எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
படர்கொடியும் பற்றுக்கொம்புகளும்
– மணி மீனாட்சிசுந்தரம்.
கிராமங்களில் பெரும்பாலும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகளை அதற்கென்று உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருப்பதில்லை. பிறர் எடுத்துக் கூறினாலும் பெற்றோர்கள் அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.அதற்கு முதற் காரணம், தம் குழந்தையின் மனவளர்ச்சிக்குறையைப் பிறர்முன் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.இயல்பான குழந்தைகளுடன் தொடர்ந்து பழகினால் போகப் போக சரியாகிவிடும் என்றே தமக்குள் நம்புவார்கள்.அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைத் தம்முள் வைத்திருப்பார்கள்.
இன்னொரு காரணம் அவர்களுக்குரிய வேலைமுறையில், சிறப்புப் பள்ளியில் சேர்க்கவும் அதைத் தொடரவும் போதுமான நேரமும் பண உதவியும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை.இந்தக் காரணங்களால் வீட்டுக்கு அருகில் உள்ள பொதுப் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்த்து விடுவார்கள்.
ஆனால், மனவளர்ச்சிக் குறைவு அதிகமான குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த கல்விமுறை பெரிதும் பலனளிப்பதில்லை.
அக்குழந்தை மற்ற மாணவர்களுக்குப் பொழுதுபோக்கும் விளையாட்டு பொம்மையாகவே இருக்கும். ஆசிரியர்கள் பாடுதான் திண்டாட்டம். ‘அரிசி என்று அள்ளவும் முடியாமல் உமி என்று தள்ளவும் முடியாத நிலை’. ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகள் வருடந்தோறும் தேர்ச்சி பெற்று வகுப்பு மாறிச் சென்றுகொண்டே இருப்பர்.
அப்படிப்பட்ட ஒரு மாணவன்தான் இக்கதையில் வரும் செல்வம். செல்வம் என்பது பெற்றவர்கள் அவனுக்கு வைத்த பெயர். ஆனால், டுபாக்கு என்ற பட்டப் பெயரில்தான் அவனைக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் கடைசிப் பிள்ளை அவன்.
/பேச வராது அவனுக்கு. ஊமையல்ல, திக்கினாலும் வார்த்தைகள் முழுமையாக வராது.பசங்களோடு பாடம் சொல்ல முயல்வான்.எதுவும் வராது. வாய் குளறி உளருவான். பசங்களெல்லாம் சிரிப்பார்கள்.அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பது இவனுக்குத் தெரியாது. இவனும் கூடச் சேர்ந்து சிரிப்பான். அவன் சிரிப்புக்கு அர்த்தம் கிடையாது. காரணமின்றி அடிக்கடி சிரிப்பான். அது அவனது சுபாவம்.புதுசாய் யாரையாவது காணும்போது வயசான பெரும்பாட்டிகள் கன்னத்தை இரு கைகளாலும் வழித்து கண்ணேறு கழிப்பதைப்போல், கன்னத்தை வழித்து நெட்டி முறித்துச் சிரிப்பான். மளமளவென்று நெட்டி முறியும்./
இப்போது நான்காம் வகுப்புப் படிக்கிறான்.
/அடிக்கடி வாத்தியார் மேஜையண்டை வந்து கவிழ்ந்து கொள்வான். வாத்தியாருக்கு அவன்மேல் அனுதாபம்.அவனை எதுவும் கேட்டுக்கொள்வதில்லை./மாணவர்களில் சிலர் ஆசிரியர் அவனுக்குச் செல்லங்கொடுப்பதாகக் குறைபட்டுக்கொள்கின்றனர்.
வழக்கம்போலப் பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் வந்துவிடுகிறார். தலைமையாசிரியர் அறைக்குச் சென்றுவிட்டு ஒவ்வொரு வகுப்பாகப் பார்வையிட்டுக் கொண்டே நாலாம் வகுப்பிற்கு வருகிறார்.
/ டுபாக்கு, நாலாம் கிளாஸ் வாத்தியார் மேஜையில் கவிழ்ந்து கொண்டிருந்தான். எல்லாப் பிள்ளைகளும் எதுவோ எழுதிக் கொண்டிருந்தார்கள்./
ஆய்வாளர் வந்ததும் ஆசிரியர் எழுந்து அவரை உட்காரச் சொல்கிறார். ஆய்வாளர் உட்கார்ந்ததும் மேசையில் கவிழ்ந்து கிடந்த டுபாக்கு தலையைத் தூக்கி ஆய்வாளரை நிமிர்ந்து பார்த்துச் சிரிக்கிறான்.ஆய்வாளருக்கு அது பிடிக்கவில்லை./”யார் இந்தப் பையன்?” என்கிறார்.”ஸ்கூல்ல படிக்கிற பையன்தான் சார். ஒரு மாதிரி மைன்ட், மனவளர்ச்சி இல்லாதவன். பாவம்.பேசக்கூட வராது ‘ என்கிறார்./
இவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த டுபாக்கு, வழக்கமாக யாரையாவது கண்டுவிட்டால் கன்னத்தை வருடி நெட்டி முறிக்க விரும்பும் அவன், இப்போது ஆய்வாளருக்குத் திருஷ்டி கழிக்கக் கைகளை அவரின் கன்னத்திற்குப் பக்கத்தில் கொண்டு போகிறான்.
/ அருவருப்போடு முகத்தைப் பின்வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர் ‘என்னய்யா இது என்றார்’./
ஆசிரியர்,/ இல்ல சார்.நான்தான் சொன்னேனே.அவன் ஒரு மாதிரி பாவம்.புதுசா யாரைப் பார்த்தாலும் இப்படித்தான்/ என்றதும்,
“என்ன இப்படித்தான்? இன்டீசன்ட்…
முதல்ல அவனை எடத்துல போயி உட்காரச் சொல்லும்” இன்ஸ்பெக்டர் சிடுசிடுத்தார்.
ஆசிரியர் டூபாக்குவை இடத்தில் சென்று அமரச் சொல்கிறார்.அவன் கேட்பதாயில்லை. அரட்டினாலும் உருட்டினாலும் அவன் கண்டுகொள்வதாயில்லை. மீண்டும் நெட்டி முறிக்க ஆய்வாளரின் கன்னத்தை நோக்கிக் கைகளைக் கொண்டு செல்கிறான்./ஆய்வாளர் சடாரென்று அவன் கைகளை ஒதுக்கிவிட்டு எழுந்து ஆசிரியரைப் பார்த்து முறைக்கிறார்.
/ “ என்னய்யா நீ பசங்கள மெயின்டெய்ன் பண்ற லட்சணம்.இப்படித்தான் டீசன்சி இல்லாம நாய்க்குட்டி மாதிரி மூஞ்ச நக்கக் கத்துக் கொடுத்து வச்சிருப்பியா…/ என்று ஆசிரியர் மேல் எரிந்து விழுகிறார்.
ஆசிரியர் ஆய்வாளரைச் சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லியபடி, டுபாக்கூவை அவனது இடத்தில் உட்கார வைக்க முயற்சி செய்கிறார். பதட்டத்தில் அவனைப் பிடித்து அவனுடைய இடத்திற்குத் தள்ளுகிறார். அவனோ சிரித்துக் கொண்டே ஆசிரியருக்குத் திருஷ்டி கழிக்கக் கைகளைக் கொண்டு வருகிறான். ஆய்வாளர் இதைச் சகிக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
/ ஆசிரியர் நிலைகுலைந்தார். ‘போய் உட்கார்டான்னா’ என்று அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மூலையில் போட்டு,’ இந்த எடத்தவுட்டு அசைவியா அசைவியா…’ என்று அவன் கன்னங்களிலே வாங்கினார். அவன் அழுததைப் பசங்கள் முதன் முறையாகப் பார்த்தார்கள்./
ஆய்வாளர் திருப்தியடைந்து அந்த வகுப்பை விட்டு அடுத்த வகுப்பிற்குச் செல்கிறார். / மேலதிகாரியிடம் திட்டுப்பட்ட அவமானத்தில் டுபாக்குவையே முறைத்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நாலாங் கிளாஸ் ஆசிரியர்./
ஆய்வாளர்கள் எல்லோரும் இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். இந்த ஆய்வாளர் பண்பு குறைந்தவராக இருப்பார் போலிருக்கிறது. ஆமாம், ஆய்வாளர் பதிவியில் இருப்பதால் ஆசிரியரை ‘ வாய்யா போய்யா ‘ என்று கூறுவதைப் பார்த்தால் நிச்சயம் பண்பு குறைந்தவர்தான். ஆய்வாளரால் இதுவரை ஆசிரியரிடம் அடிவாங்காத டுபாக்குவுக்கு அடியும், ஆசிரியருக்குத் திட்டும் கிடைத்ததுதான் அவரது ஆய்வின் பலன். ஆய்வாளர் பள்ளியை விட்டுப் /போகும்போது நாலாங் கிளாஸ் ஆசிரியரை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே கடிந்துவிட்டுப் போனார்/.
ஆய்வாளர் சென்றதும் ‘ஒண்ணுக்கும் தண்ணிக்கும்’ மணியடித்ததும் மாணவர்கள் வெளியே ஓடுகிறார்கள்.
அப்போது பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து / அதுதான் சார்.அதத வக்கிற இடத்துல வைக்கணும்ங்கிறது.நீங்க ரொம்ப இடம் கொடுத்துடீங்க/ என்கிறார்.ஆசிரியர் அதைக்கேட்டு மவுனமாகத் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்./
ஆய்வாளரிடம் திட்டு வாங்கிய ஆசிரியரின் நிலைமை இப்படியென்றால், ஆசிரியரிடம் அடிவாங்கிய டுபாக்கு நிலைமை அதைவிட மோசம்.வெளியில் மாணவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு கேலி செய்கிறார்கள்.
அவர்கள் கேலி செய்து சிரிப்பதை அறியாமல் டுபாக்கு தானும் சிரிக்கிறான்.
/’ இப்பதான் ஒதபட்டான் அறிவேயில்லடா டேய்’
‘ குமிட்டி சட்டிடா அவன்’
‘ இல்ல கூழுப் பானடா…’/
மாணவர்களின் கேலி எல்லை மீறிப் போகிறது. ஒருவன் அவனை மூத்திரக் குழியில் தள்ளிவிட்டுச் சிரிக்கிறான்.
மண்ணை அள்ளி அவன் தலையில் போடுகிறார்கள். ஒருவன் மூத்திரத்தை அவன் மேல் அடிக்கிறான்.சிரித்துக்கொண்டிருந்த டுபாக்கு கலவரமடைந்து எழுந்து பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடுகிறான்.மாணவர்கள் அவனைத் துரத்துகிறார்கள்.
அவன் வகுப்பை நோக்கி உள்ளே நுழையும்போது / வாசல்படியிலேயே நின்று கொண்டிருந்த ஒரு ஆசிரியர்,/” மணியடிச்சா வெளியே போய் வெளையாடுவம்னு இல்லாம இங்க என்னடா உள்ள” என்றார்./
டுபாக்கு புரியாமல் அவரைப் பார்க்கவும் ‘ வெளியே போடா’ என்று அவனைக் கோபத்தோடு விரட்டுகிறார்.
/ டுபாக்கு உள்ளே குந்தியிருக்கும் நாலாங் கிளாஸ் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர், நாற்காலியில் குந்தியபடியே பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
டுபாக்கு அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் / என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.
இக்கதையைப் படிக்கையில் செல்வம் என்ற மாணவன் மீதும் அவனுடைய ஆசிரியர் மீதும் நமக்கு வருத்தம் வருகிறது. ஆய்வாளர் மீது கோபம் வருகிறது. செல்வத்தைப் போன்ற மாணவர்கள் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் தென்படவே செய்வார்கள்.
ஆனால், இக்கதையில் வரும் மற்ற மாணவர்களைப் போல் எல்லோரும் நடந்துகொள்ள மாட்டார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற மாணவர்கள் கருணைமிக்கவர்கள்.
இப்படிப்பட்ட குழந்தைகளை வகுப்பில் அவர்கள் அன்புடனே நடத்துவார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கு இவர்களை எவ்விதம் நடத்துவது என்பது ஒரு சவாலாகவே இருக்கும். இக்கதையில் வரும் நாலாம் வகுப்பு ஆசிரியர் இரக்க குணம் உள்ளவராய் இருக்கிறார். செல்வத்தின் சேட்டைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்பவராக இருக்கிறார்.
அவனை எப்போதும் அடிக்காத அவர், ஆய்வாளரின் கெடுபிடியால் அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதை நினைத்து அவர் வருந்துவது போலவே தெரிகிறது. செல்வம் மனவளர்ச்சி குன்றியவனாக இருந்தாலும் ஆசிரியர் மீது அவனுக்கு அன்பிருக்கிறது. அதனால்தான் அடி வாங்கினாலும் அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
ஒரு மனவளர்ச்சி குறைந்த மாணவனைப் கையாளும் ஒரு ஆசிரியரைக் கொண்ட வகுப்பறையை உணர்வு பூர்வமாகக் காட்டுகிறது இச்சிறுகதை. எல்லா நிலையிலும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய வரம்பை சுட்டிக்காட்டியே கதையின் தலைப்பை ஆசிரியர் ‘ வரம்பு’ என வைத்திருக்கிறாரோ, என்னவோ?!
உதவிய நூல் :
இராசேந்திர சோழன் கதைகள் – தொகுதி 2 –
தொகுப்பாசிரியர் : சு.வேணுகோபால்,
தமிழினி பதிப்பகம், சென்னை – 51.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


டுபாக்கு கதாபாத்திரமும் ஆசிரியர் கதாபாத்திரமும் ஆய்வாளர் கதாபாத்திரமும் கதையோட்டத்தில் சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது சிறப்பு. வரம்பில் உங்கள் பார்வையும் சிறப்பு ஐயா. வாழ்த்துகள்.