(எழுத்தாளர் நீல.பத்மநாபன் (Neela Padmanabhan) எழுதிய ‘பிஞ்சு உள்ளம்’ (Pinju Ullam Short Story) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)
பிஞ்சு உள்ளத்தில் கலந்த நஞ்சு
நாம் அன்றாடம் காணும் காட்சியை வேறுவிதமாகக் காட்டி வியக்கவைக்கும் ஒரு புகைப்படத்தைப் போலவும், நாம் தினமும் பார்க்கும் ஒருவரை வேறொருவராக மாற்றிக் காட்டும் தேர்ந்த ஒப்பனையைப் போலவும் செய்நேர்த்தி கொண்டதாக மட்டுமே இலக்கியம் இருப்பதில்லை. நம்முடைய வாழ்வில் நாம் அவிழ்க்கத் தயங்குகிற ஒரு முடிச்சின் இரகசியத்தை, நம் அருகில் வந்து, தோளணைத்துக் காதில் சொல்லுகிற ஒன்றாகவும் இலக்கியம் இருக்கிறது. நாம் உரத்துப் பேசத் தயங்குகிற ஒரு விசயத்தை, அல்லது மழுப்பலாகக் கடந்து செல்கின்ற ஒரு விசயத்தை உறுதியாக நின்று நம்மிடம் பேச,விவாதிக்க இலக்கியமே முயல்கிறது.
மனிதச் செயல்பாட்டின் அடிப்படையான பாலுணர்வு பற்றிய போதுமான விழிப்புணர்வோ, அதை ஆரோக்கியமாகக் கைக்கொள்ள வேண்டிய போதுமான வழிமுறைகளையோ கொண்டிராத இச்சமூகத்தில், அதை முறையற்று ஊதிப்பெருக்க மட்டும் எண்ணற்ற வழிகள் உள்ளன. இதில் பள்ளிகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம்! எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் இலக்கியம் இதனையும் கண்ணுறத் தயங்கியதில்லை. அப்படியான ஒரு சிறுகதையே எழுத்தாளர் நீல.பத்மநாபன் (Neela Padmanabhan) எழுதிய ‘பிஞ்சு உள்ளம்’.
ஆசிரியர் என்பவர் மாணவனுக்குப் பாடத்தை மட்டும் கற்றுக் கொடுப்பவராக இல்லாமல் பருவ மாற்றத்தில் அவனிடம் ஏற்படுகின்ற பல்வேறு நடத்தை மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அவனை நல்வழியில் நெறிப்படுத்துபவராக இருத்தல் வேண்டும். அது, பருவகாலத்தின் தன்மையறிந்து,நிலத்தின் தன்மையறிந்து, பயிரின் தன்மையறிந்து செயல்படும் ஒர் உழவனின் செயலுக்கு ஒப்பானது. மாணவர் மனத்தில் விளையும் களைகளை அறிந்துஅவற்றை வேருடன் பிடுங்கி எறியும் வித்தை தெரிந்தவராக இருப்பவரே நல் ஆசிரியர்.
பதின் பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள், பாலியல் இச்சைகள், எதிர் பாலின ஈர்ப்புகள் பற்றிய போதுமான புரிதலை ஏற்படுத்தும் விதமாக நம் சமூகமும் பள்ளியும் நடந்துகொள்வதில்லை. மாணவர்கள் இவை குறித்த புரிதலை இந்த அரைகுறை சமூகத்தில் இருந்து தாமே கற்றுத் தேறுகிறார்கள்; பலர் விழுந்து விடுகிறார்கள் ; பலர் அவை குறித்த உள நெருக்கடிகளோடே அப்பருவத்தில் வாழ்கின்றனர். எப்படிக் கேட்பது? எப்படிச் சொல்வது? என்ற தயக்கமும் அச்சமும் இவை குறித்து மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பேசவிடாமல் தடுக்கின்றன.
மாணவர்களிடம் ஏற்படும் பாலியல் நெறிபிறழ் நடத்தைகள் பொதுவானவையல்ல. ஒவ்வொரு மாணவனின் இயல்பு, குடும்பநிலை, வாழும் சமூகச் சூழல் என அனைத்தையும் உள்ளடக்கியது. ஆசிரியர் இவைகளை அறிந்தே மாணவர்களை அணுக வேண்டும். ஆனால், கெடுவாய்ப்பாக இப்பிரச்சினை பொதுவாகவே அணுகப்படுகிறது.
ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் தன் வகுப்பில் படிக்கும் மாணவிக்குக் காதல் கடிதம் கொடுப்பதும், பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் சக மாணவிக்குக் கடிதம் கொடுப்பதும் ஒரே மாதிரியானதல்ல.
சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் செய்யும் தவறுகளோடு இணைத்துப் பார்ப்பதும், இரண்டையும் ஒரே கோணத்தில் அணுகித் தீர்வு காண முயல்வதும் மிகத் தவறான செயலாகும். “முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள செய்யிற வேலையைப் பாரு” என்ற மனநிலையோடு ஆறாம் வகுப்பு
மாணவனின் பிரச்சினையை அணுகுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவுமில்லை.
பதின் பருவத்தில் மாணவர்களிடம் ஏற்படும் பாலியல் நெறிபிறழ் நடத்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது ‘பிஞ்சு உள்ளம்’ என்னும் சிறுகதை.
கதை பள்ளிக்கூடத்தில் நிகழவில்லை. கிருஷ்ணசாமி சரியாகப் படிக்காத தன் மூத்த பிள்ளை வீணாவைத் தன் வீட்டின் அருகே குடியிருக்கும், பொறியியல்
படித்துவிட்டு அது தொடர்பான ஆராய்ச்சிப் பணியிலிருக்கும் நண்பரிடம் ” உங்க அறைக்கு அவளை அனுப்புகிறேன்…. ஏதாவது சொல்லிக் கொடுங்க… டியூசன் படிக்க வைக்கிற அளவுக்கு என் நிலைமை இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?..” என்று அனுப்பி வைக்கிறார். இப்போது பொறியாளர்தான் அவளுக்கு டியூசன் ஆசிரியர்,
வீணாவுக்கு வயதுபன்னிரண்டுக்குள் இருக்கும்.அழகான, துடிப்பான சிறுமி. புத்திசாலித்தனமும் வேண்டாத விசயங்களிலும் கவனம் செலுத்தி “எல்லாவற்றையும் அவசியமில்லாமல் கிரகித்து வைத்துக்கொள்ளும் சூட்சுமம் புத்தியும், அடக்கத்தை மீறும் ஒரு குறும்பும் கூடவே உடையவள்”. ஏதாவது சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்து முகம் குப்பெனச் சிவந்துவிடும்.
ஒழுங்காகப் பாடம் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நாள் வீணா கணக்குப் பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருக்கிறாள். வழக்கத்திற்கு மாறாகக் கணக்கைத் தப்புத்தப்பாகச் செய்கிறாள்.கோபம் கொண்ட ஆசிரியர் அவளது பிழையைத் திருத்த “ஏய் மண்டு….வா இப்படி..” எனத் தம் அருகே அழைக்கிறார். அருகே வந்த வீணா வேண்டுமென்றே அவரை உரசியபடி நிற்கிறாள்.” நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவள் நின்ற நிலை மாறாது முகம் திருப்பி அவரையே பார்க்கிறாள்.
” அந்தப் பார்வையில் குழந்தைத்தனம் இருந்ததா, இல்லை வருந்தி அழைத்துக்கொண்ட வக்கிரமான ஓர் ஆவல் பாசாங்கு இருந்தததா என்று என்னால் நிர்ணயிக்க முடியவில்லை”.
அம்மட்டோடு வீணா நிற்கவில்லை. அசடு ! என்ன நினைத்துக்கொண்டாளோ தெரியாது. திடீரென்று என் கையிலிருந்த என் நோட்டைப் பறித்து மேஜை மீது போட்டுவிட்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த என் மடியில் உட்கார்ந்துகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் என்ன நடக்கிறதென்று நான் அவதானிக்கும் நேரத்திற்குள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, “சார்… என்னைக் கல்யாணம் செஞ்சுக்குவீங்களா….? எனக்கு உங்களை நல்லா புடிக்குது…” என்றாளே பார்க்கலாம்…!
படபடத்துப்போன அவர் வீணாவை உடனே மடியிலிருந்து இறக்கி வைத்து விட்டு “சரி சரி… இன்னிக்குப் படிச்சதெல்லாம்போதும்… போயிட்டுவா…” என்று சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்கிறார்.”வெளியே விசுவிசுவென வீணாவின் அழுகையொலி கேட்டுக்கொண்டிருந்தது”.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஆசிரியர் அழும் வீணாவைச் சமாதானப்படுத்திப் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு “வீணா…நாளைக்குப் பரீட்சையில ஜமாய்த்துடணும்… அப்பத்தான் எனக்கும் பெருமை… என்ன தெரிகிறதா? என்று கூறி அனுப்புகிறார். வாசல்வரையில் சென்ற வீணா திரும்பிவந்து “சார்… என்னை மன்னிச்சுடுங்க… நீங்க பெரிய இன்ஜினியர்…. நான் உங்களுக்கு ஏத்தவளில்லை… அது தெரியாமல் கேட்டுவிட்டேன்….”என்கிறாள்.
கதையில் வரும் இன்ஜினியர் முறையான ஓர் ஆசிரியரில்லை என்றாலும் அனுபவமும் நற்பண்புகளும் கொண்ட ஓர் ஆசிரியராகவே கதையில் மிளிர்கிறார். நெறிபிறழ் நடத்தையுள்ள மாணவனை அறிந்த ஆசிரியர் அவனது நடத்தைக்கான காரணங்களை விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அம்மாணவனைச் சரிப்படுத்தச் செய்யவேண்டிய முறையான முதல் முயற்சி அதுவே. உளவியல் அதனை ‘தனியாள் ஆய்வு (case study) என்று கூறும்.
வாழ்வில் எதையுமே இனம் கண்டு கொள்ளத் தெரியாத இந்தப் பிராயத்தில் அவளுக்குக் கல்யாணத்தையும் காதல் வசனங்களையும் போதித்தது யாராக இருக்க வேண்டும்….? குழந்தை மனோதத்துவம் தெரியாத அந்தச் சமூக விரோதிகள் யார்? அடிப்படையை ஆராய்ந்து செய்யவேண்டிய அதிர்ச்சி வைத்தியம் அது!” என எண்ணியபடியே வீணாவை அருகில் அழைத்து “ஆமா… இப்படியெல்லாம் பேச யார்கிட்டயிருந்து கற்றுக்கொண்டாய்? யார் சொல்லித் தந்தாங்க? எனப் பேச்சுக் கொடுக்கிறார் ஆசிரியர்.
வீணாவுடன் பள்ளியில் படிக்கும் தோழிகளுக்கு முறைப் பையன்கள் இருப்பதும்,அவர்களது பெற்றோர் அவர்களது படிப்பையும் கல்யாணத்தையம் தொடர்புபடுத்திப் பேசுவதும் வீணாவின் மனத்தைப் பாதித்திருக்கிறது.தனக்கும் அப்படியொருவன் வேண்டும் அவன் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ இருந்தால் எதிர்காலத்தில் தன் தோழிகளைப்போல வசதியாக வாழலாம் என நினைத்திருக்கிறாள். தன் ஆசிரியைக் காதலிக்கும் நபர் (இன்ஜினியரைப் போன்று உயரமாக இருக்கிறார்) தினமும் காரில் வந்து ஆசிரியயை அழைத்துக் கொண்டு செல்வதையும் கவனித்திருக்கிறாள்.
“பெற்றோர்களின் அரட்டைகளைக் கேட்டு ; கான்வென்ட்டில் கல்யாணப் பிரதாபம் பேசும் தோழிகள், டீச்சரின் காதல் கல்யாணக் காட்சிகள்… இவற்றிற்கெல்லாம் மேலே, ஆண் பெண் இன உணர்வுகள் கூட இளம் பிராயத்திலிருந்தே இயற்கையாகவே இடம் பிடித்துக் கொள்கிறதா? என எண்ணும் ஆசிரியர், வீணாவிடம் “அப்ப…. நீ இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்துதான் கத்துக்கிட்டே…இல்லையா….? எனக் கேட்கிறார்.
வீணா, “சார்… யார் கிட்டையும் கண்டிப்பாச் சொல்லவே கூடாது…மிகவும் ரகசியம்..!எனப் சொல்லியபடியே அடக்கமான தொனியில் “ராத்திரி பத்துமணி ஆகவேண்டாம்….நாங்க தூங்குவதாக நெனச்சுக்கிட்டு….எங்க அப்பாவும் அம்மாவும்….வந்து….இல்லை சார்…நான் சொல்ல மாட்டேன்!”
வீணாவின் பிஞ்சு உள்ளத்தில் முளைத்த விஷச் செடியின் பக்கவேர்களை பேசித் தெரிந்துகொண்ட ஆசிரியர், இறுதியில் அதன் ஆணிவேரையும் தெரிந்து கொள்வதோடு கதை முடிவுக்கு வருகிறது.
பதின்ம வயதுடையோரின் பாலியல் நெறிபிறழ் நடத்தைக்கான காரணங்களையும், அவர்களை அணுக வேண்டிய முறைகளையும், கற்பிப்பவருக்கு இருக்கவேண்டிய உயர் பண்பையும் ஒழுக்கத்தையும்,பெற்றவருக்கும் மற்றவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் பாடமாகச் சொல்லும் சிறுகதையே எழுத்தாளர் நீல.பத்மநாபன் (Neela Padmanabhan) எழுதிய ‘பிஞ்சு உள்ளம்’ (Pinju Ullam Short Story) சிறுகதையாகும்.
கட்டுரையாளர்:
மதுரை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கதை சிறப்பு வீணா டீசன் ஆசிரியர்மேல் கொண்ட காதல் தன் நிலை அறியாமல் நடந்தது. காரணம் அவள் பள்ளி அல்ல சமூக தில் காணும் காட்சியை பார்த்த நிகழ்வு. ஊடகங்கள் மாணவர்கள் தன் ஆசிரியர்கள் மீது கொண்டுள்ள மதிப்பை வெளியிடவேண்டும். பாடபுத்தகத்தில் துணைப்பாடம் நன்னரி கதைகள் இடம் பெற வேண்டும். உண்மை காட்சி உங்கள் கதை அருமை.
அருமையான சிறுகதை, ஆழமான திறனாய்வு செய்து கட்டுரை வழங்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.