கவிஞனின் நிலவறையாகும் மொழி.
கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன் உறைந்த குருதியின் சொல் நிறம். ஒரு கவிதையை மொழிமாற்றம் செய்வதென்பது பெயர் அறியாப் பறவையின் பாடலுக்கு அதன் மொழியில் பதிலுரைப்பது. அதை வாசிப்பவருக்கு பறவையின் பாடல் மொழிபெயர்த்தவரின் மொழியில் அல்லாமல் தன் மொழியில் ஒலிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கும் செப்படி வித்தை, மாயக் கரங்களின் முழு விஸ்தீரணம், பாசியுண்டு பேரழகு வாய்க்கிற ஃப்ளெமிங்கோவைப் போன்ற இயற்கையின் சன்னதம்.
இவை ஒரு கட்டுரைத் தொகுப்பாக அமைவது ஆகச் சிறந்த வாசிப்பு அனுபவம்.
தகுபொகு இசிகாவா (ஜப்பான்), கோ யுன் (கொரியா,) யஹூதா அமிகாய் (பாலஸ்தீனம்), அடோனிஸ் (அரேபியா), மரினா ஸ்வேதெவா (ரஷ்யா), பெய் தாவோ (சீனா), ரான் பேட்ஜட் (அமெரிக்கா), ராபெர்டோ ஜுரெரோஸ் (அர்ஜென்டினா), மிலான் ஜோர்ட்ஜெவிக் (செர்பியா), அல் பர்தி (கனடா), ஸ்பிக்நியூ ஹெர்பெர்ட்(போலந்து) ஆகிய 11 கவிஞர்களின் கவிதை வாழ்வைப் பேசுகிறது இந்தத் தொகுப்பு.
கொரியக் கவிஞர் கோ யுன்
இந்த அத்தனை கவிஞர்களின் வாழ்விலும் பொதுவான அம்சமாக இருப்பது அவர்களுக்குத் தத்தம் மொழி மற்றும் வாசித்தல் மீதிருந்த பற்றித் தீராப் பெருங்காதல். இவற்றுடன் மனம் கசிகிற ஒரு ஒற்றுமையாக அனைவருமே எழுத்துக்குத் தங்களை முழுதும் ஒப்புக் கொடுத்தவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு கொரியக் கவிஞர் கோ யுன் வெளியிட்டுள்ள 150 கவிதைத் தொகுப்புகளில் பாதிக்கு மேல் 400 இலிருந்து 500 பக்கங்கள் கொண்டவை.
யஹுதா அமிகாய்
1973 இல் கிப்பூர் போரில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலியக் கல்லூரி மாணவர்கள் தங்களுடன் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் யஹுதா அமிகாவின் கவிதை நூல் மூன்றையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள் எனப்படுகிறது. அவர் கவிதைகளில் பயன்படுத்திய உருவகங்கள் நம்மை அதிரச் செய்கிற அதே நேரம் ஆழ்நிலைக்கும் இட்டுச் செல்கிறது. அங்கே நாமும் ‘கவலைகளின் துறைமுகத்தில் காத்திருக்கிறேன்’ என்கிற இந்த வரியும் தனித்திருக்கிறோம்.
ராபர்டோ ஜுரெரோஸ்
‘இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலுள்ள நிசப்தம் ஒருபோதும் ஒன்று போலிருப்பதில்லை’ எனத் துவங்குகிற ராபர்டோ ஜுரெரோஸின் கவிதை வரியை வாசித்தவுடன் மனம் திகைத்து விடுகிறது என்கிறார் ஆசிரியர். படித்தவுடன் எனக்கும் இது நிகழ்ந்தது.
நிறைய கவிஞர்களின் வாழ்வு அடிப்படை வசதிகளுக்கான போராட்டம், கசந்த உறவு, தனிமை, நோய், நிராகரிப்பு, அவமதிப்பு ஆகியவற்றால் நிரம்பியிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அவர்கள் அவற்றினின்று தப்பிக்க கவிதைக்குள் சென்று ஒளிந்து கொள்ளாமல் அதில் புதுப் புது வடிவங்களை முயன்று பார்த்தபடி இருந்திருக்கிறார்கள். நோயின் பிடியில் சிக்கி துண்டாடப் பட்டபோதும் காதலையும் ஏக்கத்தையும் பாடுபொருட் கேடயமாக வைத்தே சமரிட்டுள்ளார்கள். இலக்கியம் என்பது வாழ்வின் மீதுள்ள தனக்கான நம்பிக்கை என்று நினைக்கிறான் கவிஞன். கவிதை இறைவனிடம் நேரடியாகப் பேசுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மொழி என்கிறபோது அவனுக்கு அது தானே உகந்த பிரார்த்தனையாக இருக்க முடியும்.
பௌத்தத் துறவிகள் திருமணம் செய்யக் கூடாது என்பதால் தனது திருமணத்தை மறைத்துக் கொண்ட ஒருவருக்குப் பிறந்த தகுபொகு தந்தையறியாத பிள்ளை என்றே பிறப்புச் சான்றிதழைப் பெறுகிறார். வறுமை. தனிமை. இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டு கிடைக்கிற காசுக்கெல்லாம் புத்தகம் வாங்கி ‘அதை முழுமையாக என் கையால் எழுதி வைத்துக் கொள்வேன். அதுவே அந்த நூலை உள்வாங்கிக் கொள்வதற்கான வழி’ என்று ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறார். இது அதிர வைப்பதாக இருந்தது. இது தான் தீவிரமாக உழைத்தல், அர்ப்பணித்தல், அதுவாகவே ஆதல் என்பது. வாழ்நாள் முழுதும் ஏழ்மை, தனிமை, துயரம் என வாழ்ந்து காசநோயால் மரணமடைந்த அவரின் கவிதைகளில் ஒன்று:
வெட்டவெளியில் ரயில் ஒன்று பாய்ந்து செல்வதைத் போல எனக்குள் பாய்ந்தபடி வருகிறது இந்த வேதனை.
இந்தத் தொகுப்பு ஒவ்வொரு கவிஞரும் இன்னின்ன ஊரில் பிறந்து, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து, இவர்களை மணந்து, இந்த தலைப்புகளில் கவிதை நூல்கள் எழுதி …என்ற வகைமையிலான ஒன்று அல்ல. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, சந்தித்த அவமானங்களை, குடித்து ஆறுதல் தேடியதை மட்டும் பேசவில்லை. எப்படி அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு எதிர்வினையாற்றினார்கள், அரசியலில் ஒரு போரிடும் கருவியாக தம் எழுத்தை மாற்றினார்கள், எல்லோரும் ஒரு பாணியில் எழுதும்போது புதிய வடிவங்களால் தம் மொழியை செம்மையாக்கினர், இயல்பான நிகழ்வுகளைக் கூட தம் மொழியாளுமையால் வசீகரமாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பேசுகிறது.
ரான் பேட்ஜெட்டின் ஒரு வரி, முதன் முதலில் காரில் பயணம் செய்யும் நாய்க்குட்டி “நடந்து போகாமல் எப்படி இடம் விட்டுப் போகமுடிகிறது?” என்று புதிராகத் திகைத்தபடி கார் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே சென்றது என்கிறது. இந்த ஒற்றை வரி ஒரு விரிந்த காட்சியை வாசிப்பவர் கண் முன் கொண்டு வருகிறது.
கடுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கோரும் பணி இந்த நூலாக்கம்..கவிஞர்களையும் அவர்களின் வாழ்வையும் மட்டுமின்றி அவரவர் நாட்டின் கவிதை மரபுகளும் நூல் முழுதும் ஊடுபாவாக நெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தப் பதினொரு நாடுகளின் கவிதைப் புலம் அவர்களின் மரபு பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது. ஆனால் அதை மட்டுமே எழுதினாலோ அல்லது தமிழுலகுக்கு அதிகம் பரிச்சயமற்ற இந்தக் கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி மற்றும் எழுதினாலோ மிகச் சிறந்த நூலாக மிளிர் சாத்தியமுள்ள ஆனால் வாசிப்பவருக்கு உள இன்பம் தராத நூலாக மாறிவிடும் அபாயமுள்ளது. எஸ்.ரா இதை மிக நுட்பமான அவதானிப்புடன் ஒன்றுடன் ஒன்றை இழைத்திருக்கிறார். எங்கும் எதிலும் தடுமாறாமல் ஆழ் முத்தத்தின் அற்புத லிபியாக இருக்கிறது இந்த நூல்.
கவிஞர் தேவதச்சன்
தகுபொகுவின் கவிதையை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கவிஞர் தேவதச்சன். மற்ற அனைத்து கவிதைகளும் கவிஞர் சமயவேல் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெயர்க்கப்பட்ட மொழிக்கும் தமிழுக்கும் இவர் செய்துள்ள பெரும்பணி இது என்றல் நிச்சயமாக மிகைச் சொல்லல் இல்லை. அதற்கு நூலிலுள்ள கவிதைகளே சான்றளிக்கும்.
கவிஞர் சமயவேல்
கோ யுன் கவிதை:
பழைய காலத்தில் ஒரு கவிஞன் ஒரு முறை கூறினான்
நமது தேசம் அழிக்கப்படுகிறது எனினும் மலைகளும் ஆறுகளும் பிழைத்திருக்கின்றன.
இன்றைய கவிஞன் கூறுகிறான். மலைகளும் ஆறுகளும் அழிக்கப்படுகின்றன
எனினும் நமது தேசம் பிழைத்திருக்கிறது.
நாளைய கவிஞன் கூறுவான். மலைகளும் ஆறுகளும் அழிக்கப்படுகின்றன.
நமது தேசம் அழிக்கப்படுகிறது. ஐயோ! நீங்களும் நானும் முற்றிலுமாக அழிக்கப்படுகிறோம்.
என்றென்றைக்குமான சத்தியமாக இருக்கப் போகிறவை உண்மையின் கருப்பையில் விளைந்த இத்தகைய பிரகடனங்களே. இதை உலகெங்கும் கண்டங்கள் கடந்து தம் அலகுகளில் ஏந்திப் பறக்கும் மொழிபெயர்ப்பு ஆசிரியர்களுக்கு வந்தனம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
நூல்: கவிதையின் கையசைப்பு.
எழுத்து : எஸ்.ராமகிருஷ்ணன்
கவிதைகள் மொழியாக்கம்: சமயவேல், தேவதச்சன்
பதிப்பகம்: தேசாந்திரி
விலை: 160/-
நன்றி: கயல் s முகநூல்பதிவு