பார்ப்பனக் குடும்பங்களின் அழகியல் கூறுகளை மிக அழகாகவும் அழுத்தமாகவும் பிறர் பதிவு செய்து கொண்டிருந்த மணிக்கொடி காலத்தில், மன அடுக்குகளில் உறையும் பொறாமை, குரோதம், வன்மம் ஆகியவற்றை எள்ளல் நடையுடன் எழுதிய முதல் எழுத்தாளராக ரஸிகனைக் கூற முடியும்

பலாச்சுளை

ரஸிகன்

தங்கம்மாள் தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் பலாப்பழத்தில் சுளை எடுத்துக் கொண்டிருந்தள்.  வைத்திநாதய்யர் தஞ்சாவூருக்கு ஈரங்கிக்குப் போயிருந்தவிடத்தில் தன் தகப்பனார் சிராத்தத்திற்கென்று  அதை வாங்கிக் கொண்டு வந்தார்.  ஒரு பாதி முதல் நாள் தேவைக்கு உபயோகப்பட்டபின்  மறுநாள் பாக்கியை ருசி பார்ப்பதற்காக எஜமானி தானே சுளை எடுத்துக் கொண்டிருந்தாள்.  பெரிய நுனி இலையில் சுளைகளை ஒரு ஏட்டிலும், கொட்டைகளை ஒரு ஏட்டிலுமாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் சுளைகளில் இரண்டுக்கு ஒன்றுதான் இலைவரையில் எட்டும்.  மற்றது நடுவழியில் ஞாபக மறதியாய் அவள் வாய்க்குள் விழுந்துவிடும்.

வாசலில் குழந்தைகள் சத்தம் கேட்டது.  சட்டென்று கிட்டஇருந்த அருக்கஞ்சட்டி ஒன்றைக் கவிழ்த்து இலையை மூடிக் கொண்டாள்.  நாலு வயதிருக்கும் இரு குழந்தைகள் உள்ளே ஓடி வந்தார்கள்.  நல்ல சிவப்பு சிரித்த முகம், இடுப்பில் பட்டுக் கயிற்றில் தங்கச் சதங்கை, காலில் வெள்ளிக் காப்பு,  கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோத்த தாயத்து.  “அம்மா பலாப்பழ வாசனெயடிக்கறதே எனக்கில்லையா?” கேட்டான்.  பின்னால் வந்த குழந்தைக்கு இடுப்பில் ஒரு கறுப்புத் கயிறும் ,தேய்ந்த நாய்க் கொடியும் தவிர வேறு ஆபரணம் இல்லை.

தன் குழந்தையிடம் இரண்டு பெரிய சுளைகளைக் கொடுத்து “அவ்வளவுதான் ஒடம்புக்காகாதுரா கண்ணே” என்றாள்.  “நாராயணனுக்கு” என்றான் குழந்தை.   “ஆமாம்.  அவாத்திலே தினம் பழம் வாங்கினபடியேதானிருக்கா” என்று முணுமுணுத்தாள்.  உள்ளதுக்குள் சிறியதாயிருக்கும் இரண்டு சுளைகளை அரைமனதாக எடுத்துக் கொடுத்து “இந்தாடா” என்று கூப்பிட்டு அக்குழந்தையிடம் கொடுத்து “ஓடு இருட்டிப் போச்சு இனிமே நாளைக்கு விளையாடலாம்” என்று கொஞ்சம் அதட்டிச் சொன்னாள்.

திண்ணையில் உட்கார்ந்து புஸ்தகம் பார்த்துக் கொண்டிருந்த வைத்திநாதய்யர் அகமுடையாளைக் கூப்பிட்டு “இன்னும் நாலு சுளை கொடுக்கப்படாதோ? நமக்குத்தானா வயிறு, நேத்திக்கு  வேண்டிய மட்டும் தின்னாச்சு. அவனண்டே ஒரு கூறு கொடு” என்று சொன்னார்.  முக்கால் பாகம் சுளை எடுத்த ஒரு கூறை ஒரு இலைக் கிழிசலைப் போட்டு மூடி “இந்தாடாப்பா உத்தரவாய்ட்டுது, என்னவோ கொட்டி வைச்சிருக்காப்லெதான்” என்று சலிப்புடன் கொடுத்து அய்யர் அதைப் பார்க்காதவண்ணம் வாசற்படிவரை கொண்டு விட்டாள்.



தேத்தாரம்பட்டி அக்கிரகாரத்தில்  வைத்திநாதய்யர் பணக்காரர்.  வெகுநாள் குழந்தையில்லாமலிருந்து  அருந்தவப்புதல்வன் பிறந்தான்.  குழந்தைகளிட்ம் அன்புள்ள அவருக்கு தனக்கு ஒரு புத்திரன் உண்டானதிலிருந்து பிறர் குழந்தைகளிடம் இரட்டிப்பான பிரியம் ஏற்பட்டது.  அவளோ குழந்தைகளை கரிப்பவள்.  தன் குழந்தை இரண்டு மூன்று பிராயம் ஆகி மற்ற  வீடுகளுக்கு செல்லாமலும்  மற்ற குழந்தைகளோடு சேராமலும் இருக்க எவ்வளவோ முயற்சி பண்ணினாள்.  ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவள் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் அடங்கவில்லை.

தெருக்கோடியிலுள்ள கூரைவீட்டு நாராயணனும்  அவனும் இணை பிரியாத தோழர்களானார்கள்.  தங்கம்மாளுக்கு இது பிடிக்கவில்லையென்றாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  ஏனெனில் நாராயணன் தகப்பனார் அய்யருக்கு ஒன்றுவிட்ட மருமகன்.  தவிர நாராயணன் அச்சிறு வயதிலேயே சமர்த்தாகவும் கருத்தாகவும் இருந்தான்.

நாராயணன் வீட்டை நோக்கி விரைந்து செல்கையில் தனக்கு என்று கொடுத்த இரண்டு சிறு சுளைகளையும் வாயில் போட்டுக் கொண்டான்.   தேன் மாதிரி இருந்தது.  அவனுக்கு அதுவரையில் பலாப்பழ ருசி தெரியாது.  அவன் பெற்றோர் பரம ஏழைகள்.  அதிலும் தகப்பன் ரங்காட்டம் ஆடுவதுமாகக் காலம் கழித்து வந்தான்.  அவன் ஸம்ஸாரம் ராதை பாவம் வாயைத் திறக்கக்கூடாது.  திறந்தால் அறைதான். அவளோ நல்ல புத்திசாலி.  பிறரை இரக்கும் தன்மை கிடையாது.  

ஊரிலுள்ள பெண்கள் அவ்வளவு பேரும் தனக்கும் தன் பணத்துக்கும் அடிமைகள் என்ற எண்ணங்ககொண்ட தங்கம்மாளுக்கு அவளைக் கண்டால் ஆவதில்லை.    ராதைபடும் சிரமத்தைப் பார்த்து அய்யர் ஏங்கல் தாங்கலுக்கு ஏதாவது கொடுத்தால் அதை வேண்டாமென்பதில்லை.  தங்கம்மாள் “தவுடு திங்கறதிலெ ஒய்யாரம்” என்று குரோதமாய் பேசுவாள்.

குழந்தை பலாப்பழத்தைக் கொண்டு  வந்தான்.  அடுப்படியில் அவள் இருந்தாள்.  குழந்தையின் கை சுளையைத் தேடிற்று. இரண்டொரு சுளையே இருந்ததால் அவனுக்குச் சட்டென்று அகப்படவில்லை.  அவனுக்கிருந்த அவசரத்தில் தடித்திருந்த தாளைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே “இது தித்திப்பேயில்லியே?” என்றான்.

“அதை இங்கே கொண்டா பார்ப்போம்” என்று கூறைக் கையில் வாங்கி வெளிச்சத்தில் பார்த்தாள்,  அளிந்து கையால் குளசப்பட்ட இரண்டு மூன்ற சின்னச்சுளைகள் தாளால் மூடப்பட்டு மறைந்து கிடந்தன.  “அய்யோ, இப்படிக் குழந்தையை ஏமாத்துவாளா ஒரு பாவி” என்று கூறைக் கீழே போட்டுவிட்டு குழந்தையை வாரிக் கட்டிக் கொண்டாள்.   தாய் மடியில் படுத்தபடியே அவன் தூங்கிவிட்டான்.  அவளும் கண் அயர்ந்தாள்.



யாரோ வாசற்கதவை அவசரமாய்த் தட்டும் சத்தம் கேட்டது.   வைத்திநாதய்யர் நின்றார்.  “குழந்தைக்கு உடம்பு சரிப்படலை அம்மா, வாயிலெடுக்கிறது வயிற்றாலும் போறது சித்த வாயேன்” என்றார்.  தெருத்திண்ணையில் படுத்திருந்த அடுத்த வீட்டுக் கிழவியிடம் குழந்தையைப்  பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவர் பின்னே சென்றாள்.  மார்கழி மாதம்.  பொசபொசவென்று தூறல் விழுந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் பேச்சுக் குரல் காதில் விழுந்தது.  வைத்திநாதய்யர் தன்னைத் தேடிவந்ததின் உண்மையை ஊகித்தாள்.  காலரா என்று அடுத்த வீட்டு ஸ்திரீ பரப்பியபடியால் எவரும் வரவில்லை.

குழந்தை “அய்யோ வயத்தவலி தாங்கமுடியவில்லையே” என்று அலறிக் கொண்டிருந்தான்.  தங்கம்மாள் தலைவிரி கோலமாக சாபமிட்டுக் கொண்டிருந்தாள்.   ராதையைக் கண்டதும் “எங்கொழந்தை பொழெப்பானா சொல்லேன்” என்று காலைப் பிடிக்காத தோஷம் கேட்டாள்.

கலியாணமாவதற்கு முன் மருத்துவத் தொழில் புரிந்து  காலக்ஷேபம் செய்து வந்த தன் தாய் செய்வதை கவனித்து வந்ததால் தடுமாற்றமின்றி சமையற்கார கிழவியின் உதவியைக் கொண்டு செவ்வனே செய்தாள்.  குழந்தை குறட்டைவிட ஆரம்பித்தான்.  

உள்ளூர் நாட்டு வைத்தியன் காலையில் வந்து மந்தத்திற்கு மருந்து கொடுத்தான்.  அவனுக்கு ஒரு ரூபாயும், படியரிசியும் தங்கம் கொடுத்தாள்.  ராதை கிளம்பினாள்.  “சித்தெ இரு” என்று சொல்லி பாக்கியுள்ள ஒரு கூறை எடுத்துக் கொடுத்தாள்.  “வாண்டாம் அம்மாமி.  நீங்க நேத்திக்கி குழந்தை கிட்டக் குடுத்து அனுப்பிச்ச பழத்தைச் சாப்பிடடு எனக்கு வயர் நரஞ்சு போச்சு” ராதை சிரித்தாள்.

“ஏதோ..” தங்கம்மாள் ஆரம்பித்தாள் “அது கடக்கு நாழியாச்சு” ராதை விர்ரென்று வீட்டுக்குப் போய்விட்டாள்.

அடுத்த வாரம் வைத்திநாதய்யர் வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடைபெற்றது.  குழந்தைக்கு உடம்பு சரிப்படாததினம் வேண்டிக் கொண்டபடி   ராதைக்குக் கொடுப்பதற்காக காலிறங்கின புடவை வாங்கினாள்.  ஆனாள் இடைவிடாமல் லோட்டாப் போடும் தேசைக் குப்பன் பாரியை லோகாம்பாளுக்கு கொடுத்து விட்டாள்.

அதற்கு ஒரு காரணமும் சொல்லிக் கொண்டிருந்தாளாம். “அஸலான பலாப்பழம் இரவது சொளெயிருக்கும் குடுத்தேன், அது வாண்டான்னுட்டு எரிஞ்சுட்டுப் போய்ட்டா.  அவ புள்ளே  கண்ணுன்னா எங்கொழந்தைக்கி அப்படி உடம்புக்கு வந்தது.  பெரியவா பண்ணின புண்ணியம் தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு” என்றாளாம் தங்கம்மாள்.

பாரதமணி, 09.10.1938

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *