Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimaran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்



எழுத்தில் இதுவரை வந்து சேர்ந்தவையும்,கவனம் பெற்றவையும் மட்டும் தானா ஈழ நிலத்தின் கதையுலகம். முள்ளி வாய்க்கால் பெரும் துயரம், 83 இனக்கலவரம், யாழ் நூலக எரிப்பு, அமைதிப்படை நிகழ்த்திய வன்முறைகளின் குருரம். சிங்கள காடையர்களின் அத்துமீறல்கள். புத்தனின் பெயரால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரச பயங்கரவாதம். வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடந்தேறும் சிங்களக் குடியேற்றம். போரின் உக்கிர காட்சிகள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அது நிகழ்த்திய ரத்தப்பலிகள். காட்டிக்கொடுப்புகள். இன்றுவரையிலும் நிற்காத வெள்ளை வேன்களின் குரூர பயணங்கள். இப்படி அடுக்கித் தொடரும் துர் சம்பவங்கள் மட்டும் தானா வரலாறு.

 

Image

எழுதப்பட்ட வரலாறுகளின் இருள் பகுதிகளுக்குள் பயணிப்பதே எழுத்தாளர்களின் வேலை. எப்போதும்  இரண்டு வரிகளுக்கிடையே  பதுங்கியிருக்கும் விடுபடல்களைக் கண்டடைவதையும், அவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முயற்சிப்பதையும் கலைஞர்கள் உலகெங்கும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஈழப் போர் இலக்கியங்களைத் தொடர்ச்சியாக வாசிக்கிற எவருக்கும் ஒரு எளிய உண்மை புலப்படவே செய்யும். தலைமன்னாரைத் தாண்டியும் நம்குரல் ஒலிக்க வேண்டும் என உரத்து முழங்குபவர்கள் பலரும் ஏன் மண்டபம் முகாம்களைக் கண்கொண்டு பார்ப்பதில்லை எனும் கேள்வி நம் காலத்தின் கேள்வியாக நீடித்துக் கிடக்கிறது. புலம் பெயர்தலின் வலி இங்கே மிகவும்  சன்னமான குரலில் தான் சொல்லப் பட்டிருக்கிறது.அவை யாவும் கூட பிரான்ஸ், லண்டன் என ஐரோப்பியக் குடியேற்றம் குறித்தான வாழ்வுகளும் வலிகளுமே .. தொப்புள் கொடி உறவுகள் என உணர்ச்சி மிகுதியில் கொந்தளிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் பேசும் பலரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட அல்லது கள்ள மௌனமாகக் கடந்து போகிற வரலாற்று நிகழ்வை இப்போதாவது பேசத் தானே வேண்டும். அகல்வாரையே தாங்கும் நிலம் எனும் சொல்லாடல் பொய்யாகிப் போன பிறகு, நிலத்தைவிட்டுப் பிரிவதும், இது நம் நிலம்தான் என நம்பி வந்து கால் ஊன்றி குடியமர்வதும் வேறு எங்கையும் விட தமிழகத்து மண்ணே நம்மிடம் என வந்து சேர்ந்தவர்களின் தீராத பெருந்துயரத்தை எவர் எழுதுவர். அதிலும் ஒற்றைச் செங்கல் வரிசையில் கட்டப்பட்ட கோழிக்கூடே போலான முகாமிடத்து துயரங்கள் ஏன் இதுநாள் வரையிலும் காத்திரமாக எழுதப்படவில்லை. அகதிமுகாம்களுக்குள் உலவித்திரியும் யுவன்களுக்கு காதல் முளைக்காதா? எத்தனை காலத்திற்குத்தான் இந்திய அரசும், தமிழகக் காவல்துறையும் சட்டவிரோத குடியேறிகளாகவே தமிழ் மக்களை  நடத்தப் போகிறது.

Image

முப்பது வருடங்களுக்கு மேலான பிறகும் கூட இது தன் நிலம்தான் என நினைக்கவோ, ஏற்கவோ இயலாத அகதி முகாம் வாழ்க்கையின் உளச்சிக்கல்கள் புனைவாக்கப் படாமலே இருப்பதின் அரசியல் என்ன? எனும் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகளின் விளைச்சலே. அ.சி.விஜிதரன் எழுதியிருக்கும் ஏதிலி எனும் பெரும் படைப்பு. எழுதுகிறவனும், வாசிக்கிறவனும் சேர்ந்து தன் வசதிக்காக உருவாக்கி வைத்திருப்பவையே இலக்கிய வகைமைகள்.இது சிறுகதை, இது நாவல் எனப் பெயரிட்டு வைத்துக் கொள்கிறோம்.சிலசமயங்களில் மீறலும் கூட அழகாகி விடுவதுண்டு. ஐம்பது பக்கத்தைக் கடந்தும் நீளும் சிறுகதைகளும் தமிழ் இலக்கியத்தில்  உண்டு. பித்தனின் செல்லம்மாவும்,துண்பக்கேணியும் நீண்ட சிறுகதைகள். கிருஷ்ணன் நம்பியின் நீலக்கடல் அறுபது பக்கச் சிறுகதை.

ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கும் நாளை மற்றுமொரு நாளேவும் கூட அறுபதுக்கும் குறைவான பக்கங்களில் எழுதப்பட்ட நாவல்கள். இப்படியான மீறல்களைத் தொடர்ந்து தமிழ் இலக்கியப் புலத்தில் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. மீறல்கள் பேரழகுகள் என்பதற்கான இலக்கிய சாட்சியங்களின் தொடர்ச்சியாக ஏதிலியையும் இனைத்துக் கொள்ளலாம்.வாசிக்கும் வாசகனுக்கு வருவதைப் போலவே எழுத்தாளனுக்கும் ஐயம் துளிர்விடவே விஜி ஏதிலியை சிறுகதைத் தொகுப்பென்றோ நாவல் என்றோ வகைப் படுத்தவில்லை. புனைவு எனப் பொருத்தமாகப் பெயரிடுகிறார். ஏதிலி காட்டும் அகதிகள் முகாம் வாழ்க்கை, மிகவும் குறிப்பாகத் தமிழகத்து அகதி முகாம்களின் வாழ்க்கை காட்சிகள் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான பதிவுகள். பதினாலு கதைகளுக்குள்ளும் நிரல்படுத்தப்படுவது முகாமே. தனித்தனியே வாசிக்கிற போது சிறுகதைகளாகத் தோற்றம் கொள்கிறது.சேர்த்து யோசிக்கிற போது முகாம் எனும் நாவலாகவும் வடிவம் கொள்கிறது…. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சம்பவங்களாக காட்சிப்படும் கதைகளை அகதிமுகாம் எனும் துயரக் கயிறு கொண்டு கட்டித் தந்திருக்கிறார் விஜிதரன்… புனைவெனும் மாயம் அதீத சாத்தியங்களை தன்னகத்தே கொண்டது என்பது நிஜம் தான்.

    ——– ————-   ————   ————–

 ” டேய் மச்சான் நீ இதை எழுதனும் டா” என் கதையை எழுதனும் டா… ஆனா பேர் வேண்டாம்…ஆனா நீ எழுதனும்”…இப்படி எழுத்தாளனோடு பேசிக் கொண்டேயிருப்பது ஏழு வயதில் அகதிகள் முகாமிற்குள் வாழ்க்கையைத் தத்தம் செய்த அவனின் நண்பன். எல்லாவற்றையும் சொல்கிறான். குடித்தே குடல் வெந்து சாகக் கிடக்கும் தன் வாழ்வை. ஊரில், முகாமில் புறக்கணிப்புக்கு உள்ளாகி  இற்றுக் கிடக்கும் வாழ்வை. நல்ல தகப்பனாகவோ, நல்ல கணவனாகவோ வாழமுடியாத துயரத்தின் நாட்களைச் சொல்லாக்கித் தருகிறான்.இது ஒன்றும் அவனுடைய வாழ்வு மட்டுமல்ல. தமிழகத்தின் ஊர்களின் கடைக்கோடியில் ஒதுங்கிக் கிடக்கும் முகாம் எனும் துயர நிழலின் கதை தான்.

Image

உடனே எழுதிட முடியுமா? எழுத்தென்ன சட்டென வந்தமர்ந்திடுமா? இவனும் விடாமல்  எழுதுகிறான். எழுதிய யாவற்றையும் மறுநொடியிலேயே அடிக்கிறான்…திரும்ப எழுதுகிறான். அடிக்கிறான். அடித்துத் திருத்தி ஏதோ கிறுக்கல் போலாகி விடுகிறது.நைந்து இற்றுப்போன வாழ்க்கை கிறுக்கலாகத் தானே வந்து  முடியும்.  அடிக்கிறான்.எழுதுகிறான்.  வெகு தூரத்தில்” எழுதுடா மாப்பிள்ளை. எழுதாம விட்றாத. எழுதிரு”எனும் குரலும் இவனையும் எழுத்தையும் விடாமல் துரத்துகிறது. அவனுக்கு நன்றாக தெரிந்த முகம் தான். எழுத்தாளன் எழுதத் துவங்கிய உடனே விதவிதமான முகங்கள் முன்பாக வரத்துவங்குகிறது. காண்பது ஒற்றை முகம் இல்லை.பல்வேறு முகங்கள். ஆனால் யாவும் எழுத்தாளனின் காட்சி  எல்லைக்குள் கடப்பவையே.வேறு வழியில்லை அவனுக்கு எழுதி, எழுதி மன அவசத்தை கடந்து போகும் வரமோ அல்லது சாபமோ பெற்ற எழுத்தாளனுக்கு எழுதிக்கடப்பதைத் தவிர வேறு எந்த சாத்தியமும் இல்லை.எப்படியோ எழுதித் தொலைப்போம் ஏதாவது ஒரு முடிவு வேனுமில்ல…முடிவும் இல்லாத விடிவும் இல்லாத இந்த வாழ்க்கையிலிருந்து அவன் முகமும், அவனைப் போலவேயான பல்வேறு முகங்களும் தோன்றுகின்றன. ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாகக் கதைகளை அடுக்குகின்றன… எல்லாம் சரி.முடிவுதான் என்ன?. முடிவைச் சொல்லுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தான் எழுத்தாளன்..சட்டென முடிவை எட்ட முடியாத பெருந்துயர்களின் கதையை என்னதான் செய்வது?. எழுதி ஆற்றிக் கொள்வோம் என எடுத்த முடிவே ஏதிலிகளின் கதைகள்..

எங்கிருந்து துவங்கியது இந்த வாழ்க்கைப் பாடுகள். தன்னுடைய நிலத்தில் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குள் போரும் ஆயுதங்களும் புக எல்லாம் தலைகீழாகிப் போனது.நிலம் உயிர்களைத் தாங்குவதுதான் வழக்கம்.அதுதான் உயிர்களைத் தழைத்திருக்க வைக்கும். ஆனால் அங்கு நிலத்தை மனதில் தாங்கி அவர்கள் நடந்தார்கள். மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட உயிர்கள் இறந்தவைக்கு சமம். உயிரைப் பிடித்து வைத்திட நடுக்கடலில், குளிர் இரவில் யாவற்றையும் விட்டுவிட்டு ஏதுமற்றவர்களாக தரையிறங்கிய கால்களை இந்த நிலம் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் என்றே நம்பி இறங்கினார்கள்.நிலம் விட்டு அகல்வதும் நிகழ்ந்த  பயணத்தின் திக்கு எதுவெனத் தெரியாத நிச்சயமின்மையும் , கடைசிவரை ஈழத்தமிழர்களின் வாழ்வின் பகுதியாகவே ஒட்டிக் கொள்கிறது. வந்திறங்கிய முதல்நாளிலேயே புரிந்து விடுகிறது…வந்து இறங்குகிற யாவரின் மீதும் சந்தேகத்தின் நிழல் கலையாமல் படிந்தே கிடக்கிறது.அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன வழி.பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும். எந்த நிச்சயமுமற்ற இந்த வாழ்க்கையின் தனித்த ஒரே ஆறுதல் வந்து இறங்கியிருக்கும் இந்த நிலமும் நம்முடையதைப் போலத்தான் என்ற எண்ணம் தான். ஒருவிதத்தில் இதுவும் கூட மிகச்சரிதான். ஈழத்தில் உடலின் பாகங்கள் துண்டிக்கப்பட்டவர்களை மிலிட்டரியும் போராளிக் குழுக்களும் எப்படி அணுகினார்களோ அப்படித்தான் இங்கும்அனுகுகிறார்கள்.. நீ எந்த போராளிக்குழு. உன்னை எப்படி முகாமில் சேர்ப்பது எனும் கேள்வியைத்தான்  கேம்பின் பதிவு அலுவலகத்திலும் கேட்க துவங்குகிறார்கள். பிறகு அந்தக் கேள்வியின் சுவடு முதுகோடு முதுகாக அவனுடனோ அல்லது அவளுடனோ ஒட்டிக் கொள்கிறது. இது ஒன்றும் புதிதில்லையே எனக் கடப்பவர்கள்  அதைவிட முக்கியமான கேள்வி ஒன்றையும்  எதிர்கொள்கிறார்கள். இந்தக் கதையில் வரும் அமுதாவும் எதிர்கொள்கிறாள்.

Image

எந்த கேள்வியால் தன் சொந்த நிலத்தில் அவமானப்பட்டுக் கிடந்தாளோ அதே கேள்வி இங்கும் கேட்கப்படுகிறது.நீ என்ன சாதி?. கடல் கடந்து வந்த பிறகும் அழிய மறுக்கும் இந்த அடையாளத்தைத் தொலைத்திடும் வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள் தமிழர்கள். சட்டென அவள் கண்முன் கடைசிச் சொத்தாக இருந்த தேய்ப்பு வண்டியும்.வெளுத்த துணி மூட்டைகளும் பூதாகரமாகத் தோன்றி நிற்கின்றன. அவள் தடுமாறவில்லை. நாங்களா வெள்ளாளர் சாதி என்கிறாள். கேம்பின் பதிவு அதிகாரி சிரிக்கிறான். அதெப்படி எல்லோரும் சொல்லி வைத்தாற் போல வெள்ளாளர் என்கிறார்கள். அவனுக்குத் தெரியும்.அவனுக்குத் தெரியும் என்பது சொல்பவர்களுக்கும் தெரியும். பிறகெப்படி. .பதிலற்ற பலகேள்விகளை ஏளனச் சிரிப்பால் கடந்து செல்லும் வித்தை கற்றவன் மனிதன். இங்கு வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என நம்பி கால் பாவிய நிலத்தில் உயிர் தரித்திருக்க எத்தனை அவமானங்கள், எத்தனை போராட்டங்கள். அத்தனையும் என்றாவது விடியும் என்று நம்பியா தொடர்கிறது வாழ்க்கை…. போர் முடிந்த பிறகும் எது அகதி முகாம்களில் ஏதிலிகளை பிடித்து வைத்திருக்கிறது. கண்ணீர் முட்டித் தெறிக்கும் இந்தக் கேள்விகள் யாவும் விடைகளற்ற கேள்விகளே…..

போர்க் காலத்திலும் சரி,சமாதான காலம் இதுவென பலரும் நம்பிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி புலம் பெயர்தல் நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது. கையில் காசு வைத்திருப்பவர்கள் ஐரோப்பியக் கண்டத்திற்குப் புலம் பெயர, ஒடுக்கப்பட்டுக் கிடந்தோரும் உழைப்பாளிகளும் எதுவும் அற்றவர்களாக இந்தியா வந்திறங்கினர்.முகாமின் வீடுகளைப் பற்றி எழுதப் பெரிதாக ஒன்றுமில்லை. அவை வீடுகளே இல்லை. ஒற்றைச் செங்கல் வரிசை வைத்துக் கட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்துதான் என்றாவது ஒருநாள் விடிந்துவிடும் எனும் நம்பிக்கையில் அலைந்து கொண்டும் அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள் தமிழர்கள். இந்த வாழ்க்கைக்குள் வந்து சேர்கிற காதலையும், அது முகாம் வாசிகளால் எதிர்கொள்ளப்படும் விதத்தையும் நுட்பமாகப் பதிவு செய்கிறது புனைவு.சொல்லி வைத்தாற் போல எல்லாக் காதலுக்குள்ளும் சாதி அடையாளம் தேடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்து வீரச்சமர் புரிகிறோம். சிங்கள அதிகாரத்தை நிச்சயம் வீழ்த்துவோம். மாவீரர்களின் தியாகங்கள் வீணாகாது. இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே தமிழர்கள் அவரவர் சாதிக் காரர்களாகவும் தான் இருக்கிறார்கள். புனைவிற்குள் வரும் காதல் யாவும் தமிழௌ வாழ்க்கையைப் போலவே சாதிய வெட்டுக்கல்லில் தான் பலியிடப்படுகிறது. பலியாடுகளாக எப்போதும் வறியவர்களும், ஒடுக்கப்பட்டோரும் இருப்பது விஞ்ஞான விதியாகிடும் போல.

Image

அ.சி.விஜிதரன்

முகாம் எனும் கையகல நிலத்தின் வட்டச் சுழற்சிக்குள்ளேயே பெண்களின் வாழ்க்கை முழுவதும் அமைந்து விடுவது எத்தனை குரூரமானது. தமிழக அகதி முகாம்களிலேயே பிறந்து, வளர்ந்து, பிறகு அங்கேயே ஒரு கட்டிடத் தொழிலாளியோ அல்லது பெயிண்ட் அடிப்பவரையோ திருமணம் செய்து கொள்வது மட்டும்தான் பெண்களுக்குச்  சாத்தியமாகி இருக்கிறது. இந்த சக்கர வாட்டச் சுழற்சியின் கதைகள் தமிழ்ப் புனைவுப் பரப்பின் எந்த புள்ளியிலும் தட்டுப்படவேயில்லை.. புறக்கணிக்கப்பட்டவர்களின் பாடுகளைப் பேசாத கதையுலகம் எப்படி இலக்கியப் புலமாகும். புனைவிற்குள் தக்கி முக்கி பட்டதாரியான ஒருவன் முகாமின் கல்விச்  சூழலைக் குறித்துக் கணக்கெடுக்கிறான். பள்ளிக்கூடத்தைத் தாண்ட முடியாமல் சாந்துச் சட்டியை சுமந்தலையும் யுவன்களின் முகமும், பிளாஸ்டிக் வாளியை தூக்கி தண்ணீர் பிடித்தலையும் பெண்களின் முகமும் வரிசையாக வந்து கொண்டேயிருக்கிறது.. நிலத்தை இழந்தவன் அகதிதான். அது கூலி வாழ்க்கையைத்தான் தரும். அகதிகள் நல்ல கூலிகள்.இன்று கூலி உருவாக்கத்தின் தத்துவம் இதுதான். அது சொந்த நாட்டிலிருந்து அயல்நாட்டிற்கு வந்தவர்களாக இருந்தாலும் சரி,சொந்த நாட்டில் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி நியதி ஒன்றுதான். இவனுக்கு முகாம்கள், சேரிகள், தெருவோர வாசிகள் என யார் யாரோ நினைவில் வந்தார்கள்…. அடிப்படையில் தமிழக கிராமப்புற சேரிகளுக்கும் அகதிகள் முகாம்களுக்கும் இருக்கும் ஒரே போலான தன்மை குறித்தும். அவை உருவாகௌகும் உளவியல் குறித்தும் நிச்சயம் ஒரு சமுக ஆய்வை நடத்த வேண்டும்.

புனைவிற்குள் பெயிண்ட் அடித்துத் திரும்புகிற முன்னாள் போராளியைத் தடுத்து நிறுத்துகிறது போலிஸ். சக போராளிக் குழுக்களை, சிங்கள ராணுவப் படையை இந்தியன் ஆர்மியை களத்தில் எதிர்கொண்டு நின்றவன். பெயிண்ட் டப்பாவோடு லோக்கல் போலிஸை எதிர்கொள்ள முடியாது நிலைகுலைகிறான். வார்த்தைகள் அற்ற அவனின்  காட்சி சித்திரம் நமக்கு நித்திரையைக் குலைக்கிறது. ஏன் தடுமாறி நிற்கிறான் தெரியுமா? அவன் அகதி. .முகாம்காரன்… அகதி  ஆறுமணிக்கு மேல் பொதுவெளியில் நடமாட முடியாது என்பது எழுதப்படாத விதி. யாராவது அரசியல் தலைவரின் வருகை நிகழும் போது  முகாம் எனும் திறந்த வெளிச் சிறைச் சாலைக்குள் அடைந்து கிடக்க வேண்டும். மங்கிய இரவில் இந்திய அரசு அதிகாரிகள் கேம்ப் சூழலுக்குள் நிகழ்த்தும் வன்முறைகள் எழுதிக் கடக்க முடியா வலி நிறைந்தவை.. இயல்பான மனிதர்கள் அல்ல நீங்கள். அண்டிப் பிழைக்க வந்த அகதிகள் என்பதை அவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் நினைவூட்டுகிறது சூழல்.

Image

படைப்பு தன்னைத் தனித்து வெளிப்படுத்தும் போது தான் அதன் மீதான வாசக கவனம் குவியும்.இந்த படைப்பிற்குள் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள். எப்படி அகதிகளுக்கு நடுவே அவை அரசியல் செய்கின்றன.அதற்குள் இயங்கும் அதிகாரம் ,பணம்  ஆகியவை சிதைத்த வாழ்வு என நம்முன் புனைவிற்குள் நகரும் காட்சிகள் விரிவான கேள்விகளை எழுப்புகின்றன.தொண்டு நிறுவனங்கள் ஒரு கொடு நிழலைப் போலவே அவர்களுடனே அலைகிறது. பள்ளி மாணவர்களுக்கு இடையே அரசுத் தேர்விற்குப் பயிற்சிகள் தருவதாகக்  காட்டிக் கொள்கிறது. இவற்றின் குரூர முகம் வெளிப்படும் இடம் கடைசி யுத்தத்திற்குப் பிறகான காட்சிப் பதிவுகள்தான். அகதிமுகாமை காலி செய்தால் போதும்.தேவையற்ற இந்த பெரும் சுமையை எங்காவது நகர்த்தி இறக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்றே இந்திய அரசதிகாரம் நினைக்கிறது.நீண்ட நெடுங்காலமாக ஈழத்தில் தமிழ் அரசியல் கட்சிகளில் இயங்கியவர்கள் புதிய வடிவெடுத்தனர். அவர்களுக்குத் தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியேற்றம் செய்திட வேண்டும்.இது ஒன்றும் பேரன்பின் விளைச்சலில் நிழ்ந்தவை அல்ல. அதற்குப் பின் உள்ள வலுவான பணத்தின் செயல்பாடே அதற்குக் காரணம் என்பதைப் படைப்பு வலுவான ஆதாரங்களோடு முன் வைக்கிறது.இராஜபக்சே மன்மோகனோடு கதைச்சாச்சுஈனி கப்பல் போட வேண்டியதுதான் மிச்சம்.” கண் விழித்த துயரக் கனவுக்காக மீண்டும் தூங்குவது போல் இருந்தது.அதிலும் இந்தியாவிலே பிறந்து வளர்ந்து தினக்கூலிகளாக உருமாறிப் போன தலைமுறைக்கு பெரும் சிக்கலாக இருந்தது… இங்காவது சாப்பாட்டிற்கு வேலையும்,படுத்துறங்க கையகல இடமும் இருக்கிறது. இலங்கையில் என்ன இருக்கிறது.அது நம் தாய் வீடு என்பது உணர்ச்சி மிகுதியில் சொல்லப்படும் வார்த்தைகள் அவ்வளவே எனும் மனநிலை பலருக்கு  இன்று வரையிலும் கூட இருந்து வருகிறது.

தமிழக அகதிகளிடம் வேலை செய்யும் தொண்டுப் பார்ட்டிகள் ஏன் ஐரோப்பாவில் புலம் பெயர்ந்தோரிடம் மீள் குடியேற்றம் பற்றிய பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை.பணத்திற்கு ஐரோப்பா. சர்வதேச அரசியல் சூழலைச் சரிக்கட்ட தமிழ்நாட்டு அகதிகளா என படைப்பு முன் வைக்கும் கேள்வி மிகவும் முக்கியமானது. சமகாலத்தை எழுதும் போது ஏற்படும் எல்லா சவால்களையும் மிக எளிமையாக எதிர்கொள்ள எழுத்தாளனுக்கு அவரிடம் சூல் கொண்டிருக்கும் உண்மை போதுமானதாக இருக்கிறது. புத்தனின் பேரன்கள்,தெற்கு மக்களை வெற்றிக் களிப்பில் ஆழ்த்திவிட்டு,நாட்டின் மிச்ச சொச்சத்தை மொத்த குடும்பமாகப் பிரித்து எடுப்பதில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். காந்தியின் வாரிசுகளும், லிங்கனின் சொந்தங்களும், மாவோவின் தூசுகளும் தங்கள் தங்கள் பங்குக்கு என்ன கிடைக்கும் என வாயில் எச்சில் ஊறிக் கிடக்கின்றனர். அதுவரை உலகமெங்கும் இயக்கத்தின் முகவர்களாக இருந்தவர்கள், தங்கள் தங்கள் கைகளில் இருக்கும் சொத்துக்களைத் தனதாக்கும் வேலைகளை மிகத் தீவிரமாகச் செய்து கொண்டிருந்தனர். உணர்ச்சி மிகுதியால் சொல்லப்படும் தொப்புள்கொடி உறவுகள் எனும் சொற்பதம் நம்மைப்பார்த்து நக்கலாகச் சிரிப்பதை நான் ஏதிலியை வாசிக்கும் நொடிதோறும் உணர்ந்து கொண்டே இருந்தேன். ஒரு தேர்ந்த இலக்கியம் வாசகன் அறிய வேண்டியதைத்ருவதும், அதுவரையிலும் இதுதான்  நிஜம் என நம்பிக் கொண்டிருந்தவற்றின் மீதான சமரசம் அற்ற கேள்விகளையும் எழுப்ப வேண்டும். அப்படியான வலுவான தர்க்கங்கள் படைப்பெங்கும் நிகழ்த்தப்படுகிறது.

Image

ஆறுமுக நாவலரைக் கனவிற்குள் அழைத்து வந்து இன்னும் எத்தனை நாளைக்கு நீங்களும் உங்களின் வாரிசுகளும் நம்மட பண்பாடு கலாச்சாரம் எனப் பிதற்றிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் என்பதும்.மொத்த தமிழச் சனத்தையும் யாழ்ப்பாணம் தாண்டி யோசிக்க முடியாத சூழலில் நிறுத்தி வைக்கும் குயுக்தியையும் படைப்பு கட்டுடைத்துச் சொல்கிறது. சர்வதேச சமூகத்தை நிர்ப்பந்திக்கிறோம் எனச் சொல்லி இன்றும் நடந்து கொண்டேயிருக்கும் போலியான உண்ணாவிரதப் போராட்டங்களையும் படைப்பு கேள்விகளால் துளைக்கிறது. நாம் தமிழர்களின் சத்தற்ற முரட்டு வார்த்தைகளை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் கேட்டுக் கொண்டே இருப்பது எனும் எரிச்சலும் கோபமும் ஆற்றாமையும் வெளிப்படும் இடங்கள்  வழமையைப் போலத் தோற்றம் பெற்றாலும் மிகவும் முக்கியமானவை.

மொத்த படைப்பையும் படித்து முடித்த பிறகு நான் எனக்கருகில் இருக்கும் குல்லூர்ச்சந்தை அகதிகள் முகாம் நோக்கிப் போனேன். தடுப்பு அணையின் மேட்டிலிருந்து தூரத்தில் சிந்திக் கிடக்கும் குடிசைகளை உற்றுக் கவனித்தேன்… வாழத்தகுதியற்ற இடத்தில் பெரும் கூட்டத்தைக் கொட்டி வைத்து விட்டு தொப்புள் கொடி என வசனம் பேசிக் கொண்டிருக்கும் பலரின் முகமும் என் முன்னே நகர்ந்தது… நகர முடியாமல் திகைத்தபடி மானுட அறமும் எந்த விழுமியங்களும் அற்ற பெருங்கூட்டமும், லாயகௌகற்ற சர்வதேச அகதிகள் சட்டமும் கடுகி ஒழியட்டும் எனும் பெருங்குரலெடுத்து அரற்றித் திரும்புகிறேன். வழிநெடுக விஜியையும் ஏதிலிகளையும் கண்ணீருடன் மனதிற்குள் கடத்துகிறேன்….

(எழுத்தாளர். விஜிதரனின் ஏதிலி எனும் பெரும் படைப்பை முன் வைத்து எழுதப்பட்ட வாச்சியம்.)……

 

பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….

ம.மணிமாறன்……

விருதுநகர்.



முந்தைய தொடர்களை வாசிக்க: 

தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்



தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 11 Comments

11 Comments

  1. சிராஜுதீன்

    ஈழத்தின் மநு ஆறுமுக நாவலர் என்பது மிகையான கூற்றல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *