ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்..
வெளியீடு : பாரதி புத்தகாலயம்….
விலை – ரூ. 180/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com
கரிசல் வட்டார வழக்கில் எழுதும் படைப்பாளர்களில் ஒருவராக சிறப்பிக்கப்படுகின்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பே இது. தமுஎகச வின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வரும் சிறப்புக்குரியவரின் சீர்மிகு சிறுகதைகளின் அணிவகுப்பே இந்நூல்…
சிறுகதைகள் எழுதுவதால் விளையும் பயன்கள் குறித்து சந்தேகம் கொண்டு களப்பணியே பிரதான தேவையாக கருதி சமூக செயற்பாட்டில் முழு ஈடுபாடு கொண்டு பணியாற்றத் தொடங்கியதாக எங்கோ எதிலோ படித்ததாக நினைவு. அறிவொளி இயக்கச் செயல்பாடுகளிலும் தமுஎகச வின் தலைமை பொறுப்பிலும் வீற்றிருந்து பல வீரியமிக்க செயல்பாடுகளால் எழுச்சிமிகு இளைஞர்கள் பலரை உருவாக்கிய மாபெரும் ஆளுமையாக மிளிர்கின்ற போதிலும் படைப்பாளியாக ஜொலித்த தருணங்களின் பொக்கிஷமாகவே இந்நூலை அடியேன் கருதுகிறேன்.
இந்நூலில் 32 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதை பற்றியுமே தனித்தனி விமர்சனம் எழுதும் வீரியமிக்க சிறுகதைகளே இவை என்பதே நிதர்சனம். “பூ” என்ற திரைப்படத்தின் மையக் கரு கதையான “வெயிலோடு போய்” சிறுகதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகவே கருதுகிறேன். “அசோகவனங்கள்” சிறுகதையும் “வெயிலோடு போய்” சிறுகதையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே.
ஒவ்வொரு சிறுகதையிலும் அவர் முன்னிறுத்தும் கருத்துக்கள் யாவும் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பிரதிபலித்து நமது அகத்தை கிளறி புது சிந்தனையை ஊற்றெடுக்க வைப்பதாகவே அமைந்துள்ளன. வறுமையின் கோரப் பிடியில் உழலும் கதைமாந்தர்களே அவரின் பாத்திரப் படைப்புகளாக அமைந்து சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.
துன்பத்தில் சிக்கித் திணரும் சூழலிலும் அவர்களிடம் காணப்படும் குணாதிசயங்களை உள்ளது உள்ளபடி பகிரும் நுட்பம் கவனிக்கத்தக்கது. பெரும்பாலான கதைகள் தீப்பெட்டி தொழிலை அடிப்படையாகக் கொண்டே புனையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் வாழ்வியல் தொழிலை அவர்களது அன்றாட நடைமுறைச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிகைப்படுத்தாமல் எடுத்துக்காட்டிய விதத்திலேயே இச்சிறுகதைகள் நம் அகத்தோடு எளிதில் ஒன்றிவிடச் செய்வதாக அமைந்துள்ளன.
ஒவ்வொரு சிறுகதை படித்தப் பின்னரும் அது ஏற்படுத்தும் தாக்கம் நெடுநேரம் நமது மனசை பிசைந்து ஏதோ செய்வதாகவே உள்ளது. அடுத்த சிறுகதைக்கு நுழைய விடாமல் முதலில் படித்த சிறுகதையை இன்னும் சில மணி நேரம் அசை போடவே மனது ஏங்குகிறது. வறுமையின் கோரப் பிடியில் சிக்கி சுழலும் கதாபாத்திரங்களை நம்கண் கொண்டு வந்து நிறுத்தும் எழுத்துநடையே கூடுதல் சிறப்பாக கருதுகிறேன்…

கரிசல் வட்டார வழக்கில் அமைந்த மொழிநடை சிறுகதைக்கு கூடுதல் பலமாக அமைந்து நம்மை கதையோடு எளிதில் ஒன்ற உதவுவதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து நேரடியாக கண்ட காட்சிகளை விவரிப்பதாகவே இச்சிறுகதைகள் அமைந்துள்ளன. அவ்வளவு உண்மைக்கு நெருக்கமாகவும் மனதை உருக்கும் வண்ணமும் அமைந்துள்ளன. உள்ளாடை வழியாக பொருளாதார அவலத்தை கேலிக் கூத்தாக்கும் கதை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியதே.
பெரும்பாலான சிறுகதைகள் துயர சாயலிலேயே இருந்தாலும் அதனுள் இழைந்தோடும் அன்பும் நேசமும் பரிவும் இரக்கமுமே நம்மை சிலாகித்து பரவசத்தில் திளைக்க வைப்பதாகவே அமைந்துள்ளன. நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் சிறுகதைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சிறுகதைகளும் இந்நூலில் உள்ளன. குழந்தைகளின் உலகத்தை அவர்களின் உளவியல் நுணுக்கத்துடன் அணுகி எழுதியுள்ள விதம் பிரமிக்கத்தக்கது.
நடுத்தர வர்க்கத்தின் துயரங்களை பகடி வடிவில் காட்சிபடுத்தும் யுக்தி கவனிக்கத்தக்கது. ஆண் பெண் ஈகோவை பறைசாற்றும் கதைகள் நமக்குள் தூங்கிக் கிடக்கும் மிருகத்தின் கோர முகத்தை துகிலுரித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன. தேவையற்ற வருணனைகளைத் தவிர்த்து அநாவசியமான சொற்பிரயோகங்களைத் தவிர்த்து எளிய பேச்சு நடையில் அமைந்த சிறுகதை வடிவமே எழுத்தாளர் அவர்களின் சிறப்பாக கருதுகிறேன்.
32 சிறுகதைகளில் முத்தான சிறுகதைகள் , மனதிற்கு நெருக்கமான சிறுகதைகள், மிகவும் ரசித்தவை, மிக மிக பிடித்தவை என்று பட்டியலிட விரும்பினால் கிட்டத்தட்ட 25 சிறுகதைகளுக்கு கூடுதலாகவே கூற வேண்டியிருக்கும் என்பதே மெய். எந்தவொரு சிறுகதையின் பெயரையும் குறிப்பிடாமல் இந்த பதிவை எழுத வேண்டுமென்று எனக்கு ஏன் தோன்றியது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
ஒவ்வொரு சிறுகதைக்கும் அவர் சூட்டிய தலைப்புகளே அதற்கு காரணமாக இருக்குமோ என்றே நினைக்கிறேன். வாழ்க்கைச் சித்திரத்தை எழுத்து தூரிகையால் நமது இதயத்துள் தீட்ட முனைந்ததாகவே அவதானிக்கிறேன். மிக எளிதில் உட்கிரகிக்கக் கூடிய வகையில் எளிய வடிவத்தில் மிக நுட்பமாக கதையை விவரிக்கும் லாவகம் அலாதியான அனுபவம் ஊட்டக்கூடியதாகவே உள்ளது.
சிறார்களின் பசியில் தொடங்கி, சுற்றுலா ஏக்கம், சொந்த ஊரின் மகிமை, அலுவலகச் சுமை, காம வெறியின் அட்டூழியம், பட்டாசு தீ விபத்து , பெண்ணின் திருமண கனவு, தூக்கம், சந்தேக குணம், கடன், குழந்தைத் தொழிலாளர் நிலை, பாலியல் சீண்டல், சாதீய அவலம், கல்வி முறை என சகல விஷயங்களையும் கருவாக வைத்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
ஒவ்வொரு சிறுகதை குறித்து சிறு சிறு கலந்துரையாடல்கள் நண்பர்களிடையே நிகழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது என்பதே உண்மை. காலமும் சூழலும் நண்பர்களும் கைவரப் பெற்றால் நான் பாக்கியவானே… கிட்டத்தட்ட 15 நாட்களாக இந்நூலை நின்று நிதானமாக வாசித்ததை பெருமிதமாகவே கருதுகிறேன். இச்சிறுகதைகளில் உலாவும் பல கதாபாத்திரங்களை நாம் நம் வாழ்வில் எளிதில் கண்டுணர்ந்து இருப்போம் என்றே கருதுகிறேன்.
நாம் கவனிக்கத் தவறிய கோணத்தையும் அதனுள் புதைந்து கிடக்கும் ஆன்ம பலத்தையும் மனித மன சிணுக்குகளையும் நாம் கண்டுணர்ந்து வாழ்வில் உய்ய இச்சிறுகதைகள் நம் மனதில் நிச்சயமாக சிறு சலனத்தையாவது ஏற்படுத்தும் என்பதே எனது எண்ணம். வலியையும் வேதனையையும் அனுபவித்தவர்களுக்கு இந்நூல் அனுபவ பாடமாகவும் மிதமிஞ்சிய செல்வ செழிப்பில் திளைப்போருக்கு இனிய பாடமாகவும் அமைவதே இந்நூலின் சிறப்பாக கருதுகிறேன்.
நல்லதோர் படைப்பு. ஒரு எழுத்தாளரின் ஆகச் சிறந்த சிறுகதைகளை முறையாக தொகுத்து நூலாக வெளியிட்டு பெருமை சேர்க்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்….
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி.நன்றி.