Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்



இப்படியாகும் என ஒருநாளும்  நினைத்திருக்க மாட்டோம்.எத்தனை பேச்சு வார்த்தைகள். எவ்வளவு உடன்படிக்கைகள்.

காட்டிக்கொடுப்புகள்., கழுத்தறுப்புகள். உயிர்ப்பலிகள். சகோதரப்படுகொலைகள். பட்டியலிட முடியாத இந்த குரூர அபத்தத்தின் தொடர்ச்சி போர் முடிந்த பிறகும் தொடர்கிறது.போர் தன் ஆயுதம் கொண்டு கீறிய நிலத்தின் காயங்கள் இன்னும் ஆறி  வடுக்களாகிடவில்லை. கண்ணீர் முட்டித் ததும்பிச் சிந்தும் துளிகள் யாவும்  சொற்களாகிற போது, அதனை எதிர்கொள்ள வாசக மனம் தடுமாறுகிறது.போரின் சுழலுக்குள்ளேயே  இருந்தவர்களின் ஆழ்மனதின் தடித்த சுவர்களுக்குள் பதுங்கிக் கிடந்த கதைகள் மெதுவாக வெளியேறுகின்றன.போர் நிலத்தை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்த   நாட்களில் பிறந்தவர்களின் உளவியல் முற்றிலும் தனித்தது.குஞ்சுக்குழந்தையான நாளிலிருந்து போர்க் கவிச்சிக்குள் வாழ நேர்ந்தது எத்தனை துரதிஷ்டமானது. பங்கர் குழிகளுக்குள் பதுங்கிக் கிடந்த நாட்களின் நினைவுகளும். ஷெல்லடியில் சிதைந்த உறவுகளுமாகக் காலத்தை நகர்த்தியது எத்தனை வலியானது என்பதை வெறும் பார்வையாளர்களால் எப்படிப் புரிதலுக்கு உட்படுத்த முடியும்.காலம் கடுகி விரைகிறது.நிர்மூலமான நிலத்தில் இருந்து வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற துடித்தலைகிறது தமிழ்ச்சனம். இனியான ஈழத்தின் கதைகள் பெருமிதத்தையும்,போர் வெற்றிகளையும் மட்டும் பேசிக் கொண்டிருக்க முடியாது.எல்லாவற்றையும் அறிவதும் அறிந்தவற்றை எழுதுவதும் கூட எழுத்துக்காரர்களின் வேலைதான்.நினைவுகள் மெல்ல மெல்ல வரைந்து கீறிய காலக்கோடுகள்தான் சரித்திரம்.காலக் கோடுகளின் இடைவெளிக்குள் பதுங்கியிருக்கும் வரலாற்றின் நூதனமான காட்சிகளை  இளம் எழுத்தாளர்கள் இப்போது எழுதத் துவங்கியிருக்கிறார்கள்.கசப்பும்,துயரமும் மேவிக் கிடக்கும் கதை உலகமாக அவை தன்னை உரித்து வெளிப்படுத்தத் துவங்கியிருக்கின்றன. யதார்த்தன் எனும் எழுத்துக் கலைஞனின் கதைத் தொகுதியான “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” காட்சிப்படுத்துவதன் கதைநிலம் இதுதான்….

ஒற்றை முள் வேலியால் யாவற்றையும் இரண்டு துண்டாகப் பிய்த்துப் போட முடியுமா?. நிலத்தை, வாழ்க்கையை மட்டுமல்ல பசியையும் கூட இருவேறாக பிரித்துப் போட்டுவிட்டன அந்த கருப்பு துருக்கம்பிகள்.மதப்பயங்கர வாதமும், ஆதிக்கமும் என்னவாக தன்னை வெளிப்படுத்தும் என்பதற்கான குறியீடாகக் காலத்திற்குள் உறைந்து நிற்கிறது தமிழ் நிலம்.. முள் கம்பிக்குள் உழலும் வாழ்வின் குரூரத்தை எழுத்தாக்கியது  வெகுசிலர் மட்டுமே .ஒருவிதத்தில் அது போரின் பிற்காலத்தின் காட்சிகள் தானே..யதார்த்தன்அவருடைய கதைத் தொகுப்பின் பலகதைகளுக்குள் முள்ளி வாய்க்காலுக்குப் பிறகான வாழ்வின் கசப்புகளைக் கதைகளாகியிருக்கிறார்.

அவருடைய “இறைச்சி எனும் கதையும்.”வோண்டர் கோன்” எனும் கதையும் கூடாரங்களுக்குள் சிதைவுறும் தமிழ் வாழ்க்கை குறித்த மிக அழுத்தமான பதிவாகியிருக்கிறது.

 “மாத்தளனில் இடுப்பளவு நீரில் இறங்கிய போது நனைந்த ஈரம் இன்னும் பைகளில் கனத்துக் கிடக்கிறது.” கதைக்குள் நகர்கிற ஒற்றைச் சொற்றொடர் கொண்டு காலத்தையே கண்முன் விரிக்க முடிகிறது எழுத்தாளனால். அதற்குக் கலைஞனுக்குத் தேவையாக இருப்பது சார்பற்ற சத்தியமே. யதார்த்தனின் இறைச்சி எனும் கதைக்குள் நகரும் வரிகளே மேற்சொன்னவை..ஓடித்திரிகிற கால்களுக்குள் ஐம்பது வருடத்து வரலாற்றுக் குறிப்புகள் பித்தவெடிப்பு வரிகளாகி கணக்கிறது.. தரையில் கால் பாவும் போதெல்லாம் இதுவா என் இனியான நாட்களின் வாழிடம் எனும் கேள்வி முளைக்கிறது. தகிப்பாறித் தள்ளாடி முகாம் முகாமாக அலைகிறது பெருங்கூட்டம்.வெட்ட வெளிகளில் வெள்ளைக்கேனும் சிவப்பு மூடியுமாக ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகிறது.அதுவே போருக்குப் பிறகான புணர்வாழ்வு நிலையங்களின் அடையாளமாக நிலைத்துவிட்டது.மொத்த நிலத்தையுமே போர் புணர்வாழ்வு நிலையங்களாக உருமாற்றிப் போட்டிருக்கிறது. இறைச்சி எனும் கதை ஒமந்தையிலிருந்து செட்டிக்குளம் முகாமிற்குப் பயணிக்கும் குடும்பத்தின் பாடுகளைப் பேசுகிறது.ஒருவிதத்தில் கதையின் காட்சிகள் போர் நிர்மூலமாக்கிய தமிழ்க்குடும்பங்களின் கதையைத்தான் கடத்துகிறது.பசியிலும்,தாகத்திலும் இற்றுவீழும் மனிதர்களால் நிறைந்திருக்கிறது கூடாரங்கள். சொட்டு நீரின்றி வெள்ளைக் கேன்களை வெறித்துக்கிடக்கிறது மரத்து நிழலில் மக்கள் திரள். அடுத்த வேளைச் சோற்றுக்கு லட்சக்கணக்கில் மக்களை  முகாம்களில் கையேந்தி நிற்க செய்ததைத் தவிரப் போர் தமிழ்ச்சனத்திற்கு தந்த பரிசுதான் என்ன எனும் கேள்வியைக் கடக்க முடியாமல் தடுமாறுகிறது மனம்.

புனர் வாழ்வு மையம் என்றாலும் சரி.புகலிடத்தில் ஆயினும்  கூட பெண் எப்போதும் இச்சையுடன்தான் பார்க்கப்படுகிறார்கள். ஆண் தடித்தனம் எப்போதும் வெறி விழிப்புடனே இருக்கிறது. அதனால்தான் இறைச்சி சோறுக்காக கைகளேந்தி காத்திருக்கும் கூட்டத்தில் இருக்கிற பெண்ணின் மார்புகளைத் தீண்டிச் சீண்டுகிறது ஆண்வக்கிரம். பங்கர் குழிக்குள் கட்டக் கடைசியாகச் சாப்பிட்ட அரிசிச் சாதத்தின் ருசி நாவிலிருந்து திரள்  திரளாக மேலேறுகிறது. காடெங்கும் விரிக்கப்படுகிற சோத்துப் பொட்டலங்களின் வாசம் நாசியில் ஏறுகிற போது வரிசையில் குடும்பத்திற்காகக் கையேந்துகிறாள் பெண்ணொருத்தி.பொட்டணம் தரும் சாக்கில் நீளும் கையின் வக்கிரம் அவளுக்குத் தெரியத்தான் செய்கிறது. பசிக்கு மான அவமானம் பார்க்கத் துப்பில்லை.ஆனாலும் கூட குடலே வெளியேறுவது போலஅவளுக்குஏற்படும் ஓங்கரிப்பு எப்படி நிற்கும். முகாம்களுக்குள் நடந்தேறிய பெண்ணுடல் மீதான வன்மத்தையே இனியான ஈழக் கதைகள் பேசும் அல்லது பேசவேண்டும் என்பதையே இறைச்சியின் வீச்சம் நமக்குச் சொல்கிறது…

போரின் நினைவுகளிலிருந்து மீளவும் முடியாது.போரைத் தன்னிலிருந்து விலக்கவும் முடியாது தடுமாறுகிறது தமிழ்ச்சனம்.தமிழக்கூட்டத்தின் வாழ்க்கைப் பக்கங்களை எழுதியது போர் ஆயுதங்களே. ஆயுததாரிகளையும் போராளிக்குழுக்களையும் அதிகார வன்மம்  நிர்மூலமாக்கி விட்டபிறகு என்ன தான் இருக்கிறது மிச்சம். முள்ளி வாய்க்கால் எனும் சொற்பதம் பேரினவாதக் குரூரத்தின் சாட்சியாகவும், அபத்தக் குறியீடாகவும் நிலைத்துவிட்டது.மக்கள் கூட்டம் புனர் வாழ்வு முகாம்களில் அள்ளித் தட்டப்பட்ட பிறகான நாட்களின் உக்கிரமமான வாழ்க்கைப் பகுதிகள் மிகக் கால தாமதாகத்தான் கதைகளாகியிருக்கின்றன. வோண்டர் கோன் எனும் கதை முகாமின் கதைதான். பசியும்,பண்டங்களின் மீதான கிளர்ச்சியும் ஒருநாளும் தமிழ் வாழ்வை விட்டு அகல்வதேயில்லை.கோன் திருடியதாக மாட்டியவனைப் பிய்த்து எடுக்கிறாள் தாய். கேம்பில், முள்வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறதுகள் களவெடுக்கிறதில படுசூட்டிகை பிடிச்சதுகள் எனும் உரையாடல்களை எதிர்கொள்ளவும்,கடந்து போகவும் தடுமாறும் தாய்க்கிழவியவள்.

கேம்ப் வாழ்க்கையில் மட்டுமல்ல,புகலிடத்திலும் கூட எளியவர்களும்,எல்லாவற்றையும் இழந்தவர்களும் தங்களுக்குள் ஒன்றாகிடுவார்கள் தானே. அதனால்தான் தாயும் மகளுமான தமிழ்க்குடும்பம் சிறுவனை மீட்டுப்போகிறது. அன்பினால் கட்டப்படுகிறது குடும்பங்கள். எதுவுமற்ற இந்த வாழ்க்கையை எப்படியாவது வாழ்வதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும் அவர்களால்.அது மட்டுமல்ல கதை. கோன் எடுத்து களவு சாட்டப்பட்டவனின் தந்தை ஷெல் அடித்துப் பலியானவன். தந்தையையோ, அண்ணனையோ ஷெல் அடிக்குப் பலி தராத குடும்பமே அங்கு இல்லை. போர் சிதைத்த குடும்பங்களின் தொகுதியால் ஆனதே அந்த நிலம்.கதைக்குள் வருகிற தாய் தன் கணவனை பங்கர் குழிக்குள் பலிதந்தவள் தான். ஆனாலும்  அவள் கடைசிவரை நம்பவேயில்லை. மனப்பிறழ்விற்குள்ளாகிக் கிடக்கிறாள். இது தனித்த மனப்பிறழ்வு.எத்தனை விதமான பிறழ்வாளர்களை உருவாக்கியிருக்கிறது போர் எனும் அவஸ்தை கதை வாசிப்பவனைப் புரட்டிப் போடுகிறது.மகளுக்கு மட்டும் தெரிந்த நிஜத்தைக் கதைக்குள் அவள் திறக்கிற போது நாமும்தான் அதிர்ந்து போகிறோம். “என் தாயின் கைகளுக்குள் சுழலும் ஐந்தாறு தாலிக்கொடிகள் எங்கிருந்து வந்தது தெரியுமா.?பங்கர்குழிக்குள்உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் ஆட்களிடமிருந்து களவாடியது.. அந்த மஞ்சள் பிசாசின் மீதான வெறிதான் என் தந்தையை பங்கர்குழிக்குள் வீழ்த்தியது”. வாழ்க்கை எப்படி ஏற்க முடியாத சூழ்ச்சிகளின் தொகுப்பாகியிருக்கிறது என்பதை உணர்த்த போதுமானதாக இருக்கிறது இந்த ஒற்றை நகர்வு.

போர் நகரும் நாட்களில், நிலமெங்கும் இப்படி விசர் பிடித்த மனிதர்களும் மனுஷிகளும் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் ஒற்றை நோக்கம் உயிரைப் பிடித்திருத்தி வைத்திருப்பது மட்டுமே. பரட்டைத் தலையோடும், அழுக்கு சேரட்டும், வாய் முழுக்க தூஷணமுமாக அலைகிற இலங்கைப் பூச்சி என்றழைக்கப்பட்டவனின் கதையும் கூட விசர் பிடித்தலாவதாக ஊரையும்  ஆமியையும் நம்ப வைத்துத் தப்பிப் பிழைத்த மனுஷங்களின் கதைகளில் ஒன்றுதான்.எப்போது தன்னைப் போராளிப் படையினர் பிடித்துப் போவார்கள் எனும் பயத்தைச் சுமந்தே பள்ளிக்குப் போய் வருகின்றனர் யுவனும், யுவதிகளும்.தலையாட்டி காட்டித் தருபவர்களின்களின் விழிப் பார்வைக்குள் நகரும் நிலமாகிக் கிடந்தது நிலம்.அதற்குள்தான் இலங்கைப்பூச்சிகளும்,பிறழ்வின் சூட்சுமத்தைக்கூட உணராத பெட்டைகளும் திரிகின்றனர். இலங்கைப்பூச்சி என்று பெயர் வரக் காரணமே ஒரு ருசிகரம். ருசிகரமற்ற கதைகளால் எப்படிப் பின் நவீனப்பிரதியாகிட முடியும்.அப்போது ஈழத்தில் ஒரு பூச்சி இருந்ததாம்.

அதைத் தரையில் தூக்கிப் போட்டால் வடிவாட்டு இலங்கைத் தீவின் வரைபடத்தை வரையுமாம். நம்ம பையனும் பூச்சியைப் போலத்தான் போர்டுகளில் அச்சு அசலாட்டு பாடசாலை பொட்டைகளுக்கு இலங்கை வரைபடத்தைக் கீறித் தருவான்.இவன் நிஜத்தில் யார் என்பதைக் குறித்து விதவிதமான காட்சிகள் வந்து போகின்றன. ஆமிக்கு வேவு பார்க்கிறானா.போராளிக்குழுவா.இப்பிடியும் இன்னபிறவுமாக அவனைப் பற்றிய துப்புகளையும் கூட கதைக்குள் தூவி வைத்திருக்கிறார் எழுத்தாளர்.இந்த சாதாரண கதையை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்திய இடமும் கதைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.அவன் இலங்கையை வரையும் போது இலங்கை வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கித்தான் நகர்கிறது சிவப்பு வண்ணம் கொண்டு நிறைக்கப்படுகிற வரைபடத்தில் எப்போதும் ஒரு மாகாணம் மட்டும் இடம் பெறாது.ஒன்றுபட்ட இலங்கைக்குள் எனும் அரசியல் சொல்லாடலின் மீது நிகழ்த்தப்படுகிற பகடியா.. விசரன் ஆனாலும் அவனுக்குள் ஊறிக் கிடக்கும் விடுதலையின் குறிப்பா.அவரவருக்கு உரித்தான யோசனைகளில் நீங்கள் மூழ்கிப் போங்கள். நான் அடுத்தடுத்த கதைகளை நோக்கிப் போகிறேன் எனப்பயணித்துக் கொண்டேயிருக்கிறது யதார்த்தனின் கதைமொழி.

Image

மரநாய் எனும் கதைக்குள் வருகிற விசரன் வேறு மாதிரியானவன். அவனுக்கு அம்பத்திபத்து என்கிற நிக்நேம் இருப்பதையே கதை பகடியாக கடத்துகிறது. இவன் ஊருக்குள் நான் இயக்கத்தோட ஆளாக்கும் எனச் சொல்லிக் கொண்டு அலைகிறான்.அப்படியான மனநிலை அப்போது பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்த பலரின் மனநிலையும் கூடத்தான். கதை என்பது காலமும் நிலமும் இயைந்து கிடக்கும் இடமன்றி வேறு எதுவும் இல்லை. ஒருகதையை வாசிக்கிற போது வாசகனுக்குள் அவனுடைய பக்கங்களையும் திறக்கச் செய்யும்.அப்படி எனக்கும் கூட பள்ளிக்கூடத்திற்குள் துள்ளித் திரிந்த நாலு அண்ணன்மார்களின் முகமும், அவர்களுடைய லூட்டிகளும் காட்சிகளாகிக் கடந்தன.

சமகாலக் கதைகளின் பக்கங்களை பாலியலின் உளச்சிக்கல்களை எடுத்துச் சொல்லும் சொற்கள் நிறைத்து விடுகின்றன.சமயத்தில் அது கிளர்ச்சியைக் கடக்க முடியாமல் தடுமாறியும் நின்று விடுகிறது. யதார்த்தனின் மெடூசாவிற்குள் பெண் உடலின் நூதனங்களையும்,அதனின் தனித்த சிக்கல்களைப் பேசிய கதைகளும் இருக்கின்றன. கோழிக்கால் பாட்டியின் கடைசிப் பசுமாடு, தீட்டுத்துணி, மக்ரலினுனின் அறுபதாயிரம் புறாக்கள்,மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் எனும் கதைகள் பேசும் உடல் அரசியலும்,அதன் கலை வெளிப்பாட்டுத் தன்மையும் தமிழ்க் கதைப்புலத்தின் புதிய கதைமுறைமைகள்.

நவீனம் சிதைத்திருக்கும் இந்த வாழ்க்கைக்குள் ஆண்,பெண் உறவுகள் என்னவாகி இருக்கிறது.அதன் உளவியல் சிக்கல்கள் எப்படியெல்லாம் வடிவெடுக்கின்றன.இந்த தனித்த பகுதியைப் பேசிய கதை”கோழிக்கால் பாட்டியின் கடைசிப் பசுமாடு.”ஊர்காலி மாடுகளின் மீது குறியிடும் வழமை அந்நாளில் எல்லா நிலத்திலும் இருந்திருக்கும் போல.மாட்டையும், மனுஷியையும் இரு இணையாக வைத்துக் கொண்டு கதையாடுவது இன்றுவரையிலும் தொடரும் வழமையாக நீடிக்கிறது.தன்னைப் பயன்படுத்துகிறான்.

அதுவரையிலும் காத்திருந்து, எல்லாம் முடிந்த பிறகு,உறவின் எல்லை என. ஆண் மையச்சமூகம் எதனை கட்டி வைத்திருக்கிறதோ, அதுவரையிலும் குழைந்து நெளிந்து கொண்டிருந்த பயல்கள் பிறகு திசைப்பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. அவன்களைப் பொறுத்தவரைப் பெண் உடல் என்பது துய்ப்பிற்கான பண்டம் மட்டுமே துய், தூக்கி எறி என்பதை ஆண்கள் இயல்பைப் போலவே செய்கிறார்கள். அதற்குப் போர்க்காலம்,அமைதிக்காலம் எனும் எந்தக் கால வித்தியாசமும் கிடையாது.கடைசிப் பசுமாடு கதைக்குள் வருகிறவள் தூக்கி எறியப்பட்டவள்தான்.

புறக்கணிப்பின் கைப்பை சுமந்தலைபவளை அப்படியே விட்டுவிடுவதில்லை …சொற்கள் கீறிப்போடும் காயம் ஆறிடுமா?.அவன் ஒருமுறை அல்ல. பலமுறை குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறான்.”USE YOUR FINGER LEAVE ME..” இந்த சொற்றொடர் ஏற்படுத்திய வலியிலிருந்து மீள அவள் என்னதான் செய்ய முடியும்.அழுகலாமா?ஏதோ ஒரு வகையில் மனம் நிரம்பிக் கிடக்கும் ஆற்றாமையை வெளிப்படுத்தினால் போதும்.அதனால்தான் கோமதி எனும் பசுமாட்டைக் காளைக்குத்தான் அனுப்பனும் என்று சினை ஊசி போட வந்த டாக்டரை திருப்பி அனுப்புவதாகக் கதை முடிகிறது.என் உடலுக்கு வேறு எவனும் உத்தரவிட முடியாது. அது நான் என்றாலும் சரி,பசுமாடானாலும் கூடத்தான். இதுவே அவனுக்கும் உலகத்திற்கும் அவள்  சொல்லிச் சென்றது..

முள்வேலி முகாம்களுக்குள் இருந்து சற்றுத்தொலைவில் நடக்கி விளையாட்டுக்களைப் பார்ப்பதைக்கூடச் சகிக்காத மனநிலையோடு காவலுக்கு இருக்கிறது ஆமிப்படை. பெண்உடலுக்கு மட்டுமான தனித்த வலிகளையும் உளச்சிக்கல்களையும் எழுதிய கதைதான் தீட்டுத்துணி. அப்போதெல்லாம் பெற்றோர்கள் இரண்டு விஷயங்களுக்கு வலுவாகப் பயந்து கிடந்தனர். ஒன்று கிப்பிரிடி மற்றொன்று பிள்ளைபிடி. புலிகளுக்கு மட்டுமல்ல,சகல போராளிக்குழுக்களுக்கும் மக்கள் வைத்திருந்த பெயர்களில் ஒன்று பிள்ளைபிடிக்காறர் என்பதுதான். இதனை இப்போது எழுதுவதைப் போல போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எழுத முடியுமா?. யதார்த்தன் தீட்டுத்துணியில் எழுதுவது வேறு ஒரு பகுதியை.முள்வேலியைக் கடக்க முடியாத துயர்நாளில் கூட தீட்டுத்துணி தேவையாகத் தானே இருக்கிறது. பிள்ளை பிடியிலிருந்து அன்றன்று தப்பித்துக் கொள்ள எத்தனை தந்திரங்களையெல்லாம் கைக் கொண்டார்கள் மக்கள் என்பதையும் எழுத்தாளன்தான் கண்டுபிடிப்பான். கருணை குறையாது அவற்றையும் கதையாக்குவான்.

கதைகளுக்கு வாழ்க்கையை உயிர்ப்பிக்கும் வல்லமை இருப்பதை அறிந்தபின் எழுத்தாளன் எழுதிச் செல்லும் கதையின் சொற்கள் துடி கொண்டு அலைகின்றன. சொல்லப்பட்ட கதைகளின் மீது தன்னுடைய புனைவெனும் மாயத்தை நிரப்பி யதார்த்தன் எழுதிச்சேர்த்திருக்கும் இந்த தொகுப்பின் முக்கியமான கதை”மக்ரலினின் அறுபதாயிரம் புறாக்கள்”எனும் கதை.உங்களில் பாவம் செய்யாதவர்கள் எவரோ, அவரே இவள் மீது முதலில் கல் எறியுங்கள் எனும் பைபிளின் கதை விட்டுவைத்த இடைவெளிகளில் புகுந்து புதிய கேள்விகளை முன் வைக்கிறது கதை. ஊர் நடுவிலிருந்து மீட்கப்பட்டு அவருடைய அன்பிற்குரிய சிஷ்யை ஆன மக்லீனாவிற்கு அவர்மீது காதல் பிறப்பது இயற்கையானதில்லையா?.. அவளுக்கு அவர் அளித்த புறாவையே உயிர்த்தெழுந்த நாளில் பலியாக தந்தாளென்பது மிகமுக்கியமான பதிவாகிறது. மக்லீனா தன்னை வேசியென வீதியில் நிறுத்திடப் புருஷன் சொன்ன காரணத்தை ஜீசஸிடம் சொல்லியிருப்பாளா. யதார்த்தனின் மக்லீனா சொல்கிறாள்.”என்னுடைய கூடலின் உச்சத்தில் படுக்கையிலிருந்து கிளம்பிய முனகல் ஒலி அவனுடைய நித்திரையைக் கலைத்துப் போட்டுவிட்டது. உனக்கு முன்னாடியே உடல் உறவில் தேர்ச்சி இருந்திருக்கு. நீ ஒரு வேசை என்கிறான்”. படுக்கையிலும் பெண் பவ்யமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிற ஆண் தடித்தனத்தை ஜுசஸாவது புரிந்திருப்பாரா… பெண் உடலில் புனிதம் தேடும் ஆண்மையை ஆட்கள் காலாதீகாலமாக இருந்திருக்கிறாள். இன்னும் இருப்பார்கள் என்பதைச் சமகாலத்தின் நிகழ்வொன்றில் பொருத்தி கதையாக்குகிறார் யதார்த்தன்.

எல்லா விதமான எழுதுதல் முறைகளையும் கைக்கொண்டு கதை எழுதுவதையே வாசகன் மட்டுமல்ல, எழுத்தாளர்களும் விரும்புகிறார்கள். மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் எனும் இந்த தொகுப்பின் தலைக்கதை புதிய தொனியில் எழுதப்பட்டிருக்கும் தொன்மக்கதை. கதையை எழுதுகிற எழுத்தாளர் பெண் என்பதும். பேராசிரியர், ஆய்வாளர் என்பதைவிடத் தன்னை புனைவெழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெரும் விருப்பம் கொண்டவர். அதிலும் கீழைத்தேயத்துத் தொன்மக் கதைகளைக் கட்டுடைத்து உண்மைக்கு நெருக்கமாகி நகர்வது இன்றைக்கு உலகெங்கும் எழுத்தாளர்களின் விருப்பமாக இருக்கிறது. உலகெங்கும் பெண்களின் தலைமயிரை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதைகள் பற்றிய மற்றொரு வாசிப்பாகவும் கதையைப் படிக்க முடிகிறது. கதைக்குள் பாகிஸ்தான் போன போது பஸ்பயணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது புனைவின் அதீத சாத்தியங்களைப் புரிய போதுமானதாக இருக்கிறது. இந்திய புராணீக கதையெங்கும் கால்வரை கூந்தல் பாவித்திரியும் தேவதைகள், பெண் கடவுள்களைக் குறித்த குறிப்புகளையும் எழுதுங்கப்பா என சக எழுத்தாளர்களை நோக்கி அழைப்பையும் விடுக்கிறது கதை.

கதை இலங்கைக்குள்ளும் தான் பயணிக்கிறது. யம்புசோளப்பட்டினத்தின் மாதகல் நகரில் அகழ்வாய்வுப்பணியில் புத்தரின் தலைமுடியை தோண்டி எடுத்ததாக கட்டப்படும் கதையில் சித்தார்த்தன் வருகிறான். கேள்விகளை முன் வைத்தமையால் படுகொலை செய்யப்பட்ட சித்தார்த்தன் யாரின் குறியீடு? கிப்பி வைத்திருந்தால் பெண்களை இயக்கம் என ஆர்மி பிடித்துப் போன அந்நாளைய அரசியலையும் கதை வாசகனுக்குள் கடத்துகிறது.

யார் கோலியாத்,யார் தாவீது எனும் கேள்வி வழிநெடுக காலம் தோறும் கேட்கப்பட்டு வருகிறது. மன்னிப்பதும், தண்டிப்பதும் எந்தப் புள்ளியில் என்பதை முடிவு செய்வது கொள்கைகளோ, சிந்தனைகளோ அல்ல. முற்றிலும் தனியர்கள் அந்தக் கணத்தில் முடிவு செய்கிறார்கள் என்பதை மிக விரிந்த பதாகையில் வரைந்து பார்த்திருக்கிறார் யதார்த்தன். அது வாசகனிடம் போர் என்பது எதற்காக, தியாகங்கள், பலியிடல்கள் ஆயுதங்களென சகலவற்றையும்  குறித்த விதவிதமான வியாக்கியானங்களை வாசகனுக்குள் கடத்துகிறது. அந்த வகையில் மிகவும் முக்கியமான கதை “கோலியாத்”.

இசைக்குறிப்புகளுக்குள் லயமாகிக் கிடக்கும் ஒழுங்கை கலைத்து அடுக்கி புதிய இசைத் தொகுதியை உருவாக்குவது போல நினைவுகளில் பதிந்திருக்கும் காட்சிகளை கலைத்து அடுக்கி புதியதான கதை ஒன்றைத்  தந்திருக்கிறார். இது டேவிட்டின் கதை மட்டுமல்ல.புதையல் தேடி எடுத்த பொதியை எரித்தவள், எதற்காக எரித்தாள் எனும் கேள்வியை பின் தொடருங்கள் அது உங்களை வரலாற்றிற்குள் அழைத்துச் செல்லும். மண்வெட்டி கொத்தி எடுத்த பொதிக்குள் இருந்தது புதையல் அல்ல.பிறகு?.அவை யாவும் தஸ்தாவேஜ்கள்.சாதாரண ஆவணங்கள் இல்லை அவை என்பதை அவளுக்கும் நமக்கும் ஒரு கையெழுத்து உணர்த்தி விடுகிறது. வே.பிரபாகரன் எனும் அந்தக் கடிதத்தின் கையெழுத்து அவளை அச்சமூட்டுகிறது. அவற்றை எரிக்கிறாள். எரிதழலுக்குத் தின்னக் கொடுப்பதற்கு முன் ஒவ்வொன்றாகப் படிப்பதன் வழி அதனை எல்லோருக்குமானதாக மாற்றி விடுகிறாள்….

Image

டேவிட் இளம் பிராயத்தில் மணிப்புறாவை அடித்து வீழ்த்தும் கனவுடன் வேட்டைக்காரனாகத் திரிந்தவன். கொற்றப்பேல் எனும் வேட்டைக் கருவியோடு அலைந்தவன். அந்த வில்லில் கருஞ்சிட்டுவின் ரத்தத்தைப் பூசினால் குறி தப்பவே தப்பாது என நம்பிக் கிடந்தவன். சர்ச்சில் பாதரைச் சந்தித்துத் திரும்ப, திரும்ப அவனுடைய கையிலிருந்த கொற்றப்பேல் கெவியில் போடப்படுகிறது. அதைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறான். அவனை முறைப்படுத்தியவை கதைகளும்,புத்தகங்களுமே. ஆனாலும் அவன் அப்படியே தொடரவில்லை. எங்கே பிசகு?.

இந்திய அமைதிப்படை மேரி எனும் கர்ப்ப ஸ்திரீயை எட்டி உதைத்து படுகொலை செய்யாமல் இருந்தால் இவன் சேசுசபை பாதிரியாகியிருப்பான். ரத்தத் துணுக்காகச் சிதைந்த சிசுவும்,உயிரற்ற  உடலுமே அவனை புலிப்படை நோக்கி நெட்டித்தள்ளுகிறது. நீங்கள் யாராகப் போகிறீர்கள் என்பதைக் காலமும் நிகழ்வுகளுமே முடிவு செய்கின்றன.

இது ஈழ நாதம் எனும் பத்திரிக்கையில் வந்த கதை.இதற்குத்தான் அன்னை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். பாராட்டிய ஈழநாதம் வெளியிட மறுத்த கதையையும் கூட கதைக்குள் கதையாகக் கட்டித்தருகிறார் எழுத்தாளர்.

கோலியாத்தை நீர்ப்படுகையில் எதிர்கொள்கிறான் தாவீது.அவன் சிங்கள ஆமியன் .போர்க்காலத்தில் வேவுப்புலியிடம் எதிரி சிக்கிய போது  அவனை தப்பிச் செல்ல அனுமதிக்கிறான் வேவுப்புலியான தாவீது. ஏன் அனுமதிக்கிறான் என்பதே கதை.வேவுப்புலியாக இருக்கும் தாவீது நினைத்துக் கொள்கிறான். அயுதங்கள் வன்மத்தையும் சீர்குலைவையுமே நிகழ்த்துகின்றன. வாழ்க்கையும் அனுபவங்களும் மனிதத்தைப் பரிந்துரைக்கிறது. எனவே தாவீது கோலியாத்தாகிட தயங்கவில்லை.

தொகுப்பெங்கும் வாசித்துக் கடக்கும் போது இதுவரையிலும் நமக்கு வழக்கமாகியிருந்த சொற்கள் வேறு ஒரு அர்த்தமுடையதாகி விடுகின்றன…

இன்னும் தொகுப்பிற்குள் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய கதைகள் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றைக் குறித்தும் எழுத வேண்டுமா என்ன?.. ஆனாலும் வாசிப்பிற்குள் பிடிபடுகிறது.

ஆயுங்கள்/லட்சியங்கள்/கொள்கைகள்/போராளிகள்/காட்டிக்கொடுத்தால்/துரோகிகள்/தலையாட்டிகள்/சகோதரப்படுகொலைகள்/

இவையானவற்றிற்கும் ஒற்றை அர்த்தமில்லை……. யாவற்றின் மீதும் பன்மைத்துவ உரையாடலை நிகழ்த்துங்கள் என்பதே எழுத்தாளன் தன் கதைகளின் வழியே முன்வைக்கும் தாக்கீது.

(யாத்திரனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் கதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட வாச்சியம்).

பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….

ம.மணிமாறன்……



முந்தைய தொடர்களை வாசிக்க: 

தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்



தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 5 Comments

5 Comments

  1. அய்.தமிழ்மணி

    மிக நுட்பமாக ஊடுருவியிருக்கிறார் கட்டுரையின் ஆசிரியர்.
    இத்தொடர் மிக முக்கியமானதொரு பாத்திரமாக எதிர்காலத்தின் மறுக்கமுடியாத இடத்தில் இருக்கும்.

    இது போன்ற முயற்சிகளுக்கு புக்டேவுக்கும் எழுத்தாளனுக்கும் வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *