Writer Muthunagu in Sulundhi Novel Book Review by Anbu Chelvan. Book day Website is Branch of Bharathi Puthakalayam



சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்குப் பின் இரா.முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ வாசிக்கத் தேர்ந்ததும் நேர்ந்ததும் – தற்செயலே! இரண்டுக்கும் இடையிலான இனவரைவியல்ரீதியிலான ஒத்ததன்மை, இரண்டும் வெவ்வேறு பிரதிகள் என்ற பவுதீக நிலையை உடைத்து ஊடுருவி முயங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் வெறுமனே ‘பிரமலைக்கள்ளர்’ வாழ்வியலை மட்டும் பேசும் பிரதி என்பது எத்தனை அபத்தமோ அது போலவே சுளுந்தீ – நாவிதர் வாழ்வியலை மட்டும் பேசுகிறது என்பதும் குறுகிய ஒற்றைத்தன்மையுடைய பார்வையே..! காலத்தில் விரிந்தது காவல் கோட்டம் – ஆறு நூற்றாண்டை தன்னகத்தே கொண்டதென்றால் – சுளுந்தீ – பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு பகுதியை தனக்குள் உறைய வைத்துள்ளது. இரு பிரதிகளுமே கதைகளைப் பேசியபடியே இருக்கின்றன – ‘வளவள’வென! கதை சொல்லும்போது வளவளவெனப் பேசுவதே நம் நாட்டார் மரபு. ‘ஒன்றைக்’ கேட்டால், ஒன்றுக்கு முன் சுழியத்தையும் ஒன்றுக்குப் பின் இரண்டையும் குறித்துப் பேசி ‘ஒன்றை’ உணர்த்துவது நம் கதை சொல்லும் மரபின் கூறாகும். அதன் தொடர்ச்சியே இவ்விரு புதினங்களும். கட்டுசெட்டான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தக் கதைகளை சொல்லியிருந்தால் அதில் வார்த்தைகள் மட்டுமே இருந்திருக்கும் – வாழ்க்கை இருந்திருக்காது.

முத்துநாகுவின் வியக்கவைக்கும் உழைப்பு நாவலின் பக்கங்கள்தோறும் விரவிக்கிடக்கிறது. சரளமாக வந்து விழும் பண்டுவ நுணுக்கங்கள் வியக்கவைக்கின்றன. நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் குடியேற்றப்பட்ட தெலுங்கு பேசும் சாதிகளுக்கு, தமிழ்க்குடிகளின் நிலத்தினைப் பிடுங்கிக் கொடுக்க, குலவிலக்கம் எனும் பாண்டியர் காலத்திய அரச சூழ்ச்சி யுக்தி விரிந்த அளவில் பயன்படுகிறது. சோழர் ஆட்சியில் எப்படி பார்ப்பனர்கள் அரசாங்க ஆலோசகர்களாக, ராஜகுருக்களாக இருந்தனரோ, பாண்டியர் ஆட்;சியில் அந்த இடத்தை ‘சைவ வேளாளர்’களான சைவமடாதிபதிகள் (குலகுருக்கள்) வகித்து வந்தனர் – அதற்கே உரிய எல்லாஅதிகார சவுகரியங்களையும் துய்த்தபடி! அந்த அதிகார சுகங்களை இழந்த ஏக்கம் அருணகிரி குலகுருவிடம் நாவலில் வெளிப்படுகிறது. நாயக்கர் அதிகாரக் கட்டமைப்பில் குலகுருவின் இடம் மறுதலிக்கப்பட்டு அவர்கள் இடத்தில் தெலுங்கு பேசும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைபெற்றதை நாவல் சுட்டிச் செல்கிறது.

வடக்கே கரூர் – அரவக்குறிச்சி, கிழக்கே திண்டுக்கல் – கரந்தமலை தெற்கே வைகையாறு – குன்னுவராயன்கோட்டை, மேற்கே பெரியகுளம் – தேவதானப்பட்டி என கன்னிவாடி நாயக்க பாளையப்பட்டின் கதை நிகழ்வு களம் மிகப் பரிச்சயமான நிலவெளியென்பது பிரதியின்பால் கூடுதல் ஈர்ப்பைத் தருவித்ததை மறுக்கவியலாது. வேட்டுவகுல நாவிதர்களும் வெள்ளாள நாவிதர்களும் இங்கே இருந்துள்ளனர் என்ற வரலாற்றுத் தரவை சொல்லும் முன்னுரையே நாவலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும் வலிமை கொண்டுவிடுகிறது – பிரதி முழுக்க இவ்வாறான பல முடிச்சுகள் – அவிழ்க்க அவிழ்க்க – பல்வேறு பிரதிகளாக வெளிவந்தபடி இருக்கின்றன.

விஜயநகரப் பேரரசின் ஆட்சியதிகார சமூகப்படிநிலை அமைப்பில் சக்கிலியக்குடியின் (வாடன்) நிலை எப்படியிருந்தது என்பதையும் அவர்கள் பிற தெலுங்கு வழி சமூகங்களால் புறக்கணிக்கப்படுகிறவர்களாக நிலை மாறியதையும் தொன்மக் கதைகளின் வழியே காவல்கோட்டத்தில் அறியமுடியும். அந்த வாடன்களின் 18ம் நூற்றாண்டைய நிலை குறித்து ‘சுளுந்தீ’யில் தெளிவாக அறிந்து கொள்ளலாம். குடிமக்கள் நெருப்பைப் பயன்படுத்துவது குறித்து ஆளும் அரச வர்க்கம் எத்தகைய அச்சம் கொண்டிருந்தால் நெருப்பை நேரடியாக குடிமக்கள் உற்பத்தி செய்யக்கூடாது என்றும் அம்மன் அக்கினிக்குண்டத்தில் இருந்து நெருப்பு எடுப்பதைத் தடுக்க அக்கினிக் குண்டங்களை அகற்றுமாறும் உத்தரவைப் போட்டு – நெருப்பு தேவைப்படும் குடியினர் ஒவ்வொரு அரண்மனை எல்லைக்குள்ளும் ஊர்தோறும் ‘தீக்கொளுத்தி’யாக நியமிக்கப்பட்டுள்ள அரண்மனைப் பிரதிநிதி மூலமே குடிமக்கள் அடுப்பு பற்றவைக்க நெருப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று – குடிமக்களின் விடுதலை நெருப்பையும் பரவிடாமல் தடுத்து வந்துள்ளனர் என்பதை சுளுந்தீ வெளிச்சமிடுகிறது. நெருப்பு மட்டுமல்ல – குடிப்படைகளுக்கும் அரண்மனைக்கும் எதிராக ஆயுதம் தூக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில், குடிமக்கள் ஊஞ்சன, நாங்கிழி, ஈச்சந் தடிகளையோ, இரும்புப் பொருட்களையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்திருக்கிறது. வேளாண்பணிகள் உள்ளிட்ட பிற பணிகளுக்கு இரும்பு அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் தேவை எனில், அரண்மனையாரின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்ற நடைமுறை நிலவி வந்துள்ளது.

பண்டுவத்துக்குப் பயன்படும் மருந்து மூலகங்களைக் கொண்டு படைக்கான வெடி தயாரிக்கலாம் என்ற நுட்பத்தை ராவுத்த வெடிப்படையினர் வழி அறிந்ததால், வெகுமக்கள் – ஏன் – மருத்துவம் பார்க்கும் பண்டுவர்களே மருந்துப் பொருட்களை நேரடியாக வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரண்மனை அனுமதி முத்திரை இருந்தால் மட்டுமே பண்டுவத்துக்கான மருந்து வாங்க முடியும் என்ற நடைமுறை அமலில் இருந்துள்ளது. வெடி தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்து கொண்டதால் அந்தக் காலகட்டத்தில் கிணறு வெட்டி முறிக்கும் (பாறைகளை வெடி வைத்து தகர்த்து கிணறு வெட்டும் முறை) முறை கண்டறியப்பட்டு கிணற்றுப் பாசனம் பரவி மானாவாரிகள் நன்செய்யாகவும் புன்செய்யாகவும் வேளாண்மைக்கு பண்படுத்திய நன்மையும் ஏற்பட்டுள்ளது என்பது ஆச்சரியம் தரும் மற்றுமொரு செய்தி. இன்றளவும் திண்டுக்கல் பகுதியில் இராவுத்த வியாபாரிகள் தோல் தொழில் மேற்கொண்டிருப்பதற்கான விதை இந்நாவல் நிகழும் காலத்திலேயே முளை விட்டிருக்கிறது. கத்தை (Currency) முறையின் பயன்பாடும் நாயக்கர் காலத்தில் பரவலாக்கப்பட்டுள்ளது.

சுளுந்தீ பற்ற வைக்கும் – 'தீ ...

இந்நாவல் முழுக்க பதியப்பட்டுள்ள சித்த பண்டுவ முறைகள் பெரும் அறிவுசார் சொத்துகளாகும் – ஆறு மாதக் குழந்தையின் சளி போக்குதல் முதற்கொண்டு அரண்மனை ராணியின் ராஜப்பிளவு அமுங்கவைப்பது வரை – பொம்பளப் புள்ளகளின் மார்பு பெருக்கச் செய்வது முதல் அவர்களின் ‘பெரும்பாடு’ நோய் நீக்குவது வரை – எண்ணற்ற மருத்துவக் குறிப்புகள் ஆசிரியரின் தேடலையும் உழைப்பையும் நிறுவிச் செல்கின்றன. பண்டுவக் குறிப்புகள் மட்டுமின்றி புதினம் நிகழும் காலவெளி, நிலவெளி, சமூகவெளியில் நிகழ்ந்த/திகழ்ந்த சடங்குகள், சாத்திரங்கள், பழக்க வழக்கங்களை நாவல் முழுக்க விரவியிருப்பதன் மூலம் இப்பிரதியை மானுடவியல் பண்பாட்டு ஆவணமாக உருமாற்றும் சித்து வித்தையை தனது எழுத்தின் மூலம் நிகழ்த்துகிறார் – சேங்கொட்டையின் துணிக்குறி பயன்பாடு, வெள்ளாவித்துணிகளின் குலவாரி அடுக்கு, சாணார்களின் பனஞ் சுளுந்தீ, பண்டுவத்தில் மூத்த சமணமுனிகள் சைவமுனிகளால் பரப்பப்பட்ட பொய்க்கதைகளின் மூலம் அழிந்த கதை, பஞ்ச காலத்தில் பசி தீர்த்த புளியங்கொட்டை பிரட்டல், கரையான் புற்று சோறு பசி மூலத் தீர்த்தமாவது, வெங்கமேட்டில் கன்னிப் பெண் பிணங்களைப் புணரும் ‘வெங்கம்’ பய, சினைக்கழுதை ஈத்துக்கு (ஈனுவதற்கு) அலைந்தாலும் பொலிச்சலுக்கு நோங்கும் ஆம்பளக் கழுதைகளைப் போன்ற ‘ஈத்தரப்’ பய, பட்டிவீரன்பட்டி – தருமத்துப்பட்டி பெயர்க்காரணம், நாயக்க அரசில் சாணார், கோமுட்டி, செட்டி குலத்தினருக்கு மட்டும் வியாபாரம் செய்யும் அனுமதி, உப்பை தயாரித்து வணிகம் செய்த உப்புக்குறவன், செஞ்சி சுல்தானுக்கு ‘பண்டாரப்படை’ சேர்த்த பலராமன் குடும்பன், சாணார்கள் தங்களுக்கு மட்டும் தனி நாவிதர் வைத்த காரணம், வேடசந்தூர் புகையிலை விவசாயம், தன (யோனி) மயிர் நீக்க முறை, இழவில் வகுசீர் வாங்குதல், ஆனைப் படையை நிர்வகித்ததன் மூலம் மாவூத்தனான ராவுத்தன், ராவுத்த வெடிப்படையினருக்கு சவரம் செய்த லப்பைகள் – என்று பிரதி வாசித்து முடித்த பின்னரும் நினைவின் ஊடறுக்கும் தரவுகள் பலப்பல – பெரும்பணியாற்றியுள்ளார் முத்துநாகு.

நாவலின் போக்கில், ‘சமூக மாற்றத்துக்கான அழுத்தம், நிலவும் சமூக அடுக்குகளின் கொடுங்கோன்மையில் இருந்தே வெடித்துக் கிளம்பும்’ என்ற உலகளாவிய உண்மை பேசப்படுகிறது. குலவிலக்கமானவர்கள் அனைவரும் குலமற்று ஒன்றாக அரண்மனையை அதன் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரே commune ஆகச் சேர்ந்து செயல்படும் நிலையை உருவாக்கியது ‘குலவிலக்கம்’ எனும் கொடுந்தீமையின் நேர்மறை விளைவு. மருதமுத்து ஆசாரியின் ஒருங்கிணைப்பில் உருவான தாத்தம்பாறை (இப்போதைய டம்டம்பாறையாக இருக்குமோ..?) சனத்திரள் அதன் அடையாளம். மாடன் அதன் அழுத்தம் விளைவித்த வாணவெடி.

பிரதியின் ஆகச்சிறந்த பண்பாக நான் கருதுவது – சித்து வித்தைகளை பிரதி முழுக்கப் பேசிச் சென்றாலும் – வயல் எலி சாக, பாம்பு நடமாட்டம் குறைய, களவு குறைய, பேய் ஓட்ட கோடாங்கி குறி சொல்ல, கிணற்று நீரில் நடக்க என அனைத்து சித்து வித்தைகளையும் – அவற்றினை romanticize செய்துவிடாமல், அவற்றின் மீது புனிதத்தன்மை ஏறிவிடாமல் ராமன், மாடன் மூலமே அவை கண்கட்டு வித்தைகள் மட்டுமே – மாய மந்திரம் ஏதுமில்லை என்ற உடைப்பையும் பிரதியின் வழியே ஆசிரியர் நிகழ்த்திக்காட்டுகிறார்.

தமிழ் புனைவிலக்கியங்களிலும், தமிழ்ச்சமூகம் தொடர்பான மானுடவியல், இனவரைவியல் ஆய்வுக்கான உசாத்துணை ஆவணங்களிலும் தவிர்க்கமுடியாத இடத்தை இந்நாவல் பிடிக்கும் என்பதில் அய்யமேதுமில்லை.

நூல்: சுளுந்தீ நாவல்
ஆசிரியர்: இரா.முத்து நாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம்
விலை: ₹450.00

– அன்புச்செல்வன்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – அன்புச்செல்வன்”
  1. மிகச்சிறந்த விமர்சனம். படைப்பாளி முத்துநாகுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *