நிலம்தான் மனிதர்களைத் தாங்கிப் பிடிக்கும் ஒரே ஆதாரம்.. நிலத்தின் மீதான பெரும் விருப்பத்தை ஒருநாளும் மனிதர்கள் இழப்பதில்லை. மனிதன் உயிருடன் விழித்து விழும் நிலம் அவனுக்குள் அது குறித்த பெரும் மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.சாதியத் துவேஷம் பிடுங்கித் திங்கும் ஊரில் எப்படி வாழ என எவரும் நினைப்பதில்லை… இதுபோலவும், இன்ன , பிறவுமாக வன்மம் நிறைந்திருக்கும் வாழவே லாயக்கற்ற குக்கிராமங்களை விட்டு வெளியேற மறுத்து, அங்கேயே உழல்கிற மனிதர்களின் மனநிலையிலிருந்து நாம் இதை புரிந்து கொள்ளலாம். மண்ணை விட்டு எவரையும் அகற்றுவது அல்லது அகல்வதொன்றும் அவ்வளவு எளிதில்லை. நேற்றுவரையிலும் இது நம் இடம்தான் என நம்பியிருந்த இடம் தன் கால்களுக்கு இடையிலேயே கரைந்து வெளியேறுவது எவ்வளவு துரதிஷ்டம்.. சொந்த நிலமில்லை. எது நம் ஊர் எனும் கச்சிதமான பதிலும் கிடைக்கவில்லை. உறவுகள் என நம்பியிருந்தவர்களை விட்டு விலகி வெகுதூரம் போக நிர்ப்பந்திக்கும் காலத்தைச் சபித்தபடி நகர்கிறது கூட்டம். அலைச்சல், அலைச்சல் தீராத அலைச்சல்.. இந்த அலைச்சலின் பெருந்துயரத்தை கதைகளின் ஊடாக கடத்தும் படைப்பே விதி.
விரும்பத்தகாத மாற்றங்கள், இழிவுகள். துயரங்கள் என வஞ்சிக்கப்பட்ட வாழ்வினைப் பேசும் நாவல் விதி. ஈழப் படைப்பிலக்கியத்தில் தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து இன்றுவரையிலும் முக்கியமான பங்களிப்பினை செய்து கொண்டிருக்கும் தேவகாந்தனின் படைப்பே விதி. இது என்பதுகளின் கதை. அவருடைய போர்ச்சூழலை பின்புலமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கலிங்கு எனும் நாவலைக் குறித்தும் இந்த தொடரில் எழுத வேண்டும்.
விதியின் படைப்புலகம் என்பதுகளின் பதிவிட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு குடும்பத்தின் அலைச்சலைப் பேசுவதாகக் கட்டித்தரப்பட்டிருக்கும் இந்தப் படைப்பு, நிஜத்தில் பேசுவது புலம் பெயர்ந்து ஈழத்தில் கையறு நிலையிலிருக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை. இதுவரையிலான ஈழப் படைப்பாளிகளின் பார்வை எல்லைக்குள் சிக்காமல் தப்பிச் சென்ற கதையிது.மஸ்கெலியா எனும் மலையகத்திலிருந்து பெரும் கூட்டம் ஏன் சமதளம் நோக்கி வந்தது.சிங்கள அரச பயங்கரவாதம் முளை விடத்துவங்கிய என்பத்தி ஒன்றாம் வருடக் கலவரம் என்னதான் நிகழ்த்தியது தமிழர்களின் வாழ்வில். மன்னார், வவுனியா, மட்டக்களப்பு என நிலம் தீய்ந்த பகுதிகளிலிருந்து பெருவாரியான தமிழ்மக்கள் குடியமர்த்தப்பட்ட இடம்தான் காந்தீயம்.காந்தீயம் என்பது உருவாக்கப்பட்ட செயற்கையான சின்ன வதிவிடம். காந்தீயத்தை உருவாக்குவதில் அப்போது இலங்கையிலிருந்த அரசியல் கட்சிகளுக்குத் தனித்த பங்கிருக்கிறது. கூவி கூவி அரசாங்கம் எல்லாம் முடிந்து விட்டது.மக்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்கிவிட்டோம் என அழைப்பது ஒவ்வொரு கலவரத்தின் பின்னும் நடக்கிறது.சிங்கள அரசதிகாரத்தின் விசுவாச படைகளாக தமிழ் அரசியல் கட்சிகளும், தன்னார்வ குழுக்களும் இருந்து வருகின்றன.இது இன்றுவரையிலும் கூட தொடர்கிறது.இந்த நுன் அரசியலை நாவல் பேசுகிறது.
திருவையாறு இரவல் குடிசையில் தங்கியிருந்த கதிர்வேலுவையும்,தெய்வானையையும் அழைத்து வருகிறார் ஞானம் ஆசிரியர். இப்படி குடும்பங்களை அழைத்து வருபவர்கள் யாவரும் மொண்ணையாக அரசியல் பேசும் தமிழ்த் தேசிய அரசியலர்களே. விதியெனும் படைப்புலகின் மையச்சரடு தெய்வாவும்,கதிர்வேலுவும்தான்..இவர்களைப் போல பல திசைகளிலிருந்து குடும்பம்,குடும்பமாகக் காந்தீயத்தில் குடியமர்த்தப்படுகின்றனர் தமிழர்கள்.வந்து சேர்ந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் மலையக மக்கள்.தோட்டங்களைத் தேசிய மயமாக்குவது எனச் சிங்கள சர்க்கார் எடுத்த முடிவினால் வேலை இழந்த மலையக மக்கள் காந்தீயத்தில் அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கையைத் துவங்கினர்.ஏதாவது செய்து வாழத்தானே வேண்டியிருக்கிறது..வாழ்வதைக் குறித்த அச்சம் நெஞ்சாக்கூட்டில் முட்டிநிற்கிறது.இரவில் துர்க்கனவுகளும்,பகலில் வெறுமையுமாக எப்படிக் கடத்த வாழ்க்கையை. ஆனாலும் கடத்துகிறார்கள்.நித்தக்கூலிகளாகத்தான் அவர்களுடைய வாழ்வைக் கடத்த வேண்டி இருக்கிறது.கூலித்தமிழனாகவே பிறந்து வளர்ந்து இறந்தும் போன லட்சக்கணக்கான வதிவிடத் தமிழர்களின் வாழ்க்கைப் பாடுகளே விதி பேசும் உலகம்.மலையகம் என்றாலும்,சமதளம் என்றாலும் கூலிக்கு ஏது சொந்த நிலம் என்கிற மனதை அறுக்கும் உண்மை வாசகனைத் தொடரவே செய்யும்.எதுவும் தனதாதில்லை என்றான பிறகு,தோட்டக்காட்டின்ஏதிலி எனும் இழிசொல்லைச் சுமந்துகொண்டு .காந்தீயத்தில்தான் இருக்க வேண்டுமா?
இது தன்னுடைய நிலம் தானா எனும் சிந்தனை ஒட்டத்தின் பாதியில் திகைத்து நிற்கும் பொழுதுகளில் எல்லாம் இப்படியான எண்ணங்கள் தோன்றவே செய்கிறது.காந்தீயம் என்கிற இரப்பாளி வாழ்க்கைக்குள் இருந்து பிழைப்பது ஒரு வாழ்க்கையா.?. மலையகத்தில் கூலித்தமிழனாக இருந்த போது கூட ஏதோ கௌரவமாக வாழ்ந்தோம் என்றுதான் நினைக்கிறார்கள் வேலனும், காந்தீயத்தில் விழுந்து கிடக்கும் வேலனைப் போன்ற தமிழர்களும்.. காந்தீயத்தில் அவனுடைய கால் தரிக்கவில்லை. கால் மட்டும் இல்லை. மனதும் தான். நிலை கொள்ளாத மனதோடு ஒடத்துவங்கிய கதிர்வேலனின் பயணம் நிற்கவேயில்லை. ஒருநாள் பாளை, மற்றநாள் கொடிகாமம், இன்னுமொருநாள் சாவகச்சேரி, பிறிதெருநாள் நாவற்குழி என அலைந்து திரிகிறான். அத்தனை அலைச்சலுக்கு நடுவிலும் அந்தக் கலவரத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தின் காட்சிகள் கண் முன்னே கடந்தபடியே தான் இருக்கிறது..இந்த துயரத்தின் காட்சிகளிலிருந்து தப்பிக்கவே அவன் பயணித்துக் கொண்டேயிருக்கிறான். மலையகத்தில் தொழிற்சங்க செயற்பாட்டாளனாக இருந்தவன் அவன். அவனுடைய தீவிரமான பிரசங்கத்திலே தன்னை ஒப்புக் கொடுத்தவள்தான் தெய்வானை…
திருநெல்வேலியில் பதின்மூன்று இலங்கை ராணுவத்தினர் கண்ணி வெடியில் இறந்துவிட்டதாக ஒரு செய்தி பரவும். அவ்வளவுதான் கலவரம் நிலத்தை நிர்மூலமாக்கிவிடும். நித்தம், நித்தம் போர் குறித்த அச்சத்திலேயே இருப்பது எவ்வளவு குரூரமானது.ஒரு சின்ன வதந்தி போதும்., அவ்வளவுதான் எல்லாம் தலைகுப்புற மாறிவிடும்.எல்லோருடைய பேச்சும் நடவடிக்கையும் இடம் பெயர்தலைக் குறித்ததாகவே இருக்கும்.”ஜேர்மனிக்கு போய் சேர்ந்திட்டினமாம்.!. இந்தியாவில் நிக்கினம்!. ஏஜென்ஸிக்கு காசு கட்டியிருக்கு.! பாஸ்போர்ட் எடுக்க மூவாயிரம் கேட்கினம்!.காணியை ஈடுவச்சு,இல்லாட்டி தாலிக்கொடியை அடகு வைச்சாவது மகனை வெளியில் அனுப்பிவிட வேனும்…”.இவை யாவும் என்பதுகளில் துவங்கித் தொடரும் தமிழர்களின் சொல்லாடல்கள். தோட்டக்காட்டான் எனும் இழிசொல்லைச் சுமந்து கொண்டு இந்த நிலத்தைத் திருத்தி கிணறு வெட்டி விளைவித்ததெல்லாம் எதற்கு. அத்தனையும் அப்படி அப்படிப் போட்டு விட்டு கப்பல் ஏறித் தூரத் தேசம் போவதற்கா?எனும் கேள்வி தனக்குள் முளைத்தவர்கள் அங்கேயே விழுந்து கிடந்தனர்…இந்தியாவிலிருந்துதானே வந்தனர் நம்முடைய மூதாதையர். பிறகு எதற்கு மறுபடியும் அங்கு போக வேண்டும்.. பாடுபட்டு திருத்திய இந்த பூமி நம் பூமியில்லையா?எனக் கேட்டு இங்குதான் நம்முடைய அந்திம வாழ்க்கை என விழுந்து கிடக்கிறது பெரும் கூட்டம்..அங்கிருக்கும் தமிழர்களுக்கு யார் மீதும் கோபமில்லை. தாது வருடப் பஞ்சத்திலிருந்து தப்பி உயிர்பிழைத்து வாழ்ந்திட கப்பலேறிய தன்னுடைய கொடிவழி உறவுகளின் மீதுதான் பெரும் கோபம்.. அவர்கள் மட்டும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என சொந்த மண்ணை விட்டு அகலாமல் இருந்திருந்தால் நாடற்றவர்கள் எனும் தனித்த இனம் இந்த உலகத்தில் உருவாகியிருக்க வாய்ப்பேயில்லை. குறிப்பாக இலங்கையில்…
இந்த படைப்பெங்கும் கேட்கும் குரல்.“எங்கே போய் என்ன செய்யப் போகிறாய்” என்பதுதான்.ஒருவிதத்தில் அது துரத்தும் குரலும் கூடத்தான்.அந்த பயங்கரத்தின் கொடுங்கரங்களுக்குள் தெய்வா மட்டும் சிக்காமலிருந்திருந்தால். அவன் ஏன் மலையகத்தை விட்டு திருவையாறு வரப் போகிறான். அவன் மட்டுமல்ல,பெருங்கூட்டம் ஏன் மலையகத்தை விட்டு சமதளம் நோக்கி வரப்போகிறது. பிழைத்துக்கொள்ள வழியிருந்த மலையை விட்டுப் போக வேண்டாம். எங்கே போய் என்ன செய்யப் போற எனும் தாயின் குரல் அவனைக் கண்ணீரோடு பின் தொடர்கிறது. திசை தெரியாமல் திருச்சி பொன்மலைக் காட்டில் தடுமாறி நின்ற போதும்.பித்தனாக ராமேஸ்வரம் கடற்கரையில் கலங்கி நின்ற நேரத்திலும்கூட அவனுக்குள் கேட்டுக் கொண்டேதான் இருந்தது அந்தக்குரல்…போட்டில் சாமான் கைமாற்றும் தொழிலில் விழுந்து தடுமாறிக் கிடந்த நாளிலும் கேட்டது…ஒருவிதத்தில்,இது தனக்குள் அவனே கேட்டுக் கொண்ட கேள்விதான்…
எல்லா மனிதனுக்குள்ளும் எவராலும் அறிந்திட முடியாத ஒருவன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்.அந்த மனநிலை ஒன்றின் சிதைவா? .அல்லது மற்றதின் கூட்டுக் கலவையா? என்பதை அறிந்திடும் நுட்பம் கைவரப்பெற்றவர் எவருமில்லை.ஒருகாலத்தில் புரட்சி, தத்துவம்,சோசலிசம் எனத் தீவிர அரசியல் இயக்கத்திலிருந்தவன் ஏன் இப்படி ஆகிப் போனான்.யார் இதற்கெல்லாம் பொறுப்பு. யாழ்ப்பாணத்தின்,வடக்கு மாகானத்தான். கிழக்கு மாகானத்தான். மலையகத்தான் என ஒருநாளும் சேரவே முடியாத பிரிவுகளை நிலைத்திருக்கச் செய்தது எவர் பிழை.இப்படி ஆகிப்போனது என அலைக்கழிந்து கிடந்தது வேலன் மட்டுமல்ல.தலைமன்னார்,எருக்கலம்பட்டியில் இருந்தெல்லாம் எத்தனையோ பேர் படகில் கடும் குளிரில் உயிரைப் பணையம் வைத்துப் பயணிக்கின்றனர்.இந்தியா போய் வியாபாரம் செய்கிறார்கள். பலர் அங்கேயே தங்கியும் விடுகின்றனர். எத்தனை கொடூரமானது அந்தக் கடும்குளிர் பயணம்..எதற்காக இந்த பயணங்கள். அதிலும் இரவெல்லாம் மிதந்தநிலையும் கப்பலில் உயிர்பயத்தோடு பயணிப்பது எதற்காக.இந்த நாவலின் மிக முக்கியமான பதிவே அந்தக் கடும்பயணக் காட்சிகள்தான். தொலைதூரத்தில் தெரியும் ஒளிப்புள்ளி, மரணத்தின் குறியீடாகிப் போகிறது. சிங்கள ரோந்துப்படகின் கண்ரெப்பைகளுக்குள் சிக்கிடாமல் தப்பி ராமேஸ்வரம் போவதொன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. பசி,தூக்கமின்மை,நீங்கவே நீங்காத சோர்வு. இவையாகவும் ராமேஸ்வரத்தின் வெள்ளி அலைகளைப் பார்த்த மாத்திரத்தில் காணாமல் போகிறது.வந்து சேர்வதற்குள் கால்களை ரணமாக்கிய கோரை முட்களும்,ஈட்சமுட்களும் எப்படி அவர்களின் கனவினில் வராமல் இருக்க முடியும். பரல் கற்கள் பாதங்களைப் பிளந்த போதும் இந்தியா வரவே விரும்புகிறார்கள்.சாமான் மாற்றித் தருவதற்குக் கிடைக்கும் கூலிப்பணமே, அவர்களை சாகத்திற்குத் தயாராக்குகிறது… தூரத்தில் தெரியும் ராமேஸ்வரம் கோயில் கோபுரமும்,வெள்ளி அலைகளின் சிற்றசைவூமே புகலிடத்தை நோக்கி வரும் தமிழர்களுக்கு நிம்மதியை எட்டக் காட்டும் குறியீடாக இருக்கிறது.
நிலமெங்கும் அமில மழை பெய்து ஆயுதங்கள் நிகழ்த்திய குரூரத்திலிருந்து தப்பிக்கவே தடுமாறித் தத்தளித்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்கிறது கூட்டம்.ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தமிழர்கள் அடைந்திட்ட சேதாரம் குறைவுதான் என்பதை விதியின் பக்கங்கள் நமக்குத் திறந்து காட்டியபடியே நகர்கின்றன. பிறகு யாழ்ப்பாணம் ஒன்றும் தர்ம பூமியில்லை, வந்தவரையெல்லாம் தாங்கி இடமளித்து சேவகம் செய்ய. அந்த மண்ணில் பிறந்த சில பகுதி மக்களுக்கே அது வாழ்க்கையை மறுத்துக் கொண்டிருக்கிறது. என்பதுகளின் துவக்கத்தில் பலரும் இடம்பெயர்ந்து கொத்துக் கொத்தாக நித்தமும் ஆயிரக்கணக்கில் இந்தியாவின் கடற்கரைக்கு வந்து குவிந்ததற்குப் பின் உள்ள உளவியல் காரணமும் கூட இதுதான்.முகாம் வாழ்க்கையோ, அல்லது ஊருக்குள் ரகசியமாகக் குடியேறுதலோ நடக்கிறது.அதன்பிறகும் ஈழநிலத்தோடு அவர்களுக்கு ஒருபாந்தம் இருக்கவே செய்கிறது.இந்த நாவலுக்குள் வருகிற உதிரியான கதாபாத்திரங்களின் வழியே அந்நாளைய தமிழ்க்குடும்பங்களின் மனநிலையை உணரமுடிகிறது.சொந்த நிலமில்லை,தன் ஊர் என்று எதுவும் இல்லை.எந்த நாடும் சொந்த நாடில்லை,நிற்க நிழலுமின்றி நின்றடைய கொப்புமின்றி பசியைத் துரத்தும் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம் எனப் புகலிடத்தில் இருந்து ஈழத்திற்கு வரும் கடிதங்களின் சொற்கள் வலிமிகுந்தவை. நாவலின் கடைசிப் பகுதியில் காட்சிக்குள்ளாகும் சாமியும் கூட மிக முக்கியமான கதாபாத்திரம்தான்.அவன் வேலுவிற்குள் பெரும் தர்க்கத்தை நிகழ்த்துகிறான்.கொள்கை பேசிக் கொண்டு திரிந்த நாளில் துவங்கி, இற்று உருக்குலைந்து நீத்தார் சடங்கினை வெள்ளி வெள்ளிக்கிழமை செய்கிறவனாக கதிர்வேல் மாறிநிற்கும் நாள் வரையிலும் அவனுடைய சட்டெனக் கவிழ்த்து நகரும் உளச்சிக்கலை காட்டித் தருபவனாக சாமியே இருக்கிறான். வாழ்வதற்காகத்தான் பூநூலை மாட்டிக்கொண்டு சமையல் பண்டாரமாகத் திரிகிறேன் என அவன் கூறுகிற காட்சி ஈழத்தின் சாதிய மனநிலையின் காட்சியாகவே வாசிப்பவனுக்குள் நகர்கிறது…
நாவலுக்குள் நகர்கிற திருச்சி பொன்மலையின் வாழ்க்கைப்பகுதி முழுக்க தத்துவ தர்க்கத்தை நிகழ்த்துகிறது.. நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம். அதனால்தான் விதிக்குள் வாழ்க்கை என்பது என்ன?. வாழ்வதற்காக மனிதன் ஏன் எந்த இழிநிலையையும் நோக்கி நகர்கிறான் என்பதைத் தர்க்கம் செய்து விவாதித்து சொற்களால் நகர்த்துகிறார் தேவகாந்தன். அம்மாவின் குரலை மறுத்து மஸ்கெலியாவை விட்டு தெய்வா எனும் அவனுடைய தேவதையோடு நகர்ந்த போது அவனுக்குள் மாற்றங்கள் முளை விடத் துவங்கிவிட்டது.வவுனியாவிலும், கிளிநொச்சியிலும்திருவையாறிலும் காந்தீயத்திலும் அது பேருரூ எடுத்தாடியது.திருச்சி பொன்மலை வாழ்க்கைக்குள் இவன் ஒரு மலையகத்தமிழன் என்பதும் மட்டுமில்லாது அவன் ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராகவும் இருந்தவன் என்பதும்கூட அவனுக்கே மறந்து போகிறது. பணத்தைத் தேடித்திரிகிறவனாக உருமாறிப் போகிறான்.பணத்தைப் பெற்றிட எந்த நிலைக்கும் இறங்கத் தயாராகிறான்…
கொழும்பு, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து திருச்சி வந்திறங்குபவர்கள் பணம் கொண்டு வருவதில்லை. மாறாகப் பொருட்களை கையோடு எடுத்து வருகின்றனர். அந்த பொருட்களை நல்ல விலைக்கு விற்றுத்தரும் புரோக்கர்களால் நிறைந்திருந்தது என்பதுகளின் தமிழக விமான நிலையங்கள்.. பொருட்கள் கைமாற்றித்தரும் தொழிலைச் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களே இருந்திருக்கிறார்கள். காலமாற்றத்தில் இந்த தொழிலே அழிந்து போனதும் தனித்துப் பேச வேண்டிய கதை… கொள்கைக்காரனாக விடப்பிடியான தொழிற்சங்கக் காரனாக இருந்த நாட்களில் பிசகாத வேலனின் மனம், பணம் தேடி அலைந்த நாட்களில் முற்றிலுமாக பிசகிவிடுகிறது என்பது மனித மனம் அடையும் மாற்றம் குறித்த முக்கியமான உளவியல் கண்டுபிடிப்பு. பணத்தைத் தேடி ஒடிக் கொண்டேயிருக்கிற போதுதான் நல்ல வேலை அந்தக் குழந்தை செத்துப் பிறந்தது எனச் சமாதானம் அடைகிறான்.ஒரு குழந்தை இறந்ததற்காக மகிழும் மனநிலை என்ன மாதிரியானது. மலையக கலவரத்தில் சிங்கள ராணுவக் காடையர்களால் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுகிறாள் தெய்வி. அவளை இது ஒரு விபத்துதான்.கவலைப்படாதே எனத் தேற்றியவன்தான் வேலன்.அப்போது அவன் கொள்ளைக்காரன். அவனேதான் அந்தக் குழந்தை சாகட்டும் என நினைக்கிறான்.ஏன் என்றால் அது தன் குழந்தையில்லை என்பது அவனுடைய எண்ணம்.. இந்த நினைப்பு அவனைத் துரத்திக் கொண்டே இருப்பதால்தான் அவளிடம் ஒரு கொடும் இரவில் நீ சுகத்தை அனுபவிச்சியோ என்கிறான். அந்தக் கடும் இரவை தெய்விக்கு மட்டுமல்ல, நமக்கும்தான் கடத்த முடியவில்லை.
இந்த நாவலை இயல்பாகவே பெண் பிரதியாகத்தான் வாசிக்க வேண்டும்.அதிலும் குறிப்பாகப் பாக்கியம்,தெய்வானை எனும் இரு பெண்களும் வரும் பகுதிகள் அதற்கான சாத்தியத்தைத் திறக்கின்றன.இந்தியாவிற்கு வந்துவிடச் சொல்லி நிர்ப்பந்திக்கும் கணவன். மறுபக்கம் குழந்தமை மீதான ஏக்கம்.. வரும் கடிதங்களுக்கு அவள் எழுதும் பதில்கள் கவித்துவமானவை. இதுதானே நம் பூமி.எப்படி வர இந்தியாவிற்கு.பத்திரிகை, வானொலி,செவிவழிச் செய்திகளில் ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்ட செய்தி வருகிற போது பரவசம் அடைகிறாள்.எப்படியும் வெற்றி கிட்டும்.சுகமாக வாழலாம் எனும் நம்பிக்கையில்தான் பெண்கள் இருந்தார்கள் என்பதற்கான சாட்சியே தெய்வி.அவள் எழுதுகிறாள்.என் குழந்தையின் ஆத்மா சாந்தி அடைகிற வரைக்கும்.என் கனவினில் தொலைதூரத்தில் கேட்கிற அழுகைச் சத்தத்தின் சன்னமான ஒலி நிற்கும் வரையிலும் என்னால் இந்தியாவிற்கு வரமுடியாது என்கிறாள்.இத்தனைக்கும் அவள் தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்தது கூட இல்லை.முதல் குழந்தை இறந்தே பிறந்தது.இரண்டாவது குழந்தையும் கூட பத்தாம் நாளே இறந்து போகிறது.மனதின் வலி கனவாகி. , கனவிற்குள் ஓலமும் அழுகையும் அவளைத் துரத்துகிறது..எப்படி அழைத்த போதும் இதனால்தான் இந்தியா வர மறுக்கிறாள்..நினைப்பது எல்லாமே நடந்துவிடுமா?.அவள் இந்தியா வரவேண்டிய நெருக்கடியைக் காலம் உருவாக்கி விடுகிறது.
மலையகத்திலிருந்த கதிர்வேலனின் தாய் இறந்து போகிறாள். சமதளத்திற்கு செய்தி வந்து சேரவே பலநாள் ஆகிறது.போகவும் வாய்க்கவில்லை.இந்தச் செய்தி கிடைத்த பிறகு வேலனை பார்க்க வேண்டும். பெற்று வளர்த்தவளின் இழப்பை எப்படித் தாங்கப் போகிறானோ.தெரியவில்லை எனத் தடுமாறிக் கிடந்தாள்..”நீ நானாக இருப்பாய் என நினைத்திருந்தேன்.ஆனால் நீ நானாக மட்டுமில்லை.நீ ..நீநீயாகவும் இல்லை என்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டம் என அவன் எழுதிய கடிதமும் அவளை இந்தியாவை நோக்கி நகர்த்துகிறது.அவளும் சாகச கடல் பயணத்தில் இந்தியா வந்து சேர்கிறாள்.எங்கோ பிறந்து எங்கோ செல்வச் செழிப்போடு வாழ்ந்திருக்க வேண்டியவள், இப்படி இற்று உருக்குலைந்து யாருமற்று அனாதையாகப் பொன்மலையில் இறந்து போனது காலம் எழுதிய கொடுங்கதைததான். இதைத்தான் விதியெழுதிய கதையாக்கித் தந்திருக்கிறார் தேவகாந்தன்…
ராமேஸ்வரம் கடற்கரையில் அழுக்குப் படிந்து நைந்து போன உடைகளோடு நீத்தார் சடங்கு செய்து கொண்டிருக்கும் அந்த மனிதனை நீங்கள் பார்க்க நேரிடும். கதிர்வேலன் ஒருவன் அல்ல. இனக்கலவரம் நிகழ்த்திய வன்முறையாட்டத்தில் குடும்பத்தை,மனைவி மக்களை இழந்த தமிழ்க் குடும்பங்களின் குறியீடு அவன்….
(தேவகாந்தினின் விதி எனும் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்)
பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….
ம.மணிமாறன்……
விருதுநகர்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்
தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்
தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்
தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்
தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்
தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்
தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.