Writer Sa. Tamilselvan (ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம்). Learn how it can empower individuals, transform communities - Lakshmi Balakrishnan

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம் 

ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம் ஓர் அறிமுகம்
ஆசிரியர்: கமலாலயன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹.120.00
புத்தகம் வாங்க: thamizhbooks

ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம் – எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

கல்வி என்பது ஒரு தனி மனிதன் தனக்காகத் தானே தேடிக் கொள்வதோ அல்லது ஒரு தனிப்பட்டதொரு குடும்பம் தன் குழந்தைகளுக்குத் தேடித் தருவதான ஒரு செல்வம் இல்லை. ஒரு குழந்தை பெறும் கல்வி என்பது சுற்றியுள்ள ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

பள்ளி என்பதற்குரிய school எனும் ஆங்கிலச் சொல்லிற்கு அதன் மூல மொழியான கிரேக்க மொழியில் ஓய்வு என்றுதான் பொருள். அதாவது சமூகத்தின் உயர்நிலையில் இருந்த குழந்தைகளுக்குத்தான் மிகுதியாக ஓய்வு நேரம் இருக்கும். அவர்களுக்காகவே ஆரம்ப காலப் பள்ளிகள் செயல்பட்டன. அதனாலேயே ஆரம்பகாலக் கல்வியில் பண்பாட்டுக் கூறுகள் மட்டுமே கற்பிக்கப்பட்டன.

இன்று மானிடராகப் பிறந்த அனைவருக்கும் கல்வியென்பது அடிப்படை உரிமை என்ற எண்ணப்போக்கு உலகெங்கும் பரவியிருக்கிறது. ஆனாலும் நடைமுறையில் இன்னமும் கூட அடித்தள மக்களுக்கு கல்வி உரிமை என்பது கிடைத்தும் கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது.

மற்ற இடங்களை ஒப்பு நோக்க நம் தமிழகத்தில் ஓரளவு பரவாயில்லை எனும்படியான சூழல்தான் நிலவுகிறது. பின் தங்கிய சூழலில் இருக்கும் ஒரு குழந்தை ஒரளவு நன்றாகப் படித்து மதிப்பெண்கள் பெற்றுவிட்டால், பெரும்பாலும் அவர்கள் உயர்கல்விக்குள் நுழைந்துவிட முடியும்.

உடலுழைப்பை நம்பி வாழும் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வயதும், ஆண் குழந்தைகளின் பொருளீட்ட தொடங்க வேண்டிய வயதும் மிக மிகக் குறைவானதாகவே இன்னமும் இருக்கிறது. எனவே சுமாராகவோ அல்லது அதற்கும் சற்றுக் குறைவாகவோ படிக்கும் ஒரு குழந்தை இந்த இரு அபாயகரமான குழிகளுக்குள் விழுந்துவிடும் வாய்ப்பே அதிகம்.

பிள்ளைகள் பத்து, பன்னிரெண்டு வகுப்புகளுக்கு வந்துவிட்டால் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்து, வெளியூர் திருமணங்கள், துக்க வீடுகளுக்குக் கூட செல்லாமல் இருப்பது என மொத்தக் குடும்பமும் பதற்றத்திற்கு உள்ளாகும் சூழல் நகர்ப்புற, நடுத்தரக் குடும்பங்களில் நிலவும் அதே உலகில்தான் பிள்ளை ஒரு வகுப்பில் தோற்றுவிட்டால் உடனடியாக பெண்ணென்றால் வீட்டைப் பராமரிக்கவும், ஆணென்றால் குடும்பத் தொழிலுக்கும் தள்ளிவிடும் அவல நிலையும் இருக்கிறது.

ச. தமிழ்ச்செல்வனின் ‘பதிமூணில் ஒண்ணு’ எனும் கதை அப்படியான சூழலில் இருக்கும் நடராஜன் எனும் சிறுவனின் கதை. கணக்கிலும், ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற முடியாமல் திணறும் நடராஜன் எனும் சிறுவன். அவன் பெயிலானால் கையோடு பெரிய நாயக்கர் வீட்டு மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்லும் எண்ணத்தில் இருக்கும் அவன் தந்தை, அவனைப் படிக்கத் தூண்டும் அவனது தாய்மாமன் என தனித்துவமான கதாபாத்திரங்கள் உலவும் கதை அது. கணக்கில் பாஸ் செய்ய பிள்ளையாரையும், ஆங்கிலத்தை சமாளிக்க ஏசுவையும் வேண்டிக் கொள்வதற்கு மேல் நடராஜனுக்கு செய்ய ஏதுமில்லை.

தெய்வங்களின் கருணையினால் அல்லாது, மனிதர்களாகிய ஆசிரியர்களே அவ்வருடத்தில் கருணை மதிப்பெண் அடிப்படையில் நடராஜன் உள்ளிட்ட பதிமூன்று மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்கள். ஆனால் புதிதாக வந்த தலைமையாசிரியரோ அதை ஒப்புக் கொள்ளாமல் அவர்களின் தேர்ச்சியை ரத்து செய்துவிடுகிறார். முதலில் பதிமூன்று பேரின் வீட்டிலிருந்தும் பெரியவர்கள் யாராவது ஒருவர் கிளம்பி வந்து தலைமையாசிரியரிடம் முறையிட நிற்கிறார்கள். மறுநாள் வரச்சொன்னதும் மீண்டும் செல்வது நடராஜனும் அவன் மாமாவும் மட்டும்தான். அதாவது மீதமுள்ள பன்னிரெண்டு பேரும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள் என்கிற அவலத்தோடு, நடராஜனும் கூட இன்னமும் எவ்வளவு நாள் தாக்குபிடித்து படிக்க முடியும் என்கிற கேள்வியை நம் முன் சித்தரிப்பதோடு அக்கதை முடிந்துவிடுகிறது.

Writer Sa. Tamilselvan (ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம்). Learn how it can empower individuals, transform communities - Lakshmi Balakrishnan
பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் தோழர் கமலாலயன் தொகுத்த ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்:ஓர் அறிமுகம் நூல் வெளியிடப்பட்டது

நம் கல்விப் புலமெனும் பரமபத விளையாட்டில்தான் எத்தனை பாம்புத் தலைகள் காத்துக் கிடக்கின்றன என்பதை இக்கதை அளவுக்கு நுட்பமாகவும், அதே நேரம் தெளிவாகவும் சொன்ன கதை வேறில்லை. சிறிது இடைவெளி விட்டு விட்டு, கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது மூன்றாம், ஐந்தாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு எனும் பேச்சு எழுந்த போதெல்லாம் என் மனதில் இந்தக் கதைதான் சுழன்றது.

பள்ளிக் கல்வியில் ஒவ்வொரு கடுமையான தேர்வு முறையும் எத்தனை ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களையும், குழந்தைத் திருமணங்களையும் ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர இக்கதையை அனைவரும் படிக்க வேண்டும் என்றே சொல்வேன்.

தமிழ்ச்செல்வனின் எழுத்துக்கள் குழந்தைகளின் உலகை மிக நுட்பமாகவும், யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் சித்தரிக்ககூடியவை என்பதோடு பெரியவர்களின் அணுகுமுறையில் இருக்கும் போதாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக உள்ளது.

இதே போல பெண்களின் அகம், புறம் சார்ந்த உணர்வுகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நெருக்கடிகளையும் சித்தரிக்கக் கூடிய ’வெயிலோடு போய்’ போன்ற கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ’எசப்பாட்டு’ எனும் கட்டுரைத் தொகுப்பு முழுக்க முழுக்கப் பெண்களின் வெவ்வேறு சிக்கல்களை, அதற்கான காரணகாரியங்களை, தீர்வுகளை எல்லாம் பெண்ணுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து உணர்ந்து கொண்டது போல துளியும் மிகை/குறையின்றி எழுத்தில் தீட்டியிருக்கிறார்.

தீப்பெட்டித் தொழிற்சாலையின் கந்தக வாடை, கரிசல் மண்ணின் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கைப்பாடுகள், அறிவொளி இயக்கத்தின் மூலம் வாசிப்பைப் பரவலாக்குவதற்கான சிறு நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என தமிழ்ச்செல்வனின் படைப்புலகின் கண்ணிகள் பலவகைப்பட்டவை.

1972லிருந்து எழுதிக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன் எனும் மகத்தான படைப்பாளியைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புலகம் பற்றியதொரு முழு நாள் கருத்தரங்கினை கோவை மாவட்ட தமுஎகச இன்று (ஜூலை 7ஆம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது. கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கேற்போம். காலத்தில் அழியாத படைப்புகளைத்தந்துள்ள தோழர் ச. தமிழ்ச் செல்வனின் படைப்புலகினைக் கொண்டாடுவோம்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *