இந்த வாழ்க்கையின் மீதான வேட்கைதான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. எத்தனை துயரங்கள் வந்தாலும் , எத்தனை கொடுமைகளை சந்தித்தாலும், வாழவே முடியாத நிலை என ஏற்பட்டாலும் கூட அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. எப்பாடுபட்டாவது இந்த வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து தீர வேண்டுமென்று மனிதகுலம் விரும்புகிறது. இதற்காக உயிரை காப்பாற்றி வைப்பதற்காக எதையும் செய்ய மனித மனம் தயாராகிவிடுகிறது.
அதிலும் குறிப்பாக, போர்ச்சூழல் இடையே வாழத் தலைப்பட்ட மனிதர்கள் எவ்வளவோ துயரங்களை கண்ணெதிரே சந்தித்தாலும்கூட இதையெல்லாம் பார்க்காமல் செத்துவிட்டால் தேவலாம்.. என்று எண்ணுவதில்லை. இதிலிருந்து விடுபட்டு எங்காவது போய் உயிர் பிழைத்தால் போதும் என்றுதான் மனித மனம் துடிக்கிறது. இதற்காக நாடுகள் எல்லைகள் கடல் என எல்லாவற்றையும் கடந்து கடந்து எங்காவது போய் உயிர்பிழைக்க விரும்புகிறது.
அப்படி ஏதிலிகளாக இலங்கையின் நிலப்பரப்பில் இருந்து படகில் ஏறி ஆஸ்திரேலியா செல்லும் ஈழத்தமிழ் குடிகளின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பேசுகிறது தாமரைச் செல்வியின் உயிர் வாசம் என்கிற இந்த நாவல்.
இறுதிப் போருக்கு முந்தைய சூழல், இறுதிப் போர்ச் சூழல், இறுதிப்போருக்கு பிந்தைய சூழல் என்று மூன்று காலகட்டங்களில் இந்த நாவலின் கதை மாந்தர்கள் பயணிக்கிறார்கள். எந்த துயரத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ விரும்புகிற மதி, கண்ணெதிரே நடக்கும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க விரும்பும் காந்தன் என்ற இரு நண்பர்களின் வாழ்க்கை கதையின் ஊடாக இந்த நாவல் பயணிக்கிறது.
தங்களின் நினைவு தெரிந்த நாளிலிருந்தே இவ்விரண்டு நண்பர்களும் போர்ச் சூழலில் வாழ்கிறார்கள்.. வளர்கிறார்கள். போரின் கொடிய கரங்களுக்கு தங்களின் எல்லா உறவுகளையும் பலி கொடுக்கிறார்கள். இறுதிப்போர் நேரத்தில் முள்வேலி முகாமில் சிக்கி வதைபடுகிறார்கள். முகாமிலிருந்து வெளியே வந்தாலும் நிம்மதியாக வாழவிடாமல் போரின் பிந்தைய காலகட்டமும் ஆர்மியும் அவர்களை வேட்டைநாயாய் துரத்துகிறது. இரு குடும்பங்களையும் வறுமை பிடித்தாட்டுகிறது. எப்படியாவது குடும்பங்களை காக்கவும் உயிர் பிழைத்திருக்கவும் எங்காவது போய் விட வேண்டும் என்று முடிவெடுத்து படகில் பயணித்து ஆஸ்திரேலியா செல்கிறார்கள்.
படகுப்பயணம் என்றால் நாம் சுற்றுலா தளங்களில் ஜாலியாக போகிற பயணம் அல்ல. இது உயிரை பணையம் வைத்து செய்கிற பயணம். முன்பின் அறியாத ஒரு தேசத்தை நோக்கி, ஏதோ ஒரு நம்பிக்கையில், வாழ்ந்து விட வேண்டும் என்ற வேட்கையில் மரணத்தின் எல்லைக்கே துணிந்து செல்கிற ஒரு பயணம். ஒரு நள்ளிரவில் தொடங்கி இன்னொரு நள்ளிரவில் முடியும் 20 நாட்கள் கடல் பயணமும் அதில் நடந்தேறும் சம்பவங்களும்தான் நாவலின் மையப்புள்ளி.
இந்தப் பயணம் அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய பாடத்தை கற்று கொடுக்கிறது . தங்கள் கண்ணெதிரேயே ஒரு மரணத்தை காண வைக்கிறது. தங்களுடன் படகில் பழகி காய்ச்சல் கண்டு செத்துப்போகும் பரஞ்சோதியின் சடலத்தை போர்வையில் சுற்றி கடலில் இறக்கும் காட்சியைக் கண்ட பிறகும்கூட உயிர் வாழ்ந்தே தீர வேண்டும் என்றே அவர்கள் மனம் துடிக்கிறது. பயணத்தின் முடிவில் ஒரு தீவில் போய் இறங்குகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது அவர்களின் அடுத்த முகாம் வாழ்க்கை. முகாமில் அவர்களுக்கு நல்ல உணவு மருத்துவ வசதி தங்குமிட வசதி எல்லாமும் ஆஸ்திரேலிய அரசால் தன்னார்வ நிறுவனங்களின் கண்காணிப்பில் செய்து தரப்படுகிறது. இந்த முகாம்களில் நிலையோடு தமிழகத்தில் இருக்கும் முகாம்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எவ்வளவு கேவலமாய் அந்த மனிதர்களை நமது அரசுகள் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரியும். அதற்காகவேனும் இங்கிருக்கும் அரசியலாளர்கள் இந்த நாவலை கண்டிப்பாக ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.
எட்டு மாத காலம் பல்வேறு முகாம்களில் மாற்றி மாற்றி தங்க வைக்கப்படுகிறார்கள் . ஒவ்வொரு முகாமிலும் ஏற்பாடுகள் என்னவோ நன்றாகவே இருக்கிறது… ஆனால் எப்போதும் விசாரணை கண்காணிப்பு என்று ஒரு சிறை வாழ்க்கை போல நினைக்கிறார்கள். எப்போது அதில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்பதே அவர்களின் கனவாக இருக்கிறது. ஒரு வழியாக பல கட்டங்களைக் கடந்து சிட்னி நகரத்திற்குள் அவர்கள் வசிக்கவும் வேலை பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
சிட்னியில் அவர்களுக்கு குகதாசன் அவரது மனைவி பாரதி ஆகியோர் எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். தங்குவதற்கு வீடு ஒழுங்கு செய்து தருகிறார்கள். வேலை செய்வதற்கு ஆங்கில கல்வி அவசியம் என்பதால் பாரதி வகுப்பெடுக்கும் ஒரு நிறுவனத்தில் ஆங்கிலக் கல்விக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சிறிய சிறிய வேலைகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். நிரந்தரமான விசாவுக்கான ஏற்பாடுகளும் நடக்கிறது முதலில் மூன்று ஆண்டுகளுக்கான விசாவும் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கான விசாவும் கிடைக்கிறது. கூடவே காந்தனுக்கு ஒரு காதலும் கிடைக்கிறது. ரூபி என்ற பெண்ணின் சிநேகிதம் அவனை உற்சாகம் கொள்ளவைக்கிறது.
படகு பயணத்திலும் முகாம்களிலும் அவர்கள் இருவருக்கும் நிறைய உறவுகள் கிடைக்கிறார்கள். கதிர், செல்வி அக்கா, உருத்திரன், பார்த்தி , தவம், நிரஞ்சன்,செந்தில், அமுதாக்கா,தெய்வேந்திரம், லோஜி என நிறைய மனிதர்களுடன் உறவாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஒரு துயரக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொருவரும் மதியைப் போல காந்தன் போல ஏதேனும் ஒரு கதையோடுதான் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் செந்திலின் கதை துயரத்திலும் துயரம் . அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர் . இறுதிப் போருக்குப் பிறகு படகு மூலம் தப்பி வரும் அவரும் ஒரு முகாமில்தான் அறிமுகமாகிறார். எல்லோரையும் போல அவரிடமும் விசாரணை நடக்கிறது. ஆனால் விசாரணையில் அவர் இயக்கத்தில் இருந்தவர் என்பதை போலீஸ் கண்டுபிடித்து விடுகிறது. எனவே அவர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.
மதி,காந்தனிடம்.. இந்த காதல் நமக்கு வேண்டாம் என்று அடிக்கடி எச்சரிக்கிறான். ” இது நமக்கு சொந்த ஊர் இல்லை. நாம் பிழைக்க வந்த ஊர் நாளைக்கு போ என்று சொன்னால் போகவேண்டியதுதான். இருக்கும்வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்து சேர்த்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான். நிரந்தரமற்ற இந்த நிலையில் காதல் உனக்கு தேவை இல்லை..” என்கிறான். ஆனால் காதல் கொண்ட மனதுக்கு இதெல்லாம் எப்போதும் புரியாது . அதற்கு, அதன் காதல் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கும். அவனுக்கும் அப்படித்தான். ரூபி மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் . ஆனால் அவர்களின் காதல் நிறைவேறவில்லை. திடீரென ஒருநாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறான். இதை அறிந்து மதி துடி துடித்துப் போகிறான். அவனது நினைவுகளாகத்தான் இந்த முழுக்கதையும் முன்வைக்கப்படுகிறது. வாசித்து முடிக்கும்போது காந்தன் எப்படியாவது எழுந்துவிட வேண்டும் என்று மதியை போல உருத்திரனைப் போல, தெய்வேந்திரம்பிள்ளை போல , கதிரை போல செல்வி அக்காவை போல நூலை வாசிக்கும் நாமும் விரும்புகிறோம். ஆனால் காந்தன் மீண்டாரா இல்லையா என்பதை சொல்லாமலேயே நாவல் முடிகிறது.
போர்களால் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலிகளாக சிதறிக் கிடக்கிற மனிதர்களின் வாழ்க்கை பாடுகள் எத்தனை துயரம் நிறைந்தவை என்பதை இந்த நாவல் பக்கத்திற்கு பக்கம் பேசுகிறது . எங்கோ முகம் காணாத தொலைவிலிருக்கும் உறவுகளை தினமும் நினைத்து வதைபடுவதும், அவர்களின் பொருளாதார தேவையை நிறைவேற்றிக் கொடுக்க கிடைக்கிற எந்த வேலையையும் வேண்டாம் என்று சொல்லாமல் செய்து முடிக்கிற சூழலுக்குத் தள்ளப்படுவது கொடூரமானது. மனிதருள் இயற்கையாய் எழும் காதல் உணர்வை கூட ஏற்க இயலாமல் புறக்கணித்து தள்ளும் நிலை. அப்படித்தான் மதியும் தன்னை நோக்கி வரும் லோஜியின் காதலை மௌனமாய் புறக்கணிக்கிறான். அவனுக்கும் காதல் கொள்ளுகிற வயசுதான். ஆனால் வாழ்க்கைச்சூழல் அதை ஒதுக்கி வைக்க நிர்பந்திக்கிறது.
கடல் எப்போதுமே கொந்தளிப்பானதுதான். அது அமைதியாக இருப்பதைப் போல தோன்றலாம். ஆனால் எந்த நேரமும் அது உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டும்
அலைவீசிக்கொண்டும்தான் இருக்கிறது. அந்த அலையில் சிக்கிய படகு போலத்தான் இந்தப் படகு மனிதர்களின் வாழ்க்கையும் மிதக்கிறது. கடலிருக்கும்வரை அலைகள் இருக்கும். போர் இருக்கும்வரை இந்த துயரங்களும் இருக்கும் போலிருக்கிறது.
போர்கள் வேண்டாம்!
கருப்பு கருணா