நந்திக்கடலில் மிதக்கிறது லட்சம் பிணங்கள். கண்ணையும்,மனசையும் கட்டும் வலிமிகு சொற்கள் இவை.தொட்டகைமுனு எனும் சிங்கள மன்னனுக்கும்,எல்லாளனுக்கும் துவந்த யுத்தம் இது என எவரும் இப்போது துவக்குவதில்லை. மாறாக எல்லாவற்றையும் முள்ளி வாய்க்காலின் துயர நாட்களில் முன்னும் பின்னுமாக அலைந்தே எழுதுகிறார்கள். நம்காலத்தின் பெரும் துயரமான பெரும் சொல்லாக நிலைபெற்றுவிட்டது அது. முள்ளி வாய்க்காலுக்குப் பிறகும்,அதற்கு  முன்னும் நிகழ்ந்த பெரும்  துயரங்களின் வரலாறு மிக நீண்டது. ஒரு நூறு பிரதிகள் போர் விதைத்த அச்சத்தைக் கொடூரத்தை  ஊடிழையாக கொண்டு கட்டித்தரப்பட்டுள்ளன. எழுதப்பட்ட எல்லா  கதைத்தொகுப்புகளும் யாழ்ப்பாணத்தை

மட்டுமே மையம் கொள்கின்றனவே ஏன்?யாழ்ப்பாணத்திற்கு வெளியே தமிழ் வாழ்க்கை இல்லையா.இருந்தால் ஏன் அவை யாவும் படைப்பாகவில்லை. அப்படியே ஆகும் படைப்புகளில் இஸ்லாமிய வாழ்க்கையின் சிறு சுவடையாவது பார்த்திருக்கிறோமா நாம். எழுதப்படும் பிரதிகளில் இடம் மறுக்கப்பட்ட இனத்தின் குரலை யார் பேசுவது. அப்டியானல் எழுதப்பட்ட வரலாற்றுப் பிரதிகள் போதாமையால் தடுமாறியதா. அல்லது கவனமாகத் தயாரிக்கப்பட்டதா. கவனமாகத் தயாரித்தது என்றால் இந்த புறமொதுக்கலின் அரசியல் என்ன?ஏன் தமிழ்  நிலத்தில் வாழ்ந்திருந்த போதும் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களாக உணரவேயில்லை. இப்படி அடுக்கித் தொடரும் கேள்விகளின் விளைச்சலே எழுத்தாளர் முஸ்டினின் “ஹராங்குட்டி” எனும் சிறுகதைத் தொகுப்பு.

                            ஆயுதங்கள் மனிதக் குலத்தை நிர்மூலமாக்குகின்றன.அச்சம் பெரும் போர்வையாக மொத்த நிலத்தையும் மூடியிருக்கிறது.பயம் கொண்ட மனிதன் பதட்டத்திலும்,உயிர்வாழும் ஆசையிலும் காட்டிக்கொடுப்பவனாகிறான். நிஜத்தில் காட்டிக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். இந்த கதைத் தொகுப்பில் மிதக்கும் “காட்டிக் கொடுத்தவன்”எனும் கதை காட்டும் காட்சிச் சித்திரம் இதுதான்.இந்திய அமைதிப் படையின் கூடாரத்தில் இரண்டு இளைஞர்கள் முழந்தாழிட்டு நிற்கிறார்கள்.அவர்களின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. விசாரணை துவங்குகிறது.யார் யார் புலிகள் அமைப்பில் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பைத் தவிர .வேறு எந்தெந்த இயக்கம் ஒட்டமாவடிப் பாலத்தின் கரைகளில்  வேலை செய்கிறது. நீங்கள் எல்.ரீரீயா?அல்லது பிளாட்டா?நேற்று நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார். இப்படியாகத் தொடர்கிறது விசாரணை…இது ஒட்டமாவடிப் பாலத்தின் கிழக்குப் பிரதேசத்தில். இந்தியன் பீஸ் கீப்பிங் போர்ஸ் அலுவலகம். இடம்தான் மாறுகிறது.கேள்விகளின் தொனியில் எந்த மாற்றமும் இல்லை. இது புலிகளின் கூடாரம்.இங்கும் இரண்டு இளைஞர்கள். அதே விசாரணை.. கேள்விகள் மட்டும்தான் மாறுகிறது.உங்களில் யார் ஜிகாதியர்கள்… எத்தனைப்பேர்.துவக்குகளும் கண்ணிவெடிகளும்  எங்கிருந்து பெற்றுக் காவித்திரிகிறார்கள். இரண்டு இடங்களிலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவது மட்டும் ஏறாவூரின் பூர்வ குடிகளான முஸ்லிம் இளைஞர்கள். ஆயுதங்களும் அதன் மீதான பெரும் பயமுமே ஆட்சி செய்கிறது கிழக்குப் பிரதேசத்தை.. யார் யார் ஆர்மிக்கு,புலிகளுக்கு,இந்திய அமைதிப்படைக்குக் காட்டிக்கொடுக்கும் காரியத்தைச் செய்கிறார்கள்.ஏன் காட்டிக் கொடுக்கிறார்கள்.பயம் ஒரு சாக்கு மட்டும்தான். அச்சத்தைத் தவிரவும் காட்டிக் கொடுத்தலுக்குப் பின் இருப்பதை  நாம் புனைவுகளில் தான் கண்டுணர முடியும். பணத்தாசையில், கஞ்சா வியாபாரத்திற்கு, கள்ள மாட்டு வியாபாரத்திற்கு, கடலுக்கு மீன்பிடிக்கப் போகத் தடையில்லாமல் இருக்க என அடுக்க அடுக்கத் தொடர்கிறது காரணங்கள். வாழ்க்கையே நிர்மூலமான பிறகு என்னதான் செய்வது. மொத்த தமிழ் நிலத்தையுமே காட்டிக் கொடுப்பவர்களின் தேசமாக உருமாற்றிவிட்டது போரும்,வன்முறை ஆயுதங்களும்…

கதைகள் யாவும் நிஜத்தின் தொகுப்புகள்…. கதைகளின் பின்பகுதிகளில் இடம்பெறும் குறிப்புகள் முழுக்க வரலாற்றுக் குறிப்புகளாகவே நகர்கின்றன. இலக்கியம் ஒரு அறிதல் முறை. அது வரலாற்றின் இரண்டு வரிகளுக்குள் பதுங்கியிருக்கும் பேருண்மைகளைச் சத்தமில்லாமல் வெளிக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றது. இப்படிக்கண்டுணரப்பட்ட வரலாற்றுக்குறிப்புகள் கதைத்தொகுப்புகள் எங்கும் நிரவிக் கிடக்கின்றன.

Image
முஸ்டின்

புலிகளின் மீது கொண்ட கிலியால் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ஆர்மியும், இந்திய அமைதிப்படையும். ஏறாவூர் நிலப்பகுதியில் பெரும் வன்மம் கொண்டு தொண்ணூறுகளில் இஸ்லாமியக் குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கின மூன்று ஆயுததாரிக்குழுக்களும்.. புத்தகமெங்கும் படுகொலைகளும், ஆயுதங்கள் நிகழ்த்தும் வங்கொலைகளும் பதிவாகியுள்ளன. தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை அப்பிடியே ஏற்றுக்கொள்ளவா செய்யும் மக்கள் திரள். அதற்கான எதிர்வினையையும் நிகழ்த்துகிறார்கள் வெகுமக்கள்.அவற்றைத்தான் கதைகளாக்கியிருக்கிறார் முஸ்டின்….

                       வரலாற்றின் மிக நீண்ட படுதாவில் பதுங்கி கிடக்கும் கருப்புப்பக்கம் இருக்கிறதா?.ஒருபெரும் கதையின் ஒற்றைச் சொற்றொடர் வாசகனுக்குள் காலத்தின் காட்சிகளைத் திறக்குமா? திறக்க மட்டுமல்ல. அதிர்ச்சியும் அச்சமும் கொள்ளச் செய்கிறது கேர்ணலின் வாக்குமூலம் எனும் கதைக்குள் நகரும் தொடர்.”பாகிஸ்தான் ஜிகாதிகள் பயங்கரமானவர்கள். எதற்காக லத்தீப்பும் அவருடன் இருப்பவர்களும் ஆயுத தாரிகளாக உருமாறினார்கள்.”கேர்ணல் லதீப்பை எழுத்தாளன் பேட்டி காணச் சந்திக்கும் இடம் பள்ளிவாசல்….நீங்கள் ஏன் ஆயுதம் தூக்கினீர்கள் எனும் கேள்வி,கேட்டவனுக்கு மிகச் சாதாரணமானது.ஆனால் எதிர்கொண்ட லதீப் தடுமாறுகிறார். கண்ணீரை உகுக்கிறார். நிற்காமல் அழுகை அரைமணித்தியாளத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. பிறகே சொற்கள் ஒவ்வொன்றாக வெளியேறுகிறது. கேர்ணல் லதீப்பீன் சொற்களையும் அது உருவாக்கிக் காட்டும் வரலாற்றுச் சித்திரத்தையும் எதிர்கொள்ளத் தடுமாறுகிறது வாசகமனம்…

                  ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்று ஆயுத தாரிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம் மக்களுக்கு ஏன் வந்தது..கேர்ணல் சொல்கிறார்..”புலிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யத்துவங்கினார்கள். வகை,தொகையில்லாமல் முஸ்லிம் மக்களைக் கொல்லத் துவங்கினார்கள். அதுநாள் வரையிலும் எங்கட எதிரிகள் சிங்கள ஆர்மியும்,இந்திய அமைதிப்படையும் தான் என்றே கிடந்தோம். புலிகளுக்கு  எவ்வளவோ உதவி செய்த முஸ்லிம் மக்களை அவர்களே  கொல்லத் துணிந்த பிறகு எப்படி அமைதி காப்பது.வேறுவழியே இல்லை.புலிகள் தொண்ணூறுகளுக்குப் பிறகு நம்மட எதிரிகளாகிப் போனார்கள்”…

                 உலக அரசியல் வரலாற்றில் தொண்ணூறாம் வருடம் உருவாக்கிய பதட்டம் ஈழத்தையும் விட்டுவைக்கவில்லை.

இஸ்லாமியப் பயங்கரவாதம் எனும் போலிப்பதட்டத்தை அமெரிக்க வல்லாதிக்கம் உலகெங்கும் உருவாக்கிப் படரவிட்டது.  ஈழத்தில் நிகழ்ந்த முஸ்லிம்  கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டதிற்கு பின்னுள்ள மிக முக்கியமான அரசியல் இதுதான்.. இந்த சர்வதேச ஆயுத வியாபாரிகளின் சதிவலையை,புலிகளுக்கும், மற்றைய போராளிக் குழுக்களுக்குமான  போர் உளவியலைத் தொகுப்பின் கதைகள் கவனித்துப் பேசுகின்றன. இந்தியாவிற்கும்,பாகிஸ்தானுக்கும் இருக்கிற தீர்க்கமுடியாத பகைமை எப்படி உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது

 என்பதைக் கதைகள் கட்டுடைத்துக் காட்டுகின்றன.ஆயுதத்தைக் கைமாற்றும் குழுவினை ஆற்றுக்குள் தடுத்து நிறுத்துகிறது கேர்ணலின் குழு..”இந்த ஆயுதங்கள் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. ஐந்நூறு பேரு  பாகிஸ்தானுக்கு ஆயுதப் பயிற்சி பெற அனுப்பி வைத்திருக்கிறோம். இருநூறு வீரர்கள் ஆயுதங்களோடு பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். ஜிகாதிகள் படை ஊருக்குள் காத்திருக்கிறது எனப் போய்ச் சொல் ..”ஒருவனை மட்டும் விட்டுவிட்டு மற்றைய பத்துபேரையும் சுட்டுத்தள்ளுகிறார்கள். அத்தனையும் பொய்தான். ஆனாலும் சொல்கிறார்கள். இந்த வதந்தி காட்டுத்தீயெனப் பரவுகிறது. அன்றிலிருந்தே வெறும் லதீப் கேர்ணல் லதீப் ஆகிறார்..

               பேயன்,புஹாரி,நினையாத ஒன்று,எனும் கதைகள் பேசுவதும் கூட மேற்கண்ட உளவியலைத்தான்.ஒற்றறிந்து உளவாளியாக அலைகிறவன் பொதுஜனத்தோடு இரண்டற கலக்க வேண்டும்.அப்படியானால் சிறியவர், பெரியவர், ஆசிரியர், மாணவர், புலி ஆதரவாளன், எதிர்ப்பாளன், இன்னபிற போராளிக்குழுக்களின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களோடு மட்டுமல்ல, சமூகத்தின் சகல பகுதியினரோடும் இரண்டற கலக்க வேண்டும். அதற்கு அவன் தரித்துக் கொள்ளும் வேடமே பேயன். எல்லோரும் பாவம் ஒரு பேயன் என்று அவனுடைய இருப்பையே உதாசீனப்படுத்துகின்றனர். எவரின் கவனத்திற்கும் ஆளாகாத அவனால்தான் எல்லாவற்றையும் செய்து முடிக்கமுடிகிறது என்கிறார் முஸ்டின். பேயனாக அலைந்து திரிந்து அவன் உருவாக்கிய தஸ்தாவேஜ்கள் கதைக்குள் முளை விடுகிற போது அவனைப் பள்ளிவாசலின் தூண் அருகே சந்திக்கும் எழுத்தாளனோடு சேர்ந்து நாமும் அதிர்ச்சி அடைகிறோம்.அப்படியா?எப்படி சாத்தியம்?எனும் கேள்வி நம்மைச் சுற்றிச் சுழல்கிறது.. தேசிய முகமையில் பயிற்சி பெற்றவன் தான் பேயனாகத் திரிந்திருக்கிறான்.அப்படித் திரிந்ததால் தான் ஆயுதக்குழுக்களில் இயங்குபவர்களின் உளவியலைக் கண்டுபிடிக்கமுடிகிறது. அவனால் அவன் பட்டியல் தயாரிக்கிறான். என்கௌன்டர் செய்யப்பட வேண்டியவர்களின் பெரும் பட்டியல்.அனைவரும் இயக்கங்களை, காட்டிக்கொடுத்தவர்கள். தனித்த முஸ்லிம் இளைஞர் படையை உருவாக்கி என்கௌன்டர் செய்கிறோம் என இயங்கியதற்குப் பின் உள்ள ஆயுதம் எப்படி பொதுமக்களை வஞ்சித்தது என்பதற்கான சாட்சியாகி இருக்கிறது கதை.

தொண்ணூறுகளுக்கு முன்பு ஆயுதக் குழுக்களின் பிரதேச பொறுப்பாளர்களாகப் பல இடங்களில் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். சித்திக் ,சமது,புஹாரி எனப் பட்டியலிட முடியாத அளவிலான இஸ்லாமிய இளைஞர்கள் பட்டாளம் களமாடியிருக்கிறது.சர்வதேச பதட்டத்தின் பின்விளைவே  அவர்கள் இலங்கை பேரசதிகாரத்திற்கும்,போராளிக்குழுக்களுக்கும் எதிரிகளாயிருக்கிறார்கள்.  புஹாரி எனும் புலிகளின் இயக்கப் போர்வீரனின் வாழ்க்கைப்பகுதியை கதையாக்கியதின் வழி நமக்கு இதை உணர்த்துகிறார் முஸ்டின்.போராளியாக வாழ்ந்து,புத்திசாலியாகத் தலைமறைவாகி

பின்னர் தைரியமாக மரணத்தை எதிர்கொண்டவன் புஹாரி.வெறும் புஹாரியில்ல. அவன் எல்ரீரீ புஹாரி. புலிகளின் அதிகாரம் ஈழத்தில் ஓங்கியிருந்த நாளில் மக்கள் மௌன சாட்சிகளாகவே இருந்தனர். புஹாரி எத்தனை மனிதப்பலிகளை நிகழ்த்தியிருக்கிறான். மதமாவது, சொந்தமாவது. இயக்கம்தான். அது இடும் கட்டளைகளை எந்தவிதமான கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் அப்படியே நிறைவேற்றுவது தானே போராளிகளின் கடமை என ஆயுதங்ளோடு அலைந்து திரிந்தவன் புஹாரி.

வாழைச்சேனையில் பதினாறு முஸ்லிம் போராளிளைக் காப்பாற்றுவதற்காகக் குரல் கொடுத்து உரிமை வேண்டியதற்காக தீசன் எனும் போராளி படுகொலை செய்யப்பட்ட நாளில் விழிக்கவில்லை புஹாரி. புலிகளோடுதான் இருந்தான். புஹாரியைப் போல இயக்கப்பற்றோடு களத்தில் முஸ்லிம்கள் இருந்த காலம் அது. 1990ல் இயக்கத்திலிருந்த பெருவாரியான முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது லேசாக கலக்கம்கொள்கிறான். தீக்கிரையாக்கப்பட்ட கிராமங்களில் தெறிக்கும் ஓலங்கள் இவனுக்கு நிஜத்தை உணர்த்துகின்றன.

எல்லாவற்றையும் கடந்து காட்டிக் கொடுத்தார்கள் என முத்திரை குத்தப்பட்டு லைட் போஸ்ட் கம்பங்களில் கட்டிவைத்து எரியூட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் ஓலத்தைக் கேட்க முடியவில்லை. தப்பித்து போலிக் கடவுச்சீட்டோடு வெளியேறுகிறான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்புகிறான். எழுத்தாளன் புஹாரியையும் பள்ளிவாசலில்தான் சந்திக்கிறான். அப்போது புலிகளின் இயக்கம் இரண்டாக உடைந்து கிடந்தது.

ஹராங்குட்டி' சிறுகதைத் தொகுப்பு - இரத்தம் தோய்ந்த கதைகள்!

போரும் ஆயுதங்களும் மனித மனங்களை எப்படியெல்லாம் நிர்மூலமாக்கிவிடுகிறது என்பதைக் கதையின் முக்கிய பகுதியாக்கியிருக்கிறார் முஸ்டின்.திரும்பி வந்த பிறகு மரணத்தை எதிர்பார்த்துக்கிடக்கிறான். ஒரு காலத்தில் புஹாரி என்றால் அச்சப்பட்டுக் கிடந்த ஊர் இப்போது அவனைத் துச்சமாகக் கடந்து போகிறது. அவனும் கூட எத்தனை மனிதப்பலிகளை நடத்தியவன் நான். அந்த சாபமெல்லாம் நம்மைத் துரத்தத் தானே செய்யும் எனப் பள்ளிவாசலே கெதி எனக் கிடக்கிறான். பாதையோரங்களில் நடந்து செல்லும் போது கூட நலம் விசாரிக்க ஒற்றை மனிதன் கூட எதிர்ப்பட முடியாத பெரும் துயரத்தில் உழல்கிறான் அவன்.ஆயுதங்களை முழுமையாக வெறுக்கிறான். புறக்கணிப்பின் துக்கத்தையும், கசப்பையும் விழுங்கிச் செரிக்க முடியாமல் தொண்டைக்குழியில் சுமந்தலைவது எவ்வளவு பெரிய கொடுமை. அவனே எழுத்தாளனுக்குச் சொன்னதைப் போல புஹாரியும் ஒருநாள் கொல்லப்படுகிறான். வன்முறையும் ஆயுதமும் தூக்கித்திரிந்த புஹாரியின் மரணமும் வாழ்வும் ஒன்றுதான். வாழும் போதும் அவனுடைய வாழ்க்கை பேசப்படவில்லை. மரணநாளிலும் அவனை மையத்துக்குக் கொண்டு செல்லக்கூட ஆளில்லை. முன்னாள் போராளிகளின் கசப்பான பக்கங்களின் ஒற்றைப்பாராவே புஹாரியீன் வாழ்க்கை.

                     “இவனுகள மாதிரி ஆட்க முந்தி புலியோட திரிஞ்சானுகள்,புலி நம்மட ஆக்களை மட்டுமில்லாம அவனுகளையும் வெட்டிக்குமிச்சப்ப ஒடியாந்து ஆமில சேந்துட்டானுக,ஆமில இருந்துப்போட்ட அட்டகாசம் தாங்காம புலி இவனுகள தேடப்போகக்குல வெளிநாட்டுக்கு ஒடிருவானுக.பொறவு கொஞ்ச நாளில திரும்பவந்து கூட்டம் கூட்டி அல்லாஹீ அக்பர்னு அரற்றித்திரிவாங்க” இது இந்த தொகுப்பின் மிகமுக்கியமான கதையான “முகத்துக்கு முகம்”எனும் கதையில் சித்திக் எனும் முன்னாள் போராளியின் பின்னால் ஊர்பேசும் வசைகள்…சித்திக் முன்னாள் எல்ரீரீ. அதுவும் சாதாரணன் அல்ல. இந்திய அமைதிப்படையும், சிங்கள ஆர்மியும் இந்த நிலத்தில் கொடுஞ்செயலை நடத்திய நாளின் இளைஞன். போராளிக்குழுவின் பிரதேச பொறுப்பாளன்.அரசதிகாரத்தை மண்டியிடச்செய்து விரட்டியடித்தவன். 

எல்லாம் முடிந்து மனம் வெறுமையான ஒரு தூக்கநிலையில் இருக்கிறான். அப்படியான ஒருவனின் அகச்சிக்கலை கதை கடத்துகிறது வாசகனுக்குள். போராளி ஒவ்வொரு வீடாக போகிறான்  முகத்துக்கு முகம் தன்னுடைய கடந்த கால செயல்களுக்காக இறைஞ்சி மன்னிப்பைக் கோருகிறான்.சித்திக் என்றால் அச்சமுற்றிருந்த ஊர், இப்படியாகிவிட்டதே என வருத்தம் கொள்கிறது. எல்லாம் முடிந்து போய்விடவில்லை. ஆயுதங்கள் ஒன்றும் நீண்டு துயில் கொள்ளவில்லை. அது தனக்கான இரையைத் தேடிக்கொண்டே இருக்கிறது. சித்திக்கையும் அது விட்டுவைக்கவில்லை. முகத்தை ஹெல்மெட்டால் மூடிக்கொண்ட இளைஞர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். ஆயுதங்கள் சக மனிதனை முகத்துக்கு நேராகச் சந்திக்கும் துப்பில்லாதவை எனும் ஒரு உளவியல் கூறே கதையாக வாசகனுக்குள் இறங்குகிறது.

வரலாற்றைப் புனைவாக ஆக்கித்தருவது இன்றைக்கும் பெரும் சவால்தான். காலத்தைக் காட்சிச் சித்திரங்களாக்குகிறான் படைப்பாளி.வாசகனுக்கு இது புனைவா,வரலாறா எனும் மயக்கம் ஏற்படுகிறது. வரலாற்று எழுதியலின் கண்களுக்குத் தப்பிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் புனைவெனும் நூதனம் எழுத்தாளனை நிர்ப்பந்திக்கிறது.அப்படி வரலாறு வரைந்திருக்கும் கோட்டில்தான் இந்த தொகுப்பின் எல்லாக் கதைகளும் நகர்கிறது.இந்த தொகுப்பை ஒட்டு மொத்தமாக வாசித்து முடிக்கிற போது அது நமக்குள் 1980ல் துவங்கி 2012 வரையிலுமான தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையின் நிம்மதியற்ற பக்கங்களைக் காட்டுவதாக அமைகிறது. புரிந்து கொள்வதற்காகப் புத்தகத்திற்குள் புரளும் வரலாற்றுக் குறிப்புகளை அவசியம் கருதி பட்டியலிடுகிறேன்.

“ராபி இஸ்லாமிய ஊர்களில் இளைஞர்களைத் திரட்டினான். அக்கரைப்பத்து சுற்றுக்கிராமங்களில் பெரும் புரட்சி உருவாகியது.”

“கரண்டு கம்பியில் கட்டி வைச்சு தீயிட்டு எரித்துவிட்டு,அந்த பிணத்தை அப்புறப்படுத்தாமல் இருப்பது எனும் தண்டனை முறை குரூரரமானது.”

“போர் நிறுத்த காலத்தில் கூட இப்பிடி மோட்டார் சைக்கிள மறிச்சு புடுங்கிறாங்க போராளிகள். நல்லா பழக்கியிருக்கினப்பா கருணா”

“மன்னாரில் கொல்லப்பட்ட ஜனாசாக்கள் ஊர் வந்து சேர்ந்தன. ஆயுத இயக்கங்களின் அடாவடியைக் கண்டித்து அக்கறைப்பத்து மத்தியக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்”

“துவக்கு தூக்கினவனுக்கு அரமூளை. பேனா,புத்தகம் எடுத்தவனுக்கு முழுமூளை”

“தேசிய பந்தோபஸ்து அமைச்சர் கௌரவ லலித் அதுலத் முதலி மத்தியப்பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர்களைப் பாராட்டினார்.

“தோணிக்காரன் செங்கான் மீனுக்கு விரித்தவலையில் சிக்கியது மனித எலும்புக்கூடுகள்.”

“ஏகே,எல்.எம்.ஜி, எம்.பி.எம்.ஜி.பிஸ்டல், நைன்எம்.எம்.திரிஎய்ட், டொங்கான் கிரினெட் என ஆயுதங்களின் பெயர்களை ஊரே அறிந்து வைத்திருந்தது.”

“இப்பிடியே போனா பிரபாகரனையும் ஒருத்தன் காட்டிக்குடுப்பான். அதோட எல்லாம் முடிஞ்சி, பொட்டனுக்கொரு இயக்கம், தமிழ்ச்செல்வனுக்கு ஒரு இயக்கம், சூசசைக்கொரு இயக்கம் என ஆளாளுக்கு பிரிஞ்சு கெடந்து அடிச்சுக்கிறதுலயே மிச்சக் காலமும் கரைஞ்சு போகும்.”

“சண்டியங்கள துடைக்கனும்னுட்டு ஈரோஸ் கார செஞ்சதெல்லாம் சரிதான்.அத்தனையும் முஸ்லிம் சண்டியங்க.ஒத்த தமிழ்ச் சண்டியங்கூட சாகல பாத்துக்கிடுங்க”

      இப்படி எழுதித்தீராத குறிப்புகளால் நிறைந்திருக்கிறது கதைத்தொகுப்பு முழுவதும்.கதைகள் எங்கும் முன்னாள் போராளிகள் பள்ளிவாசல் தூண்களில் சாய்ந்து பாவமன்னிப்பு கோருகிறவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். தொகுப்பின் முன்னுரையிலேயே முஸ்டின் குறிப்பிடுவதைப் போல அவர் இறை நம்பிக்கையாளர். ஏக இறைத் தத்துவத்தில் பெரும் நம்பிக்கை கொண்டவர். அதனால் தான் அவருடைய கதாபாத்திரங்களை அவர் இறைவனின் நிழலில் தங்கச் செய்கிறார். ஒரு காட்சிக்கு ஒற்றை வாசிப்பு மட்டுமா இருக்க முடியும். வாழ்வது குறித்த அச்சமும் மிகுதியாகிற போது மதம் கட்டிவைத்திருக்கும் கூட்டிற்குள் அடைக்கலமாவதைத் தவிர வேறு என்ன சாத்தியத்தை வழங்கியிருக்கிறது இந்த உலகம் என்பதையும் நாம் விவாதத்திற்குள்ளாக்க வேண்டியிருக்கிறது…..

                        கலைஞன் எப்போதும் சுயபெருமிதம் பேசித்திரிபவனல்ல. தன்னுடைய ஹராங்குட்டி எனும் கதையின் வழியாக இஸ்லாமிய நடைமுறைகளில் உள்ள பிறழ்வுகளை தயவு தாட்சன்யமின்றி முன் வைக்கிறார்.அதையே தன்னுடைய தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்திருக்கிறார். இப்படித்தான் கலைஞனால் இயங்க முடியும். பின்னுரையில் முஸ்டின் குறிப்பிட்டதைப் போல அவருடைய சிறைக்கால நினைவுகளை நிச்சயம் அவர் படைப்பாக்கட்டும்…. வாசித்துப் பேசிட உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.

                                  ம.மணிமாறன்.

Musdeen: விரைவில் வருகிறான் ஹராங்குட்டி

(ஈழத்துப் படைப்பாளி முஸ்டின் எழுதியிருக்கும் ஹராங்குட்டி எனும் சிறுகதைத் தொகுப்பைக் குறித்த வாச்சியம்.)



தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்



தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *