ஒரு படைப்பாளியின் நூற்றுக்கணக்கான வரிகளை அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு என்னால் சட்டென்று மேற்கோள் காட்டமுடியும் என்றால் அது சுஜாதா தான். பாரதியார் எல்லாம் கூட அவருக்குப் பின்னால்தான். அப்படிப்பட்ட சுஜாதாவின் அறிமுகம் என் வாசிப்பை வேகப்படுத்தியது. நிறைய புது விஷயங்களைத் தேட வைத்தது. பிற்காலத்தில் ஏதோ சுமாராக எழுதவும் வைத்தது.

எழுத்தாளர் சுஜாதா

அக்கா லேடி டோக் காலேஜ் நூலகத்திலிருந்து சுஜாதாவின் சில வித்தியாசங்கள் தொகுப்பைக் கொண்டு வந்த அந்த நாளை நான் குறித்து வைக்காமல் வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டேன். அக்கா எனக்குச் செய்த உதவிகளில் மிக முக்கியமானது அது. ஆஹா… ஆஹா… சர்க்கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரமாயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான் என்ற சில வித்தியாசங்கள் கதையின் ஆரம்ப வரிகளை நினைக்காத நாளே இல்லை. ஏனெனில் முப்பத்திநான்கு ஆண்டுகளாக நானும்  அப்படியான ஒரு சின்ன பல் சக்கரம்! ”நடராஜன், நடராஜன்! உனக்கெப்படித் தெரியும்? ”நான்தான் நடராஜன்,” என்றேன் என்று முடியும் அம்மோனியம் பாஸ்பேட்.. அதிலிருந்து சுஜாதா மேல் ஒரு வெறி வந்துவிட்டது.

அவர் அப்போது புகழின் உச்சியில் இருந்தார். நிர்வாண நகரம், கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ, கொலையுதிர்காலம், ஜன்னல் மலர், காகிதச் சங்கிலிகள், வசந்தகாலக் குற்றங்கள், வசந்த், வசந்த்,( ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார் என்று வசந்த் வரலாற்றுப் பேராசிரியரைக் கேட்க, அவர் பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு என்னிடம் பேசக் கூடாது என்று திட்டுவது இப்போதும் நினைவிருக்கிறது! ) வைரங்கள் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் தொடர்கதைகள். சாவியின் முதல் இதழ் வந்தபோது, அதை வாங்கியதும் சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே பக்கத்தை எடுத்து படித்துக் கொண்டே வீரணன் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தது இன்று நடந்தது போல் என் மனக்கண்ணில் விரிகிறது. மாடு மனை போனால் என்ன? மக்கள் சுற்றம் போனால் என்ன? கோடிச் செம்பொன் போனால் என்ன? கிளியே குறுநகை போதுமடி என்று ஆரம்பிக்கும். இந்தப் பாட்டை எழுதியது யார் என்று ரொம்ப நாள் தேடித் திரிந்தேன்.

கிழவர்கள் மட்டுமே ஆதரித்து வந்த ஜனதா கட்சி மத்தியில் ஆட்டம் காணுவதற்கு முன்பே மதுரை சிம்மக்கல் பகுதியில் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. ஜனதா மன்றத்திற்கு ராமன் அண்ணனால் முன்பு மாதிரி புத்தகங்கள் வாங்கிப்  போட முடியவில்லை. சுஜாதாவோ வாராந்திரி ராணியைக் கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் தொடர் கதை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். எனினும், எந்தத் தொடரையும்  நான் தவறவிடாது படிக்கும் வகைளில் சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சநேயர் அனுக்கிரஹித்தார். ஜனதா மன்றம் அவரது கோவிலுக்கு எதிரே தான் என்பதால் அவருக்கும் நிலமை தெரிந்திருந்தது போலும்!

 

நானும் என் உலகும்...!!: சென்னை 35-வது ...

அந்த நேரத்தில் எங்கள் வகுப்பிற்கு ஜி.ஆர்.விஸ்வநாத் என்று ஒரு பையன் மெட்ராஸிலிருந்து வந்து சேர்ந்தான். அவனது தாய், தந்தையர் மெட்ராஸில் இருந்தார்கள். இவன் மதுரையில் மாமா வீட்டில் தங்கிப் படித்தான். அவனது மாமா நடராஜன் மெஜுரா காலேஜில் கெமிஸ்ட்டி பேராசிரியராக இருந்தார். வீடு வடக்குவெளி வீதியில் கனரா பேங்கிற்கு எதிர்புறம் இரண்டு வீடு தள்ளி.  அவர்கள் வீட்டிற்கு இன்னும் இரண்டு வீடு தள்ளி ஒரு வெற்றிலை பாக்கு, ஜுஸ் கடை ஒன்று இருந்தது. இப்போது அந்த இடத்தில் அழகேந்திரன் ஆட்டோ ஸ்டோர்ஸ் இருக்கிறது. அந்த ஜுஸ் கடைக்காரர் விஸ்வநாத் வீட்டில்தான் சர்பத், ஜுஸ் போட குடிதண்ணீர் பிடிப்பார். எனவே அவர்கள் வீட்டிற்கு மிகவும் நெருக்கம்.

நானும் விஸ்வநாத்தும் அவர் கடையில் வரும் புத்தகங்களில் சுஜாதா கதையை மட்டும் எடுத்துப் படித்து விட்டு, திரும்ப கயிற்றில் தொங்க விட்டுவிடுவோம். வாழ்வின் மிக மிக இனிமையான நாட்கள் அவை. மாத நாவல்கள் கூட அப்படி கடை வாசலில் நின்றபடியே படித்து முடித்ததுண்டு. தேடாதே… தேடினால் காணாமல் போவாய்…. வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன என்ற புவியரசின் வரிகளோடு வந்த தேடாதே நாவலை அப்படிப் படித்தது கண்முன் வந்து போகிறது. சுஜாதாவும், புவியரசும் தேடாதே என்று சொன்னால் நான் தேடாமல் இருந்துவிட முடியுமா? நான் புவியரசைத் தேடினேன்!

அந்த நாட்களில் முழுப்பரிட்சை லீவ் விட்ட அன்று மாலை ஒரு புது புத்தகம் படித்து விட வேண்டும் என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். கணக்குப் பரிட்சை முடிந்ததுமே எங்காவது திரிந்து, யாரிடமாவது ஓசி வாங்கி ஒரு புது புத்தகத்தை செட்டப் செய்துவிடுவேன். அடுத்து, சயின்ஸ், ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி பரிட்சை நாட்களில் அந்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டேதான் பரிட்சைக்குப் படிப்பது. கடைசிப் பரிட்சை முடிந்து,  மாலையில் வீடு வந்ததும், அம்மா கன்னுக்குட்டிய அவுத்து விட்டாச்சா? என்றவாறு காப்பி தருவாள். நான் என் புத்தகத்தை ஒரு கையில் எடுத்து வைத்துக் கொண்டுதான் மறுகையில் காப்பி டம்ளரை வாங்கிக் கொள்வேன்.

எட்டாவது முழுப்பரிட்சை முடியும் போது,  இப்படி மாலைமதியில் வந்த மறுபடியும் கணேஷ் வாங்கி வைத்திருந்தேன். மாலையில் எதிர்பாராத விதமாக சினிமா போக நேர்ந்தது. என் பெரியம்மா பெண்  பாமா அக்கா பேங்க் ஆஃப் மெ“ஜுராவில் அதிகாரியாக இருந்தாள். அவள் நிழல் நிஜமாகிறது படம் பார்க்க துணைக்குக் கூப்பிட்டாள். அப்போது உறவினர், மற்றும் தெரு அக்காக்கள் பலருக்கும் சினிமாவிற்குத் துணை போகும் பாலகனாக நான் இருந்தேன். படம் பார்த்துவிட்டு, இரவு சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கணேஷை பத்திருபது பக்கம் படித்துவிட்டுத்தான் தூங்கினேன். இன்றும் மரவேலை செய்யும் ஆசாரிகளின் உளியால் சீவப்பட்ட கூர்மையான குட்டிப்பென்சிலைப் பார்த்தால் மறுபடியும் கணேஷ்தான் நினைவிற்கு வரும்.

மேகத்தைத் துரத்தினவன், விபரீதக் கோட்பாடு, சிவந்த கைகள், கலைந்த பொய்கள். ஓடாதே, மண்மகன் என்று எத்தனை எத்தனை மாத நாவல் பொக்கிஷங்கள். ஒரு கட்டத்தில் நானும், கண்ணனும் சுஜாதா புத்தகங்களைத் தேடிப் படிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டிருந்தோம். சம்பந்தா சம்பந்தமே இல்லாத ஆட்களிடமிருந்தெல்லாம் சுஜாதா புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறோம். கண்ணனது பெரியப்பாவின் தூரத்து உறவினரின் நண்பர் ஒருவர் வீட்டில் அபூர்வமான சுஜாதா நாவல்கள் இருக்கின்றன என்று பெரியப்பாவின் தூ. உறவினரின் பரிந்துரையோடு, புதுத்தெருவில் ஒருவர் வீட்டிற்குப் போனோம்.

சித்ரா ஸ்டூயோ பக்கமாக அவர் வீடு. அவர் தினமணிக் கதிரில் வந்த சுஜாதா நாவல்கள் அத்தனையையும் தந்தார். மாயா – இதில்தான் வசந்த் முதன் முதலாக அறிமுகமாகிறான். பாரதியார் கண்ணன் என் சேவகன் என்று சொல்லும் ரேஞ்சில் சுஜாதா வசந்தை அறிமுகப்படுத்தியிருப்பார் – ஜேகே, வானமென்னும் வீதியிலே, பதினாலு நாட்கள் என்று அள்ளிக் கொண்டு வந்தோம். அதிகம் சினிமா பார்க்காதவனான நான் சுஜாதாவிற்காக காயத்ரி படம் பார்த்து வசந்த்தாக வெண்ணிற ஆடை மூர்த்தி வந்ததைப் பார்த்து தியேட்டரிலேயே வாந்தி எடுத்த கூத்தும் நடந்தது.

சுஜாதாவைத் தேடினால், அவர் வழியாக மற்றவர்களைத் தேடிப் படிக்கும் தனி சந்தோஷம் கிடைக்கும். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள் என்று Rhinoceros பற்றி அவர் எழுதிய ஒரு வரிக்காக அந்த நாடகத்தைத் தேடியிருக்கிறோம். இத்துடன் என் திருவிளையாடல் முற்றும் என்று அப்பீலை அனுமதிக்காத சிவன் என்று ஞானக்கூத்தனை அவர் அறிமுகம் செய்ய நாங்கள் அன்று வேறு கிழமையைத் தேடினோம். திசை கண்டேன், வான் கண்டேன் என்று பாவேந்தரின் வரிகளுடன் ஆரம்பிக்கும் தி. கண்டேன், வா. கண்டேன் படித்து முடித்ததும் பாவேந்தரைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஜி.நாகராஜனின் நாவலில் ஆரம்பம், முடிவு போன்ற சம்பிரதாய விஷயங்களை தேடுபவர்கள் காக்காக் கடையில் ஒரு பிளேட் ரத்தப் பொரியல் சாப்பிட்டு விட்டு, அது மார்க்கமில்லாதது… அபாதா..அது வரம்பில்லாதது… அனந்தோகாரா என்று நூறு தடவை சொல்லிப் பார்க்கலாம்  (இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாவிட்டாலும்) என்று கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவர் எழுதியிருக்காவிட்டால் நான் சத்தியமாக ஜி.நாகராஜனைத் தேடிப் போயிருக்க மாட்டேன்.

சோர்வினால் பொருள் வைத்துண்டாகில் என்ற பெரியாழ்வாரின் பாசுரத்தை, நேரிழையார் கூந்தலிலோர் புள்ளி பெற நீள் மரமாம் என்ற தனிப்பாடலை சுஜாதாவைத் தவிர வேறு யார் எனக்கு அறிமுகம் செய்திருக்க முடியும்?

சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகள் ஒரு தனி ரகம். பேசும் பொம்மைகளை எப்போதோ படித்துவிட்டேன். பின்னாளில் ராபின் குக்கின் தி பிரைன் படிக்கும்போது இதெல்லாம் எங்க சுஜாதா எப்பவோ எழுதிட்டாப்ல என்று தோன்றியது. திசைகள் இதழில் அவர் எழுதிய நச்சுப் பொய்கை என்ற மஹாபாரதக் கதை அடிப்படையிலான விஞ்ஞானக் கதை.. அதே நச்சுப் பொய்கையை வைத்து பின்னாளில் அடியேன் ஒரு மறுவாசிப்புக் கதை எழுதக் காரணமாக இருந்தது.

எழுத்தாளர் சுஜாதா பற்றி பலரும் ...

சுஜாதா என்னைப் படிக்க வைத்தார். எழுத வைத்தார். இரண்டிற்கும் மேலாக  ஒவ்வொரு நாளும் எதிரே படும் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் அது பற்றி அவர் எழுதிய ஏதோ ஒரு வரியை நினைத்துப் பார்த்து என்னைப் புன்னகைக்க வைக்கிறார்.

நேற்று கூட, கடையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த்தும், ”தமிழக அரசு / ரூட் நம்பர் 21ல் / அவளைப் பார்த்தபோது  / அவள் உதட்டின் மேல் மெலிதான மீசை…..” என்ற அவரின் வரி நினைவிற்கு வந்து லேசான புன்னகையை வரவைத்தது. நினைவில் வாழும் என்று கல்யாணப் பத்திரிகைகளில் போடுவார்கள். அது சுஜாதாவிற்குத் தான் முற்றிலுமாகப் பொருந்தும்.

Image may contain: 1 person, standing and outdoor

– நன்றி எழுத்தாளர் ச.சுப்பாராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *