போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayamமாவீரர்கள் துயிலும் நினைவிடங்கள் நடுகற்களாக வரலாற்றில் எஞ்சி நிற்கின்றன. பெயரற்ற காட்டு மலர்களும்,,, தும்பைப்பூச்செடிகளும் பெரும் காற்றில் ஆடி அசைகின்றன. ஆண்டுகள் பலவாக நிற்காது தொடர்ந்த போரின் விளைவைச் சகித்துச் செரித்த நிலத்தில் மெல்ல, மெல்ல மனிதக் கூட்டம் அசைகிறது, எழுதுகிறது. எப்படியாவது வாழ்வதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை அவர்களுக்கு எனும் போது அவர்கள் எங்காவது வாழ்ந்து தானே ஆகவேண்டும்.. கடும்குளிரிலும், பெரும் மழையிலும், நடுக்கடலில் வீசப்பட்ட செல்லடிக் குண்டுகளில் இருந்தும் தப்பித்த கூட்டம் திசாதிசைகளுக்கும் தெறித்தது. துவக்குகளும், தோட்டாக்களும், கன்னிவெடிகளும் அதிகாரம் செலுத்திய கடுங்கோடை போர்த்தியிருந்த காட்டிலிருந்து தப்பிய இனக்குழுவிற்கு வாழ்ந்திருந்த தன் நிலத்தின் மீதான ஏக்கமும்,தவிப்பும் துளிர்விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பூமிப்பந்தெங்கும் விரவிக்கிடக்கிற தமிழ்க்குடியின் கனவுகளில் போரற்ற தாய்நிலத்தின் காட்சிகள் எளிய காலை உதயத்தைப் போல கண்களை நிறைக்கின்றன. முடிந்திருக்கும் இந்தக் குரூர முடிவின் துயரம் மனதை அழுத்திய போதும்,சரி இப்படியாவது முடிந்ததே என தகிப்பாறுகிறது தமிழ்க்குடி.. உரிமைகள் எதுவுமற்று தங்களுடைய தொப்புள்கொடி உறவுகள் வாழும் நிலம் என நம்பும் இந்தியாவிலும், பகுதி உரிமையோடு ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடக்கும் தமிழ் இனம் தன்னுடைய கனவு நிலம் நோக்கிப் பார்க்கிறது. கண்ரெப்பைகளுக்குள் எங்கெங்கோ அகதியாகிக்கிடந்த காலத்தின் கதைகள் அசைகின்றன. ஈழத்தின் இளைய எழுத்துக்கலைஞர்கள் எழுதும் கதைகளுக்குள் இப்போதெல்லாம் விதவிதமான நிலங்கள் மொழியாகப் புரள்கின்றன..

ஆஸ்திரேலியத் தமிழர்களின் கதை,இத்தாலியச் சொந்தங்களின் கதை,பிரான்ஸில் மதுக்கோப்பைகளும், எச்சில் தட்டுகளும் கழுவிக்கிடந்த தமிழ்க்கூட்டத்தின் கதை,செருக்கோடு லண்டனில் திரிகிற கதை என இனியன ஈழத்தின் தற்காலக் கதைகள் பன்மைத்துவமான கதைகளாயிருக்கின்றன. ஜேகே எனும் இளைஞன் எழுதியிருக்கும் சமாதானத்தின் கதை எனும் கதைத்தொகுதியை வாசிக்கும் எவருக்கும் இதே உணர்வுதான் ஏற்படும்.இது ஜேகே எழுதியிருக்கும் முதல் கதைத்தொகுப்பு .

பீடிகை

கதைத் தொகுப்பானது இருவேறு புத்தகங்களால் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கிறது.ஒன்றிற்குள் அச்சமும் அதிர்ச்சியுமாக உலகின் எல்லா நிலங்களிலும் வாழநேர்ந்த வாழ்க்கையைப் பழுதின்றி வாழ முயற்சி செய்த மனிதர்களின் கதை.ஒருவிதத்தில் இது அகதிகளாக வாழநேர்ந்திட்ட தமிழர்களின் கதைத் தொகுதி.மற்றொன்று மனிதர்களின் அகவாழ்க்கையின் சிக்கல்களை நிலம் கடந்து,ஏன் மொழி கடந்தும் கூட பேசிய கதைகளின் தொகுப்பு. .மனிதர்களின் தனித்த துயரங்களை,கொண்டாட்டங்களை உளவியல் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாக்கிடும் கதைகள் என இருவேறு உளவியல் கூறுகளால் ஆக்கித் தரப்பட்டிருக்கிறது சமாதானத்தின் கதை எனும் ஜேகேயின் கதைத்தொகுப்பு.

புத்தகம் 1

எங்கு சென்றாலும் தன் முதுகோடு ஒட்டிக்கிடக்கிற அடையாளம் துரத்தி வருகிறது.ஆங்கில ஆசிரியராகப் பணி செய்தவர்தான், ஆனாலும் அவர் பேசும் ஆங்கிலத்தை ஆஸ்திரேலிய நிலம் வேறு மாதிரி எதிர் கொள்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமானவர்களே ஆனாலும் . சரி, அல்லது நாளையை நகர்த்த முடியாத அன்றாடங்காய்ச்சிகளானாலும் சரி தமிழர்களை, அகதிகளாகவே பார்க்கிறார்கள். ஏ ஆர் யூ என் இந்தியன்? எனும் குரலை கனகரத்தினம் மாஸ்டர் தினசரியும் எதிர்கொள்கிறார். ரோட்டில், குடியிருப்புகளில் ஆர் யூ என் இண்டியன் எனும் குரல் அவரைத் துரத்துகிறது. உடனே இல்லை இல்லை நான் இலங்கைக்காரன் என சொல்ல நினைத்த வார்த்தைகள் அவரிலிருந்து கடைசி வரை வெளியேறவே இல்லை. இங்கே அகதியாக இருக்கும் சீக்கியன் கூட அவரை ஆர் யூ என் இண்டியன் என்றே கேட்கிறான். இலங்கையிலிருந்து வந்த தமிழ் குடியேறிகள் ஆஸ்திரேலியக் குடிகளாகிடல் அவ்வளவு எளிதில்லை. ஆங்கிலம் கற்றுத் தேற வேண்டும். அதற்குத் தனியாகப் பயிற்சி நிலையங்களும் கூட அங்கு இருக்கின்றன.தேர்ந்த ஆங்கில மாஸ்டரின் கதையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி பெரிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்த தொகுப்பில் உள்ள பலகதைகளில் ஆங்கிலம் கற்க வயது முதிர்ந்த பலரும் பயிற்சிக்கூடம் நோக்கித் தள்ளாத வயதிலும் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒருவிதத்தில் இவர்களுடைய அலைச்சல் நிற்கவேயில்லை. கன்னிவெடியிலிருந்து தப்பி கடலுக்கு, செல்லடிக்கு தப்பி வேறு வேறு தேசங்களுக்கு என அலைகிறார்கள் உலகெங்கும் தமிழர்கள். வந்த ஊரிலும் கூட எப்படியாவது அகதி எனும் குறைந்தபட்ச எல்லையையாவது அடைந்துவிட முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கனகரத்தினம் மாஸ்டர் எனும் கதை பேசும் உளவியல் கூறு புது தன்மையிலானது.ஈழத்திலிருந்து தப்பிப் பிழைத்து யூரோப்பா வந்தவர்களை விட மகனாலோ, மகளாலோ வருவிக்கப்பட்டவர்களே ஆஸ்திரேலியாவில் அதிகம். அப்படி மகனால் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள அழைத்து வரப்பட்டவர்தான் மாஸ்டர். அவருடைய நினைவுகளில் நகரும் ஊரின் கதையின் நெத்தியில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் மட்டுமே போதுமானதாக இருக்கிறது தொகுப்பில் உள்ள கதைகளின் மையத்தைப் புரிந்து கொள்ள…..

செட்டிகள், தட்டார், கைக்குளார், சேணியர், முக்கியர், திமிலர், பிராமணர், வண்ணார், நளவர், பள்ளர், வெள்ளாளர், பறையர், கரையார், கோவியர்… ஏ பிளடி இண்டியன்ஸ்ஏஎ..… இதுதான் அந்தக் கதையின் நெற்றியில் எழுதப்பட்ட வசனம். நிலத்தின் அடையாளமாகச் சாதி உடம்போடு உடம்பாக ஒட்டியே கிடக்கிறது. நாம் தமிழர்கள் என்று எல்லோரும் போர்க்களத்தில் நெஞ்சுயர்த்திச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆழ் மனதிற்குள் அவர்கள் சாதியாகத்தான் சிந்திக்கிறார்கள் இதனைக் கதையெங்கும் உணரத்தருகிறார் ஜேகே.

மகனும், மருமகளும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்த போது வந்து சேர்ந்தவர் மாஸ்டர்.ஊரிலிருந்து கிளம்பும் போது தன்னுடைய நிலத்தையும், வீட்டையும் யாரிடமாவது பார்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும் என மாஸ்டர் நினைக்கிறார். ஏ போயும் போயும் ஒரு பள்ளன்டயா குடுக்கிறது என அவருடைய மனம் சமாதானம் கொள்ள மறுக்கிறது.. ஆஸ்திரேலியாவில் சம்பாதிச்ச துட்டைக் கொண்டு நம்மூரிலே வலுவான கோயிலைக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக நிலத்தை விலைக்கு கேட்ட போது ..உரும்பிராயில் முருகனுக்கு கோயில் கட்டும் இவரின் ஆசையை ஊர் ஏற்கவில்லை. ஒரு சிங்களவனுக்கு நிலத்தை விற்றாலும் விற்பேனே தவிர ஒரு கோவியனுக்கு விற்க மாட்டேன் என்கிறார்கள்.அவன் ஆங்கிலம் கற்பிக்கிற ஆசிரியந்தான் என்டாலும் ஒரு கோவியந்தானே.. என்று நினைக்கிறார்கள் ஊர்க்காரர்கள்.அப்போது இவர் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். இயக்கம் இல்லாததால் கொஞ்சம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த வெள்ளாளர்கள் கூட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் புத்தியைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அரசியலிலும் அவர்களின் காலம் இது.ஏ… அமைதிப் பேச்சு வார்த்தை முறிவிற்கும், முடிவிற்கும் வந்த பிறகு இருந்த நிலத்தின் கதையைப் புரிந்து கொள்ள இந்த வரிகளே போதுமானதாக இருக்கிறது. சாதியை விட்டு வெளியேற முடியாத மனதோடு அலைகிறது தமிழ் உடல். அவர்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தனித்த குணம் இருக்கும் என்று நம்புகிறார்கள். பிள்ளைகள் சற்றே வளர்ந்தவுடன் தன்னை இலங்கைக்குத் திரும்பச் சொல்லும் மருமகளை மாஸ்டர் ஒரு கைக்கோளர் பெண்ணாக மட்டுமே பார்க்கிறார். அதனால்தான் தன்காரியம் முடிந்ததும் கழட்டிவிட பார்க்கிறாள். இது கோளார் பொண்ணோட யுக்தி என நினைக்கிறார். தன்னோடு சுமந்தலையும் சாதியை ஆஸ்திரேலியா சென்ற பிறகும் இறக்கிவிட முடியாது திமிருடன் அலைகிறான் தமிழன். ஆனால் அங்கிருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவனும் தமிழர்களை பிளடி இண்டியன்ஸ்…அகதி..அகதி என்றே அழைக்கிறார்கள். ஓட ஓட துரத்துகிறது அந்த நிலமெங்கும் அகதி அகதி எனும் சொல்….

Image

நீண்ட பயணங்கள்,செயற்கையாக நிகழ்த்தப்பட்ட பேரிடர்கள்,கூட்டம் கூட்டமாக இரவெல்லாம் நடந்து பயணிக்கும் மனிதத்திரள்கள்.இவையாவும் தொண்ணூறுகளின் ஈழநிலத்தின் கதை.வலிகாமம் இடப்பெயர்வின் கதையை தூரதேசத்தில் இருந்தபடி வரலாற்றின் பக்கங்களில்  முன்னும் பின்னுமாக நகர்ந்தபடி எழுதிப்பார்க்கிறார் ஜேகே.கதைக்குள் கதை சொல்பவனாக எழுத்தாளனே வருகிறார்.வழி நெடுக கொப்பி  மட்டையில் ஊர்ப்பெயர்களும்,மனிதர்களின் பெயர்களும் எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்.தொலைந்தவர்கள் தன் இருப்பிடத்தை அறிவிக்கிறார்கள்.தாயைத் தேடும் பிள்ளைகள்,தந்தையைத் தேடும் மகள் எனப் பயணித்துக் கொண்டே தேடுகிறார்கள்.சந்தித்தாலும்,சந்திக்கா விட்டாலும் கூட பயணம் தொடர்கிறது.நிழல் தாங்கலையும்,பசியாற்றிக் கடந்திடத் தாகசாந்தி நிலையங்களையும் அமைக்கிறார்கள் மக்கள்.நிலத்தை,வீட்டை,பிரியமாக வளர்த்த உயிரினங்களை விட்டு விட்டு திசை தெரியா பயணம் நிகழ்ந்த நாட்களும்,பலிகளும் கதை  வாசிக்கும்  நம்மை அச்சம் கொள்ளச் செய்கிறது. .ஒருகதைக்குள் நகரும் ஒருவார்த்தை போதுமானதாக இருக்கிறது கதையின் கணத்தைப் புரிந்து கொள்ள.கதைக்காரனின் மகளும் கதை எழுதுகிறாள்.அவள் எழுதிய கதை ஒற்றை வார்த்தை மட்டுமே…கண்ணம்மா எனும் அந்தக் குழந்தைக் கதைக்காரி எழுதிய சொல்    “க்ரு…..ஷா…..ந்தி…”..

கதையைக் காட்டிலும் கதைக்கு எழுதப்பட்ட பின்குறிப்பு நம்மை அச்சமும் அதிர்ச்சியும் கொள்ளச் செய்கிறது.

குறிப்பிலிருந்து சில வரிகள் மட்டும்.

“1996 செப்டம்பர் 7ந்தேதி.கிருஷாந்தி வீடு திரும்பும் வழியில் கைதடி ராணுவக் காவலரனில் மறிக்கப்படுகிறாள்.அவளைத்தேடி அவளுடைய தாயும்,தம்பியும் போகிறார்கள்.போனவர்கள் எவரும் திரும்பவேயில்லை.நாற்பத்தைந்து நாட்கள் கழித்து செம்மணி மனிதப்புதைகுழி ஒன்றில் கிருஷாந்தியினுடையதும்,அவரின் அம்மா, அவரோட தம்பி,இவர்களைத் தேடிப்போனவர்களின் பிணங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடந்தன.”இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நிலமெங்கும் பாரிய மனித புதைகுழி இருந்ததை உலகறிந்தது.”

எத்தனை பாலியல் வல்லுறவுப்படுகொலைகள்.காணாப் பிணமாக்கப்பட்டோர் தேடிக் கண்டடைய முடியாத தொலைந்தே போனவர்கள். இவையானவற்றையும் கலைத்து முன்னும்,பின்னுமாக எழுதிச்சேர்த்த கதைக்கு ஜேகே “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்”எனப் பெயர் வைத்திருக்கிறார்.கதையை வாசித்து முடித்த பிறகு தலைப்பு வாசகனுக்குள் ஏற்படுத்தும் ரணம் ஆற்றிட முடியாத பெருந்துயராகத் தேங்கி விடுகிறது.

இந்த தொகுப்பில் உள்ள ஆகச்சிறந்த கதை என என்னுடைய வாசிப்பனுபவத்தில் நான் “விளமீன்”எனும் கதையைச் சொல்வேன். ஆஸ்திரேலியாவிற்குப் பிள்ளைகளைப் பார்க்கவோ,அல்லது அவர்களோடு தங்கிவிடவோ பெற்றோர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும், மட்டக்களப்பில் இருந்தும்,அல்லது வவுனியாவிலிருந்தும் வந்து நிறைகிறார்கள். வந்த இடத்தில் அகதி விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து, ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்து பகுதி காலக் குடிகளானவர்கள் ஆஸ்திரேலியாவில் நிறையப்பேர். அவர்களில் தமிழர்கள் மட்டுமில்லை. ஈரானியர்கள்,தென் சூடானியர்,பர்மியர்,செர்பியர்கள் என பல தேசத்தவர்களுக்கு ஆஸ்திரேலியா இடம் அளித்திருக்கிறது. இவர்கள் யாவருக்கும் ஒரு பொதுத் தன்மை இருக்கிறது.வேறு ஒன்றுமில்லை இவர்கள் யாவருக்கும் ஆங்கிலம் சரிவரத் தெரியாது என்பதுதான். அந்தக்கூட்டத்தில் ஒருத்தியான சரசு மாமியைப் பற்றிய கதைதான் “விளமீன்”…

தமிழர்கள் உணவுப்பிரியர்கள். சாப்பாட்டின் ருசிக்காக சர்வபரி தியாகங்களையும் செய்யத் தயங்காத தனித்த குணம் தமிழனுக்கு உண்டு.சரசு மாமியின் மீன் சாப்பாட்டிற்கான பிரியத்தைச் சொல்வதைப் போல நகரும் கதை நிஜத்தில் சொல்வது வேறு ஒன்றை.

“அந்தவகை ஊர் விளமீன்களை அவர் அவுஸ்திரேலியக் கடைகள் எங்கேயும் கண்டதேயில்லை.எப்படியோ அந்த ஒரு விளமீன் மாத்திரம் ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்தி வந்து இந்த ஊர் மீனவர்களிடம் பிடிபட்டுவிட்டது.” சரசு மாமிக்குத் தன்னந்தனியனாக இந்த ஊர் மீன்களோடு மாட்டிக்கொண்ட விளமீனின் ஞாபகம் வந்து வந்து மோதுகிறது.ஊரின் கதைகள் யாவும் நினைவுகளில் புரள்கிறது. அப்போது கதைக்குள் நகரும் சொற்கள் நாவினில் எச்சில் ஊறச் செய்து விடுகிறது. ஆஸ்திரேலியா வந்தவுடன் சுத்த சைவர்களாகிப் போன தன் குடும்பத்திற்குள் எப்படி விதவிதமாக மீன் சமைத்து உண்கிறாள். அதிலும் விளமீன் மட்டுமே உண்டு எப்படி  நீந்திக் கழிக்கிறாள் என்பதே கதை.கடல்கடந்து நீந்தி வந்து தட்டுத்தடுமாறிக் கொண்டிருப்பது விளமீன் அல்ல.சரசு மாமியும்கூடத்தான் என்பதை கரையும் சொற்களால் கதையாக்கியிருக்கிறார் ஜேகே. தன்னுடைய நிலத்தை,பண்பாட்டை உணவு முறைகளைவிட்டுத்தர முடியாது உருகி மருகும் மனிதக்கூட்டத்தின் கதையே விளமீன்.

தேவாலயத்திற்குள் மரியதாஸ் நுழைந்த போது இத்தாலிய மொழியில் திருப்பலி துவங்கிவிட்டது எனத் தொடங்கும் “மறை சாட்சி” எனும் கதை ஜேகேவின் கதை சொல்லும் நுட்பத்தை அறிய போதுமானதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அகதி வாழ்க்கைக்குள் உழல்கிறவன் மரியதாஸ். தமிழ் பேசும் சர்ச்கள் நிரம்பியிருக்கும் நிலத்தில் ஏன் அவன் இத்தாலி மொழி பேசுமிடம் நோக்கி வழிபடப் போகிறான் தெரியுமா?. அவனுக்குப் போகும் இடமெங்கும் புகைமூட்டம் கிளம்புவதான பிரம்மையும் மயக்கமும் ஏற்படுகிறது.பஸ்ஸில் பயணித்தாலும் சரி, மருத்துவமனைக்குப் போகும் போதும் சரி .எங்கு போனாலும் தமிழ் உச்சரிப்பைக் கேட்டாலே அவர் மனதிற்குள் குண்டுகள் வெடிக்கிறது. முன்னாள்  போராளிகள் குற்ற உணர்ச்சிக்கும்,மனப்பிறழ்விற்கும் உள்ளாகி தன்நிலை தடுமாறிக் கிடப்பதைக் குறித்த கதைகளும் கவிதைகளுமே போருக்குப் பிறகான இலக்கியமாக தமிழ்ப்புலத்தில் கொட்டிக்கிடக்கிறது. ஆனாலும் மனசாட்சி பேசுவது வேறு ஒரு தனித்த உலகத்தை. ஒரு பிரேயர் நாளில் தன் கையிலிருந்து தப்பிப் போன குழந்தையின் குரலுக்கும், சிற்சிலா என அவளைப் பெயர் கூவி அழைத்த போது காதை கிழிக்கும் வெடிச்சத்தமும்,ஆமென் எனும் குரலும் கலந்து தெறிக்கிறது அவனுடைய மனதிற்குள்.அவனுக்குத்  தெரியும்,அவனுக்கு மட்டுமல்ல,அவனைப் போலவே அகதிகளாகப் பூமிப்பந்தெங்கும் நிரவியிருக்கும் எல்லோருக்கும் தெரியும். உச்சரிக்கப்படும் வசைகளையும் அதன் வலிகளையும் ஏற்று இற்றுக்கிடக்கிறது தமிழ்க்கூட்டம்.”ஆட்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அவன் பெயர் கப்பலில் வந்த பொடியன் என்றே பரிகசிக்கப்படும்.அந்த விளிப்பில் அவன் ஏழ்மை,கையறுநிலை,கல்வியறிவு,சாதி, அகதி விண்ணப்பம்,உடை எல்லாமே பிசின்போல ஒட்டி இழுபடும்.இந்த கப்பல்ல வந்தவர்கள்தான் இப்ப எங்க வீடுகள்ள புகுந்து களவெடுக்கிறது”இப்படிப் பேசுகிறது ஊர்…துவக்குகளும் தோட்டாக்களுமாக திரிந்த முன்னாள் போராளிகள் வாழ்வைக் கடத்திடத் திசை தப்பி வந்ததையும்,இங்கே கால் தரித்துக் கிடக்க ஏலாது மனம் தடுமாறி பித்தாகி அலைவதையும் மறை சாட்சிக்குள் ஜேகே காட்சிப்படுத்துகிறார்.

Image
ஜேகே

எட்டு ஆண்டுகள் ஆன பிறகும்  மனமெங்கும் ஊர்தான் நிறைந்திருக்கிறது. போர் முடிந்த பிறகு அவமானத்தையும், கேட்க முடியாத தூஷனத்தையும் ஏன் கேட்டு இங்கேயே கிடக்க வேண்டும் எனும் எரிச்சல் மேலிடத்தானே செய்யும்.ஊர் போவது குறித்த ஏக்கம் எப்போது துளிர்க்கும் எனச் சொல்லவே முடியாது. போர் சிதைத்த நிலத்தில்  வாழ்வதற்கு என்ன இருக்கிறது.சரி வந்தடைந்த இடத்தில் வாழ்ந்து தொலைப்போம் என்றாலும் அதுவும் எளிதில்லை. வாழ்வதற்கான அகதிக்கான அடையாள அட்டைகள் பெறுவது என்ன அவ்வளவு எளிதா என்ன?. வேற்று நிலத்தில் நிகழும் நுண் அரசியலையும், எங்குச் சென்றாலும் அதிகார அரசியலும், லஞ்சமும் கைகோர்த்துக் கிடப்பதையும் மனசாட்சிக்குள் வரும் வழக்கு மன்ற தயாரிப்புக் காட்சிகள் நினைவூட்டுகின்றன. செட்டில் ஆகி விட்ட பிறகு பலருக்குத் தான் தமிழன் என்பதும், உதவிக்காகக் காத்துக்கிடப்பவனும் நம்மட ஆக்கள் தானே எனும் நினைப்பு மட்டும் மீள வருவதேயில்லை என்பது வாழ்க்கை உருவாக்கி வைத்திருக்கும் ஒரு நகை முரன் தானே.

வீட்டை விட்டு விலகி வெகு தூரம் வந்த பிறகு என்ன இருக்கிறது அந்த நிலத்தில் எனும் சிந்தனையும் கூட போராளிகளுக்கு வந்துவிடுகிறது. இதுவே நிலமற்ற ஈழ அரசை வடிவமைக்க ஆசை கொண்டிருந்த மனதின் துவக்கப் புள்ளியோ எனக் கதைஞன் எழுதாத பக்கங்களும் வாசக கண்முன் புரள்கிறது கதைத்தொகுப்பின் சொற்களின் வழியே….. இதுவே அகதிகளின் துயர் வாழ்வைப் பேசிய கதைத்தொகுதியான சமாதானத்தின்  கதைத்தொகுப்பை  தமிழின் மிக முக்கியத் தொகுப்பாகியிருக்கிறது…..

புத்தகம் 2

ஆணுலகின் அகச் சிக்கலையும்,குடும்ப அமைப்பிற்குள் பொருந்திப் போக முடியாது உள்ளுக்குள்ளே பொசுங்கிக் கிடக்கும் மனிதர்களும் மனுஷிகளும் மீதமுள்ள எல்லாக் கதைகளுக்குள்ளும் நிறைந்திருக்கிறார்கள். விசையுறு பந்து எனும் கதை இந்த உலகம் ஒரு மேல்ஷாவனிச உலகாக இருக்கிறது. யாரும் விட்டுத் தருவதால் கிடைப்பதில்லை விடுதலையும், உரிமையும். இதற்குள் என் போன்றோரின் இடத்தை எவரும் எனக்குத் தர வேண்டியதில்லை. யாவற்றையும் நானே உருவாக்கிக் கொள்வேன் என்கிறாள் மதுவந்திகா. பள்ளி நாட்களில் தன்னைத் தனித்துக் காட்டிய கூடைப் பந்துடனே அலைகிறாள். எல்லாம் அவளுக்கு தன் விசையை ஏற்று நடக்கும் அந்த பந்து மட்டுமே. எதிர்ப்படுபவர்கள் எல்லாமே, குறிப்பாக ஆண்கள் எல்லோருமே அவளுக்கு அற்பம் தான். அவளைப் பொறுத்தவரை எல்லாமே புழுதான். ஒரு ஆணை பார்க்கிற போது அவள் காத்திருக்கிறாள் எப்போது இவனுக்குள் உறங்கும் அற்பப் புழு நெளியும் என.அது அப்பாவிற்குள்ளும் நெளிகிறது. அலுவலக மேலாளரிடமும் நெளிகிறது. புழுவாக நெளிந்திடச் சாத்தியமற்ற பந்தோடு பந்தாகிப் போகிறாள் எனக் கதை நடத்துகிறார். இது தனித்திருக்கும் பெண் உலகின் விசித்திரக் கதைப் பகுதி. பெண் உலகை மட்டுமல்ல வஞ்சிக்கப்பட்ட ஆண்களின் கதையை சைக்கிள் கடைச் சாமியும், நகுலனின் இரவும் பேசுகிறது. சமாதானத்தின் கதையும் கூடத் தான் என்னவாக இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை அறிந்திடாத மனுஷனின் கதை தான். தான் பயன்படுத்தப்படுகிறோம் என்பதைக் கடைசிவரை அறிந்து கொள்ளாமல் இறந்து போகிற சமாதானம் எனும் சித்த வைத்தியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இலக்கியமும்,கலைகளும் நுண் அறிதல் கருவிகள்.வாழ்வை,நிலத்தை, மனிதர்களின் அகத்தை, அதற்குள் உறைந்திருக்கும் காழ்ப்பை, கீழ்மையைக் கண்டுணரும் கருவிகள் மட்டுமல்ல…மனதின் வண்ணமயமான நினைவுகளின் வழி அன்பு, கருணை எனும் கல்யாண குணங்களைக் கண்டடையும் வழிமுறையும் அதுவே.அதைக் கைக்கொண்டு ஜேகே எனும் ஈழத்து இளம் படைப்பாளி எழுதிச்சேர்த்திருக்கும் அவரின் முதல் தொகுதி அவருக்குள் இன்னும் சொல்லித் தீர்ப்பதற்குக் கதைகள் நிறைந்திருக்கின்றன என்பதையே நமக்குச் சொல்கிறது.

பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….

ம.மணிமாறன்……முந்தைய தொடர்களை வாசிக்க: 

தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.