Writer S Balabharathi’s Marappaachchi Sonna Ragasiyam Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* - கி. ரமேஷ்

யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* – கி. ரமேஷ்



யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை.  ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அட, இதென்ன அதிசயம்.  நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்தது அந்த மரப்பாச்சிக்கு எப்படியோ தெரிந்து விட்டது போல் இருக்கிறதே!  மந்திர மரப்பாச்சி அதற்கேயுரிய மந்திரங்களைப் போட்டு அறிவியல் இயக்கத் தோழர் பிரபாகர் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்து விட்டது.  

முதலில் மரப்பாச்சி என்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ தெரியாதோ?  இன்றுதான் விதவிதமாக  பொம்மைகள் வந்து விட்டனவே.  சிறிது காலத்துக்கு முன் ரப்பர் பொம்மைகள், பிறகு பிளாஸ்டிக், பிறகு இன்றைய தொழில்நுட்பத்துக்கேற்ப தானே இயங்கும் பொம்மைகள், ரிமோட் பொம்மைகள்.  அதையெல்லாம் தாண்டி ப்ளே ஸ்டேஷன், இப்போது செல்பேசியிலேயே மூழ்கும் நிலை வந்து விட்டது.

ஆனாலும், அந்தக் கால மரப்பாச்சியையும், தாமே செய்யும் பொம்மைகளையும் வைத்து கற்பனையுலகில் விளையாடியபோது கிடைக்கும் சந்தோஷம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இருக்கட்டும்.  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாதபடி மூலிகை மரங்களாக் செய்யப்பட்ட இந்த மரப்பாச்சி ஒன்று நமது கதாநாயகி குழந்தை ஷாலினியிடம் கிடைத்து விடுகிறது.  காலகாலமாக குடும்பத்தில் ‘ஆகி’ வந்த மரப்பாச்சி அல்லவா, அது குழந்தையிடம் ஒட்டிக் கொண்டு விடுகிறது.  அதற்கு உயிரும் வந்து விடுகிறது.  பிறகு அது குழந்தையின் பிரச்சனையை எப்படித் தீர்த்து வைக்கிறது.  பள்ளியில் அவளிடம் வம்பு செய்யும் மற்ற குழந்தைகளை எப்படி ஆட்டி வைக்கிறது என்று கற்பனை விரிந்து கொண்டே செல்கிறது.  இந்தக் கதை கற்பனையென்றாலும், அதில் மரப்பாச்சி கையில் எடுக்கும் பிரச்சனைகள் உண்மை.  நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் பாலபாரதி.  மேலோட்டமாக குட் டச், பேட் டச் பிரச்சனையை சொல்லிச் செல்கிறார்.  இதைப் படிக்கும் குழந்தைகள் அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறார்.  

Writer S Balabharathi’s Marappaachchi Sonna Ragasiyam Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* - கி. ரமேஷ்

மரப்பாச்சி கையில் இருந்தால், அதை வைத்திருப்பவர் பொய் சொல்லவே முடியாது!  ஆஹா மகாபாரதத்தில் இத்தகைய ஒரு காட்சியைப் பார்த்திருக்கலாம்.  சகுனியாக நடிக்கும் நம்பியார் பொய் சொல்ல முடியாமல் திணறும் திரைக் காட்சியைப் பார்த்த நினைவு சிரிக்க வைக்கிறது.  

அந்தக் காலத்தில் நான் சிறுவனாக இருந்த போது நிறைய பேய், பூதக் கதைகள் படித்திருக்கிறேன்.  அம்புலிமாமா, சம்பக் என்றும், பல காமிக்ஸ் புத்தகங்களையும் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன்.  மாண்ட்ரேக்-லொதார் இன்னும் மறக்காத ஒன்று.  அனைத்திலும் நன்மை வெற்றி பெறும், தீமை தோல்வியடையும்.  நான் இன்று படித்த மரப்பாச்சி மீண்டும் அந்த உணர்வைக் கொண்டு வந்தது என்றால் மிகையல்ல.

பாலபாரதி எழுதி முன்பு வெளிவந்த கதைகளிலும் எதோ ஒரு செய்தி இருந்து கோண்டுதான் இருந்திருக்கிறது.  இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கீழே ஒவ்வொரு செய்தியை எடுத்து அதைக் குழந்தைகளுக்குப் புரியும்படி விவரித்திருப்பது சிறப்பு.  அந்த விவரணை மரப்பாச்சி என்றால் என்ன என்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது.  இன்று நம் வீடுகளில் கொலுவில்தான் மரப்பாச்சியைப் பார்க்க முடிகிறது என்பது சோகம்.

இந்தக் கதையை நாம் சிறுவர், சிறுமியருக்கு அறிமுகம் செய்து படிக்கச் செய்ய வேண்டும்.  அதில் கூறியிருக்கும் விவரங்களை, செய்திகளை பொறுமையுடன் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.  கதை என்றால் வெறும் கதைகள் அல்ல, நற்சிந்தனையை, நற்செயல்களைத் தூண்டுபவையாக இருக்க வேண்டும்.  இந்த அனைத்தையும் இந்தச் சிறு கதைப்புத்தகம் செய்து முடித்திருக்கிறது.  அதற்குக் கிடைத்திருக்கும் விருதுக்கு அவர் பொருத்தமானவர்தான்.  அவருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு:  வானம்
விலை: ரூ.60
பக்கம்: 87

-கி. ரமேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *