‘அரசியல்’ எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது ‘பெரியாரின் எழுத்துக்கள்’ என்றால், ‘சூழல் நீதி’ பற்றி என்னிடம் உரையாடியது ‘நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்’. எந்த ஒன்றையும் அரசியல் படுத்தும்பொழுது ‘அறச்சீற்றம்’ ஏற்படுகிறது. அந்த வகையில், கரிசனப் பார்வையாக, ஏதோ நாம் இயற்கைக்கு செய்யும் சேவை என கருதிக் கொண்டு இருந்த என் ‘சூழல் அக்கறையை’ தன் எழுத்துக்கள் மூலம் என்னை அரசியல்படுத்தி அது ‘நம் உரிமை, நம் கடமை’ என்ற பருந்துப் பார்வையை தந்தவரும் அவர் தான். இன்னும் அவரை பற்றியும், அவர் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் விவரித்துக் கொண்டே போகலாம். அதற்கு வேறு ஒரு தருணம் அமையும் என்று நம்புகிறேன். சமீபத்தில் அவர் சென்னை வந்திருந்தபோது, அவருடன் சேர்ந்த ஒரு பள்ளிக்கரணை பறவை காணல் நிகழ்வும், கலந்துரையாடலும் அமைந்தது. அந்த அனுபவத்தையும் தனியாக வேறு ஒரு பதிவில் நீட்டி முழக்குகிறேன். அந்த கலந்துரையாடலில், அவர் தமிழ் சொற்களுக்கு தரும் முக்கியத்துவத்தை கூர்ந்து கவனித்தேன்.

மறை நீர் – Virtual Water - அறிவியல் ...

மறை நீர்

அப்பொழுதிருந்து எனக்கும் ‘சொற்கள்’ மீது ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. ஏனென்றால் சொற்கள் என்பவை எனக்கு பிடித்த ‘வரலாறு’ செய்திகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கு முன்னும் அவர் தமிழ் சமூகத்திற்கு பல சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளார். எ.கா. மறை நீர் (Virtual Water), அவர் எழுத்தில் தான் zinc என்பதற்கு துத்தநாகம் என்பதை அறிந்தேன். ‘நீர் எழுத்து’ புத்தகத்தை வாங்கி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும் வேண்டுமென்றே தவிர்த்து வந்தேன். ‘பால் அரசியல்’ படித்துவிட்டு இனி பால், டீ, காபி அருந்துவதில்லை என்ற முடிவுக்கு வந்து, பைத்தியம் பிடித்ததால் நான் அடைந்த வேதனை அந்த மனுஷனுக்கு தெரியாது.

ஆகையால் இந்த ‘நீர் எழுத்து’ படித்தால் பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை கடைபிடிக்க வேண்டுமே, இல்லையெனில் என் குற்றவுணர்வு கொள்ளுமே என்ற அச்சம் தான் அதற்க்கு காரணம். ‘விகடன் விருது’, அவர் முகநூலில் பல்வேறு நண்பர்களின் நூல் பற்றிய மதிப்பீடுகள், வெவ்வேறு மாவட்டங்களில் நூல் பற்றிய கலந்துரையாடல்கள் ஆகிய தூண்டுதல்களின் பேரில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது முன் பகுதியில் “சொற்களை” பற்றி சொல்ல வந்த செய்தியை தொடர்கிறேன். இந்த நூலில் சுய நினைவோடு, சொற்களை கவனிக்க துவங்கினேன். விளைவாக கீழே உள்ள தமிழ் சொற்கள் என் மனதில் பதிந்தன.

Acquifier – நீரகம்
Ice – ஆலி
Pumpset – எக்கி
Hormone – இயக்குநீர்
Cloudburst – நீரிடி
Electron – எதிர்மின்னி

இந்த சொற்களுக்கு எல்லாம் தமிழ் சொற்கள் தெரியாமல் தடுமாறியுள்ளேன். அல்லது வேறு சொற்களை பயன்படுத்தி வந்துள்ளேன். உதாரணமாக, hormone என்பதற்கு ‘சுரப்பி’. மேலும், “நீர்” என்பதில் நீ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘வழிக்காட்டு’. தண்ணீர் என்ற வார்த்தையில் “தண்” என்றால் ‘குளிர்மை’. தமிழில் நீருக்கு வழங்கிய இன்னொரு பெயர் ‘ஆலம்’. ‘தூம்பு’ எனில் ஓட்டை தூம்புக் கை என்பது மருவியே ‘தும்பிக்கை’ ஆனது என்ற செய்தியும். கூடுதலாக சுரப்பு நீர், கரப்பு நீர், மதகு, துரவு, குமிழி என நீர் சார்ந்த கட்டமைப்பின் பல்வேறு சொற்கள் என்று இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.இவரது எழுத்துக்களில் ஒரு இளைஞனாக எதுவெல்லாம் என்னை ஈர்த்ததோ அதை இங்கே பட்டியலிட முயற்சி செய்துள்ளேன்.

பசுமை இலக்கியம்: வாசகரின் தேடல் ...

“நீர் எழுத்து” எழுதிய எழுத்தாளர் நக்கீரன்

முதலாவதாக, இவரின் எழுத்துக்கள் எடுத்துரைக்கும் வரலாற்று குறிப்புகள். எவை எல்லாம் நாம் புதிது என்று கருதுகிறோமோ அதையெல்லாம் வரலாற்று குறிப்ப்போடு எடுத்துக் கூறி நாம் தான் படிக்கவில்லை அல்லது சொல்லித்தரப்படவில்லை என்று நம் அறியாமையை போட்டு உடைப்பது,

1) சென்னையில் குடிநீர் விற்பனை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. (தண்ணீர் இன்று வியாபாரம் ஆகிவிட்டது என்ற கூற்றிற்கு நேரெதிரான ஒரு வரலாற்று செய்தி)

2) “நீரின்றி அமையாது உலகு” என்பதை நற்றிணை முதல் பாடலில் கபிலர் சொன்னதை தான் வள்ளுவர் திரும்ப சொன்னார் என்பது.

3) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் ஆறுகள் இணைப்பு நடந்துள்ளது.

4) நீருக்கான போர் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என முடிந்தவரை வரலாற்றை தோண்டி எடுத்து விடுவார்.

ЧЕТЫРЕ РЕКИ (Часть 2) | Блог Леонида Падуна

ஆறுகள் இணைப்பு

அடுத்ததாக, வேறு கோணங்கள் :

1) ‘ஆறுகள் இணைப்பு’ என்ற அத்தியாயத்தில் ‘புவியியல் பாதிப்பு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பார்வை இதுவரை யார் பேசியும் நான் கேள்விப்படவில்லை. ஆறுகளின் ‘தடம் மாறுதல்’ – இயற்கையின் இந்த ஆற்றலை மீறி இயங்குவது எவ்வளவு கடினம் என்பது தெரிந்தோ, தெரியாமலோ ஆறுகள் இணைக்க பேரணி நடத்தியும், missed call கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை நினைத்தால் கடுப்பும், சிரிப்பும் தான் வருகிறது.

2) காடு என்றால் வெறும் மரங்கள் என்ற சிந்தனையை மாற்றியது அவர் பேச்சுக்கள் தான் (காடோடி இன்னும் படிக்கவில்லை). அதை போலவே இந்த நூல் மூலம், ஏரி என்பது ஒரு தனித்த உறுப்பல்ல. மாறாக அது நீர்ப்பிடிப்பு பகுதி, முழுக்கடை, ஆயக்கட்டு, கரைநீளம் ஆகிய நான்கு பரிமாணங்கள் கொண்டது என்ற பார்வை கிடைத்தது.

Hard Water Solutions Ranked

அடுத்ததாக, சுவையான மற்றும் அறிவியல் செய்திகள்:

1) அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் மொத்தமாக 3400 கன மைல்கள் அளவுக்கு நீர் உள்ளது.

2) 2012 ஆம் ஆண்டின் கணக்கின்படி ஒரு பெண் நீருக்காக 173 கி.மீ நடக்கிறார். ‘தண்ணீர் மனைவிகள்’ பற்றிய செய்திகள்.

3) வட அமெரிக்காவின் பாக்கெட் மவுஸ், கங்காரு எலி என்கிற இரண்டு உயிரினங்கள் நீரே அருந்துவதில்லை.

4) நீர் மூலக்கூறில் ஹைட்ரஜன் எனும் நீரிய அணுவை விட ஆக்ஸிஜன் எனும் உயிர்வளி அனுவின் எடை 16 மடங்கு அதிகம்.

5) ஆவாரஞ்செடி மற்றும் வெட்டிவேர் சேர்க்கும் நீர்வளம் பற்றிய செய்திகள்.

6) ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 17 இலட்சம் கிணறுகள் இருந்தன.

7) நீர்நிலைகளை கண்காணிக்க இருந்த ‘லஸ்கர்’ என்ற பதவி பற்றிய செய்திகள்.

8) ஒரு லிட்டர் எரிபொருளைக் கொண்டு சாலையில் கிலோ மீட்டருக்கு 24 டன் பொருளை நகர்த்த முடியும். ரயிலில் 85 டன். ஆனால் நீர்வழி போக்குவரத்தில் 105 டன் நகர்த்தலாம்.

9) மிக முக்கியமாக – தமிழ்நாட்டின் நில அமைப்பில் நீர் ஊடுருவும் தன்மை கொண்ட மண்வாகு வெறும் 27% மட்டுமே உள்ளது. இன்னும் சுவைப்பதற்கும், பரப்புவதற்கும் பல்வேறு செய்திகள் கொண்டுள்ளது இந்த நூல்.

நீர் எழுத்து நூலில் இருந்து – 4 ...

தோழர் லீலாவதி

நம்மை அரசியல்படுத்தும் நிகழ்வுகள் அதை சுற்றி அவர் வைக்கும் ஆழமான கேள்விகள் :

1) திருப்பூரில் முதல் இரண்டு நீர் திட்டங்களை தானே நிறைவேற்றிய அரசாங்கம். மூன்றாவது திட்டத்தை பெக்டெல் நிறுவனத்துக்கு கொடுத்த தனியார்மய அரசியல்..

2) சென்னையில் ஆண்டுக்கு 17 டிஎம்சிக்கும் மேலாக இயற்கையே உப்பு நீக்கி மழையாக தருகையில் அதை சேமிக்க வழி செய்யாது யாருடைய கல்லாவை நிரப்ப கலைஞர் ஆட்சியில் மீஞ்சூர் ஆலையும், அம்மா ஆட்சியில் நெமிலி ஆலையும் கொண்டுவரப்பட்டது என கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு எதிரான கணைகள்.

3) தோழர் லீலாவதி படுகொலை பற்றிய சம்பவம்.

4) உலகின் 85% நீரை 12% மக்களே நுகர்கின்றனர் என்ற செய்தி மூலமும், மும்பையில் 5 பேர் வாழும் அம்பானியின் ‘ஆன்டில்லா’ என்னும் குடிசைக்கு மாதம் ஒன்றுக்கு 5 இலட்சம் லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறது என்ற செய்தியின் மூலமும் ‘நீர் பங்கீட்டின் சமமின்மையை’ கடுமையாக சாடுகிறார்.

5) உலக நீர் விநியோகத்தில் வெறும் 5% மட்டுமே தனியார் நிறுவனங்களின் கையில் உள்ளது. ஆனால் இதன்வழி கிடைக்கும் வருமானம் உலகப் பெட்ரோலிய வருமானத்தில் பாதியளவு என்ற கூற்றின் மூலம் தனியார்மயத்தின் வணிக பசியின் முகத்திரையை கிழிக்கிறார். இப்படி இன்னும் எழுதி கொண்டே போகலாம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரி மாணவரும், ஒவ்வொரு அரசியல் பிரமுகரும், ஒவ்வொரு அரசு அதிகாரியும் அவசியம் வாசித்தே ஆக வேண்டிய நூல். ஏற்கனவே பொறுப்புகள் அதிகம் உள்ளதே, இப்படி சூழல் சார்ந்து இயங்குவது குறைந்து விட்டதே என்ற கவலையும், புலம்பலும் எனக்குள்ளே அதிகம்.

இந்நூலை வாசித்த பின், நம் சுமையையும், பொறுப்பையும் கூட்டியுள்ளார். இன்னும் ‘காடோடியும்’ (புத்தகம் இருக்கிறது), ‘கார்ப்பரேட் கோடரியும்’ (புத்தகம் கிடைக்கவில்லை) படிக்காதது நல்வாய்ப்பாக கருத வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது இவரது எழுத்துக்கள்.  நீர் எழுத்துக்கு நன்றியும் பாராட்டுகளும்.
இப்படி எழுதினால் யாருக்கு தான் வாசிக்க தோணாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *