோட இனி வாழ முடியாது என பைகளை கட்டி வெளியேறுகிறான். வழக்கம் போல திரும்பி வருவான் என குழந்தைகள் நினைக்க,சகர்வான் வராவிட்டாலும் பராவயில்லை இனி இது என்னுடைய வாழ்க்கை,முழுக்க என் குழந்தைகளுக்கான வாழ்க்கை,இதை நான் வாழ்ந்தே தீருவேன் என முடிவெடுத்து அன்று தான் வாசலை கடந்து வீதியைக் கடந்து ,நகரத்தின் மையத்தில் பூங்காவின் சாலையோரத்தில் கடை நடத்துகிறாள். அப்போதைய நாட்களில் ஏறாவூரின் பெண்கள் துணிச்சக்காரிடி சகர்வானு என மெச்சவும் செய்திருக்கிறார்கள்… தனக்கு நேர்ந்ததைப் போலான துயர்மிகு வாழ்க்கை தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கும் அமைந்து விடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். உழைத்து தன்னை பெரும் மனுஷி நான் என நிருபிக்கிறாள்.
நாவலின் மிக முக்கியமான பகுதி ஆஸ்பத்திரி காட்சிகள். சகர்வானுக்கு தெரிந்து விட்டது மரணத்தின் மடியில் அவள் நித்திரை கொள்வது. மீளமுடியாத ஆழ் உறக்கத்திற்குள் அவளுடைய மனமும் உடலும் நழுவிச் சென்று கொண்டிருப்பதை சுற்றமும் கவணித்தது.எந்த நேரத்திலும் மக்களும், பேரப் பிள்ளைகளுமாக நிறைந்து கிடந்தது மருத்துவமனை. மற்றவர்கள் எல்லாம் வரும் ஜனக் கூட்டத்தை பார்த்து ஆளு ரொம்ப பெரிய வசதிக்காரி தான் போல என்று நினைத்துக் கொள்கிறார்காள். மட்டக்களப்பு நகரத்தின் மயூரி நகைகக் கடை உரிமையாளர் குமரகுருபரன் வந்தது பலருக்கும் ஆச்சர்யம். அவரை பார்த்ததும் சகர்வான் நினைத்துக் கொள்கிற பஜார் காட்சிகள் மிகவும் முக்கியமானவை. முதலில் சகர்வான் நெல்லைத் தீட்ட ,தீட்டிய நெல்லை விற்கவே மட்டக்களப்பு பஜாருக்குப் போனாள். போரின் சுவடுகள் எப்போதும் தெறித்து விழும் தெருவில் அங்காடிக் கடைக்காரியாக வாழ்ந்த நாட்கள் நாவலின் முக்கிய பகுதிகள்.
முப்பத்தேழு வயதில் முந்திரிபருப்பு விற்க மட்டக்களப்பிற்கு பொதிகளோடு பயணித்த நாட்கள் அவளின் ஞாபகத்தை கீறி வெளிப்படுகின்றன. எத்தனை ஏச்சுக்கள்,கேலிகள். “இதென்ன சாகசம்டி ஒரு பொம்பிளை,முக்காடும் ஆளுமாப் போய் சந்தியில பொட்டியோட கிடக்கா”..இவற்றை அவள் எப்படி உடலாலும் மனதாலும் கடந்து வந்தாள் எனும் பகுதிகளை பெண்ணுழைப்பு குறித்த நியாயத்தை உணர்த்திட எழுதியிருக்கிறார் ஸர்மிளா. சகர்வானைப் போல சாக்கு விரித்து அங்காடித்தெருக் கடைகள் மட்டக்களப்பு பஜாரில் பெருகின. இவளே இந்த தற்காலிக சந்தையின் ஆதிமூலம். எனவேதான் அறிவிக்கப்படாத சங்கத் தலைவராகிறாள். மாநகராடௌசி அதிகாரிகள்,ராணுவம்,போலிஸ் என ஏதாவது வந்து இந்த சாலையோரக் கடைகளை அகற்றறுகிற போதெல்லாம் அவள் சோர்வதில்லை. அங்காடிக்கடைப் பெண்களைத் திரட்டி நியாயம் கேட்கிறாள்.
மட்டக்களப்பு ஒரு பன்மைத்துவ கலாச்சார நகரம். போர்த்துக்கேசிய,டச்சு,பிரித்தானிய காலனிய ஆட்சிகளின் கிழக்கிலங்கைக்கான மையநிலம். மிக கச்சிதமான இந்திய அடையாளங்கள் நிறைந்திருக்கும் நகரம்.அங்கு காந்தி சிலை,காந்திபூங்கா,காந்திவீதி என பல இடங்களுண்டு. இந்துக்களும், இஸ்லாமியர்களும் ,பேகர்களும் பேதமற்று வாழ்ந்திட இடம் தந்த கலாச்சார தொன்மை நிலம் மட்டக்களப்பு.நாவலுக்குள் வருகிற வரலாற்றுத் தகவல்கள் நமக்கு எழுபதுகளில் மனிதர்கள் அவரவர் வாழ்க்கையை அந்த நிலத்தில் வாழ்ந்த கதையை நமக்குச் சொல்கிறது. அவ்வப்போது தலை காட்டும் இணக் கலவரத்தை காரணமாக்கி ராணுவம் நிகழ்த்தும் வன்முறையையும் நாவல் காட்டுகிறது. “போரின் வாய்பிளந்த கோரமுகம் மட்டக்களப்பு நகர வீதிகளில் தலைதெறிக்க ஒடிச்சென்றபோது பல குண்டுகள் இவர்கள் கண்ணெதிரிலேயே வெடித்துச் சிதறின. தலைவேறு முண்டம் வேறாக உடலங்களை சகர்வானும் சக அங்காடிப் பெண்களும் கண்டு திகிலடைந்தார்கள்””. இப்படியான பொழுதினில் சட்டென எல்லாமே முடிந்துவிடும். இப்டி ராணுவ நெருக்கடிகளின் போதும்,இயற்கை புரட்டிப் போடும் போதும் குமரகுருபனின் நகைக்கடையே அவளுக்கும் அவளுடைய வர்த்தக கேந்திரங்களுக்கும் அடைக்கலம். நாவல் எனில் நிலத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளத்தை காட்சிப்படுத்தும் கலை எனும் நிதர்சனமான மெய்மை நம்மை வந்தடைகிறது… மத மாச்சர்யத்தை கடந்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளி அன்பு துளிர்விடும் இடங்களை கண்டுசொல்வதும். அதன் வழி அதை யாவருக்குமானதாக மடை மாற்றுவதும் படைப்பு அடையும் கலைத் தன்மையின் அடையாளம்.
துயரத்தைச் சுமந்தே பழகிய உடலும் மனமும் கொண்டாட்டத்திற்கு ஏங்கித் தவிக்கும் தன்மையிலானவை. பால்யத்தின் துவக்கத்தில் கஞ்சிக்கு காத்துக் கிடந்தவள். தன் உழைப்பால் துயர வாழ்வைக் கடந்தவள். வீடு நிறைய பிள்ளைகளும்,பேரக்குழந்தைகளுமாக நிறைந்த பிறகு தன் குடும்பத்திற்கான தனி அடையாளத்தை சகர்வானே உருவாக்குகிறாள். பௌர்ணமி நாள் வந்துவிட்டால் போதும் பிரிந்து கிடக்கும் பணிக்கர் தத்திகள் சகர்வானின் கல் வீட்டிற்குள் அடைக்கலமாகிறார்கள். வெட்ட வெளியில் இரவு பார்த்திருக்க நிலவின் குளிர்ச்சியில் மொத்தக்குடும்பமே கொண்டாடி தீர்க்கிறது. இதற்குள் எவர் எவர் என்னென்ன வேலை செய்வது எனும் எந்த திட்டமிடல் இல்லை..பால் பேதமில்லை ,வயது வித்தியாசமில்லை. இப்படி ஒரு நாள் வாழ்ந்தா போதும் எனும் மனநிலையை எல்லோருக்குள்ளும் உருவாக்குகிறாள் பணிக்கர் பேத்தி…
நாவலுக்குள் அரசியற்புள்ளிகளும் நகருகின்றன. பெண்கள் கூடுமிடத்தில் வந்து நின்று அந்நாளைய அரசியலைச் சொல்லும் மனிதர் நாடகத்தை நடத்துகிற கட்டியங்காரனைப் போல வந்து வந்து செல்கிறார்.” நாட்டின் பிரதமர் ஒரு பெண் என்றும். இரண்டாவது முறையும் அவர் பிரதமர் ஆகியிருக்கிறார். அவர்தான் உலகின் முதல் பெண் பிரதமர் என கதை சொல்லி பெருமை பொங்கிட சொல்லும் போது. சகர்வான் பண்டார நாயகாவை சபித்தபடி கிணற்றடி பப்பாளி மரத்தை நோக்கி போகிறாள் “சீனி இறக்குமதியை தடுத்திட்டார். கோதுமை வரத்து கிடையாதாம்,மரவள்ளி கிழங்கையும் தேங்காய் துவையலையும் வைத்துக் கொண்டு பொழுதை எப்படிக் கடத்த. ஒரு பொம்பளயா இருந்துகிட்டு செய்யிற செயலா இது…”.
அயனா கதை கேட்கத் துவங்குகிறாள்.
“கதை சொல்லுங்க உம்மம்மா
அயனா இப்பிடி கேட்கவும் தொலைவில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. வெடியோசையின் சத்தத்தில் இரவைக் கிழித்தபடி காகங்கள் கரைந்தன.
“அது குண்டு வெடிச் சத்தம்தானே உம்மம்மா எங்கேயோ தெரியா”
செங்கலப்படிப் பக்கமாகத்தான் கேட்டது மகள்.விடிஞ்சா தெரியும் சாவுக் கணக்கு.
உங்களுக்கு பயமா
பயம் யாருக்குத்தான் இல்ல, உசிர் பயம் எல்லோருக்கும் இருக்கித்தான்.குண்டுச்சத்தத்திற்கு காதும் நெஞ்சும் பழக்கப்பட்டிருக்கும்”…
..இது நாவலுக்குள் நகர மறுக்கும் உரையாடல்.இப்படி நாவல் எங்கும் நகர மறுக்கும் நிலத்தின் துயரக்காட்சிகள்.யாவற்றையும் கடந்து வாழ்வதற்கான நம்பிக்கையே இப்போது முக்கியம் என்பதை உணர்த்துகிறது நாவல்…
தன்னைப் புறக்கணித்த உறவுகளை,உதாசீனம் செய்த கணவனை வழிப்படும் போது ஏகடியம் பேசிய ஊரை என சகலவற்றையும் தன் உழைப்பால் வெற்றி கொள்கிறாள் சகர்வான்.உமர்லெப்பை கண்டுதந்தது ராஜா எனும் கொம்பானையை மட்டுமல்ல.சசர்வான் எனும் மகா உழைப்புக்காரியையும் தான்……. வைக்கம் முகம்மது பஷீர் காக்காவின் எழுத்திற்கு இணையான எழுத்து ஸர்மிளா ஸெய்யத்தினுடையது.அவருடைய உப்பப்பாவிற்கு ஒரு யானை இருந்தது ஒரு உலக கிளாஸிக். பணிக்கர் பேத்தியும் கிளாஸிக் தான்….
(ஸர்மிளா ஸெய்யித்தின் பணிக்கர் பேத்தி நாவலைக் குறித்த வாச்சியம்)
ம.மணிமாறன்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்
தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.