‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் – நூல் அறிமுகம்
வரலாற்று புனைவு
கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருக்கும் மாந்தர்களுடன் தங்கள் கற்பனை கதாபாத்திரங்களையும் இணைத்து வரலாற்று புதினங்கள் புனையப்படுகின்றன. வரலாற்றுத் தகவல்களை வரலாற்று புதினங்களில் திரித்து பதிவு செய்யாமல் இருப்பது ஒரு சிறந்த நாவலாசிரியரின் அடிப்படை பண்பாகும்.
அந்த வகையில் சங்க இலக்கியங்களில் கபிலர் பரணர் ஆகிய புலவர்கள் பாடிய பாடல்களில் கிடைக்கும் நிகழ்வுகளை தமது கற்பனை கதாபாத்திரங்களை கொண்டு இணைத்து இந்த நாவலை சிறப்பாக புனைந்திருக்கிறார் மனோஜ் குரூர்.
மொழிபெயர்ப்பு
மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை தேன் தமிழ் சொற்களைக் கொண்டு நயமான வாக்கியங்கள் அமைத்து பொருளுணர்த்தும்படி செய்து சிறப்பாக இலக்கிய இன்பம் தரும் படி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் ஜெயஸ்ரீ அவர்கள்.
வைக்கம் முகமது பஷீர் மற்றும் திருடன் மணியம் பிள்ளை ஆகியோரின் நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல்.மு.யூசுப் அவர்களே என்னுடைய மனதிற்கு இதுவரை இணக்கமாக இருந்திருக்கிறார். ஜெயஸ்ரீ அவர்களின் நயமான மொழிபெயர்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு சிறப்பாக மொழிபெயர்ப்பு அமைந்ததற்கு இந்த கதைக்களம் தமிழ் மண்ணில் நிகழ்ந்ததும் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
கதை முரணில் முரண்
வயிற்றுப் பிழைப்பு தேடி தங்கள் கிராமத்தை விட்டு இடம்பெறுகிறது ஒரு பாணர் கூட்டம். இந்த பாணர் கூட்டத்தின் நோக்கம் அரசர்களைக் கண்டு அவர்களை பாடி பொருள் பெறுவது மட்டுமல்லாமல் தங்கள் கூட்டத்திலிருந்து காணாமல் போன உறவு ஒருவரைத் தேடுவதாகவும் அமைகிறது. இந்தத் தேடுதலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதால் வாசிப்பில் ஒரு அயற்சி உண்டாகிறது.
ஒற்றனான மயிலன் மூலம் பாரியின் நாடுபிடிக்கப்படும் திட்டம் கபிலருக்கு தெரிய வருகிறது. பாரியும் கபிலரும் அவ்வளவு நட்புடன் இருந்த போதும் மேற்கண்ட தகவலை அறிந்த கபிலர் பாரிக்கு சொல்லாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பாரியின் உயிராவது மிஞ்ச வேண்டும் என்று விருப்பப்பட்ட ஒற்றன் மயிலன் தன் கையாலேயே எப்படி பாரியை கொல்ல துணிந்தான் என்பதும் எனக்கு வியப்பாக இருந்தது.
சேர சோழ பாண்டியர்களின் பாரியை கொன்றொழிக்கும் திட்டத்திற்கு கபிலர்தான் மூல காரணம் என்று ஒற்றன் மயிலன் குறிப்பிடுகிறான். இதற்காக சொல்லப்பட்ட காரணம் நாவலாசிரியரின் கூர்ந்த அறிவுத்திறனையும் ஆய்வுத் திறனையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால் கபிலர் பாரியின் மகள்களை பேணியதற்கு அவருக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு தான் காரணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கு பாரி கபிலரின் நட்புதான் காரணமாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.
கபிலர் ஒரு அந்தணர்
கபிலர் சங்க காலப் புலவர். இவர் நான்மறை ஓதும் அந்தணர் பிரிவை சார்ந்தவர். சங்க இலக்கியங்களில் வரும் அந்தணர்கள் தான் தற்காலத்தில் ரிக் யசூர் சாம அதிர்வன வேதங்களை அறிந்த பிராமணர்கள் என்று சொல்கிறார்கள். இதனை மறுத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கை உணர்ந்தோரைத்தான் சங்க இலக்கியம் அந்தணர்கள் என்று சொல்கிறது என்றும் சொல்கிறார்கள். இவற்றைப் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொருளை எந்த மன்னன் கொடுக்கிறானோ அங்கு போய் ஒட்டிக் கொள்பவராகவும் பாரியை வீழ்த்தப்படுவது அறிந்தும் பாரியைக் காப்பாற்ற முனையவில்லை என்றும் கபிலர் மீது நாவலாசிரியர் குற்றம் சாட்டுகிறார். நாவலாசிரியருக்கு கபிலர் மீது அவ்வளவு வன்மம் ஏன் என்று தெரியவில்லை! பரணரை உயர்த்திப்பிடித்து கபிலரை அடித்து தொங்க போடுகிறார்!?
மண்- காலம் சார்பு
இடம் பெயர்வு, கொள்ளை கூட்டம், ஒற்றாடல், போர் புரிதல், ஆநிரை கவர்தல், சதி திட்டம், வெறியாடல், அகமன வாழ்வு முதலிய சங்க இலக்கியப் பாடல்களில் கிடைக்கும் தரவுகளை கொண்டு நிகழ்வுகளை சிறப்பாக கட்டமைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
நாவலின் தொடக்கமானது பாணர்களின் நடையை போன்று மெதுவாக தொடங்கினாலும் சிறுக சிறுக முன்னேறி விறுவிறுப்பை அடைகிறது. கதை நிகழ்வுகள் உண்டாக்கும் ஆவலானது நாவலை கீழே வைக்க முடியாதபடி செய்து விடுகிறது.
நூலின் விவரங்கள்:
நூல் : ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல்
ஆசிரியர் : மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ)
வெளியீடு : வம்சி பதிப்பகம்
விலை: ரூ.350
எழுதியவர் :
✍🏻 – ந.ஜெகதீசன்,
சென்னை.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
