1989 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது அதற்கு சம்புவராயர் மாவட்டம் என பெயரிட்டார் கலைஞர். அதுவரையிலும் சம்புவராயர் என்ற பெயரையே நான் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலும் அப்படி ஒரு பெயரையும் நான் அறிந்ததில்லை. எனவே யார் இந்த சம்புவராயர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது தேடியபோதுதான் , சம்புவராயர் என்பது ஒரு வன்னிய சாதி மன்னன் என்றும் சம்புவராயர்கள் சம்பு மகரிஷி என்பவரின் அக்கினி குண்டத்தில் இருந்து உருவானவர்கள் என்ற கதையையும் அறிய முடிந்தது. அந்த சமயத்தில் பறந்துகொண்டிருந்த வன்னியர் சங்க கொடிகளில் அந்த அக்னி குண்டத்தை கண்டதும் சம்புவராயர் பற்றி ஒரு சித்திரமே உருவாகி விட்டது. அப்போதே சாதி பார்க்கும் புத்தி நமக்கு இல்லாததால் இதற்குமேல் இதைப் பற்றி தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.. அப்படியே இருந்தாலும் அதை தேடி தெரிந்து கொள்வதால் சமுதாயத்திற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.. என்பதால் சம்புவராயரை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
பின்னர் காலங்கள் ஓட ஓட வாசிப்பின் அர்த்தமும் சுவையும் கூடக்கூட மீண்டும் சம்புவராயர்கள் பற்றி சிற்சில சமயம் படிக்க நேர்ந்தது. அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் அடுத்த படவேடு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் என்கின்ற ஒரு சித்திரம் கிடைத்தது. கல்வெட்டுகள் ,செப்பேடுகள், ஆய்வுகள் போன்றவற்றை வாசிப்பதில் ஒரு சுவாரசியமற்ற தன்மை இருந்ததால் அதற்குமேல் அதில் போய் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று விட்டுவிட்டேன். நானறிந்த வகையில் மன்னர்களுக்கு என்று சாதி இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சாதிக்காரர்களும் ஒவ்வொரு மன்னர்களை தங்கள் சாதிக்காரர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வதும் கொண்டாடுவதும் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் உண்மைத்தன்மை அறிய வரலாறுகளை படிக்கிறபோது எல்லாமே “கட்டி வைக்கப்பட்ட கதைகள்தான்” என்பது புலனாகிறது.
அக்கினி குண்டத்தில் இருந்து ஒரு மனிதன் பிறக்க முடியுமா என்று அறிவின் கண் கொண்டு யோசிக்க தொடங்கினால், இந்த டகால்டி கதைகளின் உண்மைத்தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். அதற்கப்புறம் அவர்கள் அள்ளி விடுகிற வீர சாகசங்களை கேட்டு ஜாலியாக சிரித்துக் கொண்டு இருக்கலாம்… மூளையை கழட்டி வைத்துவிட்டு பாக்கியராஜ் படங்களைப் பார்த்து சிரித்து மகிழ்வது போல. அப்படித்தான் இன்று வீர அக்னிச்சட்டி வகையறாக்களின் கதைகளையும் கேட்டு சிரித்து கடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.
இந்தச் சமயத்தில்தான் படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர்களின் கதையை நாவலாக எழுதுகிறேன் என எழுத்தாளர் தமிழ்மகன் அறிவித்தபோது, இதுவரை கட்டியெழுப்பப்பட்ட புராண கதைகளுக்கு வரலாற்று சாயம் பூச திட்டமிடுகிறாரோ என்று ஐயம் ஏற்பட்டது. இப்படியான ஒரு சந்தேகம் ஏன் ஏற்பட்டதென்றால் , நிறைய எழுத்தாளர்கள் அவரவருக்கு விருப்பமான பார்வைகளை வரலாறாக முன்வைத்து வெண்முரசு கொட்டி நம்மை வேர்க்க விறுவிறுக்க வைத்துவிடுகிறார்கள். ஆனால் தமிழ்மகனின் வெட்டும் புலி உள்ளிட்ட சில படைப்புகளை வாசித்து இருந்ததால் அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டார் என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கையோடுதான் “படைவீடு” நாவலை சில தினங்களுக்கு முன் வாசிக்கத் தொடங்கினேன்.
எனது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. நாவலை மிகுந்த நேர்மையுடன் எழுதியிருக்கிறார் தமிழ் மகன். நாவலின் கடைசி பாகத்தில் இதை ஒரு விவாதமாகவும் மாற்றியிருக்கிறார். சம்புவராயர்களிடமிருந்து காஞ்சியை கைப்பற்றும் விஜயநகர அரசன் குமார கம்பணன், வரதராஜ பெருமாள் கோவிலில் அங்கிருக்கும் பிராமணர்களுடன் விவாதிக்கிறார். அப்போது அவர்கள், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சாதி புராணத்தை உருவாக்க வேண்டும் என்று யோசனை சொல்கிறார்கள். அப்படித்தான் சம்புவராயர்களுக்கும் ஒரு புராணம் இருக்கிறது. அவர்கள் வில்லாளிகள். ஏழு மரத்தை துளைத்துச் செல்லும்படி அம்பு செலுத்தக் கூடியவர்கள். சம்பு மகரிஷியின் யாககுண்டத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களுக்கும் புராணம் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு புராணத்தை உருவாக்கினால் மக்கள் தங்கள் சாதிப் பெருமைகளை பேசுவார்கள். சுயசாதி பெருமையில் திளைத்து இருப்பார்கள். அதன்மூலம் வர்ணாசிரம தர்மத்தை நாம் நிலைநிறுத்த முடியும் . சங்கரர் அதைத்தான் முன்மொழிந்தார் என்று குமார கம்பணனுக்குபிராமணர்கள் யோசனை சொல்வதாக காட்சி வருகிறது. மற்றபடி இந்த நாவலில், சம்புவராயர்கள் வன்னியக்குலத்தவர் என்று எங்கும் பேசப்படவில்லை. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு. தமிழர்களின் ஆட்சியை நடத்தினார்கள் என்றுதான் நாவல் முன்வைக்கிறது. சம்புவராயர் களை கொண்டுபோய் வன்னிய சாதிப் பெருமிதத்திற்குள் அடைத்து விடவில்லை என்பதை நாவலின் நேர்மை எனக் கொள்ளலாம்.
கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சேர சோழ பாண்டிய பல்லவ பேரரசுகளின் வல்லாண்மைமிக்க ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் அதிகாரம் தொடங்குகிறது. இடைப்பட்ட பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தில் என்ன நடந்தது? யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது? அவை குறித்து ஏதாவது எங்காவது பேசப்பட்டு இருக்கிறதா..? என்ற கேள்விதான் இந்த நாவலின் அடித்தளம் . அந்த கேள்விக்கான விடையை தேடித்தான் நாவல் பயணிக்கிறது.
இந்த பதினான்காம் நூற்றாண்டு முழுவதிலும் தொண்டைமண்டலம் எனப்படும் வட தமிழகம் முழுவதும் ஆண்டவர்கள் சம்புவராயர்கள். படைவீடு (தற்போது போளூருக்கு அருகே இருக்கும் படவேடு ) நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசாட்சி நடத்திய அவர்களின் காலத்தைத்தான் இந்த நாவல் பேசுகிறது. இவர்களின் ஆட்சியதிகாரத்தின் நிலப்பரப்பு இன்றைக்கு இருக்கிற குடியாத்தம் தொடங்கி ஸ்ரீரங்கம் வரையிலும் வடக்கு தெற்காக நீளுகிறது. ராஜ கம்பீர சம்புவராயரால் உருவாக்கப்பட்டு பின்னர் அவரது வாரிசுகளான வீர சம்புவர், அவரது மகன் வென்று மண்கொண்டார் என்கின்ற ஏகாம்பரநாதர், அவரது மகன்களான மல்லிநாதர் ராசநாராயணா, பொன்னன் ஆகியோரின் ஆட்சிக் காலம்தான் நாவலின் கதைக்களம்.
அரசுகளின் வீழ்ச்சிக்கு எப்போதுமே முக்கிய காரணியாக இருப்பது வாரிசு உரிமைப் போர்தான். வாரிசு உரிமையும் சிம்மாசனத்தை கைப்பற்ற நிகழத்தும் துரோகங்களும்தான் வரலாறு நெடுக படிந்து கிடக்கிறது. இந்த அரசகுல பண்பு , மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரையும் விடவில்லை. இவர்களின் வாரிசுரிமைச் சண்டையில் உள்ளே நுழைகிறான் டில்லி அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர். வழக்கமாக வடக்கிலிருந்து படையெடுத்து வருபவர்கள் வரும் பாதையில் மாலிக்காபூர் வந்திருந்தால் படை வீட்டில் அவன் சம்புவராயர்க ளைத்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் அவன் போசள மன்னன் வீர வல்லாளனை சிறைபிடித்து அவன் துணையோடு சத்தியமங்கலம் காட்டுப் பாதையை தேர்வு செய்து கரூர் திண்டுக்கல் வழியாக மதுரைக்குள் நுழைகிறான். மதுரை மாலிக்காபூரின் வேட்டைக்காடாகிறது. கோவில்களை அங்காடிகளை கருவூலங்களை கொள்ளை அடிக்கிறான். அடுத்து அவன் கவனம் ஸ்ரீரங்கத்தில் தொடங்கி சிதம்பரம் காஞ்சி என வட தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களை குறி வைக்கிறது. அப்படியே அவன் வந்தால் , சம்புவராயர்கள் அவனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு மாறாக நாமே படைதிரட்டி மதுரைக்கு செல்லலாமா என வீர சம்புவர் ஆலோசனை நடத்துகிறார். அங்கிருந்து துவங்கும் நாவல், இறுதியாக குமார கம்பணனின் படையின் முன் தோற்று அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் படைவீடு மலைக்கோட்டை மலையிலிருந்து, வென்று மண்கொண்டாரும் அவரது மகன்களும் குதித்து தற்கொலையை படையாக மாறுவதுடன் நாவல் நிறைவடைகிறது.
இந்த இரு புள்ளிகளுக்கும் இடையிலான காலம் ஒரு நூற்றாண்டு. இந்த ஒரு நூற்றாண்டில் நடந்த விஷயங்களை நாவல் முழுவதும் வரலாற்று குறிப்புகளின் பின்புலத்தில் புனைவுகளாக எழுதியிருக்கிறார் நாவலாசிரியர். வழக்கமான சரித்திர நாவல்களுக்கு இருக்கும் எல்லாவித சாமுத்திரிகா லட்சணங்களும் இந்த நாவலுக்குள்ளும் இருக்கிறது. போர்க்களக் காட்சிகள், போர்க்கள வியூகங்கள், படை வரிசைகளின் வருணனை, அரச சபைகளில் சதியாலோசனை, வீரர்களின் சாகசம், ஒற்றர்களின் நுட்ப அறிவு, பட்டத்து ராணிகளின் ஆசைகள், குடி படைகளின் விருப்பங்கள், சமுதாயத்தின் அசைவுகள், பண்பாட்டு தாக்குதல்கள், இளவரசிகளின் காதல் மொழிகள், வஞ்சினங்கள், சபதங்கள் இவைகளுடன் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றுக்கே உரிய பார்ப்பனர்களின் சதிகள் என்று சுவாரசியமாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் நாவலைப் படிக்கும்போது நிச்சயம் உணர்ந்து கொள்ளலாம். முழுக்கதையையும் இங்கே விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
இந்த நாவலில் சாதிகள், மதங்கள் பற்றிய விரிவான விவாதம் ஒன்றை நூலாசிரியர் நடத்தியிருக்கிறார். நாவலில் ஐந்து இடங்களில் இந்த விவாதங்கள் நடக்கின்றன. சம்புவராயர்கள் சிவனை வழிபடுபவர்கள். ஆனாலும் விஷ்ணு மீது அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதனால்தான் வீரசம்புவர் , தன் மகனுக்கு நாராயணா என்று பெயர் சூட்டுகிறார். சமணத்தின் மீதும் அவர்களுக்கு விரோதம் இல்லை. அதை உணர்த்தத்தான் மல்லிநாதர் நாராயணா என்று மகனுக்கு பெயர் வைக்கிறார். தங்கள் குடிமக்கள் சமயப் பூசல்கள் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் அதை விரும்புவதில்லை. ஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைதத்தை பரப்புவதையே முழு நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். பல அரசுகளிலும் ஆலோசகர்களாக மதகுருக்களாக அவர்களே இடத்தைப் பிடித்துக் கொண்டதால் அவர்களின் சமய நோக்கம் எளிதாக நிறைவேறிவிடுகிறது. அவர்கள் உருவாக்கி வைத்த வர்ணாசிரமம் வளமாக பலமாக வேரூன்றி நிலைக்க தொடங்கிவிட்டது. இது மக்கள் மனதிலும் நிரந்தரமாக குடியேறி விட்டது என்பதுதான் அந்த விவாதத்தில் மையப் பொருளாக இருக்கிறது.
இடங்கை வலங்கை என்று மோதல்கள் நடக்கின்றன. தங்கள் சாதிக்கும் கீழே இன்னொரு சாதி இருக்கிறது என்பதே மக்களுக்கு மகிழ்ச்சிகரமானதாகவும் போதுமானதாகவும் இருக்கிறது. இதனால் ஏற்படும் சமூக அமைதியின்மையை சம்புவராயர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று இந்நாவல் பேசுகிறது. இந்த சாதியப் படிநிலைகளை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று அடிக்கடி ஆலோசனை நடத்துகிறார்கள் . ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதும், இன்று வரையிலும் அந்த படிநிலை நீடிக்கிறது என்பதும் இந்த வரலாற்றுக்குள் ஒளிந்திருக்கிற மகத்தான சோகம். ஆனால் இந்த சாதியப் படிநிலைகளை மக்கள் மனதில் கெட்டிப் படுத்துவதற்கு பார்ப்பனர்கள் சொல்லும் யோசனைகளும் அவர்களின் திட்டமிட்ட செயல்பாடுகளும் மலைக்க வைக்கிறது. இன்றைய காலத்திலும் பார்ப்பனர்களின் குயுக்தியான செயல்பாடுகள் வேறுவித வடிவங்களில் தொழிற்பட்டுக் கொண்டிருப்பதை வாசகர்கள் படிக்கும்போதே சம காலத்தோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். சோழர்களின் காலத்தில் ஆதித்த கரிகாலன் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பார்ப்பனர்களின் காந்தளூர் சாலையை அடித்து நொறுக்கியதும், பின்னாட்களில் மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு நீண்ட பல ஆண்டுகள் செயல்பட்டதும் அதற்கு சோழ மன்னர்களே கருவியாக இருந்ததும் வரலாற்றில் பின்னப்பட்டிருக்கும் பார்ப்பனச் சதி வலிமையை புரிந்துகொள்ள உதவும். அந்த வகையில் சாதி மதம் குறித்த ஒரு விவாதத்தை இந்நாவலில் நடத்தியிருப்பது நல்ல அம்சமே.

சம்புவராயர்கள் போரில் வல்லவர்கள், சிறந்த வில்லாளிகள் என்றபோதிலும் அவர்கள் வரலாறு நெடுகிலும் போரை தவிர்த்து வந்தார்கள் என்று நாவல் முன்வைக்கிறது. இந்த நூறாண்டு கால வரலாற்று போக்கிலும் மூன்று போர்கள்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த சிற்றரசனாக கோபால சோடரிடமிருந்து, காஞ்சியை கைப்பற்றுவதற்காக பிரம்மதேசத்தில் வைத்து ஏகாம்பரநாதர் நடத்திய போர். இந்தப் போரில் கிடைத்த வெற்றியால் அவருக்கு “வென்று மண்கொண்டார்” என்ற புகழ் பெயர் கிடைத்தது. அடுத்த போர், விஜய நகரத்து மன்னனான புக்கரரை பாலாற்றில் வைத்து வென்று காட்டிய போர். ஒரே இரவில் நடத்தி முடிக்கப்பட்ட இப்போர் புக்கரரைபின்வாங்கச் செய்து மல்லிநாதருக்கு புகழை உருவாக்கிக் கொடுத்தது. அதற்கு பத்தாண்டுகள் கழித்து புக்கரரின் மகன் குமார கம்பணன் நடத்திய போர். இந்த போரில்தான் சம்புவராயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மாலிக்காபூரை எதிர்த்து மதுரை மீது போர் தொடுக்க வேண்டும் என்றுதான் இளவரசர் ஏகாம்பரநாதர் தங்கள் அரசுக்கு உட்பட்ட சிற்றரசர்களின் ஆதரவை திரட்ட பயணம் செல்கிறார். அந்த பயணத்தின் போதுதான், சோழர்கள் சம்புவராயர்களுக்கு அளித்த ஈசன் வாளையும் அவர் கண்டுபிடித்து மீட்டு எடுக்கிறார் .ஆனால் திடீரென மாலிக்காபூர் டில்லிக்கு திரும்பி விட்டதால் அந்த போருக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறது. ஆனாலும் ஏகாம்பரநாதர் அந்தப் பயணம் ஏகாம்பரநாதர் உலா என்கின்ற நூலுக்கு அடிப்படையாக அமைகிறது இந்நூல் பின்னாளில் நடக்கும் ஆடி சோதி திருவிழாவில் படை வீட்டில் வைத்து அரங்கேற்றமும் செய்யப்படுகிறது.
போர்களின் மீது விருப்பமில்லாத சம்புவராயர்களுக்கு, போரினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படுகிறது. தென்தமிழகத்தில் சுல்தான் படைகளால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வட தமிழகம் நோக்கி கூட்டம் கூட்டமாக வரும் மக்களுக்கு, “அஞ்சினான் புகலிடங்கள் ” என்ற பெயரில் வாழ்விடங்களை உருவாக்கித் தருகிறார்கள். உணவு ,வீடு ஆகியவற்றோடு தொழிலை செய்வதற்கான வாய்ப்புகளையும் சம்புவராயர்கள் உருவாக்கித் தருகிறார்கள். இதுபோன்ற புகலிட ஏற்பாடுகள் வேறு மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. முதன்முதலில் இந்த நாவலில் தான் அப்படி ஒரு அம்சத்தை வாசிக்க நேர்ந்தது.
பொதுவாகவே இதுபோன்ற சரித்திர நாவல்களில் மன்னர்களின் வாழ்க்கைதான் பிரதானமாக சொல்லப்பட்டிருக்கும். மன்னர்களின் சாகசங்கள் , அவர்களின் பராக்கிரமங்கள் , அந்தப்புரத்து ரகசியங்கள், சதி ஆலோசனைகள் என்று எல்லாம் மன்னர்களைப் பற்றிய எழுதப்பட்டிருக்கும். அரண்மனைகளையும் அந்தப்புரங்களையும் தாண்டியும் ஒரு உலகம் இருக்கிறது.. அங்கும் சாதாரண மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.. அவர்கள்தான் இந்த அரசுகள் இயங்குவதற்கு அடிப்படையாக இருந்தார்கள்.. பலவகையிலும் அவர்கள் செலுத்திய வரியிலிருந்துதான் மன்னர்களின் கிரிடங்களும் ஆபரணங்களும் ஜொலித்துக்கொண்டிருந்தன.. என்பதையெல்லாம் சரித்திர நாவல்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. வரலாறு என்றாலே அது ஆளும் வர்க்கங்களின் வரலாறுதான் என்று மாமேதைகள் சொன்னது பொய்யில்லை என்பதை வரலாற்று நாவல்களை படிக்கும் பொழுது நமக்கு புரியும்.
அந்த வழமையான இலக்கணத்தை மீறுகிற சில நாவல்களில் இதுவும் ஒன்று எனக் கொள்ளலாம். சம்புவராயர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பாடுகளையும் அவர்களின் காதலையும் அவர்களின் வாழ்விடங்கள் , தொழில்கள், அதில் ஏற்படும் சிக்கல்கள் ,அதில் மன்னர்கள் செய்யும் குறுக்கீடுகள் என்று சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்த நாவல் பல இடங்களில் பேசிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்திற்கும் படைகளுக்கும் தேவையான தோல் கருவிகளை உருவாக்கித்தரும் செம்மான்கள் எனப்படும் பிரிவினரின் சிக்கலை நாவலில் பேசுகிறார். மாடு ஆடுகளின் தோலை உரித்து அவற்றை பதப்படுத்தி அதிலிருந்து படையினருக்கு தேவையான கவச ஆடைகளையும் செருப்புகளையும் விவசாயத்திற்கு தேவையான நீர் இறைக்கும் கருவிகளையும் அவர்கள் உருவாக்கித் தருகிறார்கள். தோலை பதப்படுத்தும் பொழுது ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அவர்கள் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். பொதுக் குளத்தில் நீர் எடுக்கவும் அவர்களை பிற பகுதி மக்கள் தடுக்கிறார்கள். இது எல்லா ஊர்களிலும் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவாகும்போது மன்னர் ஏகாம்பரநாதர் அதில் தலையிடுகிறார். பல தரப்பினரையும் அழைத்துப் பேசி , பொதுக் குளத்தில் யாரும் நீர் எடுக்கலாம். செம்மான்கள் நீர் எடுப்பதை தடுப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரச கட்டளையாக அறிவிக்கிறார். அதை செப்பேட்டிலும் உத்தரவாக பதிவு செய்ய வைக்கிறார். இதுபோன்ற பல காட்சிகளை கல்வெட்டுக்கள் செப்பேடுகளில் ஆதாரங்களிலிருந்து எடுத்து புனைவாக தந்திருக்கிறார் நாவலாசிரியர். இதேபோல கூத்து நிகழ்த்தும் கலைஞர்களின் பிரச்சனையும் நாவலில் வருகிறது. அவர்கள் கூத்து நடத்துவதற்கு நிரந்தரமான ஒரு ஏற்பாட்டையும் சம்புவராயர்கள் செய்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் கூத்து மேடைகளை அமைத்து தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
போரில் வல்லவர்களான சம்புவராயர் படையை வீழ்த்த, குமார கம்பணனின் ஆலோசகரான கிரியாசக்தி பண்டிதர் என்கிற பார்ப்பனர் ஒரு யோசனை சொல்கிறார். படைவீடு பகுதிக்குள் தாசிகளை அனுப்பி வீரர்களை வளைத்து போடுவதே அந்த சதித்திட்டம். தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற பார்ப்பன மதக் குருக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கி வந்து யோசிப்பார்கள் என்பதற்கு இந்த காட்சி ஒரு உதாரணம். இறுதிப் போரின்போது இந்த சதித்திட்டம் ஒரு பிரச்சனையாக வருகிறது . அந்த தாசிப் பெண்கள் அனைவரையும் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றுவிடலாம் என்று தளபதிகள் யோசனை சொல்கிறார்கள். ஆனால் மல்லிநாத நாராயணர் அதை மறுத்து விடுகிறார். அந்தப் பெண்களை என்ன செய்வது என்று போருக்கு பிறகு முடிவு செய்வோம்.. இப்போதைக்கு அவர்களின் பிடியிலிருந்து வீரர்களை மீட்பதற்கு என்ன வழி என்று யோசிப்போம் என சொல்கிறார். சாதி சமயச் சண்டைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க, ஊர்கள் தோறும் நூல் ஆலயங்களை திறக்கிறார்கள். ஓலைச்சுவடிகளை தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் படி எடுத்து வாசிப்பதற்கும் வாசித்து காட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்கிறார்கள். பண்பாட்டின் வாயிலாக தாக்குதலை நடத்த நினைக்கும் பார்ப்பன சதியை புரிந்துகொண்டு அதை முறியடிக்கவும் தங்களால் ஆனதை முயன்று பார்த்திருக்கிறார்கள் என்ற தகவலும் நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பார்ப்பனர்களை முற்றிலும் ஒதுக்கி வைக்கவும் அல்லது தங்கள் எல்லை பரப்பிலிருந்து வெளியேற்றவும் அவர்களாலும் முடியவில்லை என்பதுதான் உள்ளே மறைந்து இருக்கும் துயரமான செய்தி.
கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியத் தரவுகள், வாய்மொழி கதைகள் ஆகியவற்றின் துணைகொண்டு இந்த நாவலை ஒரு புனைவாக அளித்திருக்கும் நூலாசிரியர், மூன்று முக்கியமான விஷயங்களை தனது படைப்பின் வழியாக முன்வைக்கிறார் என்று நான் அவதானிக்கிறேன்.
இந்தியாவின் வரலாறு நெடுகிலும் வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்தவும், சனாதன மதத்தை கட்டியெழுப்பவும், அரசர்களுக்கு அருகிலிருந்து அதிகாரத்தை ருசிக்கவும் , பார்ப்பனியம் செய்த சதிவேலைகளை இந்த நாவலில் வலுவாக அம்பலப்படுத்துகிறார். சாதிப் பாகுபாட்டினாலும், சமய பாகுபாட்டினாலும் திட்டமிட்டு பிரித்து வைக்கப்பட்டு உழைப்பு சுரண்டப்பட்ட எளிய மக்களை தமிழ் மொழியாலும், தமிழர் ஆட்சி என்ற கனவிலும் ஒன்று திரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் முன்வைக்கிறார். அக்கினி குண்டத்தில் பிறந்தவர்கள் , போருக்கென்றே பிறந்தவர்கள் , போரில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்று கட்டியெழுப்பப்பட்ட கதைகளை புறம்தள்ளி போரைத் தவிர்த்து அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கான சூழலை சம்புவராயர்கள் உருவாக்க நினைத்தார்கள் என்பதையும் இந்த நாவலின் வழியாக வரலாற்றையும் புனைவையும் கலந்து நிறுவுகிறார் நாவலாசிரியர். ஆனால் இத்தகைய சம்புவராயர்களைத்தான் தங்களின் முன்னோடிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் குடிசைகளை கொளுத்தி கொண்டு திரிகிறார்கள் என்பதுதான் வரலாற்றின் நகைமுரண் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
ஒரு வரலாற்று நாவலை எழுதுவது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு பெரும் உழைக்கும் நிதானமும் மன ஓர்மையும் தேவை. அதையெல்லாம் கைவரப் பெற்று பல்லாண்டு கால உழைப்பில் இந்நாவலை உருவாகியிருக்கும் எழுத்தாளர் தமிழ் மகனுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் தமிழ்மகன்
-கருப்பு கருணா
தழல் வெளியீடு
புத்தக தேவைக்கு பாரதி புத்தகாலயம்
சென்னை- 18
போன்: 04424332924
விலை ரூ 600
புத்தகம் வாங்க: படைவீடு – தமிழ்மகன் | விலை – ரூ. 600/-
அல்லேலூயா. என்ன வன்னியர்குல சத்திரியர்களை பார்த்த உங்கள்ளுக்கு கழிச்சல் வருது போலா. இருக்காதா என்ன அல்லேலூயா. புஸ் டிசும்.
Hello admin Naanu pallava vamsaa vazhila vantha Sambuvaraayan. Pallava kilai than Sambuvaraayar. Naan vanniya Kula kshatriyan.