உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 4: குறும்புக்காரி (சிலி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

 

சிலி நாட்டில் ஒரு ஏழைப் பெண்மணிக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் அரண்மனைக்கு எதிர்ப்புறமாக ஒரு சிறு தோட்டத்தில் வசித்து வந்தனர். தோட்டத்தில் துளசிச் செடிகளை வளர்த்து அதை விற்றுப் பிழைத்தார்கள். நாட்டின் அரசன் தினமும் காலையிலும், மாலையிலும் உப்பரிகையில் நின்று மூன்று இளம் பெண்களும் தோட்ட வேலை செய்வதை வேடிக்கை பார்ப்பான். மூவரிலும் மிகவும் சுட்டியான கடைசிப் பெண்ணை வம்புக்கு இழுக்க சந்தர்ப்பம் பார்த்து வந்தான். ஒரு நாள் கடைசிப் பெண் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது,  உப்பரிகையில் நின்று கொண்டு, ”சுட்டிப் பெண்ணே ! உன் துளசிச் செடிகளில் மொத்தம் எத்தனை இலைகள்?” என்றான்.

”தந்திரக்கார அரசே, வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்?” என்றாள் கடைசிப் பெண்.

அரசனுக்குக் கோபமாகிவிட்டது. இவளை அவமதிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்கு ஒரு ஏற்பாடு செய்தான். ஒரு கிழட்டுப் பணியாளை ஆரஞ்சுப் பழம் விற்பவன் போல் வேடமிட்டு அவர்களது குடிசைப் பக்கம் செல்லச் சொன்னான். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி அனுப்பினான்.

அரசனின் பணியாளும் ஒரு கழுதை மேல் ஆரஞ்சுப் பழ மூட்டையை ஏற்றிக் கொண்டு, ”ஆரஞ்சு, ஆரஞ்சு“ என்ற கூவிச் சென்றான். அவனைப் பார்த்த மூத்த பெண். ”ஐயா, ஆரஞ்சுப் பழம் என்ன விலை?” என்றாள். கிழவனும் அரசன் சொல்லித் தந்தது போல், ” உன் போன்ற அழகிக்கு விலை கிடையாது. நீ ஒரு முத்தம் தந்தால் போதும்,” என்றான். மூத்த பெண்ணுக்கு வெட்கமாகி விட்டது. முகம் சிவக்க குடிசைக்குள் ஓடி கதவை படாரென்று சாத்தினாள்.

மறுநாளும் பழம் விற்பவன் வந்தான். இப்போது இரண்டாவது பெண் அவனைப் பார்த்து விலை கேட்டாள். அவனும், ”நீ ஒரு முத்தம் தந்தால் போதுமானது. பழங்கள் எல்லாவற்றையும் தந்துவிடுவேன்,” என்றான் அரசன் சொல்லித் தந்தது போல். இவளும் அக்காவைப் போலவே வெட்கத்தோடு குடிசைக்குள் ஓடிவிட்டாள்.

கடைசிப் பெண் ” என்ன விஷயம்?” என்று கேட்டாள். அக்காக்கள் இருவரும் ஆரஞ்சு வியாபாரி பற்றிக் கூறினார்கள். ”ஏன் இப்படி வெட்கப் படுகிறீர்கள்? ஒரு முத்தத்திற்கு ஒரு மூட்டை ஆரஞ்சு கிடைக்குமே,” என்றாள் அந்தக் குட்டிப் பெண். ” அவன் நாளை வந்தால், நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றாள்.

மறுநாள் ஆரஞ்சு வியாபாரி வரும் நேரத்திற்கு கடைசிப் பெண் தயாராகக் காத்திருந்தாள். அவனும் வந்தான். இவள்,” ஆரஞ்சு என்ன விலை?” என்றாள். அவன் வழக்கம் போலவே, ” உன் போன்ற அழகியிடம் விலை சொல்ல முடியுமா? நீ ஒரு முத்தம் தந்தால் போதும். இந்த ஆரஞ்சு மூட்டை உனக்குத் தான்,” என்றான். ”அப்படியா? அப்படியானால் மூட்டையை என் குடிசைக்குள் இறக்கி வை,” என்றவாறே அவனுக்கு உதட்டில் லேசாக ஒரு முத்தம் தந்துவிட்டாள். இப்போது அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. மூட்டையை குடிசைக்குள் இறக்கி வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

ஐம்பூதங்கள் (@manivannan7402) 's Twitter Profile • TwiCopy

மறுநாள் அரசன் விடியும் போதே உப்பரிகைக்கு வந்து நின்றுவிட்டான். கடைசிப் பெண் தோட்டத்திற்கு வந்த்தும்,” சுட்டிப் பெண்ணே ! உன் துளசிச் செடிகளில் மொத்தம் எத்தனை இலைகள்?” என்றான்.

”தந்திரக்கார அரசே, வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்?” என்றாள் கடைசிப் பெண்.

”வாயை மூடு ஜாலக்காரியே ! ஆரஞ்சு விற்கும் கிழவனுக்கு எத்தனை முத்தம் தந்தாய்? அதையாவது சொல், ” என்றான் அரசன் கிண்டலாக.

ஆஹா.. இது உன் வேலைதானா, இதற்கு சரியான பதிலடி தருகிறேன் பார் என்று எண்ணியவாறே பதிலேதும் பேசாமல் குடிசைக்குள் ஓடிவிட்டாள் அவள். சிறிது யோசித்ததும் ஒரு திட்டம் கிடைத்துவிட்டது.

தலையிலிருந்து கால் வரை மூடும்படியாக ஒரு கறுப்பு உடையை அணிந்து கொண்டாள். கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படியான உடை அது. கையில் ஒரு மணியை எடுத்துக் கொண்டாள். ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி அமர்ந்து, மணியை கணீர் கணீர் என்று அடித்தபடி சவாரி செய்து கொண்டு அரண்மனை வாசலை அடைந்தாள்.

காவலர்கள் அவளை மறித்து ”நீ யார்?” உனக்கு என்ன வேண்டும்?” என்றார்கள். ” நான் மரண தேவதை. உங்கள் அரசனைத் தேடி வந்திருக்கிறேன்,” என்றாள் அச்சுறுத்தும் குரலில்.பயந்து போன காவலர்கள் நடுங்கியபடியே கதவைத் திறந்து விட்டார்கள். மணியை கணீர் கணீர் என்று ஓசையெழுப்பியபடி ” எங்கே அரசன்? அவன் உயிரைப் பறிக்க வந்துள்ள மரண தேவதை நான்,” என்று குரலை மாற்றிக் கொண்டு உரக்கக் கூவிக் கொண்டே கழுதைச் சவாரி செய்தபடி அரசனின் தர்பாரில் நுழைந்தாள்.

நடுநடுங்கிப் போன அரசன், தடாலென்று அவள் காலடியில் விழுந்து, ” அம்மா, தாயே, மரண தேவதையே, நான் மிகவும் இளைஞன். எனக்கு இன்னும் மணமாகவில்லை. நான் இன்னும் பல இன்பங்களை அனுபவிக்க வேண்டும். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். அதற்காக  நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன்,” என்றான்.

கடைசிப்பெண், ”நான் சொல்வதைச் செய்தால் விட்டுவிடுகிறேன்,” என்றாள் கரகரத்த குரலில்.

Image may contain: 1 person, eyeglasses

எழுத்தாளர் ச.சுப்பாராவ் 

”உத்தரவிடுங்கள் தாயே!“ என்றான் அரசன்.

“எனது வாகனமான இந்தக் கழுதைக் குட்டியின் பின்புறத்தில் மூன்று முறை முத்தமிட்டால் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன்.” என்றவாறு மணியை கணீர் கணீர் என்று ஓசை எழுப்பினாள்.

உயிருக்காக எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்த அரசன் கழுதைக்குட்டிக்குப் பின்புறமாகச் சென்று அதன் வாலைத் தூக்கி முத்தமிட்டான். துர்நாற்றத்தில் குமட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும் உயிராசையில் பல்லைக் கடித்துக் கொண்டு மூன்று முறை முத்தமிட்டான். ”சரி உன் உயிர் எனக்கு வேண்டாம், உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்,” என்றபடி அவள் மணியோசை எழுப்பிக் கொண்டு தன் கழுதையைத் திருப்பிக் கொண்டு வெளியேறினாள்.

அரசன் அப்பாடா, உயிர் பிழைத்து விட்டோம் என்று அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். மறுநாள் காலை வழக்கம் போல உப்பரிகைக்கு வந்தான். கடைசிப் பெண்தான் துளசி பறித்துக் கொண்டிருந்தாள். ” சுட்டிப் பெண்ணே ! உன் துளசிச் செடிகளில் மொத்தம் எத்தனை இலைகள்?” என்றான் வழக்கம் போல. அவளும், ”தந்திரக்கார அரசே, வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்?” என்றாள் வழக்கம் போல.

”வாயை மூடு ஜாலக்காரியே ! ஆரஞ்சு விற்கும் கிழவனுக்கு எத்தனை முத்தம் தந்தாய்? அதையாவது சொல், ” என்றான் அரசன் கிண்டலாக.

”அது இருக்கட்டும். நீ நேற்று கழுதையின் பின்புறத்தில் எத்தனை முறை முத்தமிட்டாய். அதைச் சொல்,” என்றாள் அந்தக் குறும்புக்காரி.

ஆஹா.. இது உன் வேலைதானா.. என்று இந்த முறை அரசன் வியந்தான். விறுவிறுவென உள்ளே சென்று காவலர்களிடம் அந்த மூன்று பெண்களையும், அவர்களது தாயாரையும் அழைத்து வரச் சொன்னான். அவர்களும் பயந்தவாறே வந்தார்கள்.

”இத்தனை புத்திசாலி குடிசையில் இருக்க்க் கூடாது. என் மனைவியாக அரசியாக இந்த மாளிகையில் இருக்கட்டும்,” என்றான் அவன்.

எல்லோரும் மகிழ்ந்தார்கள்.