நூல் அறிமுகம்: ‘மிளிர் கல்’ : கண்ணகியின் மாணிக்கப்பரல், ஒளி வீசும் மிளிர் கல் என இருவேறு உலகங்களைப் பேசிடும் முருகவேளின் நாவல் – பெ.விஜயகுமார்இரா.முருகவேள் இன்றைய தமிழ்ப் புனைவிலக்கிய உலகில் வெற்றிகரமாக வலம் வரும் படைப்பாளர். ’மிளிர் கல்’ ‘முகிலினி’, ’செம்புலம்’, ‘புனைபாவை’ ஆகிய நாவல்களும்; ‘எரியும் பனிக்காடு’, ‘ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்’, ’தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் முருகவேளின் எழுத்துலக வெற்றியின் சாட்சியங்கள். ’மிளிர் கல்’ பயண நூல் போன்று புலப்படும் புனைவிலக்கியமாகும்.

ஏராளமான பயண நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், சிட்டி (பெ.கோ.சுந்தரராஜன்) – தி.ஜானகிராமன் எழுதியுள்ள ‘நடந்தாய்; வாழி, காவேரி!’ தமிழின் செவ்வியல் பயண நூலாகக் கருதப்படுகிறது. காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்று வரும் காவேரி வெறும் ஆறாக மட்டுமல்லாமல், அதன் இரு கரைகளில் வாழும் மக்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் வரலாற்று ஓவியமாகவும் இருக்கிறது. அதனாலேயே சிட்டியும், தி.ஜானகிராமனும் இணைந்து இப்பயணக் கதையை எழுதினர். காவிரிக் கரை காட்சிகளையும், அதன் வரலாற்றையும் சொல்லிச் செல்லும் அரிய பயண நூலாக ‘நடந்தாய்; வாழி, காவேரி!” திகழ்கிறது. மிளிர் கல் நாவல் சிலப்பதிகாரம் காவியத்தில் கோவலனும் கண்ணகியும் காவேரிக் கரையில் மேற்கொண்ட பயணத்தின் தடங்களைத் தேடிச் செல்லும் ஆய்வுப் பயணமாகும்.

’நடந்தாய்; வாழி, காவேரி!’ நூலில் நாம் காணும் பயணம் காவேரியின்  தலையிலிருந்து கால்வரை; குடகு மலையில் தொடங்கி பூம்புகாரில் முடிவடையும் இன்பச் சுற்றுலாவாகும். ’மிளிர் கல்’ நாவல் காவேரி கடலில் கலக்கும் பூம்புகாரில் தொடங்கி கேரளாவின் கொடுங்கலூரில் முடிவடையும் ஆய்வுப் பயணமாகும். இத்துடன் ’மிளிரமணி’ என்றழைக்கப்படும் ரத்தினக் கற்களைத் தேடி அலையும் வைர வணிகர்கள் கொங்கு நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பணவெறியுடன் மேற்கொள்ளும் பயணங்களும் ’மிளிர் கல்’ நாவலில் இணைந்துள்ளன.  இந்த இருவேறு பயணங்களை இணைக்கும் புள்ளியாக கண்ணகி அணிந்திருந்த கொலுசின் மாணிக்கக்கல் இருக்கிறது.

C:\Users\Chandraguru\Desktop\81PH1iSpQDL.jpg

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் முல்லையும், நவீனும் சென்னையில் சந்திக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு கொள்கை, கோட்பாடு கொண்டவர்கள் என்றாலும் நல்ல நண்பர்கள். நவீன் சீரிய மார்க்சிய சிந்தனையாளன். தீவிர இடதுசாரி கட்சி ஒன்றுடன் தன்னை இணைத்துக் கொண்டவன்.  தேர்ந்த ஃபோட்டோகிராபரும்கூட. முல்லை தமிழ் மொழி, தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பாடு ஆகியனவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும், முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட இன்றைய இளைய தலைமுறைப் பெண்மணி. வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த பூம்புகாரிலிருந்து புறப்பட்டு கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருவது, மதுரையில் அறம் பிழைத்த பாண்டிய மன்னனால் குற்றம் சுமத்தப்பட்டு கோவலன் கொலை செய்யப்படுவது, நீதி கேட்டு கண்ணகி பயணம் செய்வது, குற்றத்தை உணர்ந்ததும் மன்னன் உயிர் துறப்பது, மதுரையை எரித்துவிட்டு மேற்கு நோக்கிப் பயணித்து கண்ணகி விண்ணுலகு எய்துவது என்று சிலப்பதிகாரக் காட்சிகள் நிகழ்ந்த இடங்களை நேரில் காண்பதற்கு முல்லை பயணம் மேற்கொள்ள விரும்புகிறார். கோவலன்–கண்ணகி இணையர் நடந்த வழித்தடத்தில் பயணித்து அதனை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்பதே அவரின் லட்சியம். தன்னுடைய லட்சியம் நிறைவேறிட நண்பன் நவீனையும் சேர்த்துக் கொண்டு முல்லை சென்னையிலிருந்து புறப்பட்டு பூம்புகார் வந்து சேருகிறார். பூம்புகாரில் அவர்கள் தற்செயலாகச் சந்திக்கும் ஸ்ரீகுமார் என்ற அறிவியலாளர் அவர்களின் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறார். ஸ்ரீகுமார் வயதில் மிகவும் மூத்தவர் என்றாலும் இளைஞர்கள் முல்லை-நவீனுடன் நட்புடன் பழகி நல்ல வழிகாட்டியாகவும், ஆசானாகவும் ஆகிறார். ’ஜே.கே.டைமண்ட்ஸ் அன் ஜெம்ஸ்’ என்ற பன்னாட்டுக் கம்பெனி கொங்கு நாட்டுப் பகுதிகளில் ரத்தினக் கற்கள் இருக்குமிடங்களைக் கண்டறிந்து தெரிவிக்க தன்னைப் பணியில் அமர்த்தி இருப்பதையும், பயண வசதிக்காக இன்னோவா கார் ஒன்றை டிரைவருடன் கொடுத்திருப்பதையும் சொல்கிறார். பெரியவர் ஸ்ரீகுமார் வரலாறு, தத்துவம், இலக்கியம், அகழ்வாராய்ச்சி என்று பல துறைகளிலும் சிறந்து விளங்குவது கண்டு முல்லையும், நவீனும் வியக்கிறார்கள்.

கொங்கு நாட்டில் காங்கேயம் ஊரின் சிறப்பாக அதன் உயர்ரக காங்கேய மாடுகள் என்பதாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் காங்கேயம் பகுதிகளில் மாணிக்கம், மரகதம், கோமேதகம் போன்ற ரத்தினக் கற்கள் கிடைத்து வருவதை பலரும் அறிந்திலர். இப்பகுதியில் ரத்தினக் கற்கள் சங்க காலந்தொட்டு கிடைத்து வருவதை “மான் துள்ளினாலே மாணிக்கமும், மரகதமும் தெறித்து வெளிவரும் பூமி” என்று தமிழிலக்கியம் சொல்கிறது. ’செமி பிரஷயிஸ் கற்கள்’ என்றழைக்கப்படும் இவற்றின் மீது மேற்கு ஐரோப்பியப் பெண்களுக்கு மிகுந்த மோகம் இருந்ததால், ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரையோர துறைமுகங்கள் வழியாக ரத்தினக் கற்களைக் கப்பல்களில் அள்ளிச் சென்றதை வரலாறு பதிவு செய்துள்ளது. அதிலும் காங்கேயம் பகுதியில் கிடைக்கும் ரூபி எனப்படும் சிகப்பு நிற மாணிக்கக் கல்லுக்கு மிகுந்த கிராக்கி என்றென்றும் இருக்கின்றது. வயல்களில் உழவர்கள் சாதாரணமாக உழுது கொண்டிருக்கும் போது நிலத்திலிருந்து வெளிவரும் இக்கற்களின் அருமை தெரியாத கிராமத்து மக்களை ஏமாற்றி சொற்ப விலைக்கு வாங்கிச் செல்லும் உள்ளூர் ஏஜண்டுகள் ஆயிரக்கணக்கில் பணமீட்டுகின்றனர். இந்த ஏஜண்டுகளிடமிருந்து கற்களை வாங்கும்  மார்வாடி வணிகர்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், குஜராத்தின் கம்ப்பட் ஆகிய ஊர்களில் பட்டறைகளில் தீட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட மிளிர் கற்களை ’டி பியர்’, ’ஜே.கே.டைமண்ட்ஸ் அன் ஜெம்ஸ்’ போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் உலகச் சந்தையில் விற்று கோடிக்கணக்கில் லாபமடைகின்றன. ’ஜே.கே.டைமண்ட்ஸ் அன் ஜெம்ஸ்’. நிறுவனத்திற்காக அகழ்வாராய்ச்சி குறித்து ஆலோசனை வழங்கிடும் வேலையை ஒப்புக்கொண்டிருந்தாலும் ஸ்ரீகுமார் ஒன்றும் பணவெறி பிடித்தலையும் அறங்கள் ஏதுமற்ற வைர வியாபாரி அல்ல.

மிளிர் கல் வணிகம் சிலருக்குச் சூதாட்டம். சிலருக்கு பண மழை கொட்டும் தொழில். ஆனால் மிளிர் கல் தீட்டப்படும் இடங்களில் உழைக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அது மிகப் பெரிய சாபம். அவர்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுவதை ஸ்ரீகுமார் விவரிக்கிறார். இந்த வணிகத்தின் பின்னுள்ள அவலங்கள் அனைத்தையும்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் ’கூகுள் தேடல்’ மூலம் நிறையச் செய்திகளை முல்லை திரட்டுகிறார். ‘Hearts of Darkness’ என்ற கட்டுரை படிக்கக் கிடைக்கின்றது. இத்தொழிலில் ஈடுபட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிலிகோசிஸ் எனும் நோயினால் இறந்துள்ளதை அறிகிறார். இத்தொழிலாளர்கள் நாள் முழுவதும் தரையில் உட்கார்ந்து கல்லால் ஆன சுழலும் சக்கரங்களில் மிளிர் கற்களை உரைத்தும், பட்டை தீட்டியும் பல வடிவங்களைச் செய்கின்றனர். இதனால் இவர்களின் உடலெங்கும் சிலிக்கா தூசி படிகின்றது. பனிரெண்டு, பதிமூன்று வயதில் வேலை செய்யத் தொடங்குகின்றனர். 30% தொழிலாளிகள் சிலிகோசிஸ் நோயினால் இறந்து போகின்றனர். உயிர் பிழைத்தவர்கள் எலும்பும் தோலுமாகி நடக்க முடியாமல் தீராத மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். சிறுவர்களின் பிஞ்சுக் கரங்களும், கண்களும் சின்னஞ்சிறு கற்களை பட்டை தீட்ட ஏற்றவை என்பதனால் இத்தொழிலில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துகிறார்கள். இச்சிறுவர்களுக்கு கண் பார்வைக் கோளாறும், முதுகு வலியும், சிறுநீரகப் பிரச்சனைகளும் வருகின்றன. ஒரு நாள் ஊதியமாக வெறும் எழுபது ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் வைர வணிகர்கள் அடையும் லாபமோ பல லட்சங்கள். கூகுள் கட்டுரையில் உடல் முழுவதும்  புழுதி படிந்து சிறுவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் படங்களைப் பார்த்து முல்லையின் நெஞ்சம் பதறுகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் பூம்புகார் வந்த முல்லை  மிகுந்த ஏமாற்றம் அடைகிறார். ஆழிப் பேரலையில் அழிந்து போன பூம்புகார் நகரம் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் ஏதும் காணக் கிடைக்காமல்  பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பச்சை நிற போர்டு மட்டுமே காணப்படுகிறது. கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த எழுநிலை மாடம் காணப்படவில்லை. எழுநிலை மாடம் என்பது ஏழு மாடிக் கட்டிடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஓங்கி உயர்ந்த ஒரு வீடாவது காணப்பட்டிருக்க வேண்டுமே! அதுவும் இல்லாததது அவரைச் சோர்வடையச் செய்கிறது. சிலப்பதிகாரம் வரலாற்று உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பூம்புகார் ஒரு புகழ் பெற்றத் துறைமுகமாக இருந்தது தானே! அதற்கான சுவடுகள் எதையும் காணோமே! என்று அங்கலாய்க்கிறாள். புலியூர் கேசிகனார் உரையுடன் தான் படித்து மகிழ்ந்த சிலப்பதிகாரக்  காட்சிகளை எல்லாம் காண முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் முல்லையிடம் கடலில் மூழ்கிய பூம்புகார் நகரம் பற்றி நிறைய விவரங்களை ஸ்ரீகுமார் கூறுகிறார்.

C:\Users\Chandraguru\Desktop\Poombhukar 044.jpg.jpg

காவேரி வங்கக் கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்த பூம்புகார் இரு பகுதிகளாக இருந்ததாகவும்; ஒரு புறம் செல்வந்தர்கள் வாழ்ந்த பட்டினப்பாக்கமும், மறுபுறம் எளிய மக்கள் வாழ்ந்த மருவூர்பாக்கமும் இருந்திட இரண்டிற்கும் இடையில் இருந்த அங்காடிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த நவரத்தினக் கற்களை வாங்கிச் சென்றிட ரோமானியர்களும், பிற நாட்டு வணிகர்களும் கூடியிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதை ஸ்ரீகுமார் எடுத்தியம்புகிறார். ‘பூம்புகார் போற்றுதும்’ என்ற பெயரில் தமிழக அரசு எடுத்திருக்கும் ஆவணப்படத்தில் வரலாற்றுச் செய்திகள் நிறைய இருப்பதையும் அவர் கூறுகிறார். கலைஞர் கருணாநிதி கடலுண்ட பூம்புகார் நகரைப் புதுப்பிப்பதில் 1970களின் தொடக்கத்தில் காட்டிய ஆர்வத்தை பின்னர் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையையும், அதற்கு 1975இல் அவர் ஆட்சி பறிபோனது ஒரு காரணம் என்று பேசப்படுவதையும் பெரியவர் சொல்வதைக் கேட்டு முல்லை மேலும் சலிப்படைகிறார்.

பூம்புகாரில் வாழ்ந்திடும் பலரையும் சந்தித்து கண்ணகி குறித்து மக்களிடமிருந்த கதையை அறிந்து கொள்கிறார்.  சிலப்பதிகாரத்திற்குத்தான் எத்தனை பரிணாமங்கள் என்று வியக்கிறார். சிலப்பதிகாரம் பற்றி தாயம்மாள் அறவாணன் தொகுத்த நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பினைக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.  பூம்புகார் அனுபவங்களை மனதில் சுமந்து கொண்டு மதுரையை நோக்கி பயணத்தைத் தொடர முல்லையும், நவீனும் திட்டமிடும் போது ஸ்ரீகுமாரும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க ஒத்துக்கொண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

கோவலனும், கண்ணகியும் பயணித்த பாதையிலேயே மதுரை செல்வது என்பதில் அவர்கள் மூவரும் உறுதியுடன் இருக்கிறார்கள்.  திருச்சியில் ஓர் விடுதியில் தங்கியிருக்கும் போது திடீரென்று ஒரு நாள் ஸ்ரீகுமார் காணாமல் போய் விடுகிறார். ஸ்ரீகுமார் பற்றிய தகவல்களை கார் டிரைவர் யாரிடமோ போனில் தெரிவிப்பதை நவீன் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ரத்தினக்கல் வணிகத்தில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக ஸ்ரீகுமார் கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதுவரை அவர்களுடன் கார் டிரைவராக வந்தவர் போட்டி வணிகர்கள் அனுப்பிய ஒற்றர் என்பதறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். ஸ்ரீகுமாரைக் கடத்தியவர்கள் அடுத்த நாளே அவரை விடுவிக்கின்றனர். சிறந்த அறிவியலாளர் என்பதைத் தவிர அவருக்கு ரத்தினக்கல் வணிகத்தில் எந்த ஈடுபாடும் இல்லை என்பதறிந்து அவரை விடுதலை செய்து விடுகின்றனர்.

ஸ்ரீகுமார் ரத்தினக்கல் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டு முல்லை,  நவீன் மேற்கொள்ளும் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறார். வேறொரு காரை அமர்த்திக் கொண்டு பயணத்தை மீண்டும் தொடர்கின்றனர். மதுரைக்குச் செல்லும் வழியில் சமணர்கள் வாழ்ந்த குகை ஒன்றில் ஓரிரவு முழுவதும் தங்கும் அலாதியான அனுபவத்தை மூவரும் பெறுகின்றனர். இரவு முழுவதையும் நிலவொளியில் ஆழ்ந்த அர்த்தமுள்ள உரையாடலில் கழிக்கின்றனர். ஸ்ரீகுமார் தமிழகத்தில் சமணம் செல்வாக்குடன் இருந்த காலத்தைப் பற்றியும், தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று வரையறை செய்த மோசடி குறித்தும் பேசுகிறார். சமண மதக்கோட்பாட்டை நிலைநிறுத்தவே சிலப்பதிகாரத்தில் ஊழ்வினைக்கு இளங்கோவடிகள் முக்கியத்துவம் அளித்ததாகக் கூறுகிறார். ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் ராகுல சாங்கிருத்தியன் ஊழ்வினைக் கோட்பாட்டை உருவாக்கியது யக்ஞ்வல்லியர் தான் என்று குறிப்பிட்டுள்ளதையும், அதன் மூலம் ஆளும் வர்க்கங்களுக்கு மக்களைத் திசை திருப்ப மிகச் சிறந்த ஆயுதம் கிடைத்தது என்பதையும் நவீன் சுட்டிக் காட்டுகிறார். சிலப்பதிகாரம் குறித்த சிந்தனையிலேயே எப்போதுமிருக்கும் முல்லை, ”எந்த ஊழ்வினை குறித்தும் கவலைப்படாமல் கண்ணகி மதுரையை எரித்தாள். அதற்குப் பின்னரே மதுராபதி தெய்வம் வந்து அவள் கணவன் ஊழ்வினையால், போன பிறவியில் செய்த தவறினால் கொலையுண்டான் என்கிறது”. என்பதைச் சொல்கிறாள்.

C:\Users\Chandraguru\Desktop\vk51.png.jpg

ஸ்ரீகுமார் சமணத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி குறித்த நீண்ட உரையாற்றுகிறார். ‘மகேந்திர பல்லவன் ஆட்சி காலத்தில்தான் சமணம்  ’அரசு மதம்’ என்ற அந்தஸ்தை இழக்கிறது. ஏனென்றால் அப்போது புதியதொரு வர்க்கம் உருவாகியிருந்தது. அதுதான் வேளாளர் வர்க்கம். பெரும் நில உடமையாளர்கள் உருவாகினர். நிலப்பிரபுத்துவ வர்க்கம் உருவானது. அன்றிருந்த வணிக வர்க்கத்தோடு அதிகாரத்துக்காகப் போட்டியிட்டது. புதிதாக ஒன்று உருவாகி வரும் போது பழையது அழிந்தே ஆகவேண்டும் அல்லவா? ஊழ்வினையை மாற்ற முடியாது என்ற சமணம் சொல்வதற்கு எதிராக விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லி சைவம் மக்களுக்கு நம்பிக்கையளித்தது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தாலும், சைவத்தின் எழுச்சியாலும் சமணம் அழிக்கப்படுகிறது. அப்போது நிறுவனமாக இல்லாமல் இருந்த சைவ மதத்தைப் பரப்பிட தனித்தனி பார்ப்பனர் குழுக்களை மக்களிடையே வேலை செய்ய அரசர்கள் அனுப்பினர் என்று வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி குறிப்பிடுவதைக் கூறுகிறார். இதுபற்றி தமிழறிஞர் கைலாசபதி எழுதியிருக்கும். ‘பேரரசும் பெருந்தத்துவமும்’ என்ற  கட்டுரை முக்கியமானது” என்று ஸ்ரீகுமார் சொல்லி முடிக்கிறார். கைலாசபதியையும், டிடி.கோசாம்பியையும் தான் படிக்காமல் போனது குறித்த வருத்தத்தை நவீன் வெளிப்படுத்துகிறார்.

இளங்கோவடிகள், அவர் படைத்த நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்.  அதன் கதாபாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்திரி, கவுந்தியடிகள், சமண மதக் கோட்பாடுகள், அன்று தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி எல்லாம் உரையாடிய வண்ணம் மதுரை வந்து சேருகின்றனர். மதுரையில் நவீனுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றும் தோழர் கண்ணனும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். கண்ணன் ரஷ்ய எழுத்தாளர் அண்டன் செக்காவ்வின் ’வான்கா’ சிறுகதையை குறும்படமாக இயக்கியவர் என்பது கேட்டு முல்லை மகிழ்ச்சி அடைகிறார்.

மதுரையில் தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர் சாந்தலிங்கனாரைச் சந்திக்கும் வாய்ப்பு தோழர் கண்ணன் மூலம் சாத்தியமாகிறது. சிலப்பதிகாரம் குறித்து அவரிடம் நிறையச் செய்திகளைப் பெற்ற  முல்லை பெருமிதம் கொள்கிறார். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் குறித்த விவாதங்களைப் பற்றி சாந்தலிங்கனார் சொல்கிறார். ”சிலப்பதிகாரம் களப்பிரர் காலத்துக்கும் பின்னர் கி.பி.எண்ணூற்றில் எழுதப்பட்டது என்கிறார் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை. களப்பிரர் காலத்தில் அதாவது கி.பி. ஐநூறில் எழுதப்பட்டது என்கிறார் கே.கே.பிள்ளை. ’களப்பிரர் காலம்’ நிலப்பரப்புகள் பண்படுத்தப்பட்டு வேளாண் பொருளியல் வளர்ந்த காலம், சிலப்பதிகாரம் அதற்கு முந்தைய நகர அரசுகளைப் பற்றியும், வணிக வர்க்கத்தின் செல்வாக்கைப் பற்றியும் பேசுகிறது. எனவே என்னைப் பொறுத்தவரை சிலப்பதிகாரம் களப்பிரர் காலத்துக்கு முன்னால் அதாவது மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்று சாந்தலிங்கனார் தன்னுடைய விளக்கத்தைக் கூறுகிறார். மதுரையில் சிலப்பதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் கோவலன் பொட்டல் என்ற இடத்தையும், கண்ணகி கோயிலையும் பார்த்துவிட்டு குமுளி நோக்கி அவர்கள் புறப்படுகிறார்கள்.

குமுளியிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கேரள வனத்துறையின் பாதுகாப்பிலிருக்கும் கண்ணகி கோயிலைப் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே கோயில் திறக்கப்படும் என்பதை முல்லையின் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இச்சமயத்தில் அவருடைய கட்சித் தோழர் ஒருவரை கரூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்ற செய்தி கண்ணனுக்கு கிடைக்கிறது. மனம் கலங்குகிறார். கைதான தோழரைக் காப்பாற்றிட பயணத்தை முடித்துக் கொண்டு நண்பர்களிடமிருந்து அவர் விடை பெற்றுக் கொள்கிறார். மக்களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகளை காவல்துறையினர் நரவேட்டை ஆடுவது பற்றிப் பேசிய வண்ணம் கண்ணனுக்கு அவர்கள்  பிரியாவிடை கொடுக்கின்றனர்.

C:\Users\Chandraguru\Desktop\milirkal.jpg

இறுதி கட்டப் பயணமாக கொடுங்கலூர் நோக்கி மூவரும் புறப்படுகின்றனர். கொடுங்கலூரில் ஆண்டுதோறும் கண்ணகி கோயிலில் எடுக்கப்படும் விழாவைப் பார்க்கிறார்கள். கண்ணகி நினைவாக சேரன் செங்குட்டுவனால் கொடுங்கலூர் கோயில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. கண்ணகி இங்கு தேவி. பகவதி, காளி என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் ’காவு தீண்டல்’ எனும் சடங்கு குறித்து பிராமண சமுதாயத்தினருக்கு உடன்பாடில்லை. இச்சடங்கில் ‘வெளிச்சப்பாடுகள்’ எனப்படும் பக்தர்கள் ஆபாசப் பாடல்களைப் பாடுகிறார்கள். கோயிலில் கோபத்துடன் குடியிருக்கும் கண்ணகியின் சினத்தைத் தணிப்பதற்கே ஆபாசப் பாடல்கள் பாடுவதாக தலித் சமுதாயத்தினர் சொல்கின்றனர். தலித் அடையாளமாகக் கருதப்படும் இச்சடங்கை நிறுத்துவதற்கு மேல்சாதி இந்துக்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த விழாவுக்குப் பின்னுள்ள அரசியல், தத்துவம் பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கொடுங்கலூரிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல ஸ்ரீகுமார் எர்ணாகுளம் செல்கிறார். பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்ட மகிழ்ச்சியில் முல்லையும், நவீனும் பஸ் பிடித்து சென்னை திரும்புகிறார்கள். வங்காள விரிகுடாவில் தொடங்கிய பயணம் அரபிக் கடற்கரையில் முடிகிறது. பயணத்தின் முடிவில் முல்லை  இரண்டு ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெய்ப்பூரையும், காங்கேயத்தையும், கண்ணகி கதையையும் மாணிக்கப்பரல்கள், மிளிர் கற்கள் இணைப்பதாக முல்லை நினைக்கிறார். அன்று கண்ணகியின் மாணிக்கப்பரல்கள் மதுரையை ரத்தக்களரி ஆக்கியது. இன்று மாணிக்கப்பரல்கள் ஜெய்ப்பூர், கும்ப்பட் நகரத் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கின்றன. ”நான் கண்ணகி கதையோடு இத்தொழிலாளர்களின் அவலத்தையும் ஆவணப்படமாக எடுத்திடுவேன்” என்ற முல்லையின் சூளுரையுடன் பயணம் முடிவடைகிறது.

 –பெ.விஜயகுமார்.

             ——————————————————————-