Writer Movie Review By K Kanagaraj. திரைவிமர்சனம்: ஆரத் தழுவிக் கொண்டாடத் தோன்றும் ரைட்டர் திரைப்படம் - கே கனகராஜ்




படத்தைப் பார்த்தேன். முதலில் உங்கள் கைக்கும் மூளைக்கும் ஒரு முத்தம் கொடுக்கணும். இவ்வளவு துணிச்சலா ஒரு படத்தை அதுவும் முதல் படத்தை எடுப்பதற்கு ஒரு தார்மீகத் திமிரும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். சில பேர் இது மாதிரியான கருவை கூட தேர்ந்தெடுத்திருப்பார்கள். ஆனால் அந்தக் கதை அழகியல் ரீதியாக நேர்த்தியாக வந்திருக்கிறதா என்று பார்த்தால் மிகக் குறைவான படங்கள்தான் அப்படி அமைந்திருக்கின்றன என்று சொல்ல முடியும்.

எடுத்துக் கொண்ட கதைக்கருவைப் பொறுத்தளவில் இன்றைக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் UAPA சட்டத்தில் கைதாகி இருப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களுடைய ஒட்டுமொத்த குமுறலையும் இப்படத்தில் வரும் கதாநாயகன் மூலமாக காட்டியிருக்கிறீர்கள். பிரதானமாக ஏற்கனவே புகழ்பெற்ற நடிகர் சமுத்திரக்கனி நடித்திருப்பதனால், அவர் கதாநாயகன் என்கிற தோற்றம் ஏற்பட்டு, போலீஸ்காரர்களுக்கு யூனியன் வேண்டும் என்ற முறையில் படம் எடுக்கப்பட்டிருப்பதாக சிலர் சித்தரித்திருக்கிறார்கள்.

உண்மையில் குரலற்ற வெளிச்சம் படாத ஏராளமான மனிதர்களின் வலியை இது பேசுகிறது. அந்த வலியைப் பேசுவது மட்டுமல்லாது, அந்த வலியை தன்னுடைய வலியாக உணர வைப்பதில் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறீர்கள். உண்மையில் இந்தப் படத்தின் வசனகர்த்தா யார்? ஒளிப்பதிவு யார்? இயக்குனர் நீங்கள் என்பதற்கு மேலே மற்ற விஷயங்களை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் இவ்வளவு நேர்த்தியாக கச்சிதமாக எப்படி வந்திருக்கும் என்று உண்மையிலே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

அடுத்ததாக நடிகர்கள் தேர்வு… வாய்ப்பே கிடையாது… ஒவ்வொரு நடிகர்களும் இந்தக் கதாபாத்திரத்திற்காகவே பிறந்தது போல நடித்துள்ளனர். எஸ்.ஐ, டிஜிபி, சமுத்திரக்கனி, புதிதாக சென்ற காவல்நிலைய ரைட்டர், மாணிக்கம், சமுத்திரக்கனியின் மனைவிகளாக நடித்திருப்பவர்கள், வழக்கறிஞர், மேஜிஸ்திரேட், அந்த மேஜிஸ்ட்ரேட் ஒரு சில நொடிகள்தான் வருவார். நீதிமன்றத்தை விமர்சித்ததாக சொல்ல முடியாது என்றும் சொல்லலாம். ஆனால் நீதிமன்றம் எப்படி ஒடுக்குமுறைக் கருவியின் ஒரு அங்கமாக மாறிப் போயிருக்கிறது என்பதும் கூட அதில் அடங்கியிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீதிபதி, “சொல்லிக்கூட கூட்டி வர மாட்டீங்களா” எனச் சொல்வதில் அடங்கியிருக்கிறது நீதிமன்றம் ஒடுக்குமுறை கருவியாக இயைந்து போயிருக்கிறது என்பது.

ஸ்டேன் சாமி ‘இறந்து’ போனார் என்றபோது நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததாக தெரிவித்தார்கள். ஆனால் அவர் ஸ்ட்ராவிற்காக கெஞ்சும்போதும், மருத்துவத்திற்காக கெஞ்சும்போதும், பெயிலுக்காக கெஞ்சும்போதும் நீதித்துறை ஒரு 84 வயசுக்காரன் சதி பண்ண முடியுமா என்றெல்லாம் யோசிக்கவில்லையே. உரிமைகளை யாரும் கொடுத்தது கிடையாது. உரிமைகள் எடுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது.

“நீ மேல தெருவுக்குப் போக முடியுமான்னு எனக்கு தெரியல, ஆனா மேல வந்திட முடியும், படிடா”ன்னு சொல்ற அந்த ஒற்றை வார்த்தை அழுத்தமான அர்த்தம் பொதிந்தது. சரண்யா கேரக்டரில் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்ததாகத் தெரிந்தது. அந்தப் பெண் அடிப்பது, அதேபோல அதற்கு முன் அந்த குதிரை கால் உயர்த்தி நிற்கிறபோது கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தது.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், சாதி, வர்க்கம், அரசின் அடக்குமுறை கருவிகளின் அட்டூழியம் என அனைத்தையும் கலைநயத்தோடு சொல்வதில் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு ஏன் உரிய அளவில் விளம்பரம் கிடைக்கவில்லை என்பதற்கான விஷயமும் அதற்குள் இருக்கிறது. உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய சில விரல் விட்டு எண்ணத்தக்க சமீபத்திய படங்களில் இதற்கு நான் முதல் இடத்தை கொடுப்பேன். அதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

தமிழகம் ஒரு முக்கியமான இயக்குனரை கண்டடைந்து இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இந்த நடிகர்கள் எல்லாம் ஏற்கெனவே பல படங்களில் நடித்தவர்கள்தான். இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் போல நடித்துள்ளதுதான் ஆச்சர்யம். உண்மையில் இதில் நடித்த ஒவொருவரின் நடிப்பு மற்றும் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது.

மேலும், ஒரு சந்தர்ப்ப சூழலால் குற்றவாளியாய்ப் போன, குழந்தையை சாகக் கொடுத்துட்டு இருக்கும் ஒருவன் ஒவ்வொருவரையும் அணுகும் முறை, ஒவ்வொருவரிடமும் பேசும் பேச்சு சாதாரணமானதல்ல. உண்மையில் நம் சமூகத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது எல்லாம் மிகவும் குறைவாகவே இப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். டி.எஸ்.பி.யை, எஸ்.பி மிகவும் மோசமாக பேசுவது, அப்பா வயதுடைய ஒருவரை தன்னுடைய பூட்ஸை துடைக்கச் சொல்வதெல்லாம் நான் நேராகவே பார்த்துள்ளேன். தூத்தூக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு எஸ்ஐ இருந்தார். அவருடைய பூட்ஸை ஒருத்தர் துடைக்கும் போது நான் அவரிடம் கேட்டேன். அவர் மிகவும் மனம் உருகிக் கூறினார், என்னுடய சிறுவயதில் என்னுடைய அப்பாவும் இப்படித்தான் இருந்தார். ஆனால் நான் காவல்துறையின் அங்கமான பிறகு அது எனக்கு பெரிதாக தெரியவில்லை என்றார்.

இப்படத்தை பர்த்துவிட்டு வெளியே வந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளார் தோழர் ஆர்.முத்தரசன், தோழர் சி.மகேந்திரன், தோழர் ஜீவசகாப்தன் இவர்கள் எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குக் கூட என்னால் முடியவில்லை.UAPAவில் சிறையில் கிடக்கிற ஏராளமானோரின் வலி என் மனதிற்குள் இருந்தது. இயக்குநரைப் பார்த்துக் கூட பேச மிகவும் சிரமப்படுவேன் என்று நினைத்து யாரிடமும் பேசாமல் இறங்கி வந்துவிட்டேன்.

ஒன்றே ஒன்றுதான், DGPயை சமுத்திரக்கனி சுட்டுக் கொன்றது போல், அவ்வளவு எளிமையாக அது நடந்துவிடுவதில்லை. சமுத்திரக்கனி அதில் தோற்றுப் போயிருந்தால் அதுதான் எதார்த்தமாக இருந்திருக்கும். ஆனால், படத்தினுடைய போக்கில் அந்த நிவாரணி கூட இல்லாமல் இருந்திருந்தால் பார்ப்பவர்களுக்கு அது பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கும். சமுத்திரக்கனி சுட்டுவிட மாட்டாரா என்று தோன்றுகிற அளவுக்கு எல்லோருடைய மனநிலையும் அங்கே வந்து நின்றது. ஏனென்றால் அந்த சீன் பக்கத்துல இருக்கிறவனையும் கொல்லு என்றுதான் தியேட்டரில் கேட்டது. இப்படி இந்தப் படம் எவ்வளவு விசயங்களைப் பேசியிருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் வந்திருக்கிறது. ஒரு நல்ல இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. Neelam Productions நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தோடு சம்மந்தப்பட்டவர்கள், ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.பழக்கமான ஒருவரை டேய் பிண்ணிட்ட போ என்று ஆரத் தழுவிக் கொண்டாடுவது போல் கொண்டாடத் தோன்றுகிறது. அந்தக் கொண்டாட்டத்திற்குத் தகுதியானவர் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *