யாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா?
என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா?
உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது செய்வார்களா என நீங்கள் சிந்தித்ததுண்டா?
உறுபசி – தமிழ் இலக்கியம் படித்த சம்பத், அழகர், ராமதுரை, மாரியப்பன் ஆகிய 4 நண்பர்களின் கதையிது. சம்பத் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்ற மூவரும் எங்கே செல்வதன்றே அறியாது கானல் காட்டிற்கு செல்வதிலிருந்து நாவல் தன் பயணத்தைத் தொடங்குகிறது.
சம்பத் இறந்துவிட்டானேத் தவிர, நாவல் முழுக்கவே நாயகன் அவன் தான். நண்பர்கள் மற்ற மூவரும் சம்பத்துடனான தங்கள் நினைவுகளை நினைவுபடுத்திப் பார்ப்பதில்தான் நாவல் முழுக்கவும் நகர்கிறது.
அதேபோல் நாவலில் ஒரு புதுமை – நாவல் அனைவரின் பார்வையிலும் நகர்கிறது. முதலில் அழகரின் பார்வையில் நகரும் நாவல் பின்னர் ஒவ்வொருவரின் விவரிப்பிலும் விரிந்து இடையிடையே இவர்கள் யாருமற்று நாவலாசிரியரின் பார்வையிலும் சில நேரம் பயணிக்கிறது. கதையை ஈடுபாட்டோடு வாசிக்கையில் நமக்கே யார் கையில் கதை நகர்கிறது என்று எளிதாய் விளங்கி விடுகிறது. இவ்வகையிலான புதுமையை இதற்கு முன் நான் லா.ச.ரா.வின் “புத்ர” நாவலில் வாசித்ததாக ஞாபகம்.
வேறேதேதோ படிப்பு படிக்க விரும்பி, விருப்பமின்றியே இவர்கள் இளங்கலையில் தமிழ் இலக்கியம் படிக்கத் தொடங்கியதையும், அவ்வகுப்பில் பெண்கள் யாருமில்லா வெறுமையும், ஒரு பெண் தோழி இரண்டாமாண்டில் கிடைக்கையில் அவளுடனான நட்பினையும், அது வளர்ந்து தேய்வதையும் ஆசிரியர் அருமையாய் காட்சிப்படுத்தியிருப்பார்.
முதலில் நாயகன் என்று யாரைச் சொன்னோம்? ஆம். சம்பத்தைத் தானே…. உண்மையில் சம்பத்தைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டும். அவனது நண்பர்கள் சொல்வதைப் போன்றே நம்மாலும் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவனை நோக்கி ஈர்க்கும் ஏதோவொன்று அவனிடம் உள்ளது. நம்மையும் அது அவன் பக்கம் ஈர்த்து விடுகிறது. எனக்குத் தெரிந்து அது வேறெதுவுமில்லை. அவன் வாழ்க்கையை மற்றவருக்காக அல்லாமல் அவன் விரும்புவது போல தனக்காக வாழ்வது தான் அது.
நாவலின் தொடக்கத்தில் திருமணமாகாமல் 30ஐத் தாண்டியிருக்கும் நிலையில் சம்பத் இவ்வாறு கூறுவான். “பொம்பளைப் பிள்ளைகளை வயதுக்கு வந்ததும் கட்டிக் கொடுத்துவிடுவது போல நம்மையும் நடத்தினால் நன்றாயிருக்குமில்லையா, இப்படிக் காமம் ஒரு கரையானைப் போல மெல்ல அரித்துத் தின்பதிலிருந்து தப்பிவிடலாமே” அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு இவ்வரிகளின் வலி நிச்சயம் புரியும்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
ஒரு முறை நான் திரு. எஸ்.ரா. அவர்களை சந்தித்தபோது “நீங்கள் ஏன் அய்யா நெசவாளர்களின் வாழ்க்கையைப் புனைந்து ஒரு நாவல் எழுதக்கூடாது?”:என்று கேட்டான். அதற்கு அவர் “எனக்கு அவர்கள் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாதே தம்பி” என்றார். ஆனால், இந்நாவலின் ஒரு வரி எனது அந்த மனக்குறையை நீக்குவதாய் அமைந்தது.
“என் மனம் பின்னோக்கி தன் தறியை நெய்யத் துவங்கியிருந்தது” இவ்வரியினைப் படித்தவுடன் அவரை நான் கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. நம்மை மகிழ்விக்க ஒரு முழுநாவல் தான் தேவை என்பதில்லையே. இது போன்ற ஒற்றைவரி கூட போதுமே.
சம்பத் செய்வது அத்தனையும் பொறுத்து அவனுடனே வாழும், அவனது வாழ்வினை ரசிக்கும் மனைவி ஜெயந்தி, கல்லூரிக் காலங்களில் நாத்திகப் பிரசாரத்தில் ஈடுபடும் யாழினி, கானல் காட்டிற்கு வரும் நண்பர்களுக்கு உதவும் – காசு வாங்க மறுக்கும் சன்னாசி என நாவலில் சில பாத்திரங்களே வந்தாலும் அனைவருமே நம் மனதை ஏதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகின்றனர்.
ஒருவனது மரணம் எந்தளவிற்கு அவனது மனைவியை விடவும், நண்பர்களுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தும் என்பதற்கு அழகர், ராமதுரை, மாரியப்பன்களே சாட்சி.
பொதுவாகவே எஸ்.ரா.வின் நாவல்களில் வெயில் பற்றிய வரிகள் இடம்பெறாத நாவல்கள் ஏதேனும் இருக்குமாவென எனக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகமுண்டு. இந்நாவலிலும் பல இடங்களில் வெயில் நம்மை வருடிச் செல்கிறது.
“வெயில் பாதசாரிகளின் கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தது”
“நான் மலைச்சரிவில் வெயில் ஊர்ந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டேன்”
“அந்த நகரில் வெயில் எப்போதும் ஊற்றிலிருந்து பொங்கி வழிவது போலச் சுரந்து கொண்டேயிருந்தது”
நிச்சயம் ஒவ்வொரு பக்கத்திற்கு ஒரு முறையாகிலும் வெயில் உங்களைத் தீண்டிச் செல்வதை நீங்கள் உணர்வீர்கள்.
நூலிலிருந்து சில வரிகள்:
–> மென் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதுதான் மனிதனின் வீழ்ச்சிக்கு முதல் காரணம்.
–> பகல் நேரங்களில் வீட்டில் இருப்பதைப் போன்று வலி தரக்கூடியது எதுவுமில்லை.
இறுதியாய், இந்த வாசிப்பு அனுபவத்தை வாசிக்க நேர்ந்தால், தேசாந்திரி பதிப்பகத்தாருக்கும், திரு. எஸ்.ரா. அவர்களுக்கும் ஒரு சிறு கோரிக்கை மட்டும்:
நூலின் பக்கங்களின் எண்ணிக்கையை விட விலை குறைவாகவோ அல்லது என் போன்றோர் வாங்கக் கூடிய அடக்கவிலையுடனோ இருந்தால் இன்னும் மகிழ்வோம். பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாசிப்பும், பகிர்வும்…
~ திவாகர். ஜெ ~
நூல் : உறுபசி
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி
பக்கங்கள் : 156
விலை : ரூ.175
Leave a Reply
View Comments