எழுத்தாளர் சுஜாதா-வின் "ஊஞ்சல்" நாடகம் (Writer Sujatha's Oonjal Nadagam) | பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் – நூல் அறிமுகம்

“ஊஞ்சல்” நாடகம் – நூல் அறிமுகம்

கால ஓட்டத்தில் திரும்பவும் பெற முடியாத எத்தனையோ நிகழ்வுகள் மனித வாழ்வில் நடந்து விடுகின்றன. இளமையின் துடிப்பில் வேலையின் மீதான பேரார்வத்தில் தனது திறமையின் மீதான நம்பிக்கையில் மனித மனம் போடும் ஆட்டமும் அதன் மூலம் சம்பாதிக்கும் பணமும் அவனுக்குள் தானே பெரியவன் என்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறது.

வயது அனுபவம் கூடக்கூட பணிவும் பொறுமையும் நிறைந்துவிடும் மனதில் இயலாமையும் வயது முதிர்வும் ஒன்று சேர்கையில் தன்மீதே தனக்கு கழிவிரக்கம் ஏற்பட்டு விடும் அதேசமயம் இன்னும் தனக்கான ஈர்ப்பும் புறவெளியும் இருக்கிறது என்று நம்பும் மனம் தனது தேவைகளுக்காக பிறரிடம் கையேந்தவும் கேட்டுப் பெறவும் தயங்கி நிற்கிறதுதனது கல்வியின் மூலம் ஒரு காலத்தில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ஒருவர் வயது முதிர்வில் தமது “ஓமோ” காலகட்டத்தில் இருந்து வெளிவராமல் அதிலேயே நிலைத்து விடுகிறார்.

வாழ்வும் ஊஞ்சல் போல முன்னும் பின்னுமாய் நினைவுகளை ஆட்டி மகிழ்கிறது ஆனால் பின்னே நின்று விட்டால் நகர்தலுக்கு பெரும் பாரமாகிவிடும் முன்னையே ஓடி விட்டால் தன்னை நம்பி இருப்போரை தவிக்க விட்ட நிலை ஏற்படலாம் ஊஞ்சலைப் போலவே வாழ்வையும் நிகழ்காலத்தோடு சேர்த்து நடத்திச் செல்வதன் அவசியத்தை சுஜாதாவின் ஊஞ்சல் நாடகம் காட்சிப்படுத்துகிறது.

கவர்னர் உட்கார்ந்த ஆடிய ஊஞ்சல் என்ற பெருமையில் நிலைத்திருக்கும் வரதராஜனின் ஒரே மகள் கல்யாணி வேலைக்கு செல்கிறார். தனது நண்பன் கிரியை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஆசை மகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் கையில் காசு இல்லையே என துடிக்கும் வரதராஜனுக்கு அடுத்த வாரமே தனது கனவு புராஜெக்ட் உயிர் பெற்று துபாயிலிருந்து பெரும் பணம் வந்துவிடும் என நம்புகிறார்.

எழுத்தாளர் சுஜாதா-வின் "ஊஞ்சல்" நாடகம் (Writer Sujatha's Oonjal Nadagam) | பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்

ஆனால் நாட்கள் மாதங்களாகிறதே தவிர வரதராஜனுக்கு வரவே வரவில்லை. வரதராஜனின் மாணவன் ரமேஷ் மிகப்பெரிய பல்துறை தொழிலதிபராகி அதே ஊரில் சிறப்பாக உயர தன்னிச்சையாக அவரை சந்திக்க அவரது வீட்டை தான் வாங்கிக் கொண்டு வரதராஜனின் கடனை அடைத்து விடுவதாகவும் அவருக்கு தனது கொரியர் நிறுவனத்தில் வேலை தரவும் ஏற்பாடு செய்கிறார்.

ஆனால் தனது திறமை இன்னும் உலகில் மதிக்கப்படுகிறது என நம்பும் வரதராஜன் ஊஞ்சலில் ஆடியப்படியே தனது கடந்த காலத்தில் மூழ்கிப் போகிறார் விளைவு என்ன ஆயிற்று ஊஞ்சல் ஆடியதா கல்யாணியின் கனவு நிறைவேறியதா என்பதை தனக்கே உரிய எள்ளல்பாணியிலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் முடிவிலும் சுஜாதா நிறைவு செய்கிறார்.

குறைந்த கதாபாத்திரங்கள் வழியையும் நாடகத்தை எழுத முடியும் என நிரூபித்திருக்கும் சுஜாதா தனது சிறப்பான பாணியில் எழுத்து நடையிலும் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நம்மை தயார்படுத்தி விடுகிறார்

பணம் சம்பாதிக்கையில் மனிதனை மதிக்கும் உலகம் அவன் சும்மா இருக்கையில் வேறு விதமாக கணக்கிடுகிறது பிறருக்கு நாம் பாரமாகி விட்டோம் என்ற மனநிலையே சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பிறழ்வுக்கு உட்படுத்தி விடுகிறது பெரியோரை மதித்தலும் நிகழ்காலத்தில் வாழ்ந்ததும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்காமல் மனிதர்களையும் மதித்திடல் அவசியம் என்பதையும் ஊஞ்சல் நமக்கும் பாடம் நடத்துகிறது. கடந்த கால நினைவுகளின் ஊஞ்சலில் நிகழ்கால வாழ்வை கோட்டை விடாதீர்கள் என சுஜாதா அறிவுறுத்துகிறார்..

நூலின் விவரம்:

நூல்: ஊஞ்சல் – நாடகம்
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை
பக்கம்: 104
விலை: ரூ.150

நூல் அறிமுகம் எழுதியவர்:

இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை, ஏழைதாசன், தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள் (1999) தூரிகையில் விரியும் காடு (நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு ) (2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) அன்பு மொழி (2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *