சிறுகதை: முற்பகல் இன்னா – எழுத்தாளர் ச.சுப்பாராவ்

 

இரண்டு மூன்று நாட்களாக நான் வாக்கிங் போகும் அதே நேரத்தில் அவளும் வருகிறாள். நைட்டிக்கு மேல் சுடிதார் ஷாலை அரசியல்வாதிகள் போல் மாலை மாதிரி போட்டுக்கொண்டு, வாக்கிங் செல்லும் எல்லா ஐம்பது பிளஸ் ஆன்ட்டிகளையும் போலவே குதிரைவால் கொண்டை என்ற பெயரில் எலிவால் கொண்டையுடன், கையில் கைபேசியுடன். அவளைக் கடந்து போகும்போது ‘நீங்கள் ஜான்சி அக்கா தானே?‘ என்று கேட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கும்போதே, அவள் என்னை முந்திக் கொண்டு, ‘தம்பி, நீங்கள் இன்னார்தானே?‘ என்றாள். ஜான்சி அக்காதான். ‘ஆமாம். என்னைப் போய் என்ன நீங்கள் என்று சொல்கிறீர்கள்,‘ என்றேன். ‘ரொம்ப வருஷம் கழிச்சு பாக்கறோம். சப்போஸ் வேறு யாராகவாக இருந்து நான் பாட்டிற்கு நீ, வா, போ என்று சொல்லிவிட்டால்?‘ என்று சிரித்தாள் அவள். சிரிக்கும்போது விடைத்த மூக்கை இடது கையால் லேசாக மறைத்துக் கொண்டாள். ஜான்சி அக்காவேதான்.

கணவரின் பணிஓய்விற்குப் பின்னர், முன்பு எப்போதோ இந்தப் பகுதியில் கட்டி வாடகைக்கு விட்டிருந்த வீட்டிற்குக் குடிவந்து விட்டார்களாம். போனமாதம்தான் வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதி நல்ல வசதியாக இருக்கிறது அவர்களுக்கு. ஞாயிற்றுக்கிழமை இந்த நீண்ட சாலையில் காய்கறிச் சந்தை போடுகிறார்கள். கணவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையும் அருகில்தான் உள்ளது. மதுரையில் இப்போது இந்த ஒரு பகுதியில் மட்டும்தான் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்ல இந்த அகலமான புதிய சாலைதான் எத்தனை வசதியாக இருக்கிறது! போன வாரமே என்னையும், காயத்ரியையும் அவள் சந்தையில் பார்த்திருக்கிறாள். காயத்ரி சின்னப் பெண்ணாக அழகாக இருப்பதாகச் சொன்னாள். நானும் பிளஸ் டூ படிக்கும் போது இருந்த மாதிரியேதான் இப்பவும் இருக்கிறேனாம்.

‘நீங்களும் அப்படியேதான் இருக்கிறீர்கள்,‘ என்றேன். அக்காலத்தில் எங்கள் தெருவில் அவளுக்கு அர்ச்சனா என்று பட்டப்பெயர் இருந்ததை நினைவு கூர்தேன். நான்கு நாட்களுக்கு முன் அழியாத கோலங்கள் 2 பார்த்தாளாம். ‘அர்ச்சனா எப்படி இருக்கு, நான் எப்படி இருக்கேன்! ஏம்பா, கறுப்பா இருந்தா அர்ச்சனாவா? நா என்ன சைசுல இருக்கேன், என் கையப் பாரு, என்று வலதுகையை உயர்த்தி, இடது கையால் வலதுகையின் ட்ரைசெப்ஸை லேசாகத் தட்டிக் காட்டினாள். கொழகொழவென்று ஆடி நின்றது. உருண்டையாக தும்பிக்கை மாதிரி. என் மனதில் தோன்றியதை படித்துவிட்டாள் போலும். ‘உங்க மாமாவுக்கு உடம்பு சரியில்லப்பா. தயிர் சாதத்த மிக்ஸில போட்டு ஸ்பூன்ல ஊட்டணும். மிக்ஸி எதுக்கு.. இவ கையே மிக்ஸி தானேன்னு டாக்டர்ட்டயே சொல்றாருப்பா… கை இப்படி தும்பிக்கை மாதிரி இருந்தாத் தானே அவர தூக்கி ஒக்கார வைக்க, படுக்க வைக்க முடியுது?‘ என்று திரும்பவும் சிரித்தாள். இப்போது மூக்கு விடைக்காத கசந்த சிரிப்பு.

சாலையில் எங்களைப் போன்ற வாக்கிங் ஆட்கள் ஓரிருவர் தவிர வேறு யாரும் இல்லை. நீண்ட அந்த சாலையில் எங்கள் பழைய தெருவின் பழைய ஆட்களைப் பற்றிப் பேசிக் கொண்டே நடப்பது அத்தனை சந்தோஷமாக இருந்தது. எங்கள் தெருவின் பழைய ஆட்கள் பெரும்பாலும் இப்போது சென்னையில்தான் இருக்கிறார்கள் என்று அவள் மூலம் தெரிந்தது. கிட்டத்தட்ட அவளது தோழிகள் எல்லாருமே எங்கெங்கோ கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவளோடு வாராவாரம் தேவி தியேட்டரில் சினிமா பார்க்க கம்பெனி கொடுக்கும் மீனா இவர்கள் சென்னையில் வசித்த காலத்தில் இவள் வீட்டருகே இட்லி மாவு விற்றுக் கொண்டிருந்தாளாம். ‘உனக்கு ஹேமா தெரியுமா?‘ என்றாள். ‘ஹேமாவா?‘ என்று யோசித்தேன்.

‘வரதன் தம்பி சீனு அண்ணாவின் இதயக்கனி எம்ஜியார். என் இதயக்கனி நீ என்று கடிதம் கொடுத்தானே!  பெரிய ரகளை ஆனதே! அவள் பெயரே இதயக்கனி என்று மாறிவிட்டதே!‘ என்று நினைவூட்டினாள். இதயக்கனி வந்த காலத்தில் நான் மிகவும் சிறுவன் என்றேன். ஆமாம்,  நான் ரொம்ப குட்டிதான் அப்போது. அவளும் அவளது அம்மாவும் என்னை சிந்தாமணி தியேட்டரில் பொம்பளை டிக்கெட்டில் இதயக்கனி பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்களாம். அந்த இதயக்கனியான ஹேமா இப்போது சென்னையில் கேட்டரிங் செய்து வருகிறாளாம். எனினும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்து நல்லபடியாக செட்டில் ஆனவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘மணி இல்லத்தில் இருந்த வீணை மாமியின் பெண் ஜெயஸ்ரீயைத் தெரியுமா?‘ என்றாள். ‘கன்னட ஜெயஸ்ரீயா?‘ என்றேன்.

தெருவில் குட்டை ஜெயஸ்ரீ, நெட்டை ஜெயஸ்ரீ, ஐயங்கார் ஜெயஸ்ரீ என்று பல ஜெயஸ்ரீக்கள்… இந்த கன்னட ஜெயஸ்ரீ அந்தக் காலத்திலேயே ரயில்வேயில் வேலைக்குச் சென்றாளாம். பின்னர் அங்கிருந்து எல்ஐசிக்கு. இப்போது மேனஜராக இருக்கிறாளாம்.ஒரு முறை வைகையில் அவளைப் பார்த்தாளாம். அப்போது அதே பெட்டியில் சினிமா நகைச்சுவை நடிகர் ஒருவரும் வந்தாராம். அக்காவிற்கு அவரது பெயர் தெரியவில்லை. அவள் சொன்ன அடையாளங்களை வைத்து அது லொள்ளு சபா மனோகராக இருக்கலாம் என்று தோன்றியது.

Image

அவள்தான் எஸசெல்ஸியுடன் படிப்பை நிறுத்திவிட்டு, சில வருடம் டைப் கிளாஸ், திருப்பாவை, திருவெம்பாவை கிளாஸ் என்று பொழுதை ஓட்டிவிட்டு கல்யாணம் செய்துகொண்டு, வீட்டுக்காரருடன் ஊர் ஊராகச் சென்று திண்டாடிவிட்டு. இப்படி கடைசியாக சொந்த ஊர் வந்திருக்கிறாள். பேச்சு எப்படியோ அவள் வீட்டுக்காரர் பற்றிய ஒரு குறிப்போடுதான் முடிகிறது. அது வேண்டாமே என்பதாக நான் சங்கடப்பட்டேன். அவளும் அதை உணர்ந்திருக்க வேண்டும்.

‘என்னமோ, டைரக்ட் எஸ்ஐன்னு ஆசப்பட்டு எங்கப்பா இந்தக் குடிகாரனுக்கு கட்டி வெச்சுட்டாங்க. குடிச்சுட்டு வந்து என்ன பாடு படுத்தியிருக்காப்பல? எங்க பாப்பா பெறந்தப்ப ஒரு பிரச்சனைல மூணு வருஷம் அம்மா வீட்லயே கெடந்தேனே! எப்பப் பாத்தாலும் குடிச்சுட்டு வந்து வீட்டு வாசல்ல நின்னு ரகளை. ஒன்னயவே என்ன பேச்சு பேசிட்டாரு! அதுக்கப்பறம் தான நீ எங்க  வீட்டுக்கே போகக்கூடாதுன்னு உங்க அம்மா சொல்லிட்டாங்க.. அதுவும் சரிதான்!‘ என்றாள்.

நான் எது பற்றி பேச்சு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேனோ, அதே விஷயம். பிரசவத்திற்கு வந்தவள் ஏதோ பிரச்சனை காரணமாக மூன்று வருடம் அம்மா வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. அவள் வீட்டுக்காரர் மாமனார் வீட்டுப் படியை மிதிக்க மாட்டாராம். மானஸ்தராம். போதையில் தெருவில் நின்றே கத்திவிட்டுப் போவார். அவள் அம்மா, அப்பா எங்காவது கல்யாணம், விசேஷம் என்று வெளியே போக நேர்ந்தால் அவளுக்கு என்னைத் துணையாக வைத்து விட்டுப் போவார்கள். நான் பிளஸ் டூ லீவில் இருந்த நேரம் அது. குடிகாரர் என்றாலும் என் அண்ணன் மீது அவருக்கு மரியாதை உண்டு. ஒருமுறை குடிபோதையில் உயரதிகாரியை அடித்துவிட்டு, சஸ்பெண்டானவுடன் மருந்தைக் குடித்துவிட்டார்.

அந்தக் கேஸை என் அண்ணன்தான் முடித்துக் கொடுத்து வேலையைக் காப்பாற்றித் தந்தார். வக்கீல் வீட்டுத் தம்பி என்று என்னிடம் அதிக வம்பு செய்யமாட்டார் என்பதால் நான் அக்காவின் பாதுகாப்புக் கவசமாக அவ்வப்போது துணைக்கு இருப்பேன். அன்று இப்படி துணைக்கு இருந்த போதுதான் கடும் போதையில் வந்து வீட்டுவாசலில் நின்று கூச்சல் போட்டார். கதவைத் திறந்து வெளியே வாடி என்று சவுண்ட் விட்டார். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, அக்கா வேண்டாம், வேண்டாம் என்று சொல்லச் சொல்ல கதவைத் திறந்து ‘ஏன் மாமா இப்படி செய்றீங்க?‘ என்றேன். ‘உள்ள கதவைப் பூட்டிக்கிட்டு இரண்டு பேரும் என்னடா செய்றீங்க?‘ என்று கூச்சல் ஆபாசமாக மாறிவிட்டது. உள்ளே பாப்பாவிற்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த அக்கா, பாப்பாவை அப்படியே போட்டுவிட்டு, திறந்த மார்போடு ஆவேசமாக வெளியே வந்தாள்.

சடையைத் தூக்கி கொண்டை போட்டபடி, ‘இதுக்கு மேல ஏதுவும் பேசாத. அப்படியே ஓடிப்போயிரு. போலீஸ்காரன்னா என்ன வேணா பேசுவயா?‘ என்று ஒரு சத்தம் போட்டாள். அவள் எதிர்த்துப் பேசியது அதுதான் முதல் தடவை. தன் வீட்டுக்காரியால் இப்படியும் கோபப்பட முடியும் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவர் அப்படியே ஒரு கணம் தலைகுனிந்து நின்றார். பின்னர் தள்ளாடியபடி தன் எம் எய்ட்டியைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தார். அதற்குப் பிறகுதான் அவர்கள் வீட்டிற்கு நான் செல்வதற்கு அம்மா தடை போட்டது. நானும் சில நாட்களில் எம்ஐடியில் சேர மெட்ராஸ் போய்விட்டேன். பங்காளிச் சண்டையில் எங்கள் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு எங்கள் குடும்பமும் புறநகர் பக்கம் போனபிறகு அக்கா குடும்பத்தோடு தொடர்பு விட்டுப் போனது. ஆனால் அன்று ஜான்சியக்கா நின்ற கோலம் மட்டும் என் மனதில் மங்காத சித்திரமாய் தங்கிப் போனது.

சிறிய சங்கடமான மௌன இடைவெளிக்குப் பிறகு, ‘இப்போது அவர் பழைய மாதிரி இல்லை,‘ என்றாள் அக்கா. ‘மாறிவிட்டாரா?‘ என்றேன். எங்கிருந்து மாறுவது? சொந்தக்கார உயரதிகாரி தயவில் படிப்படியாய் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வின் போது ஏஎஸ்பி. அதிகாரம் அதிகமாக அதிகமாக, லஞ்சம், ஆட்டம், சொத்து, திமிர் எல்லாம் கூடத்தான் செய்தது. அதீத ரத்தக் கொதிப்பில் பக்கவாதம் வந்துவிட்டது என்பதால் உடல்ரீதியாக அடங்கிவிட்டாரே தவிர குணம் மாறவில்லை. கை, கால் செயலிழந்துவிட்டது. வாயும் கோணிவிட்டது. அவர் பேசுவது இப்போது அக்காவிற்கு மட்டும்தான் புரியுமாம்.

‘கால் போகும்னு தெரியும். வாய் போகும்னு தெரியாது‘, என்றாள் அக்கா.

‘ஏங்கக்கா? கால்ல முன்னாடியே ஏதாவது பிராப்ளம் இருந்துச்சா?‘

‘அதெல்லாம் இல்லப்பா. இவரு இன்ஸ்பெக்ட்டரா இங்க மதுரைல ஒரு ரெண்டு வருஷம் தெப்பக்குளம் ஸ்டேஷன்ல இருந்தாரு. ஒரு நா சாயந்தரம் நா மிஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப்ல பஸ்சுக்கு நிக்கறேன். இவரு ஜீப்ல வர்றாரு. மணியம் காப்பி பார் பக்கம் பிளாட்பாரத்துல வரிசையா வடைக்கட போட்றுப்பாங்க இல்ல. அதுல ஒரு வடைக்கடக்காரன் மாமூல் சரியா தரல்ல போல. ஜீப்லேர்ந்து எறங்கி அப்படியே கொதிக்கற எண்ணச் சட்டிய பூட்ஸ் காலால எத்தி தள்ளிவிட்டாரு. எண்ண அப்படியே கடக்காரன் மேல செதறுது. அவன் ஐயோன்னு கத்திட்டு அப்படியே துடிச்சுப்போய் ஓடினான் பாத்துக்க. அப்பவே இந்தாளுக்கு கால் வௌங்காமப் போகும்னு எனக்கு சட்டுன்னு தோணிச்சு. அது கை, வாய் எல்லாத்தையும் சேத்து இழுத்துட்டுப் போயிருச்சு.‘

எனக்கு அவளை சந்தித்து ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்றிருந்தது. நல்லவேளையாக எங்கள் தெரு முக்கு வந்துவிட்டது. ‘இங்க சுஜா டெய்லர்ஸ்னு போர்டு போட்ருக்கு இல்ல, இந்த கட்டிங்ல லெப்ட்ல ரெண்டாவது வீடுதாங்கக்கா எங்க வீடு. வாங்க,‘ என்றேன். ‘இங்க நல்லா தெப்பாங்களா?‘ என்றாள். ‘நல்லா தெப்பாங்கக்கா. எங்க வீட்ல இங்கதா தர்றாங்க,‘. என்றேன்.

‘வாழ்க்கைல எனக்கு ஒரே சந்தோஷம் டிசைன் டிசைனா சாரி வாங்கறது. அதுக்கு டிசைன் டிசைனா பிளவுஸ் தெக்கிறதுதான். நாலஞ்சு சாரி பிளவுஸ் தெக்காமக் கெடக்கு. இங்க கொடுத்துப் பாக்கறேன். அப்ப அப்படியே உங்க வீட்டுக்கும் வர்றேன்,‘ என்றாள்.

நான் எங்கள் தெருவில் திரும்பினேன். அவள் யாருமற்ற அந்த நீண்ட சாலையில் மெதுவாக அசைந்து அசைந்து நடந்து சென்றாள்.