எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘ பதிமூணில் ஒண்ணு’ சிறுகதை குறித்து எழுதப்பட்ட கட்டுரை
திக்கற்றவர்கள்
– மணி மீனாட்சிசுந்தரம்
“எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நகர்கின்றது இவ்வையம்” என்ற வரிகள் ஒரு சமத்துவ சமூகத்தை நோக்கிய கனவு ; வாழும் மனிதனுக்கு வாழும் உலகைக் குறித்துக் கூறப்படும் ஒரு நம்பிக்கை ; இன்றைய வயிற்றுப் பசிக்கும் நாளைய உயிர்த்தலுக்குமான ஒரு அசரீரி வாய்ச்சொல் ; அவ்வளவே!
ஆனால், நிஜத்தில் வாழ்வு எல்லோருக்குமானதாக இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமற்ற எதிர்காலமும் , ஆதரவற்ற நிகழ்காலமும், தூக்கத்திலும் அச்சுறுத்தும் தோற்கடித்த இறந்தகாலமும் ஒரு மனித வாழ்வில் எதைத் தந்துவிட முடியும். சமுகத்தின் கண்ணாக, இலக்கியம் அத்துயரைக் குருதி கசியக் காண்கிறது; காண வைக்கிறது.
ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து முதன்முதலாகப் பள்ளிக்கு வரும் ஒரு மாணவனின் துயரைப் பேசுகிறது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘பதிமூணில் ஒண்ணு’ சிறுகதை.
அப்பா நிரந்தரமாக பண்ணை வீட்டுக்கு ஆடு மேய்ப்பவர். அம்மாவுக்குக் கூலி வேலை. மகன் பள்ளிக்கூடம் போகாதிருந்தால் நல்லது, ஆடு மேய்க்க ஆள் வேண்டும் என நினைப்பவர் அப்பா. இவர்களுடைய மகன் நடராஜன். அவனுடைய கதைதான் இச்சிறுகதை.
எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் வாய்த்து விடுவதில்லை. மனிதன் என்றாலே குறையுடையவன்தானே.
ஆனால், மாணவன் மட்டும் தான் படிக்கும் எல்லாப் பாடங்களிலும் சிறந்தவனாக இருக்கவேண்டும் என ஆசிரியர் நினைப்பது சரியாகுமா?
முதல் தலைமுறை மாணவர்க்குக் கணிதமும் ஆங்கிலமும் எப்போதும் தகராறுதான். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை இப்படித்தான்.வீட்டில் பெற்றோர்கள் படிக்காத நிலையில் பின்தங்கிய மாணவர்களின் நிலை பரிதாபம். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்களும் எதிராக அமைந்துவிட்டால்…
நடராஜனின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அப்பாவுக்கு அவனது படிப்பைப் பற்றிய அக்கறையில்லாத நிலையில் பட்டாளத்துத் தாய்மாமன் தயவில்தான் பள்ளிக்கூடம் போக முடிகிறது. ஆரம்பத்தில் இருந்தே நடராஜனுக்குக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் தகராறு. ஆறாவது, ஏழாவது வகுப்புகளில் பெயிலாகி எட்டாம் வகுப்புக்கு வருகிறான். எட்டாம் வகுப்பில் புதிதாக வந்த கந்தசாமி சார் அவனுக்குப் பிரச்சனையாகிறார்.
மாணவனுக்கு வராத பாடம் , அவனை அடிஅடியென்று அடித்தால் வந்துவிடும் என்று தப்புக்கணக்குப் போடும் கணக்கு ஆசிரியர் அவர்.
” நடராஜன் எல்லாப் பாடத்திலும் 70 - 80 மார்க் வாங்கிவிடுவான். ஆனால், கணக்கிலும் ஆங்கிலத்திலும் 20 – 30 க்குக் கீழே விழுந்து கிடப்பான். எல்லாப் பாடத்திலும் பெயிலாகி எல்லாப் பாடத்திலும் 20 மார்க் வாங்குகிற பையன்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
அவர்களை எல்லாம் கந்தசாமி சார் ஒன்றும் சொல்லமாட்டார். மத்த பாடமெல்லாம் ஒழுங்கா படிச்சு 80 மார்க் வாங்கத் தெரியுதில்லே. என் பாடம்னா ஒனக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சா என்று புளியவிளாறை வைத்து நடராஜனை மட்டும் முழங்காலுக்குக் கீழே விளாசித்தள்ளுவார்.”
ஒவ்வொரு பரீட்சை முடிந்து திருத்திய பேப்பர்களை வகுப்பில் கொடுக்கும் நாள் நடராஜனுக்குத் துன்பகரமான நாள். நடராஜன் பேப்பர் வரும்போது கந்தசாமி சார் \
“நீ…திருந்தமாட்டே …
நீ…திருந்தமாட்டே ….” என ஆவேசம் வந்தவர் போல் கத்தியபடியே புளிய விளாறை எடுப்பார்.
நடராஜனுடைய பிரச்சனையை ஒரு ஆசிரியராக அக்கறையுடன் கந்தசாமி சார் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ளவும் முயற்சியும் செய்யவில்லை. பாடத்தைப் படிக்காமல் இருந்து மதிப்பெண் குறைவது வேறு. படித்தும் முயற்சி செய்தும் முன்னேற்றம் இல்லாததது
வேறு மாணவன் இந்த இரண்டில் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை ஒரு ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். அறிந்ததின்படி அப்பிரச்சனை தீர ஆசிரியர் மாணவனுக்கு உதவவேண்டும். ஆனால், பொதுவாகப் பாடம் நடத்துவதைத் தவிர நான் எதுவும் செய்யமாட்டேன். மாணவன் மட்டும் நன்கு படிக்க வேண்டும் என ஒரு ஆசிரியர் நினைப்பது கற்றலுக்கு எதிரான மனநிலையாகும்.
ஒருமுறை கணக்குப் பேப்பரில் நடராஜன் அவருக்கு மனம் உருக ஒரு கடிதம் எழுதியிருந்தான். ‘வேண்டுமென்று நான் கணக்கில் பெயிலாகவில்லை. தன் குற்றம் எதுவுமில்லை.வச்சிக்கிட்டு நான் வஞ்சகம் செய்யவில்லை தெய்வமே!” என்று கண்ணீர் சிந்திக்கடிதம் எழுதியும் ஆசிரியர் மனமாறவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் கலங்குகிறான் நடராஜன்.
“ராவும் பகலும் புஸ்தகமும் நோட்டும் கண்ணீருமாகக் கிடக்கும் மகனைக் கண்டு மனம் பொறுக்காத அவனுடைய ஆத்தா எப்படித் தன் செல்ல மகனுக்கு உதவுவது என்று தெரியாமல் மறுகிமறுகி வந்தாள்”.
குல தெய்வம் சுடலைமாடனுக்கு ஆடு வெட்டிப் படையல் போடும் போதுதான் நடராஜனுக்கு ஒரு யோசனை பிறக்கிறது. நம்ம சாமிகளுக்குப் படிப்பறிவு இல்லை. அதனால் தான் நமக்குப் படிப்பு வரமாட்டேன் என்கிறது. அதனால் இனிமேல் சுடலைமாடனை விட்டுவிட்டு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் மேலத்தெரு பிள்ளையாரை நம்பினால் படிப்பு வந்துவிடும் என நினைக்கிறான் நடராஜன்.
அதிகாலையில் குளித்து ஆளுக்கு முந்தி, மூணு தெரு தாண்டி பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தினந்தோறும் 108 தோப்புக்கரணம் போடுகிறான். கணக்கிலும் ஆங்கிலத்திலும் எப்படியாவது பாஸாகி விட வேண்டும், கணக்கு வாத்தியார் கந்தசாமியை வேறு ஊருக்கு மாற்றிவிட வேண்டும் என்ற இரண்டு வேண்டுதல்களுடன் தீவிரமாகத் தோப்புக்கரணம் போடுகிறான்.
பிள்ளையார் ஒரு கண்ணை மட்டும் திறக்கிறார். ஆமாம்,நடராஜன் எட்டிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்குப் பாஸாகி விடுகிறான். ஆனால், கந்தசாமி சாரே ஒன்பதாம் வகுப்பிற்கும் கணக்கு ஆசிரியராக வந்துவிடுகிறார்.
கந்தசாமி சார் டியூசன் எடுக்கிறார்
எனக் கேள்விப்பட்டு அவரிடம் டியூசன் சேர்கிறான் நடராஜன். “டியூசனுக்கு வரும்போது நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டாலும் வாத்தியார் வீட்டு ஆடுகளுக்கு குழை ஒடித்துவர மறக்க மாட்டான்”. கந்தசாமி சாரின் மனைவிக்கு நடராஜனைப் பிடித்துப் போய்விடுகிறது.
பிறகென்ன, ஒரே வாரத்தில் கந்தசாமி சார் திருந்திவிடுகிறார். “அடுத்த பரீட்சையில் கணக்கில் மார்க் சுளையாக வந்து விழுந்தது.மாணவர்கள் யாருக்கும் நம்பிக்கையே வரவில்லை”.
எப்படியோ,நடராஜனின் கணக்குப் பிரச்சனை தீர்ந்தது.
ஆனால்,ஆங்கிலத்தில் அதே நிலைமை தொடர்கிறது.ஆங்கில ஆசிரியர் “அவன் பெயரைக் கூட வாசிக்காமல் பேப்பரை நடராஜன்மீது எறிகிறார்.”
என்னசெய்வதென்று யோசிக்கும்போதுதான் நடராஜனுக்கு நம்ம ஊரு சாமி பிள்ளையாருக்கு இங்கிலீஷ் தெரிய நியாயமில்லை என்ற உண்மை புரிகிறது.
ஞாயிறு தவறாமல் நாலு கிலோமீட்டர் நடந்து பக்கத்து ஊரில் உள்ள சர்ச்சுக்குச் சென்று முட்டங்கால் போட்டு “பிளீஸ் ஜீஸஸ்…ஹெல்ப் மீ இங்கிலீஸ் ஒன்லி…ஜஸ்ட் பாஸ் ஒன்லி” என இயேசுநாதருக்குப் புரிகிற மாதிரி பிரேயர் பண்ணுகிறான்.
“யேசு நாதருக்கே இங்கிலீஷ் தெரியாத ப்பா.அவருடைய தாய்மொழி ஹிப்ரூ அல்லவா? என்று தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்த குமரன் அண்ணன் சொன்னதும் மனமுடைந்து போகிறான் நடராஜன். செய்வதறியாது கோயிலுக்கும் சர்ச்சுக்குமாக நடைப்பிணமாக அலைகிறான் நடராஜன்.
நடராஜனின் நிலை மனத்தைக் கனக்கச் செய்கிறது.பின்தங்கிய பாடத்தில் அவனுக்கு முறையாக வழிகாட்டக்கூடிய துணை ஒருவரும் இல்லாதது கொடுமை. இப்படி ஒரு நடராஜன் மட்டுமல்ல, ஓராயிரம் நடராஜன் நம்மில் உண்டு. அந்த ஓராயிரம் நடராஜன்களின் குரலாகவே இந்தக் கதை இருக்கிறது.
எப்படியோ ஒன்பதாம் வகுப்பு பாஸாகி விடுகிறான் நடராஜன். ஆனால், தலைமையாசிரியர் நடராஜனை அந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். கிரேஸ் மார்க்கில் பாஸான நடராஜனைப் பத்தாம் வகுப்பில் சேர்த்தால் பள்ளியின் ரிசல்ட் பாதிக்கும் என்கிறார்.நடராஜனோடு சேர்த்துப் பதின்மூன்று பேருக்கும் இதுதான் நிலைமை.
நடராஜனின் மாமா அவனை வேறு பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கும் அவனைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார் அப்பள்ளியின் தலைமையாசிரியர்.
அப்போது நடராஜனின் மாமாவிடம் ஒரு ஆசிரியர் வந்து ” பேசாம இதைச் சாதிப் பிரச்சனையா மாத்துங்க. அப்பத்தான் இவன் சரிக்கு வருவான். சேர்க்க மாட்டேன்னு சொல்ல எந்தச் சட்டமும் கிடையாது” என்று சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றிய அந்த ஆசிரியர் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தை நினைத்து நடராஜனின் மாமா வேதனையுடன் சிரிக்கிறார்.
“சாதி எங்களுக்கு ஒரு மலிவான ஆயுதமல்ல ; சுமை.எம்மைக் கீழே கிடத்தி மேலேறி அமுக்கும் சுமை ” எனக் கண்கலங்குகிறார்.
கடைசியாக நடராஜனுக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்துவிடுவதோடு கதை முடிகிறது. ஆனால், பதின்மூன்று பேரில் நடராஜனுக்கு மட்டும் மாமாவின் முயற்சியால் இடம் கிடைக்கிறது. மீதி பன்னிரண்டு பேரின் நிலை.?
ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூறும் சிறுகதை, பொதுவாக மாணவர்களை அணுகும் ஆசிரியர்களின் தவறான போக்கையும், பள்ளிகளின் செயல்பாட்டையும், சில ஆசிரியர்களிடம் உள்ள சாதிக் குசும்பையும் இச்சிறுகதை கண்டிக்கிறது.
ஆசிரியர்களே! நீங்கள் மேதைகளை
உருவாக்குவது ஒருபுறம் இருக்கட்டும்.எங்கள் மாணவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கொஞ்சம் கருணையோடு கண் திறந்து பாருங்கள் என மன்றாடுகிறது இச்சிறுகதை.
கதையில் கந்தசாமிசார், டியூசன் படிக்க வரும் நடராஜனிடம் ஆடுகளுக்குப் புல் நறுக்கிப்போடுவதில் அவனுக்குள்ள லாவகத்தைத் தானும் கற்றுக்கொள்ள நினைக்கிறார். “நடராஜன் தினசரி அரை மணிநேரம் அரிவாளை எப்படிப் பிடிப்பது, கட்டையை எப்படி வைப்பது, இடது கையில் புல் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் விளக்குகிறான். ஆனாலும் வாத்தியாரின் மரமண்டைக்கு அது கடைசிவரை ஏறவில்லை”.
நூலின் தகவல்கள் :
நூல் : பதிமூணில் ஒண்ணு
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan)
விலை: ரூ.20
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலினைப் பெற : 9444567935
உதவிய நூல் :
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் (ச.தமிழ்ச்செல்வன்),
பாரதி புத்தகாலயம், சென்னை – 600018
கட்டுரையாளர் குறிப்பு :
மணி மீனாட்சி சுந்தரம்,
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவீன கவிதை குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.
முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான பதிவு ஐயா. தமிழ்ச்செல்வன் சிறுகதையில் வரும் கடவுள் பகடியை அழகாக எடுத்துக் கூறியுள்ளது சிறப்பு. உங்கள் எழுத்து நடை சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் ஐயா.