காடோடி
~~~

நூலில் இடம்பெற்ற முக்கிய பாத்திரங்கள் :

நிறுவன மேலாண் இயக்குனர் குவான்,தொல்குடி முதியவர் பிலியவ், தொல்குடி இளைஞர் ஜோஸ்,சமையல் பெண்மணி அன்னா,மேலாளர் ஒமர்,இணைமேலாளர் ஆங்,ஆண்ட்ரூஸ்…..இந்தக் கதையை நமக்கு சொல்லும் கவான். உள்ளிட்டோர்…

முழுவதும் காடுகளைக் கொண்ட போர்னியோ பெருந்தீவு, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் மலேசியா,இந்தோனேசியா,புருணை ஆகிய மூன்று நாடுகளின் பகுதிகளாகத் துண்டாடப்பட்டது.

” எண்பதுகளின் இறுதிதொடங்கி தொண்ணூறு தொடக்கம் வரையிலான நான்கு ஆண்டுகள் போர்னியோவில் மலேசியாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வெட்டுமர நிறுவனத்தின் சார்பாக ஒரு மழைக் காட்டைக் கொன்றோம். என்றும்,கால் நூற்றாண்டு காலம் தனது நினைவிலேயே வாழ்ந்திருந்த காடொன்று இந் நூலுக்கு இடம் மாறியிருக்கிறது என்றும் கூறுகிறார் எழுத்தாளர்.

டாலர்! டாலர்!! டாலர்!!!

நூலாசிரியர் எழுதுகிறார்:

எம் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் குவான்,’நன்கு பருத்து நெடிதுயர்ந்த மரத்தை அப்படியே காதலியை அணைப்பது போல கட்டியணைத்து முத்தமிடுகிறார்.’பரவாயில்லையே மரவணிகராக இருந்தாலும் மரங்களின் மீது என்னவொரு காதல்’ என்றெண்ணும் போதே “எப்படியும் ஆயிரம் டாலர் போகும்” என்று அதிரடிக்கிறார்.அவர்களைப் பொறுத்தவரை,
மரம் அல்ல…..

மரம் என்றால் அது இலைகள் அல்ல,பூக்கள் அல்ல,காய்கள் அல்ல.ஏன் அது மரமே அல்ல.மரம் என்றால் அது வெறும் டாலர்,டாலர்,டாலர் மட்டுமே என தொடங்குகிறது முதல் அத்தியாயம்.

எல்லாவற்றுக்கும் விலை:

ஆண்மை விருத்தியாகும் என்கிற பெயரில்,லயாங் குருவியின் கூடுகளால் தயார் செய்யப்படும் சூப்பும்கூட இருபது டாலர் பணம் பண்ணப் பயன்படுத்தப்படுகிறது.போர்னியோக் காடுகளின் இருவாச்சிப் பறவையின் அலகுக் கொண்டைக்குத்தான் அதிக விலை. யானைத் தந்தத்தைவிட அதிக விலை கொடுத்து இதை வாங்குவதால் இதை இருவாச்சித் தந்தம் என்றே அழைக்கிறார்கள்.

குருவிங் மரத்தின் இறகுக் கனிகள் உலங்கு வானூர்தி போல சுழன்று மிதந்து கீழே இறங்குபவை. இக்கனிக்கு அயல்நாட்டில் நல்ல சந்தை மதிப்பு.ஏனெனில் இதன் பருப்புதான் அழகுசாதனப் பொருட்களின் மூலப் பொருள்.

ஈக்கான் கலோய். ..
இதுவொரு வளர்ப்பு மீன் வகை .இதன் தாடையின் கீழே இருபக்கமும் உள்ள தாடி போன்ற தொங்குமுடியின் நீளத்திற்கேற்ப அதன் விலை கூடிக் கொண்டே போகும்.

கொல்லப்படும் குரங்குகள்

பிரைமேட் பட்டியலில் எட்டாவதாகப் பார்த்த ஓரிட வாழ்வியான சாம்பல் குரங்கை பிணமாகப் பார்த்ததை உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் நூலாசிரியர்.

“நெஞ்சு முழுக்க ஆற்றாமை பொங்கிப் பெருக ஒமரிடம் கேட்கிறேன்,’குரங்கு இறைச்சியைக்கூட விட்டு வைக்க மாட்டார்களா?’. அவர் சொல்கிறார், “இது கோரோசனைக்காக கொல்லப்படுகிறது. விலங்கின் குடலுக்குள் உணவல்லாத வேற்றுப் பொருள் நுழைந்துவிட்டால் அதைச் செரிக்க இயலாத நிலையில் அப்பொருளைச் சுற்றி திரவம் சுரந்து, சுற்றி மூடிவிடும்.நாளடைவில் இப்பொருள் இறுகிக் கல் போன்று ஆகிவிடும்.

கோரோசனை என்றழைக்கப்படும் இது நாட்டு வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது”
“கொன்று அறுத்துப் பார்த்து இந்தக் குரங்கில் அது இல்லையென்றால் இன்னும் ஒரு குரங்கைக் கொல்லுவார்கள்” என்கிறார் ஒமர்.

இருவாச்சியின் கலையுணர்வு

இருவாச்சிப் பறவைகள் மரப் பொந்துக்குள் வசிக்கும்.பெண் இருவாச்சி முட்டையிட்டு அடைகாக்கும்போது ஆண் பறவை மரப் பொந்தின் முன் பகுதி முழுவதையும்,தன் இணைக்கு உணவு தருமளவு துளை விட்டு,அடைத்துவிடும். குஞ்சு பொறித்ததும் பெண் பறவை அந்த அடைப்பை உடைத்து வெளியே வரும்.பிறகு இருவரும் இணைந்து பழையபடி கூட்டை அடைத்துவிட்டு,துவாரம் வழியே குஞ்சுகளுக்கு உணவளிப்பார்கள்.

கானகத்தின் குரல்: சூழலியல் ...

எழுத்தாளர் நக்கீரன் 

பாடம் சொல்லும் உயிர்கள்

ஒரே குகையில் பகலில் ஆயிரக்கணக்கான வௌவால்கள், இரவு நெருங்கியதும் இரை தேடி முடித்து திரும்பி வாசலில் காத்திருக்கும் லயாங் குருவிகளுக்கு வழிவிட்டு வெளியேறும் அற்புதம் மனிதர்களுக்கு பாடம் கற்றுத் தருவதாக உள்ளதல்லவா?

தொல்குடிகள்

தொல்குடி மக்கள் வசிக்கும் பகுதி கம்போங் எனப்படுகிறது. கொற்றவையை தெய்வமாக வணங்கியவர்கள்,ஆங்கிலேயர் நுழைவுக்குப் பின் கிறுத்தவ மத்தைத் தழுவும்படியாயிற்று. விருந்தோம்பலில் மிகச் சிறந்தவர்கள் அம்மக்கள். பிரியன் மாத்தி என்பது, மணமகன்,பெண் வீட்டாருக்கு சாகும் வரை பிரியன்(தட்சணை மாதிரி)கொடுக்க வேண்டும். தொராஜா இனமக்கள் இறந்தவர் உடலை பதப்படுத்திக் காத்து வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தொல்குடிகள் தாங்கள் வீடு கட்டும் முன் அந்த இடத்தில் உள்ள மூதாதை மரத்திடம் அனுமதி பெற்றே வீடு கட்டுகிறார்கள்.

பிலியவ் :

மரம் வெட்டும் நிறுவன அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி பூசை செய்து தருமாறு தொல்குடி முதியவர் பிலியவ்வை அழைக்கிறார்கள்.அடுத்த நாள் காலையில் பூசை செய்யும் இடத்திற்கு அனைவரும் வாகனத்தில் சென்று சேரும் முன்னதாக, பிலியவ் கால்நடையாகவே சென்று சேர்ந்திருப்பார்.

நீங்களும் வாகனத்தில் வந்திருக்கலாமே என்ற கேள்விக்கு, தனக்கு வண்டியில் ஏறத் தெரியாதென்றும், உங்கள் வண்டி கண்டுபிடிக்கும் முன்பே கடவுள் கால்களைக் கண்டுபிடித்து விட்டார் என்றும் கூறுகிறார். அவர் எப்போதும் எந்தவித வாகனத்திலும் பயணிக்கவில்லை, கால்நடையாகவும், தன்னுடைய சிறிய படகு மூலமாகவுமே சுற்றித் திரிகிறார்.

ஜோஸ் :

ஓட்டுனராக பணிபுரியும் ஜோஸ், தான் விரும்பி அந்த வேளையைச் செய்யவில்லை என்கிறார்.
பள்ளிக்கூடம் என்ற ஒன்றுக்கு நாங்கள் அனுப்பப் பட்டோம், அங்கே நாங்கள் இதுவரை அறிந்திராத ஒரு மொழியில் பாடம் சொல்லித் தந்தார்கள். அதை நமது தேசிய மொழி என்றார்கள்.
அங்கே எங்கள் காட்டுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாததை சொல்லிக் கொடுக்கிறார்கள். எதுவுமே புரியவுமில்லை ஒட்டவுமில்லை. பாதிப் பாதி மொழி,பாதிப் பாதி வாழ்க்கை.அதை விட்டுவிட்டு மீண்டும் கம்போங்( காட்டுக்குள் உள்ள குடியிருப்பு) வந்தால் இந்த வாழ்க்கையும் தெரியவில்லை.எம் தலைமுறையினர் மனசுக்குள் ஒரு ஆளாகவும் உடம்பளவில் ஓர் ஆளாகவும் வாழப் பழக வேண்டியிருக்கிறது என்கிறார்.

அதனால்தான் நம் நாட்டிலும், மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற,அந்தந்தப் பகுதிக்கேற்ப தனித் தனிப் பாடத்திட்டம் என்கிற கோரிக்கை தொடர்ந்து வலுவாக வைக்கப்படுகிறது.

சுரண்டல்

மரம் வெட்டுவதற்கு ஒரு கன அடிக்கு ஐந்து அல்லது ஆறு காசுகள் கூலியாக கொடுக்கப்படும். அதிலும் உதவியாளருக்கு அவர் இரண்டு காசுகள் தர வேண்டும்.ஆனால் மரத்தை மாற்றிவிடும் தரகர் பெறும் தொகையோ கன அடிக்கு நூறு காசுகள்.

மூதாய் மரம்

சிலாங்கன்பத் , மிக வயது முதிர்ந்ததும் ஐந்து பேர் சேர்ந்தாலும் கட்டியணைக்க முடியாததுமான, வானத்தை உரசும் உயரம் கொண்ட பிரமாண்டமான மரம். அது தாய் மரமாக இருக்கலாம். இங்குள்ள மரங்களனைத்தும் அதன் கனிகளால் உருவானவையாக இருக்க வேண்டும்.

அந்த மரம் என்னை வெட்டவேண்டாம் என்று சொல்லியது என்கிறார் பிலியவ்.
ஆனாலும் அந்த மரம் வெட்டப்படும் என்பதை உணர்ந்து,அதைப் பார்க்க விரும்பாத ஒமர் தனது வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.

எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவல் ...

கவான்,பிலியவ் உள்ளிட்ட யாருக்கும் தெரியாமல் துணை மேலாளர் ஆங் மேற்பார்வையில் அந்தத் துயரம் நடத்தப்படுகிறது.ஆம், சிலாங்கன்பத் வெட்டிச் சாய்க்கப்படுகிறது .இறுதியில் சிலாங்கன்பத்ன் அடிமரத்தை இழுத்துச் செல்ல மூன்று ட்ராக்டர்களைக் கொண்டு கட்டியிழுத்தும் முடியவில்லை.குவான் சொல்கிறார்,அந்த அடிமரம் வர மறுக்கிறது எனவும் இதை வெட்டாமலிருந்திருக்கலாமெனவும் கூறுகிறார்.

தொடக்கத்தில் காட்டுக்குள் நுழையும்போது சூரியக் கதிர்கள் தரையில் விழமுடியாத அளவு நெடிதுயர்ந்த மரங்களும் பறவைகள்,பூச்சிகளின் ஓயாத கீச்சொலிகளுமாக இருந்த காடு வெட்டிச் சாய்க்கப்பட்டு பெரிய மயானம் போல காட்சியளித்தது.

சிலாங்கன்பத் இருந்த இடத்தில், கவான் உடனிருக்க,
மனிதர்கள் இறந்தால் இசைக்கும் துயரம்தோய்ந்த இசையை மரம் இறந்ததற்காக குழலில் இசைக்கிறார் பிலியவ்.,அன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் இடைவிடாது வானம் ஓவென்று பேரிரைச்சலுடன் அழுது தீர்த்தது………

வாசிக்கும் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் தட்டியெழுப்பும் வலிமை படைத்த நூல் இது.

அமேசான் முதல் போர்னியோ வரையிலான பெரிய காடுகள் மட்டுமின்றி லாப வெறிக்காக வெட்டப்பட உள்ள ஒவ்வொரு மரத்தையும் நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்கிற தவிர்க்க முடியாத வேட்கையை நமக்குத் தருவதே இந்நூலின் மிகப் பெரிய வெற்றி.

காடோடி
~~~

நூல் அறிமுகம்
கு.ஶ்ரீவித்யா

ஆசிரியர்
நக்கீரன்

வெளியீடு
அடையாளம்

கு.ஶ்ரீவித்யா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு.

One thought on “நூல் அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் காடோடி- கு.ஶ்ரீவித்யா”
 1. வணக்கம்,

  அடையாளம் வெளியீடு தற்போது விற்பனையில் இல்லை.

  நக்கீரன் தனது காடோடி பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

  முகவரி:

  காடோடி

  0,6 வி.கே.என். நகர்,

  நன்னிலம் – 610105,

  திருவாரூர் – மாவட்டம்.

  மின்னஞ்சல்: [email protected]
  அலைபேசி: 8072730977

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *