ப.சிங்காரம் எழுதிய "கடலுக்கு அப்பால்" நாவல் புத்தகம் அறிமுகம் | Writer Pa. Singaram's Kadalukku Appal Tamil Book Review | www.bookday.in

ப.சிங்காரம் எழுதிய “கடலுக்கு அப்பால்” நாவல் – நூல் அறிமுகம்

‘புயலிலே ஒரு தோணி’ சிங்காரத்துக்குப் பெயர்பெற்றுத் தந்த நெடுங்கதை. ‘கடலுக்கு அப்பால்’ என்ற இந்த நாவலும் சிறப்பில் முன்னதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இரண்டு நாவல்களும் அரசியல், சமூக வரலாற்று நாவல்கள்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டப் பின்னணியைக் கொண்டவை. குறிப்பாக ஜப்பான் சரணடைந்த நிகழ்வில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பர்மாவிலும் கடல்கடந்த நாடான சிங்கப்பூர்-மலேசியாவிலும் உருவாக்கிய இந்திய தேசீய ராணுவத்தில் பெருமளவில் பங்குபெற்றிருந்த தமிழர்களைக் கதைமாந்தராகக் கொண்டவை. ‘கடலுக்கு அப்பால்’ என்ற இந்த நாவல் மலேசியாவில் வட்டிக்கடை நடத்திவந்த தமிழர்களின் வரலாற்றையும் விவரிக்கிறது.

சிவகங்கையை உள்ளடக்கிய அன்றைய ராமநாதபுரம் மாவட்ட நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் வியட்நாம், தாய்லாந்து, பர்மா உட்பட சிங்கப்பூர்-மலேசியாவில் லேவாதேவித் தொழிலில் ஈடுபட்டிருந்தது.வானம்பார்த்த பூமியின் மக்கள் இந்தச் செட்டிமாரை அண்டி அவர்களிடம் விசுவாசமான பணியாளர்களாக இருந்து தொழில் கற்றதோடு வறுமைப்பட்ட தங்கள் குடும்பத்தார் வயிறு கழுவ உதவினர்.

சிலர், பின்னர் தனியாகத் தொழில் நடத்திச் சம்பாதித்தனர். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் நிகழ்வதான கதைதான் ‘கடலுக்கு அப்பால்’. நேதாஜியின் மரணத்துடன் இந்திய தேசீய ராணுவம் கலைந்து போகிறது. அதில் லெப்டினன்ட்டாக இருந்த செல்லையாவின் காதலும் தோல்வியுறுகிறது. ப.சிங்காரம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியாவில் இருந்தவர்.

அன்றைய அல்லோலகல்லோலங்களையும் அவலங்களையும் நேரில் கண்டு அனுபவப்பட்டவர்.அவரது சொந்த வாழ்வின் துயரச்சாயல் இந்த நாவலில் அந்திநிழலாகப் பரவி நிற்கிறது. நாவலின் முகாமையான கதைக்களம் மலேசியாவாக இருந்தாலும் சிவகங்கை-ராமநாதபுரமும் கதையின் துணைக்களமாக இருக்கின்றன. ஏனெனில் கதைமாந்தர் இந்த மாவட்டத்தினர். இன்றைக்கும் சிங்கப்பூர்-மலேசியாவில் இந்தியர் என்றால் அவர்கள் தமிழர்கள்தான். அதிலும் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையோர்.

1975 க்குப் பின்னரே வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு தமிழ்நாட்டவர் சென்றுள்ளனர். கோட்டையூர், சிராவயல், செவல்பட்டி, திருவாடானை, சருகணி தேவகோட்டைக்காரர்கள் கதைமாந்தராக இருப்பதால் மட்டுமின்றி கதையாசிரியரும் இந்த மாவட்டக்கரர். எனவே நாவலின் இந்த மாவட்டத்துப் பேச்சுமொழியின் modulation சொல்முறை, வழக்குச் சொற்கள், நட்புறவை, மகிழ்ச்சியை, வேதனையை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை நம்மை நாவலுடன் ஒன்றச் செய்கிறது. எனினும் ப.சிங்காரத்தின் மொழிநடை தனித்துவமானது;கவித்துவமானது. கதையோட்டம் விறுவிறுப்பானது.

நாவலின் இறுதியில் மழைமேகமென செல்லையாவின் காதல்கோட்டை கண்ணீரில் கரைகையில் நமக்கும் தொண்டையைத் துயரம் கவ்வுகிறது. கண்ணீர் கசிகிறது. இதுவே நாவலின் வெற்றியாகும். சிவகங்கை மாவட்டத்தவரான திரு.சுந்தரராஜ் எழுதிய நாவல் “ஐம்பசியின் குரல்”. மலேசியாவில் செட்டிமாரிடம் வட்டிக்கடை உதவியாளராகப் பணியாற்றிக் குடும்பத்தைக் கரைசேர்ப்பவரின் கதை இது.

வெ.சாமிநாத சர்மா எழுதிய தன்வரலாறு “என் பர்மா வழிநடைப் பயணம்” .இரண்டாம் உலகப்போரில் இன்றைய மியன்மாரான பர்மாவை
ஜப்பானியர் கைப்பற்ற அங்கிருந்து உயிர்பிழைத்து ஓடிவந்த தமிழ்மக்களின் சொல்லொணாத் துயரை விவரிக்கிறது. நேதாஜி விமான விபத்தில் இறந்த செய்தியறிந்து மலேசிய ஐ.என்.ஏ படைப்பிரிவுகளில் இருந்தவர்கள் கலைந்தோடி உயிர்பிழைக்கிறார்கள். ஆனால் நேதாஜி கட்டளைப்படி மணிப்பூரை நோக்கிப் புறப்பட்ட இந்திய தேசீய ராணுவம் ஆங்கிலேயப் படையை எதிர்கொண்டு பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது.

பலர் சிறைபிடிக்கப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் மாண்டு மடிந்தனர் அப்படி மாண்டு மடிந்த தந்தையும் மகனும் சென்னை ஓட்டேரியில் புதைக்கப்படனர். இன்றைக்கும் திருவாடானை ஊரைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் அந்த மாவீரர் புதைகுழியைத் தேடுகின்றனர். இந்தியாவுக்கு வந்துசேர்ந்த ப.சிங்காரம் தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தில் பணியாற்றினார்.

அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தன் சேமிப்பு முழுவதையும் அதற்கு வழங்கினார். அவரது சொந்த வாழ்க்கை குறித்த செவ்விகளை நிராகரித்தார்; விருதுகளை விரும்பவில்லை. ஒரு பற்றற்ற முனிவரைப் போல் வாழ்ந்தார்.

இந்திய விடுதலைப்போரில் நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தின் பங்கை உயிரீந்த தமிழர்களை அறிய விரும்புவோர் ப.சிங்காரத்தின் இரு நாவல்களையும் அவசியம் படிக்கவேண்டும்.

நூலின் விவரங்கள்:

நூல் : “கடலுக்கு அப்பால்” நாவல்
ஆசிரியர் : ப.சிங்காரம்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.220

எழுதியவர் : 

✍🏻 நவஜீவன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *