‘ஸ்கேலாயுதம்’ (Scalelayutham) சிறுகதை: விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
– மணி மீனாட்சிசுந்தரம்
மனித வாழ்வின் உன்னதங்களைப் பேசும் இலக்கியமே அதன் கீழ்மைகளையும் சுட்டிக் காட்டுகிறது.
சமூகத்தின் வழக்கமாகிப்போன மெத்தனங்களை இலக்கியம் கேள்விக்குட்படுத்துகிறது.
பழகிப்போன இருளின் மீது அதுவே வெளிச்சப் பாதையை ஏற்படுத்துகிறது.
கற்பித்தல் என்னும் செயல்முறையில் ‘அடித்தல்’ என்னும் செய்முறை முறையற்றது ; தீங்கானது.
ஆனால், இந்த நடைமுறை தொன்றுதொட்டு நம் பள்ளிக்கூடங்களில் தொடர்ந்தே வந்திருக்கிறது. இப்போது சட்டத்தின் மூலம் இந்த நடைமுறைக்குத் தடை வந்துவிட்டாலும் இந்த நடைமுறையின் காலம் மிக மிக நீண்டது.
திண்ணைப்பள்ளிக்கூடங்களிலேயே இந்த நடைமுறை இருந்ததை உ.வே.சா கூறுகிறார். பள்ளிக்கூடங்கள் அக்காலத்தில் வதை கூடங்களாக இருந்ததை அவரது நூல் கூறுகிறது.
” பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக்கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சிலநேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர்.
அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு.நான் ஒருமுறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச் செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம்.அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர்.
அவ்விதம் நான் ஒருமுறை சவாரி செய்திருக்கிறேன். அக்காலத்தில் பெரும்பாலான திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிகழ்ந்து வந்தன”.
” அவரைக் காணும்போது எனக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்.பிரம்பை அதிகமாக உபயோகிப்பார்.அவரை நினைக்கும்போது அவருடைய
பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.” என எழுதுகிறார்.
மாணவர்களை அடிப்பதைக் கற்பித்தலின் ஓர் அங்கமாகவே கொண்ட சமூகம் அருவருப்பானது ; அச்சமூட்டுவது.
மாணவர்களை அடிப்பதையும் மிரட்டுவதையுமே பண்பாகக் கொண்ட ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் குறைந்த பரிதாபத்துக்குரியவர்கள்.
அவர்களைவிட பரிதாபத்துக்குரிய வர்கள் அவர்களிடம் பயிலும் மாணவர்கள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய தட்சணை எனும் சிறுகதையில் அப்படிப்பட்ட ஓர் ஆசிரியரை இவ்வாறு விவரிக்கிறார்.
” யானை சார் வந்தார். அந்த மாதிரி மாபெரும் திரேகத்தோடு அசைந்து அசைந்து வருவதாலும் நிறத்தாலும் எங்கள் உலகம் அவருக்கு அப்பெயரை மகிழ்ந்தளித்திருந்தது.
அவரின் ஒவ்வொரு விரலும் மொந்தை வாழைப்பழ அளவுக்குப் பெருத்திருக்கும். அந்த விரல்களைப் பயன்படுத்தி அவர் எங்களை அடிப்பது கொலைக்குச் சமமானது. காதில் ‘ங்ங்ங்’ என்று சத்தம் வரும். நெருப்பால் சுட்ட மாதிரி காதும் கன்னமும் காந்தும். பூப்பூவாய் நட்சத்திரங்கள் தெரியும். ஒரு சுற்றுச் சுற்றி மண்ணில் எறிந்ததுபோல் இருக்கும்”.
தனது கற்பித்தல் பணியில் அடியையே முதன்மையாகக் கொள்ளும் ஆசிரியர் ஒருபோதும் மாணவர்களை மனத்தால் நெருங்க முடியாது, பகைமையே விளையும். பிரம்பையே பிரதானமாகக் கொள்ளும் அவர் ஆசிரியர் – மாணவர் என்னும் அற்புத உறவை அடித்து அடித்து நைந்து போகச் செய்கிறார்.
அதை உணர்த்தும் சிறுகதையே எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் ‘ஸ்கேலாயுதம்’ என்னும் சிறுகதை.
சிறுகதையின் தலைப்பே கதையின் பேசுபொருளை நமக்குத் தெளிவாக்கி விடுகிறது. ஒரு கற்பித்தல் கருவி மாணவர்களை வதைக்கும் ஆயுதமானால் மாணவர்களின் கதி?!!
மாணவர்களை அடிப்பதில் இன்பம் காணும் ஆசிரியரை மாணவர்கள் பழிவாங்குவதாக இக்கதை அமைந்திருக்கிறது.
“அடிப்பதில் சாருக்கு அலாதிப் பிரியம். அடிக்கும்போது அந்த உற்சாகத்தைப் பார்த்துப் பசங்கள் திகிலடைந்தார்கள். யாராவது பதில் சொன்னால் வாத்தியார் வருத்தப்படுவார் போலிருந்தது.” என்ற வரிகள் மாணவர்களை அடிப்பதில் ஆசிரியருக்கு இருந்த கீழான விருப்பத்தைக் காட்டுகிறது.
ஐந்தாம் வகுப்புவரை நன்றாக இருந்த மாணவன் ஆறாம் வகுப்பில் அடியை நினைத்துத் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறான்.ஆசிரியர் அடிப்பதைப் போன்று கனவு கண்டு திடுக்கட்டுப் பாதித் தூக்கத்தில் விழித்தெழுகிறான்.
மாணவர்கள் ஆசிரியர் வகுப்புக்கு வராத நாளைக் கொண்டாடுகின்றனர்.அவர் வகுப்புக்கு வரக்கூடாது என்றே ஏங்குகின்றனர்.
அந்த ஆசிரியரே மாணவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்தவுடன் நிலைமை இன்னும் மோசமாகிறது.
” வாத்தியார் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருப்பதில்தான் எத்தனை தொந்தரவுகள். அவர் வீட்டைத் தாண்டும்வரை சைக்கிளை உருட்டிக் கொண்டுபோய், பின் குரங்குப்பெடல் போட்டு ஏறிப்போகணும்.எதிரில் வந்தால் வணக்கம் சொல்லணும். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தால் சுதந்திரமாக விளையாட முடியாது” இது மாணவர்களின் நிலை.மாணவர்களிடம் நட்போடு பழகத்தெரியாத ஆசிரியரை மாணவர்கள் பகைவராகவே பார்க்கின்றனர்.
இரவில் மலம் கழிக்கச் செல்லும் ஆசிரியருக்கு இருட்டைக் கண்டால் பயமென்று அறிந்த மாணவர்கள், மறைந்திருந்து பயமுறுத்துகின்றனர். ஆசிரியர் பயந்துபோய்க் காய்ச்சலில் படுத்து விடுகிறார். இனிச் சில நாள்கள் அவர் பள்ளிக்க வரமுடியாது என்று மாணவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இக்கதையைப் படித்து, அப்படிப்பட்ட ஆசிரியருக்கு இப்படிப்பட்ட மாணவர்கள்தான் வாய்ப்பார்கள் என எண்ணுவதா? அல்லது ஆசிரியரும் மோசமானவர், மாணவர்களும் மோசமானவர்கள் என எண்ணுவதா?
மாணவர்களின் பண்புகளை வளர்த்தெடுப்பதில் ஆசிரியரின் நடத்தைக்கும் பங்கு உண்டுதானே?
மாணவர்கள் தன்னைக் கண்டதும் பயப்பட வேண்டும் என நினைக்கும் ஆசிரியர் மனநோயாளி. ஆசிரியரை நினைக்கும்போதும் காணும்போதும் மாணவர்களின் அகமும் முகமும் மலர வேண்டும். அவரே ஆசிரியர்.
கற்றலில், நடத்தையில் குறையுடனிருப்பது மாணவர்களின் இயல்பு. அவர்களின் நிலையறிந்து குறைகளைக் களைய ஆசிரியர் வழிகாண வேண்டும். அதை விட்டுவிட்டுப் பிரம்பைத் தூக்கித் திரிவதால் பகைமையே விளையும் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.
உதவிய நூல்கள்:
1.என் சரித்திரம் (உ.வே.சா) டாக்டர் உ.வே.சா நூல் நிலையம்,சென்னை -90
2.நேற்று மனிதர்கள் ( பிரபஞ்சன்)
கவிதா பதிப்பகம்,சென்னை – 17
3.எஸ்.சங்கரநாராயணன் கதைகள், (எஸ்.சங்கரநாராயணன்) ராஜராஜன் பதிப்பகம்,சென்னை -17.
கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
மதுரை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான வரிகள்…..
ஆழமான வரிகள்…..
மிக அருமை….
மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா
கற்பித்தல் என்பது பல பரிணாம நிலையை கொண்டது. ஆனால் இன்று ஆசிரியர் என்ன ஓட்டம் தடைப்பட்டு மதிப்பெண் நோக்கில செயப்படவைக்கிறது. காலம் மாறனும் இலக்கிய அனைத்து தரப்பு மாணவகளும் கற்றுக்கொள்ள வேண்டும். மதிப்பெண் இல்லாமல். அந்த நிலை வரும்போது தன் நமது மொழியும் நம்ம பண்பாடை பறைசற்றும் இலக்கியாமும் நிலைத்து நிற்கும். ஆய்வு நோக்கில் உண்மை உரக்க சொன்ன காட்டுரை. நன்றி ஐயா. நாளிதழ் பிரசுரம் பண்ணுங்க ஐயா. இன்றைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும் 💐