சரிதா ஜோ-வின் “ஆகிருதி” சிறுகதை தொகுப்பு | Writer Saritha Jo's Agirudhi Tamil Book Review | எழிலரசி | www.bookday.in

சரிதா ஜோ-வின் “ஆகிருதி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

‘ஆகிருதி’ சிறுகதை தொகுப்பு – சரிதா ஜோ அவர்களிடம் இருந்து நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம். இதில் எட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் கதை ‘ஆகிருதி’. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன.

மகா, பிறந்த வீட்டில் மகராசியாக வளர்க்கப்பட்டாலும், கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி புகுந்த வீட்டில் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி, தன் அம்மா வீட்டில் தனியாக வாழத் தொடங்குகிறாள். பல பெண்களுக்கு சோகம் என்றாலும், சந்தோஷம் என்றாலும் வெளிப்படுத்தும் இடம் சமையலறைதான். மகாவும் அப்படித்தான். “செத்துப் போய்க் கிடந்தாலும் சோத்தாக்கி வச்சிட்டு பாடையில போய்ப் படு என்று சொல்வாங்க” என்ற வரி பெண்களின் வாழ்வியல் உண்மையைப் பிரதிபலிக்கிறது.

‘வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்’ கதையில் வரும் சிலுக்கா அக்காவின் பாத்திரம் போலவே, அதற்கான ஓவியமும் அழகாக இருந்தது. அந்த ஓவியத்தின் வழியே சிலுக்கா அக்காவை நான் மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.

‘வாக்கு’ கதையை வாசிக்கும்போது என் சிறுவயது நினைவு ஒன்று வந்தது. ஒருமுறை என் கம்மலைத் தொலைத்துவிட்டேன். பாட்டி திட்டுவார் என்ற பயத்தில் அதை என் அத்தையிடம் கொடுத்து, நான் ஊருக்குப் போன பிறகு பாட்டியிடம் கொடுக்கச் சொன்னேன். அத்தையும் அப்படியே செய்தார். நான் திரும்பி வந்தபோது, “ஏன் என்னிடமே தரவில்லை? என் மேல் அவ்வளவு பயமா?” என்று பாட்டி கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டபோது எனக்கு அழுகை தாங்கவில்லை. ஆனால் பாட்டி என்னை திட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை. ‘வாக்கு’ கதையை வாசிக்கும்போது அந்த நினைவு மீண்டும் மனதில் வந்தது.

‘தாயாதி பாத்தியம்’ தாத்தா–பேத்தி உறவின் ஆழத்தை அழகாகப் பதிவு செய்கிறது. வயதானவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சித்ராவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்கள் வயதாகிவிட்டார்கள் என்று அலட்சியப்படுத்தாமல், அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அனுபவங்களையும் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும். பேத்தி திட்டும்போது கூட, ஒரு சிறு குழந்தையைப் போல “சித்ரா, எனக்கு பசிக்கிறது” என்று தாத்தா சொல்வது மனதை நெகிழச் செய்தது. உண்மையாகச் சொன்னால், ‘தாயாதி பாத்தியம்’ கதையை நான் கண்ணீரோடு வாசித்தேன்.

‘வீட்டிலிகள்’ கதையே என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது. பெண்கள் வெளியில் எவ்வளவு பாராட்டப்பட்டாலும், வீட்டிற்குள் அவர்களுக்கான மதிப்பு பல நேரங்களில் குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாடு அளவிலான எழுத்தாளர் போட்டியில் முதல் பரிசு பெற்ற வைஷ்ணவியின் புகைப்படத்தை வீட்டில் மாட்ட அனுமதி இல்லை. ஆனால் ஒரு ஜாதித் தலைவரிடம் பொன்னாடை பெற்ற புகைப்படத்தை பெருமையாக மாட்டி வைத்திருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் பெண்ணின் வெற்றியைக் கொண்டாட மறுக்கும் மனநிலை இன்னும் இருக்கிறது. “பெண்களும் முடிவு எடுக்கலாம்” என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் முடிவுகள் என்ன? “இன்று என்ன சமைக்கலாம்?”, “தீபாவளிக்கு எங்கே டிரஸ் எடுக்கலாம்?”, “எந்தக் கோயிலுக்கு போகலாம்?”, “வேண்டுதலை எப்போது நிறைவேற்றலாம்?” போன்ற முடிவுகள்தான். எந்த எல்லைக்குள் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் ஆணாதிக்கச் சமூகம் தானே தீர்மானிக்கிறது.

பெண்களை மதிக்கிறோம் என்று வெளியில் பேசும் பலருக்குள்ளும் ஆணாதிக்க மனப்பான்மை இன்னும் ஆழமாகவே இருக்கிறது. ஏனோ தெரியவில்லை, இந்த எட்டு சிறுகதைகளில் வைஷ்ணவியின் கதையே என்னை நீண்ட நேரம் தூங்க விடாமல் சிந்திக்க வைத்தது. அது ஒரு கதையாக மட்டும் இல்லாமல், பல பெண்களின் வாழ்வியல் அனுபவமாகவும் எனக்குத் தோன்றியது.

எழுத்தாளர் சரிதாஜோவை ஒரு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். இந்த கதைகளை வாசித்த பின்னர் சரிதாஜோவை ஒருமுறை ஆறத் தழுவிக் கொள்ள ஏங்குகிறது மனது. என் அன்பு முத்தங்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:
ஆசிரியர்: 
வெளியீடு:
விலை: 10% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எழிலரசி
கற்பி வாசகர் வட்டம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *