போர் சிதைத்த நிலத்தின் கதை (மீந்தவர்களின் சொல்) 20 – மணிமாறன்

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது. ஊருக்கு வெளியே அல்ல, வெளியேவிற்கும் வெகு தொலை தூரத்தில் பதுங்கி கிடக்கிற குடிசைத் தொகுப்புகளுக்கு என்ன பெயர் இருந்தால் என்ன?. எத்தனை காலத்திற்கு இந்த அகதிப்பட்டத்தை சுமந்தலைவது. அகதி எனும் சொல்லை விட ஏதிலி என்றுரைப்பதில் ஒரு உளவியல் சிகிச்சை நிகழவே செய்கிறது. அந்த சொல்லை உச்சரிக்கும் போது நான் அகதி இல்லை என தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

வாழத் தகுதியற்ற இந்த தொண்டுக்குடிசைக் கூட்டத்திற்கு முகாம் என்ற பெயரிடப் பட்டதும், அதன் மீது நிகழ்த்தப் படுகிற ஒதுக்குதலையும் எப்போது மாற்றியமைப்பது எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. இங்கே பாராமுகமும் கழிவிரக்கமும் கலந்து கிடக்கிறது. அய்யோ பாவம் என்பதோ அல்லது அவுக ஊருக்குப் போய்ச் சேர வேண்டியதுதானே எனும் குரலையோ நித்தமும் கேட்கும் படியான துயர வாழ்வை விட்டு விலகுவதற்கான துடிப்புடனே கடக்கிறது நாட்கள். போர் நிலத்தில்தான் முடிந்து போயிருக்கிறது. முள்ளி வாய்க்கால் பெருங்கொடுமைக்குப் பிறகான காலத்தில் உச்சரிக்கப்படும் வெளிப்படைத் தன்மையிலான வார்த்தைகள் அர்த்தப்பூர்வமானவை. இப்போதாவது பேச முடிந்ததே நம்மால்.. இனி இவை முகாம்கள் இல்லை. மறுவாழ்வு மையங்கள் என்று அரசதிகாரம் அறிவித்த போது ஏதோ நடந்துவிடும் போலவே எனும் பெரும் விருப்பம் யாவர் மனதிலும் துளிர்விடத் துவங்கியிருக்கிறது. எத்தனை மரணங்கள்,எவ்வளவு இழப்புகள், அவமரியாதைகளைச் சகிக்க முடியாது தற்கொலையில் மடிந்து போன ஜீவன்கள் கணக்கில் அடங்குமா?… வாழத்தகுதியற்ற இந்த நிலத்திலேயே கிடக்க எங்களுக்கு மட்டும் ஆசையா?. சொந்த நிலத்தின் மீதான ஏக்கமற்ற குடிகள் உண்டா? இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் விடைகளற்று தொடர்கின்றன…

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.

விடைகாண முடியா கேள்விகளைச் சுமந்தபடி இங்கேயே விழுந்து கிடப்போமா? அல்லது ஊருக்கே போய்விடலாமா எனும் இந்த இருவேறு மனநிலைகளை எழுதிய தன்வரலாற்றுப் பதிவு போரின் மறுபக்கம். பத்திநாதனின் முகாம் நாட்களின் டைரிக்குறிப்புகளைப் போல தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் சொல்ல முயற்சிப்பது பத்திநாதன்களின் கதையை. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகான மீள்குடியேற்றங்கள் கசப்பானவைதான். ஆனாலும் ஏதோ மூச்சுவிட முடிகிறது எனும் உணர்விற்கே அலைகுடிகள் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த தனித்த மனநிலைகளைக் குறித்தும்கூட பத்திநாதனால் எழுத முடியும். போரின் மறுபக்கம் பத்திநாதனின் முதல்நூல். ஒருவிதத்தில் தமிழக வாழ் அலைகுடிகளைப் பற்றி எழுதப்பட்ட தனித்த புத்தகமும்தான். தன் வரலாறுகளின் சொற்கள் எப்போதுமே காத்திரமாகவே வெளிப்படும். தொண்ணூறுகளுக்குப் பிறகு கவனம் பெறத் துவங்கிய தன்வரலாற்று ஆவணங்களை விளிம்பு நிலையாளர்களே எழுதி வருகின்றார்கள். பெண்களுக்கு மட்டுமேயான தனித்த மன உணர்வின் சொற்கள் வலிமையானவை என்பதை இலக்கியப்புலம் உணரத்துவங்கியது அப்போதுதான். மூன்றாம் பாலினப் பிரதிகளும், ஒடுக்கப்பட்டோரின் தன்வரலாற்று நூல்களும் கவனம் பெறத்துவங்கின. அதன் தொடர்ச்சியில் வந்துநிற்பதே பத்திநாதனின் போரின் மறுபக்கம் என்கிற தன்வரலாற்று நூல். விளிம்பிற்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் வாழ்க்கைப்பாடுகள் இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறதா எனும் கேள்வியில் துளிர்த்ததே இந்த தொகுப்பாவணம். அகதி முகாம்களுக்குள் உறைந்திருக்கும் கொடுஞ்சித்திரத்தை எந்த எழுத்தாளனாலும் எழுதிக்கடக்க முடியாது என்பதே காலம் நமக்கு உணர்த்தியிருக்கும் நிஜம். துயரத்தின் கொதி சொற்களைத் தீராத தன் அலைச்சலின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பத்தி..

உண்மையை உரைக்க எந்த மெனக்கெடல்களுக்கும் அவசியமில்லை. கத்தி போன்ற மிகக் கூரான சொற்களால் கட்டித்தரப்பட்டிருக்கிறது போரின் மறுபக்கம். புத்தகத்தின் முதல் பக்கத்தில் துவங்கிய போரின் துயரக் காட்சிகளும் அது துரத்தும் வாழ்க்கையையும் எந்த விதமான பூச்சுகளுமின்றி கருப்பு, வெள்ளையில் வடித்திருக்கிறார் எழுத்தாளர்.

தெருவில் விழுந்து கிடக்கிற என் பந்ததினை எடுப்பதற்காகக் காத்து நிற்கிறேன். எவ்வளவு நேரம் இப்படி இந்த மரநிழலில் குடியிருக்கிறேன். வாகனம் தொலையட்டும் என காத்திருக்கிறேன்.ஏன் காத்திருக்கிறேன். ட்ரக் வண்டி ஊர்ந்து தெருவை அடைத்து நிற்கிறது.என்னுடைய பந்தை ஒட்டி செல்கிறது. தெருவில் செல்வது சாதாரண மக்களுடைய வாகனம் அல்ல. அது போராளிகளின் ரக்கு ஜுப்பு பீரங்கி வண்டிகள். சில சமயங்களில் தெருவில் ராணுவ வண்டிகளும் வரும். நடு இரவில் போர். எல்லோரும் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில் துயிலும் போது குண்டுகள் வெடிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. தெருதான்,ஆனால் யாராவது போவது வருவது தெரிந்தால் ஆமிக்காரன் சுடுவான். அந்த ஊர் இரவின் துக்கத்தில் உறைந்து போய்விட்டது. இனி மீளவே முடியாத பெருந்துயர் ராட்சஷப் போர்வையாக ஊரை வளைத்து நிற்கிறது.

போர்க்கருவிகளுக்கு நடுவினில் நித்தமும் விழுந்து கிடக்க எவருக்குத்தான் மனமிருக்கும். தப்பிப்பிழைப்பதைத் தவிர வேறு எந்த வாய்ப்புகளையும் போரின் கொடூர உக்கிரம் அவர்களுக்கு வழங்கவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய அலைகுடி முத்திரை இதுநாள் வரையிலும் அழிந்த பாடில்லையே ஏன்?. இலங்கையிலிருந்து குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளோடு வந்திறங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? வந்திறங்கிய யாவரும் விருப்பத்துடனா கரை ஒதுங்கினர்?. இல்லையே?. தன்னுடைய நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறிட நிர்ப்பந்தித்தது எது?

பாசிமோட்டையில் ஒரு தெருவில் போரின் ஆரம்பத்தில் ஒருவர் போராளிக்குழு ஒன்றிலிருந்தார். அவர் உக்கிரமாக நடந்த பெருஞ்சண்டை ஒன்றில் மரணித்தார். அதன்பிறகு என்னுடைய மூன்றாவது சீனியண்ணாவுடன் சேர்த்து நாலுபேர் வரிசையாக இறந்து போனார்கள். எங்கள் தெருவில் மட்டுமே இப்படி என்றால், அடுத்தடுத்த தெருக்களில்,ஊரில் நடந்தது ரொம்ப மோசம். இந்த யுத்தத்தின் உக்கிரம் எல்லா பெற்றோரையும் யோசனையில் ஆழ்த்தியது. பலரும் தப்பி பிழைத்து தேசாந்திரியாகப் போனார்கள். காசுள்ளவர்கள் போன இடம் வேறு நிலம். எதுவும் அற்ற அன்றாடங் காய்ச்சிகளுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த புகலிடமும் கண்களுக்குத் தெரியவில்லை…

இப்படி இந்திய நிலத்தைப் புகலிடமாக்கிய பலருக்கும் எல்லாம் மூன்று மாதத்தில் சரியாகிவிடும். நாம் மறுபடியும் ஊருக்கே சென்றுவிடலாம் எனும் பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது. பத்திநாதன் அப்படி  நினைத்துக் கொண்டே தமிழ் நிலத்தில் அலைந்தவர். சூழல் கனிந்து நிலைமை சரியாகிவிடும் என நான் உறுதியாக நம்பினேன் என நூலில் குறிப்பொன்றையும் தருகிறார். மிகுந்த நம்பிக்கையுடன் துயரங்களைக் கடந்து மண்டபம் வந்திறங்கிய ஈழத்தமிழர்கள் எப்படியெல்லாம் இங்கே உழல வேண்டியிருந்தது என்பதைத் தன்னையும்,,தன் வாழ்வையும் படைபாக்குவதன் வழியே பொதுவெளிகளில் புதிய அர்த்தத்தையும் அகதிகள் வாழ்நிலையின் மீது தனித்த கவனத்தையும் ஏற்படுத்த முயற்சித்தார் பத்தி. அவர்களுக்கு வேறு எங்கு செல்வதைக் காட்டிலும் இங்குக் குடியேறுவதில் ஒரு சின்ன நம்பிக்கை இருக்கவே செய்தது. தொப்புள் கொடி உறவு, மொழியால் பண்பாட்டால் ஒரே படித்தான  மனுசக் கூட்டமிது என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையிது. வந்திறங்கியதற்குப் பிறகான நிஜம் உயிரை வதைத்தது தனிதௌதது. அதையே தன்வரலாறாக்கி போரின் மறுபக்கத்தை நமக்குக் காட்டித்தருகிறார் பத்திநாதன்.

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.துயரங்களின் கதையை வாசித்துக் கடக்க முடியாது நமக்கு. முகாமில் வந்திறங்கிய பிறகும் கூட அவர்களுடைய அவர்களுடைய மனதை அறுக்கும் அச்சத்தின் துடி அகலேவேயில்லை. சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க அவர்களை அனுமதித்தது,அவர்கள் நடந்து போய் திரும்புகிற ஒற்றையடிப்பாதை மட்டுமே. அதைத் தவிர இந்த நிலத்திலும் கூட அவர்களுடைய கால்களைப் பயம் கவ்விப் பிடித்திருந்தது. கன்னிவெடிகளின் புதை மேட்டிலிருந்து திரும்பிய பிறகும் கூட அச்சம் அவர்களுடைய நெஞ்சாக்கூட்டில் இருந்து விலகவேயில்லை. அகதிமுகாம் எனும் வதைக் கொட்டடிக்கு வந்து சேர்ந்திருப்பவர்கள் யார் தெரியுமா? வாழ வழிதேடி வந்தவர்கள் இல்லை இவர்கள். போர் சிதைத்த நிலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள். மரணத்தின் வாயிலில் நித்தமும் பகடையாட்டம் ஆடிக்கிடந்தவர்கள். ஒருவிதத்தில் இவர்கள் யாவரும் போர் விட்டு வைத்திருக்கும் மிச்சமானவர்கள்…

எப்படியாவது வாழ்ந்து விடுவது என்றான பிறகு கப்பலில் இடுபாடுகளுக்கும் நெரிச்சலுக்கும் இடையில் மூச்சுத்தினறி செத்துப் போனவர்கள். நடுக்கடலில் தலைகுப்புற கவிழ்ந்து ஐலசமாதியானவர்கள். ஆமிக்காரன் கண்களுக்கு அகப்பட்டு நாயாக குருவியாக சுட்டுத்தள்ளப்பட்டவர்கள். கடல் அலைகளின் ஆக்ரோசத்திற்கு கடலிலேயே பலியானவர்கள் தவிர மீதமிருப்பவர்களே உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள். இந்த மிச்சமிருப்பவர்களின் வாழ்நிலை என்னவாக இருக்கிறது முகாம்களில் என்பதையே பத்திநாதன் போரின் மறுபக்கமாக்கி தந்திருக்கிறார்…

பத்தி மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற உச்சம்பட்டி முகாமிற்குள் இருந்து கொண்டு ஏன் இப்படியாகிவிட்டது என்னுடைய வாழ்நாள் எனும் கேள்வியை விதவிதமாக கேட்கிறார். வழிநெடுக நகரும் தற்குறிப்புகளாக நகர்கின்றன சொற்கள். அவை யாவும் அன்பிற்காக ஏங்கி நிற்கின்றன. தாயை விட்டு தந்தையை விட்டு வந்தாகிவிட்டது. உற்றாரும்,உறவினர்களும் அங்கு உயிருடன் தான் இருக்கிறார்களா? அல்லது நம்மைப் போல வேறு வெகு தொலைதூரம் சென்றுவிட்டனரா?. இந்த பதிலறியத் துடித்தலையும் மனதுடன் நித்தமும் வளர்ந்து கொண்டேயிருக்கும் கேள்விகளைச் சுமந்து அலைய வேண்டியிருக்கிறது. போர் பரிசாக அளித்த ஒற்றைக்கேள்வி நான் ஏன் அகதியாகத் துயருகிறேன். இந்தக் கேள்வியை நாவல் வழிநெடுக கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கும் பதில்களும் கூட அலுப்பூட்டக்கூடியவையாகவே இருக்கிறது. எதனால் ஏற்பட்டது எனக்கு இந்த நிலைமை. இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினாலா. அல்லது பனிரெண்டு பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்து தொலைத்தேனே அதனாலா?.  அம்மா அருகினில் இருந்த போதிலும் அன்பு காட்டாததாலா. அப்பா அருகிருந்து அறிவூட்டாதனாலா. அண்ணணுடன் அகதியாக வேற்று நிலம் வந்திறங்கியதால் வந்த தீவினையா?. எது என்னை இக்கதிக்கு ஆளாக்கியது எனும் கேள்வியைத் தீவிரமாகக் கேட்டு எழுப்பிய ஒருவித டைரிக்குறிப்பு பத்திநாதன் எழுதியிருக்கும் போரின் மறுபக்கம்…

இனப்பிரச்சினை குறித்து மிக தீவிரமாகப் பேசிக்கொண்டு இருப்பவர்களில் எத்தனை பேருக்கு அகதிகள் முகாமின் துயரம் தெரியும். வாழவே தகுதியற்ற அகதி முகாம்களின் சூழல் குறித்து என்றைக்காவது இவர்கள் அக்கறையுடன் பேசியிருக்கிறார்களா?. அல்லது ஒருமுறை வந்து அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுடன் பேசிடாவது செய்திருக்கிறார்களா?. மண்டபம் முகாம் வந்திறங்கிய நொடியிலிருந்து அகதிகளின் உடல்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை. அவர்களுடைய மச்சங்கள்,காயங்கள்,தழும்புகள் ஏன் கைரேகை உள்பட யாவற்றையும் பதிவுசெய்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களைச்சுற்றி கண்ணுக்குப் புலனாகாத கண்காணிப்பு வளையம் சூழ்ந்திருக்கும். அகதி அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்படும். உதவித்தொகை வழங்கும் நாளில் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் முகாமில்தான் இருக்க வேண்டும். ஒருவர் இல்லையென்றாலும் மொத்த குடும்பத்திற்கும் உதவித்தொகை நிறுத்தப்படும். இப்படி வரைமுறைகளற்ற கட்டுப்பாடுகள் இந்த அரசாங்கத்தினால் நித்தமும் கொடுங்கத்தியாக முகாமின் மீது வீழ்ந்து கொண்டேருக்கும். உதவித் தொகை நாளில் வெளியேறிப் போனவர்களின் வாழ்க்கையில் நிகழும் வன்மத்தை வார்த்தைகளால் எழுதிட முடியாது..

Malayaga Tamilar, Up-Country Tamils Story Oriented 20th Series Article Tho. Pathinathan's Porin Marupakkam By Writer Manimaran.
தொ. பத்தினாதன்

வெளியேறிச் சென்றவர்கள் வேறு எங்கும் தப்பிப் போக முடியாது. இந்த முகாம் உள்ளிழுக்கும் தந்திரத்தை உடன் வைத்திருக்கும் குரூர மாயம் கொண்டது. வெளியேறிய பிறகு மொத்த உடலும் மனமும் கியூபிராஞ்ச் எனும் இரக்கமற்றவர்களின் கையுறைக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். நொடிக்கு நொடி பதட்டமும் அச்சமும் சூழவே நகரும் நாட்கள். நகரும் நிழலையும் பணம் தரும் உபகரணமாக்கிடும் அதிகார வர்க்கம் ரட்டும் தப்பி போனவர்களைக் குறித்துக் கவலைப்படாது. முகாமின் ஆர்.ஐ யின் பாக்கெட்டிற்குள் அவர்கள் உதவித்தொகைப் பணமாக சுருட்டப்பட்டிருப்பார்கள். பிணந்தின்னிகள் எல்லா இடங்களும் விஷப்புகையென ஊடுருவிக் கிடப்பதை நாவலின் பல இடங்கள் நமக்குக் காட்சியாக்கிக் காட்டுகிறது. அகதிகளின் பிரதிமைகள் ஆர்.ஐ யின் கைப்பைக்குள் காசாக சுருண்டிருக்க,அவர்கள் வெளியேறி வெகுதூரம் சென்று விட்டனர். கால் போன பாதையில் பயணித்து கைக்குக் கிடைத்த வேலையைச் செய்து கொண்டு பொழுதை நகற்றிடும் ஈழ அகதிகளின் வாழ்க்கை சாட்சியத்தையே பத்திநாதான் போரின் மறுபக்கமாகத் தந்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் துவக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். 2009ல் தற்காலிகமான சூழலின்  உபவிளைவாக மீள் குடியேற்றம் நிகழ்கிறது. எழுத்தாளர் பத்திநாதன் இங்கு இல்லை. அவருடைய சொந்த நிலத்தில் அகதியெனும் துயர்மிகு அடையாளத்தை அழித்துவிட்டு இலங்கைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்.  யாராவது முன்வந்து இந்த ஏதிலிகளின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தையாவது நிகழ்த்திவிட மாட்டார்களா? எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. .

அகதிகளுக்கு என இருக்கிற எந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசு ஏற்பதில்லை. நடைமுறைப்படுத்துவதுமில்லை. முகாம் காரன் தன்னை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கியூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் காட்சிப்படுத்தவேண்டும். அப்போது எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியே செல்ல முடியாது. அது மட்டுமல்ல அரசியல் பிரமுகர்கள் அந்த சாலையில் பயணம் செய்கிற போது நிச்சயம் முகாமை விட்டு வெளியேறக்கூடாது. ஒருவித மன அவஸ்தையில் அந்த நிலை கடத்தி நகற்றுவதில் ஏற்படும் உளச்சிக்கல்களை நாவல் நுட்பமாக வரைகிறது. தமிழகத்தில் மட்டும் 102 முகாம்கள் இருக்கின்றன. எல்லா முகாம்களையும் நகரத்தை விட்டு மிக வெளியேவிற்குள்ளும் வெளியேவிற்குள்தான் அமைத்திருக்கிறார்கள். இங்கே கொத்தனார் உண்டு, சித்தாட்கள்  கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. ஆனால் ஒரு பொறியாளர் இல்லை. கங்காணிகள் உண்டு. ஆனால் சூப்பர்வைசியர்களோ, மேலாளர்களே அறவே இல்லை. 90 ஆம் ஆண்டு வீடென நம்பி வாய்த்த. இடமும் கூட இன்று கூரைகளோ  தட்டோடட இத்து புத்துப் போய் கிடக்கின்றன. மொழியால் இனரால் கலாச்சாரத்தால் ஒன்றினையும் புள்ளிகளே ஈழ அகதிகளை இங்கே இருத்தி வைத்திருக்கும் ஒரே நம்பிக்கை. நாவலை வாசித்து முடித்த பிறகு விதவிதமாக மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பாருங்கள்.  நம்முள் சூழ்ந்திருக்கும் குறௌற உணர்ச்சியாவது குறையட்டும். 

(பத்திநாதனின் போரின் மறுபக்கம் எனும் தன் வரலாற்று நாவலைக் குறித்து எழுதப்பட்ட வாச்சியம்)…..

வாசிப்பைக் கோரி நிற்கும் 

ம.மணிமாறன்..

முந்தைய தொடர்களை வாசிக்க: 

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (மிதந்தலையும் தக்கைகள்..) 9 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தூரிலாடும் உயிர்கள்…) 10 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அந்தரத்தில் சுழலும் சொற்கள்..) 11 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொல்லாத சொற்களின் நடனம்) 13 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆதி லட்சுமியின் பயணம்) 15 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (திசையசைக்கும் மனிதக்குரல்கள்) 16 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (உரத்துக் கேட்கும் மௌனம்) 17 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (அசைந்தசைந்த நிலத்தின் குரல்கள்) 18 – மணிமாறன்

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவில் நகரும் புல்லின் நிழல்) 19 – மணிமாறன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.