நூல் அறிமுகம்: கதைக் கட்டுரைகளா ? கட்டுரைக் கதைகளா? இல்லை – கவிதைகளா ? – ஜி.பி.சதுர்புஜன்

Writer Pavannan's Onbathu Kundru Book Review by G.B.Chathurbhujan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.



பாவண்ணன் அனைவரும் அறிந்த அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். 1980களில் எழுத வந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்த பாவண்ணன் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான நூல்கள், கன்னடத்திலிருந்து மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் என்று விடாமல் எழுதிக் குவித்திருக்கிறார். இன்றும் தொடர்ந்து எழுத்துலகில் புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகிறார். புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது ,இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது என்று தொடங்கி பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

“ஒன்பது குன்று” என்ற இந்த கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் (பவித்ரா பதிப்பகம்) வெளியீட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் பாவண்ணன் சொல்வது : “வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப் பற்றியும், சில அரிய தருணங்களைப் பற்றியும் எழுதப்பட்ட அனுபவக் கதைகளான இவற்றைக் கதைக் கட்டுரைகள் அல்லது கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம்.”

“நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவது போல இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன. ஒருபோதும் சுமையாக இல்லாத நினைவேக்கம் இது. வருத்தமும் துயரமும் இல்லாதது.”
“ ஒன்பது குன்று “என்ற இந்த நூலில் உள்ள 12 கதைகளை “அனுபவக் கதைகள்” என்றும் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

இதேபோன்ற கதைக் கட்டுரைகளா அல்லது கட்டுரைக் கதைகளா என்று இனம் காண முடியாத நூல்கள் சிலவற்றை ஏற்கனவே பாவண்ணன் படைத்துள்ளார். அதனால் கவிஞர்களுக்கு கவிதை ஊற்றெடுத்துப் பெருகுவது போல பாவண்ணனுக்கு இவ்வகை எழுத்து வடிவம் இயற்கையாகப் பீறிடுவதாகவே தோன்றுகிறது எனக்கு. இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் ஏற்கனவே பதாகை,, உயிர் எழுத்து, பேசும் புதிய சக்தி, புரவி ஆகிய இதழ்களில் வெளி வந்திருந்தாலும், பிற கட்டுரைகளை இந்த சிறுவாணி வாசகர் மையத்தின் நூலாக வெளி வருவதற்கென்றே எழுதியதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எது எப்படி இருந்தாலும், இந்தக் கட்டுரைக் கதைகளைப் படிப்பது ஒரு சுகானுபவமாக இருக்கிறது. ஆசிரியர் பாவண்ணனின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், “ ஓர் இளமைக் காலத்து ஏரிக் கரையின் ஓரத்தில் ஒரு பனை மரத்தடியில் நின்றுகொண்டு, வானத்தில் ஏறி வரும் நிலவைப் பார்த்து ரசிக்கும்படியும், எங்கோ தூரத்தில் ஒரு கூடை சுமந்து நடந்து செல்லும் பெண் ஒருத்தி தனக்குத்தானே பாடிக்கொள்ளும் பரவசமான நாட்டுப் பாடல் ஒன்று காற்றில் மிதந்து நம் காதுகளில் விழுவது போலவும் உள்ளது” என்று சொல்லத் தோன்றுகிறது.

“ஒன்பது குன்றில்” உள்ள ஒவ்வொரு கதைக் கட்டுரையும் படிக்கும்போது நம் மனதை வருடுகிறது. அவர் சொல்லும் செய்தியும், எழுத்து நடையும், பேச எடுத்துக் கொள்ளும் அனுபவக் கதாபாத்திரங்களும் – அனைத்துமே நேசத்துடனும் கிராமத்து வாசத்துடனும் பின்னிப் பிணைந்து வருகின்றன.

Writer Pavannan's Onbathu Kundru Book Review by G.B.Chathurbhujan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

“காற்றினிலே வரும் கீதம்” என்னும் முதல் கதைக் கட்டுரை 40 ஆண்டுகளுக்கு முன்னே கல்லூரிப் பருவத்தில் ஆசிரியர் பாவண்ணனுடன் படித்த ஆனந்தி என்ற சக மாணவியைப் பற்றியும் அவள் பாடும் பாடல்களைப் பற்றியும் நினைவு கூர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் படிக்கும் போது நம் கல்லூரிக் காலத்து இளமைக் கனவுகள் மீண்டும் நம்முள்ளே துளிர்விடுகின்றன. பசுமையான அந்த நினைவுகளுடன் ஒன்றிப்போய் நாம் நம் நிகழ்கால வெறுமைகளை மறந்து விடுகின்றோம். அது ஒரு கனாக்காலம் அல்லவா ? இளமை திரும்பாது என்று தெரிந்தாலும், மீண்டும் இளமைக்குள் கற்பனை உலகில் பின்னோக்கிப் பயணிக்கும்போது ஏற்படும் கிளுகிளுப்பும் இயற்கையான ஒரு இனிமை உணர்வுதானே ? பாவண்ணன் இந்த அனுபவத்தை நமக்கு அள்ளித் தருகிறார்.

“கண்ணுக்குத் தெரியாத உலகம்” என்ற இரண்டாவது கட்டுரைக் கதை நம்மை முற்றிலும் மாறுபட்ட வேறு ஓர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. கல்லூரி, நண்பர்கள், கொண்டாட்டம், பாட்டு என்ற களத்தை விட்டு மிகத் தொலைதூரம் சென்று சின்னஞ்சிறு கிராமங்களால் சூழ்ந்திருக்கும் வளவனூர் ஏரிக்கரைக்கும், அங்கு தன்னந்தனியே மரத்தடியில் கூடையுடன் அமர்ந்திருக்கும் ஆயாவிடமும் அழைத்துச் செல்கிறது. என்றோ மறைந்த தன் கணவனின் குரலை இன்றும் அந்த நிலத்திலும், காற்றிலும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் அவளை மனக்கண்முன் பார்க்கும்போது, நம் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்க்கின்றன. இவற்றை பாவண்ணன் தீட்டும் ஓவியங்கள் என்று சொல்வதா, காட்டும் காட்சிகள் என்று சொல்வதா அல்லது கட்டிய கவிதைகள் என்பதா !.
மூன்றாவது கதைக் கட்டுரையின் தலைப்பு : “மலர்ந்த முகம்”

இது கள்ளிச்செடியில் மலர்ந்த பூ ஒன்றைப் பற்றியது; இல்லை, இல்லை – செங்கற் சூளையைப் பற்றியது. அதுவும் இல்லை, ஒரு அசாதாரண மனுஷியைப் பற்றியது. ம்ம்ம்ம்…. புதிய புரிதல் தரும் ஒரு மனித நேயக் கட்டுரை என்றும் சொல்லலாம். என்ன, குழப்பமாக இருக்கிறதா ? நீங்களே படித்து இந்தப் புதிரை விடுவித்துக் கொள்ளுங்கள்.

நான்காவது கதைக் கட்டுரை : “முப்பத்தேழாண்டு கால துயரம்” – இதைப் படிக்கும்போது நிச்சயம் வாசகர்கள் தங்கள் பள்ளிக்கால நினைவுகளை அசை போடுவார்கள். தங்களுக்கு வழிகாட்டிய பள்ளி ஆசிரியர்களை தம்மையறியாமல் நன்றியோடு நினைவு கூர்வார்கள். இதை மட்டும் சொல்லி கதையைப் படிப்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.

“சுதந்திர மனிதன்” என்ற அடுத்த கட்டுரை கர்நாடகாவில் கினிக்கெற என்ற சிறிய கிராமத்திற்கு ஆசிரியர் பணி நிமித்தம் சென்றபோது சந்தித்த திப்பெஸ்வாமி என்ற அபூர்வ மனிதரைப் பற்றி. ஒரு சில சந்திப்புகள் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாகவும் மதிப்புகள் கடந்தவையாகவும் ஆகி விடும் அதிசயத்தை இந்தக் கட்டுரையில் வாசகனால் அனுபவிக்க முடியும்.

அடுத்த கட்டுரைக் கதை : “ஒன்பது குன்று”. இதுதான் நூலின் தலைப்பும். காட்டு வழியில் நடப்பதைக் கட்டுரையாக எழுதி விட்டு நம்மையும் கூட அழைத்துப் போய் ஒன்பது குன்றுகளின் அசாதாரண அழகை தரிசனம் செய்து வைக்கிறார் பாவண்ணன். மனதை விட்டு அகலாத பதிவு இது. “திருநீறு பூசிய முகம்” என்னும் கட்டுரைக் கதை கங்கையா என்ற அபூர்வ மனிதரைப் பற்றியும் தனி ஒருவராக தோட்டங்களை உருவாக்கிக் காப்பாற்றிய அவருடைய சாதனைகளைப் பற்றியும் பேசுகிறது.

இப்படி அடுத்தடுத்து வரும் கட்டுரைகளைப் பற்றியும் அவை தரும் மனதை விட்டு அகலாத பிம்பங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்தான். ஆனால், ஒரு அறிமுகக் கட்டுரைக்கு வரையறை உண்டு என்பதால் இத்துடன் விடை பெறுகிறேன்.

நீங்கள் தமிழ் எழுத்தின், வாழ்வின், அழகியலையும், அன்பியலையும் காதலிப்பவராக இருந்தால், அவசியம் படித்துவக்க வேண்டிய நூல் “ஒன்பது குன்று“.
*****************************

“ஒன்பது குன்று” (கட்டுரை கதைகள்)
பாவண்ணன்
பவித்ரா பதிப்பகம்
சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு
பக்கம் 140
விலை ரூபாய் 140

Writer Pavannan's Onbathu Kundru Book Review by G.B.Chathurbhujan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
ஜி.பி.சதுர்புஜன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.