சக. மனிதர்களைத் தொடவோ,கட்டித்தழுவவோ,கைக்குலுக்கிக் கொள்ளவோ முடியாத வாழ்க்கையை ஏன் தான் வாழ வேண்டும். மானுட விழுமியங்களையும் அறத்தையும் முற்றாக புறந்தள்ளி வாழும் நாட்கள் எப்படி அர்த்தப் பூர்வமானதாக இருக்க முடியும்.. புறவெளியில் இயங்கும் நோய்த்தொற்றைக் குறித்தல்ல நான் கூறுவது. அகத்திற்குள் வஞ்சக விஷமாகத் தோய்ந்திருக்கிற பெரும் தொற்றைக் குறித்தே நான் பேச விரும்புகிறேன். பசித்துக்கிடக்கிற வயிற்றோடு கல்யாண மண்டப வாசலில் என்றைக்காவது காத்திருந்திருக்கிறீர்களா?. அப்போது கிடைக்கும் மீந்து போன பதார்த்தங்களைப் பெற ஓலைப் பெட்டியோடு காத்திருக்கும் அம்மாவின் ஏக்கம் குறித்த அச்சத்தில் நீங்கள் மனம் பிசகியதுண்டா?. பலரும் பார்த்திருக்க,அங்க பொணம் விழுந்து கிடக்கு, உணக்கு படிப்பு எதுக்குடான்னு கல்லூரி வகுப்பறையிலிருந்து தர தரவெனச் சுடுகாட்டிற்கு இழுத்து வரப்பட்டதுண்டா?. வீடு தேடி அலைந்து அலைந்து சாதியின் பெயரால் வீடு மறுக்கப்பட்டு இற்று சோர்ந்ததுண்டா?. ஊருக்கே கலெக்டராகலாம் ,ஆனாலும் நீ சின்னச்சாம்பானோட பையந்தானாடா என சுடுசொல் கேட்டதுண்டா?அப்போதுதான் நான் என்ன பேசுகிறேன் என்பதும் .ஏன் பேசுகிறேன் என்பதும் உங்களுக்குப் புரியவரும்.
புறக்கணிக்கப்பட்டவர்களின் வலியும், துயரமும் அனுபவித்தவர்கள் உணர்வதற்கும்,அய்யோ பாவம் என கழிவிரக்கத்தின் சொற்கள் தடவிய கரிசணக்காரர்கள் பேசுவதற்கும் தலைகீழ் வித்தியாசம் இருக்கிறது. மனதின் வலிகளை, தழும்புகளை, காயங்களை, படைப்பாகவோ, கலையாகவோ முன் வைக்கும் போது அதை கவனிப்பதற்கே தனித்த,திறந்த மனம் வேண்டியிருக்கிறது… முன் தீர்மானங்கள் இலக்கிய வாசிப்பிற்கு ஒருபோதும் உதவாது.
தலித் எனும் சொற்பதம் ஏற்படுத்தித் தந்த பெரும் உத்வேகத்தில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலித் கதையாடல்கள் தமிழ் நிலத்தில் நிகழ்த்தப்பட்டன. அறிவர் அம்பேத்கர் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய படைப்புகளும்,தத்துவ,அரசியல் உரையாடல்களுமே தலித் இலக்கியம் தமிழில் உருவாகி நிலைப்பட்டு ,வளர்ந்திட பெரும் காரணமாக இருந்திருக்கிறது.. தமிழகத்தில் தலித் இலக்கிய வரலாற்றை எழுத முயல்பவர்கள் தொண்ணூறுகளில் இருந்துதான் துவங்க முடியும் ஆனால் ஈழத்தில் அப்படி அல்ல. விமர்சன முறையியல்,இலக்கியப்படைப்புகள் எனப் பலதுறைகளைப் போலத் தலித் இலக்கியத்திலும் கூட ஈழம் நமக்கு முன்னோடிதான். ஈழத்தின் சாதி மறுப்பு இலக்கியமும்,தலித் இலக்கியமும் 1950களிலேயே துவக்கம் பெற்றிருக்கிறது. மிகவும் குறிப்பாகத் தோழர் டேனியல் எழுதிய பஞ்சமர்,அடிமைகள் எனும் நாவல்களுக்கு இதைத் துவக்கி வைத்ததில் தனித்த பங்குண்டு. தமிழர்கள் மலையகத்திற்குத் தோட்ட வேலைக்குப் போனபோதும். யாழப்பணத்தின் குடியேறிகளாக ஆனபோதும் அவர்கள் தமிழர்களாக மட்டும் போகவில்லை. சாதியையும் தன்னோடு சுமந்து போனார்கள். இறக்கியே வைக்க முடியாத பெரும் சுமையாக இன்றைக்கும் அது இருந்து வருகிறது. சாதி,ஒருவனுக்குக் கிரீடமாகவும்,மற்றவனுக்குச் சிலுவையாகவும் இருப்பதைப்பற்றிய எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லை தமிழ்ச்சமூகத்திற்கு…பெருமிதங்கள் இன்றைக்கும் இனவரைவியலின் வழியாக மூளைச் செல்களை மறைத்திருப்பதைக் காலம் நமக்கு உணர்த்துகிறது. ஆண்ட பரம்பரை கோஷங்களுக்கும் இனவரைவியல் ஆய்வுகளுக்கும் இடையேயுள்ள உறவுகளைக் கட்டுடைத்துப் பார்க்க வேண்டும்.
இலக்கியம் ஒரு அறிதல் முறை. அறிவுசார் தர்க்கத்தை நிகழ்த்திப் பார்ப்பது கலைப்படைப்புகளின் பணி. கலையோ,இலக்கியமோ அவை யாவும் காலத்தின் காட்சிகள் தான்.. ஐம்பதுகளில் துவங்கி இன்று வரையிலும் ஈழத்துப் படைப்பாளர்கள் எழுதிச்சேர்த்திருக்கும் “தீண்டத்தகாதவன்” ஈழத்து தலித் சிறுகதைகள்.. எனும் புத்தகத்தினை தோழர் சுகன் தொகுத்திருக்கிறார். ஈழப்படைப்பிலக்கியத்தின் மிக முக்கியமான பங்களிப்பு இந்த நூல். இதை இப்போது எடுத்துக் கொண்டு பேசுவதற்கும் கூட மிகவும் முக்கியமான காரணம் இருக்கிறது. இன்று வரையிலும் ஈழத்துப் படைப்பாளிகள் பலகுழுக்களாக உடைந்து நின்று களத்தில் சாதி ஆற்றிய உபவிளைவுகளைக்குறித்து தர்க்கம் செய்து கொண்டே இருக்கிறார்கள். யுத்தகளத்தில் சாதியெங்கே இருந்தது என்றும்.. சாதி கடந்தது தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான போராட்டம் எனும் குரலும் இன்றைக்கும் முன் வைக்கப்படுகிறது. எனவே இந்த தொகுப்பைக் குறித்தும் அதன் கதைகளைக் குறித்தும் பேசுவது ,சாதியச்சுவடுகள் படிந்திருந்த அந்த நிலத்தின் கதையைக் குறித்த உரையாடலாக உருமாற்றம் அடையும் என்பதாலும் இந்த தொகுப்பின் கதைகள் முக்கியம் எனப்படுகிறது…
தோழர் தெணியானின் இரண்டு கதைகள்,இந்த தொகுப்பில் உள்ளன. போர் சிதைத்துப்போட்ட நிலத்திலிருந்து உலகெங்கும் பிரிந்து போன தமிழர்கள் அவ்வப்போது திரும்பி வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். சொந்த நிலத்தில்,ஊர்க்காற்றை சுவாசித்து வாழ்வதற்கான விருப்பம்,இங்கு வீடுகட்டி வாழ்வது குறித்த ஏக்கம் பலருக்கும் இருப்பதையும், அது இங்கே நிலைபெற்றிருக்கும் சாதிய சமூகத்தால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்த காட்சிக்கதையே . “வெளியில் எல்லாம் பேசலாம்”..
வீட்டிலிருந்து கிளம்பிப் போகிற அவன் புறவெளியில் சிதைந்தும்,அழிந்தும்,புதிதாக உருமாறியிருக்கும் ஊரையும்,நிலத்தினையும் பார்த்தபடியே போகிறான். மாற்றம் சிறுசிறு புள்ளியிலும் வந்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே நிலத்துக்காரனின் வீட்டுக்கு வந்துவிட்டான். இங்குதான் கதை தன்னை திறக்கிறது. “கைமுட்டச் சட்டை,கால்முட்டக் களிசான்,காலில் சப்பாத்து,மடிப்புக் கலையாத உடுப்பு,….ஆனாலும் ஆரென்று அறியாமல்….”தம்பியவை எங்கே இருகிறனீங்கள்?”…மனிதர்களின் புறத்தோற்றமும் கூட மாற்றம் பெற்றுவிட்டது. படித்து உத்தியோகத்திற்கும் போயாகிவிட்டது.பிறகென்ன.?அதனால் எல்லாம் யாவும் சரியாகி விடுமா என்ன?. ஆழ்மனதில் அழுகிச்சீழ் பிடித்திருக்கும் சாதிய துவேஷமும் வன்மமும் மட்டும் மாறவே இல்லை.எல்லா விசாரிப்புகளின் வழி சாதிய அடையாளம் கண்டபிறகு வழக்கமாகி விடுகிறது. ஒ…நீ அவனா? எனும் கெக்களிப்பு வந்துவிட்டால் அவ்வளவு தான் எல்லாம் தலைகீழ்.அதுவரை வந்தவர்களுக்குத் தந்து கொண்டிருந்த மரியாதை காணாமல் போகிறது.””நீங்கள் வந்து படலையிலே நிண்டு கூப்பிடுங்கோ,நான் வருவேன்”…அவ்வளவுதான் கதை.. நீரும்,நிலமும் மாற்றம் அடைந்தாலும் ஆதிக்கச்சாதி மனம் மட்டும் நூறாண்டுகள் கழித்தும் கூட மாறவேயில்லை என்பதையே தெணியான் தன்னுடைய கதையில் சொல்கிறார். ஆனால் பணத்திற்கு மட்டும் சாதியில்லை.அது சாதிய சமூகத்திற்குத் தேவையாக இருக்கிறது என்பதையே தெணியான் தன்னுடைய தீண்டத்தகாதவர்கள் கதைக்குள் கண்டுபிடித்து வாசகன் அறியத் தருகிறார்.
தொட்டால் தீட்டு,பார்த்தால் பாவம் என மனிதக்குலத்தின் பகுதியை விலக்கம் செய்வது பெரும் பாவம் என எழுதியாகி விட்டது. சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்த கொடுஞ்செயல் தொடர்கிறதே ஏன்?ஒடுக்கப்பட்ட மனுசனோ,மனுசியோ ஒரு நாளும் தன் வாழ்வில் கடந்து சென்ற அந்த கொடும் நாட்களை மறப்பதில்லை. கைநிறைய காசும்,பெரும்புகழும் கிடைத்தபிறகும் கூட தன்னுடைய பூர்வீக நிலத்தில் தனக்கு நிகழ்ந்தது கொடுங்கனவாக ஆழ் மனதில் சுற்றிக் கொண்டுதானே இருக்கும். பால்யத்தில் கதைக்குள் வருகிற அவன் கோயிலின் நிர்வாகியால் தண்டிக்கப்படுகிறான். நிர்வாகியின் மகன் ஏறிய கோவில் குதிரைச்சிலையில் தானும் ஏற ஆசைப்படுகிறான்.”வந்ததே அவருக்கு அப்போதொரு சினம்!ஏன்ரா நிற்கிறாய்,வந்தால் ஒண்டிலையும் தொடக்கூடாது. தொட்டால் முதுகுத் தோலை உரிச்சுப் போடுவேன்..பிறகு மகனிடம்.அனோடை நீ பேசக்கூடாது. அன்ரை மேலிலே தொடவும் கூடாது..”எனச் சொல்லியும் வைக்கிறார். இன்றைக்குப் பணம் பெறக் கோவில் நிர்வாகிகள் வீடு தேடி வந்திருக்கிறார்கள். அந்தநாளில் குதிரை மீது ஏறியதற்காக விழுந்த அடியும் சொற்களும் காயங்களாகவும் வடுக்களாகவும் உடலோடும்,மனதோடும் தங்கிவிட்டன. எத்தனை கனவுகளில் தான் அடித்து நொறுக்கப்பட்டோம்,குதிரையிலிருந்து தள்ளிவிடப்பட்டோம்….எல்லாம் மாறியிருப்பது போலத் தெரிவது வெறும் தோற்றம்தான். ஆழ்மனதில் சாதி உறைந்திருக்கிறது. மட்டுப்பட்டிருப்பது போலத் தெரிவது ஒரு தோற்றப்பிழை அவ்வளவே என்கிறார் இந்தக்கதையின் வழியாக தெணியான்…
இந்த தொகுப்பினில் சாதியை ஒழிக்க வழிதேடிய அல்லது குறைந்தபட்ச சமரசத்திற்கு உட்படுத்திய மூன்று கதைகள் இருக்கின்றன. ஒன்று காந்தியம் குறித்ததாகவும்,மற்றவை இரண்டும் மார்க்சிய இயக்கங்கள் சாதியை ஒழிப்பதற்கான வழியைத் தேடிய அடையாளங்களை எழுதியும் செல்கின்றன. இந்த மூன்று கதைகளோடு தொகுப்பின் வேறு சிலகதைகளும் யாழ்ப்பாண தமிழ்ச்சமூகத்திடம் நீண்ட நெடுங்காலமாக இயல்பைப் போலவே இருக்கிற சாதித்துவேஷத்தையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் கலகங்களையும், எதிர்வினைகளையும் பதிவு செய்கின்றன. என்.கே.இரகுநாதனின் கதை எள்ளல் தொனியில் காந்தியத்தைப் பகடி செய்கிறது. மதுவிலக்கு பிரச்சாரம் இந்தியத் துணைக்கண்டம் முழுக்க நடந்திருக்கிறது. கள்ளுக்கடை மறியல்,மதுவிலக்குப் பிரச்சாரம் அத்தோடு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் எனும் பெயரில் நடந்த இயக்கங்களைப் பகடி செய்வதின் மூலம். மாற்றத்திற்கு உதவாத சமரசங்கள் அடையும் புள்ளியைத் தொட்டுக் காட்டுகிறது கதை. நிலவிலே பேசுவோம் எனக் கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதனுடைய ஆழமான அர்த்தம். மிக எளிமையானது. இந்த நிலத்தில் சாதியை ஒழிப்பதற்கான பாதைகள் குறுகிக் கிடக்கின்றன என்பதுதான். வேண்டும் என்றால் வெறும் பேச்சை நிலாவில் போய் பேசித் தொலையுங்கள் என்று சொல்கிறார் கதைக்குள்…
“ஆற்றல் மிகு கரத்தில் “எனும் தோழர் டேனியலின் கதை வேலன் எப்படியெல்லாம் சாதிக்கார கமக்காரர்களால் நிர்பந்திக்ப்படுகிறான் என காட்சிப்படுத்துகிறது. ஒவ்வொரு நொடியிலும் அவன் பஞ்சம சாதிக்காரன் என்பதால் கமக்காரர்களாலும்,ஊரின் சாதி இந்துக்களாலும் துன்புறுத்தப்படுகிறான். ஒவ்வொரு இழிவின் போதும் அவன் ஊருக்குள் ஒதுங்கிக் கிடக்கும் வயிரவசாமி பூடத்துக்கு முன்பாக பழியாகக் கிடந்து உருள்கிறான். யாதொரு மாற்றமும் இல்லை.மாறாகச் சாதியின் பெயரால் அவன் மீதும் குடியானவர்கள் மீதும் நிகழ்த்தப்படுகிற வன்முறை நீண்டு தொடரவே செய்கிறது. கதைக்குள் இரண்டு முக்கிய விடயங்கள் சொல்லப்படுகிறது. அதே ஊரில் வசிக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பம் சாதி பார்ப்பதில்லை என்பதையும்,தனக்குச் சேவை செய்ய ஊர் கமக்கரிச்சி வேலனை அழைக்கிற போது அவள் சாதி பார்ப்பதில்லை எனவும் கதையாடுகிறார். கலைஞர்கள் வெறும் காட்சிப்பதிவுகளை மட்டும் செய்கிறவர்கள் அல்ல. நிகழ்ந்து கொண்டிருக்கும் மெல்லிய மாற்றத்தையும் கண்டுணர்ந்து அதை தன் கதை மொழியின் வழியாக வாசகனுக்குத் தருகிறவர்கள். இந்தக்கதையிலும்.டேனியலின் பஞ்சமர் நாவலின் ஒரு பகுதியிலும் ஒருமுக்கிய விசயத்தைத் தொட்டுக் காட்டுகிறார். பஞ்சமர்களின் விடுதலை,தீண்டாமையிலிருந்தும் சாதித் துவேஷத்திலிருந்தும் மீள்வதற்கான வழி அவர்கள் தங்களுடைய கரத்தை ஆற்றல் மிகு கரமான கம்யூனிஸ்ட்களிடம் இனைப்பது தான் என முன்வைக்கிறார் எழுத்தாளர்.. இது ஒரு முக்கியமான பார்வை. தமிழகத்தைப் போலவேதான் ஈழத்திலும் மார்க்சிய இயக்கங்களில் ஒடுக்கப்பட்டுக்கிடந்தோர் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.. இன்னும் ஒருவாசிப்பாகச் சாதி ஒழிப்பு போர்க்களத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு பற்றிய பதிவாகவும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பில் உள்ள களம் எனும் கதை மிக நீண்ட சிறுகதை. அது எஸ்.பொ.கதைகள் எனும் தொகுப்பிலிருந்து எடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது.களம் எனும் கதை சாதி வன்மத்திற்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள்,மிகவும் குறிப்பாக ஆயுதக்குழுக்கள் நிகழ்த்திய அரசியல் களமாடலின் காட்சித்தொகுப்பு. “தேநீர்க்கடையில் சமத்துவம்,ஆலய நுழைவுப் போராட்டம் எனத் தொடர்ந்து ஈழத்தில் கம்யூனிஸ்ட்கள் அந்நாட்களில் தீவிரமாக இயங்கியிருக்கிறார்கள்.” தேநீர்க் கடைகள் சில இன்று திறக்கா. இன்றைக்கு எங்களோடு சமனாகக் குந்திக் காலை நீட்டிக்கொண்டு பேணியிலை குடிக்கப் போகினமோ?. அந்தக் கெட்டித்தனத்தையும் ஒருக்கா பார்த்திடுவோம்….”இஞ்சை ஒரு பிரச்சனையுமில்லை. கொஞ்ச பள் பொடியளுக்கு ப்பேணிலை தேத்தண்ணி குடிக்க ஆசை வந்திருக்கிறது”””இடைநிலைச்சாதியிலும்,ஈழத்தில் சாதியக்கட்டுப்பாடுகளை தீவிரமாக அமுலபடுத்தும் வெள்ளாள சாதிக்கார பொடியன்களில் பலரும் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளால் கவரப்பட்டதை மணியத்தார். கம்யூனிஸ்ட் மணியத்தார் எனும் கதாபாத்திரத்தின் வழியாக வாசகனுக்கு உணர்த்துகிறார். “போதனைகள் வேறு வாழ்க்கை வேறு என்கிற மனோபாவத்துடன் வாழ முனைந்த வைதீக மார்க்ஸிச சித்தாந்தத் தலைவர்களுடைய இரட்டை வாழ்க்கையை இடையறாது சாடியவர். மக்களுடைய தலைவர்கள் மக்களோடு மக்களாக வாழவேண்டும். “இப்படி இந்த கதை முழுக்க மாபெரும் தத்துவ விசாரணை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு தேர்ந்த கலைப்படைப்பு என்பது அதற்குள் நிகழும் வாழ்க்கை குறித்த தத்துவ உரையாடல் வழியேதான் கலை பெறுமதியைப் பெறுகிறது. அந்த வகையில் எஸ்.பொவின் களம் தமிழின் மிக முக்கியமான கதையும்தான்.
சாதிய வன்மத்தின் குரூர விளைவாக இன்றைக்கு ஆணவ படுகொலைகள் நடக்கின்றன.இங்கு மட்டுமல்ல, ஈழத்திலும், எங்கெல்லாம் தமிழன் சாதியைத் தூக்கித் திரிகிறானோ அங்கெல்லாம் சாதியப்படுகொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இது பன்னெடுங்காலமாக நீண்டுவரும் தொடர்ச்சி என்பதையே டொமினிக் ஜீவாவின் “காலத்தால் சாகாதது”எனும் கதை உணர்த்துகிறது.இன தூய்மை குறித்த மயக்கமும் வெட்டிப் பெருமிதமுமே இந்த கொலைகளின் மையப்புள்ளி என்பதை எழுத்தாளன் கதையின் ஊடாக கண்டறிந்து சொல்கிறார். “இந்திய நாட்டிலிருந்து, முதன் முதல் வந்து யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் கால் வைத்த சிங்க மாப்பாணர் பரம்பரை நாங்கள்”. .இந்த தம்பட்டப் பெருமை யாழ்ப்பாணத்திலும், வல்வெட்டியிலும் மட்டுமல்ல உலகின் எங்குச் சென்றாலும் சிங்கப்பூர், பிரான்ஸ்,மலேசியா இந்தியா என எங்கு வந்தாலும் கூடவே வருகிறது. அது சுமந்து வருவது வெட்டிப் பெருமிதத்தை மட்டுமல்ல,சாதியையும் தான்..
எல்லா முனைகளிலும் சாதியும்,சாதிசார் நடவடிக்கைகளும் இந்த நிலத்தில் எப்படி நடந்தேறியிருக்கின்றன என்பதைக் காட்டிடத் தொகுப்பு தவறவில்லை. சாதி இழிவிலிருந்து வெளியேறிட மதமாற்றத்தை அறிவர் அம்பேத்கர் முயற்சித்தமை அறிந்த வரலாறு. மதம் மாறிய பிறகும் கூட சாதியம் குரூரமாக வினையாற்றிடும் கதைக்களன்களையும் தொகுப்பிற்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் சுகன். டொமினிக் ஜீவாவின் தப்புக்கணக்கு கதையை வாசிக்கும் போது உணக்கு எப்படில கணக்குப் போடவரும். நீயெல்லாம் கணக்குப் படிக்கலேன்னு யாரு அழுதா என தன் குடுமியை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு திரிந்த என்னுடைய பள்ளிக்கூடத்துக் கணக்கு வாத்தியார் சீனிவாசன் சாரின் முகம் என் முன்னே கடந்தது. ஒரு தேர்ந்த கதை வாசகன் மனதினில் புதிய பக்கங்களைத் திறக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.இங்கே கிறிஸ்துவிற்குள் ஐக்கியமான பிறகும் கூட தமிழ்ச்சாதியினராகவே வாழ்கிற பலரின் இரட்டைத்தன்மையைக் கதை கட்டுடைக்கிறது. தன்னை சாதி மறுப்பாளனாகக் காட்டிக் கொள்வதற்குப் பலரும் எடுக்கும் யத்தனங்கள் விரிவான பொருளில் விவாதிக்க வேண்டியவை என்பதை வாசகனுக்கு உணர்த்தும் கதை மா. பாலசிங்கத்தின் கோடாரிக்காம்பு எனும் கதை . பஞ்சம சாதிப் பெண்ணை மணந்து தன்னைத் தியாகியைப் போலவும்,கலாச்சாரக் கலகக்காரனாகவும் மேடை மேடைக்குப் பேசிக் கொண்டு அலைகிற பலரின் புகை மூடிய உருவம் கோடாரிக்காம்பை வாசிக்கும் போது நம் கண்முன்னே நகர்கிறது.
இவையானவற்றையும் கடந்து இந்த தொகுப்பின் மிகமுக்கியமான கதைகளாக ஆகியிருப்பவை. அசல்,கன்னி,கேள்விகள்,ஊசி இருக்கும் இடம்கூட எனும் நான்கு கதைகள். கடல்கடந்து போன பிறகும் கூட நீ யார் எனும் கேள்வி எப்படி நம்மைத் துரத்திக்கொண்டே பின் தொடர்கிறது என்பதை அருந்ததியின் கேள்விகளின் கதையாகியிருக்கிறது.பெயர் போதுமானதாக இருக்கிறது சாதி எதுவென்று அறிந்துகொள்ள..” மகாலிங்கம் எண்டு என்ர பேரைச் சொன்னான். முகத்தைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.”நான் யாழைச் சேர்ந்தவன் தானெண்டு எப்பிடி நீனைச்சீங்கள்….”இப்படி தொடரும் விதவிதமான கேள்விகளின் வழி தோல் வெளுத்திருந்தாலும், இத்தனை அறிவோடு எழுத்துக்காரனாக இருக்கிறவன் நம்மட வெள்ளாள சாதிக்காரனாகத்தாளே இருப்பான் என நினைப்பதும்,பிறகு நினைப்பு பொய்யானதைக் குறித்த. பதட்டத்தில்.”இஞ்ச வந்து இப்ப எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கினம்.இந்த ஐரோப்பியன் செய்த விசர் வேலை இது. வந்தவைக்கெல்லாம் காட்டையும் குடுத்து வேலையும் குடுக்க. எல்லோருக்கும் தாங்க ஒண்டெண்ட நினைப்பு” இந்தப்புள்ளியைத்தான் மற் ற இரு கதைகளும் பேசுகின்றன.அசல் கதையிலும் கூட அயலகம் வந்து சேர்ந்த பிறகும் கூட மாற்றத்தைச் சகிக்க மறுக்கும் சாதிய மனம் தான் கட்டுடைக்கப்படுகிறது.அப்போது கதைக்குள் வருகிற அவனின் குரல் நமக்கு மிகவும் முக்கியம்.” “எனக்குப் புலூடா விடாத!நீ என்னோட பழகயுக்குள்ள என்ன சாதி எண்டதை ஏன் மறைச்சாய்?. இப்ப அது பெரிய பிரச்சனையாப் போச்சு.”” “எட நாயே நான் ஏன் சாதி சொல்லவேணும். வந்து நிண்டு விசர்க்கதை கதைக்கிற போடா வெளிய எண்டு ஏசலாம் என நினைத்தாலும் மனசுக்குள்ள ஏசிவிட்டு மீன்டும் மௌனமாகச் சிரித்துக் கொண்டான் சிவராசா.”..இந்தப்புள்ளிதான் ஆழ்மனதினில் இயங்கும் சாதி குறித்தும்,சாதி மறுப்பு குறித்தும் இயங்கும் உளவியல்….
இந்த தொகுப்பினை தமிழ் கூறும் சாதிசார் நல்லுலகத்திற்கு தங்களையே பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாக ஆக்கித்தந்திருக்கிறார் சுகன். இந்த ரசமழிந்த கண்ணாடிக்குள் பதுங்கிக்கிடக்கும் உங்களையும் மற்றவரையும், ஏன்? என்னையும் கூட நீங்களே வாசித்துக் கண்டறிக…
…. ம.மணிமாறன்…
(எழுத்தாளர் சுகன் தொகுத்திருக்கும் தீண்டத்தகாதவன் முதலான ஈழத்து தலித் சிறுகதைகள் எனும் தொகுப்பை முன் வைத்து எழுதப்பட்ட வாச்சியம்)
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்
தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தீண்டத்தகாதவன் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனக்கட்டுரைக்கு எஸ்.பொ. சிறுகதைகள் அட்டைப்படத்தை வைத்திருப்பது சிறப்பு.