தஞ்சை சி.கேசவமூர்த்தி எழுதியுள்ள “அணிலாடு சீறூர்” என்னும் நூல் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களின் அடிப்படையில் கதை வடிவில் அமைந்துள்ளது.
தன்னுடைய படைப்பின் மூலமாக நூலாசிரியர், வாசகர்களை சங்க காலத்திற்கு அழைத்துச்செல்கிறார். தான் அனுபவித்த இலக்கியத்தின் நுட்பத்தையும், உணர்வையும் அனைவரும் உணரவேண்டும் என்ற நன்னோக்கில் சிறுகதைகளை உருவாக்கி, உரிய மாந்தர்களைப் படைத்து, நிகழ்வுகளை ஒருஙகிணைத்து அமைத்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் உள்ளது. கதாபாத்திரங்களுக்கு அவர் இட்டுள்ள பெயர்கள் வாசிப்போரை இன்னும் அணுக்கமாக நெருங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.
குறுந்தொகைப் பாடல்களில் தலைவன், தலைவி, தந்தை, நற்றாய், செவிலித்தாய், சிற்றூர், பேரூர், மூதூர், சிறுகுடி என்று கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் கதையை எளிதில் அனைவரும் படித்து புரிந்துகொள்வதற்காக அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கும், ஊர்களுக்கும் தன் கற்பனையில் தோன்றிய பெயர்களைச் சூட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். அவருடைய இந்த உத்தியானது பாராட்டத்தக்கதாகும்.
குறுந்தொகையில் குறிஞ்சி (8), முல்லை (5), மருதம் (3), நெய்தல் (6), பாலை (16) என்ற பகுப்பில் 38 பாடல்களைத் தெரிவு செய்துள்ளார். இதில் அதிகமாக உள்ளவை பாலைத்திணைப் பாடல்களாகும் அவ்வாறாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் அடிப்படையில் கதையைக் கூறுவதோடு நிறைவுப்பகுதியில் திணைப்பகுப்பு, சொற்பொருள், பொருள், தொடர்புடைய குறிப்புகள் ஆகியவற்றை மிகவும் எளிமையாகத் தந்துள்ளார். கதையை இணைக்கின்ற பாடல்களும், அவற்றிக்கான பொருளும், கதையின் கருவை அதனுடன் ஒன்றிணைத்து அவர் வைக்கின்ற பாங்கும் சிறப்பாக உள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
“அவர் என்னோடு கலந்திருந்த நாளில் தினைப்பயிரின் பசுமையான தாளைப் போன்ற கால்களையுடைய நாரை ஒன்று ஓடையில் ஆரல் மீன் வருகிறதா? என்று ஒற்றைக் காலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது ஓரக்கண்ணால் பார்த்து, கேட்டிருந்தால் உண்டு. அதுவிர வேறு கண்கண்ட சாட்சி இல்லை என்றாள்.” (பக்கம். 42)
“…மேலும் இம்மை மாறி, மறுமையாயினும் நீங்களே எனக்குக் கணவராக வேண்டும். நானே உங்களுக்கு மனைவியாக வேண்டும். ஒரு நாளும் நீங்கள் பரத்தைக்கு கணவர் ஆகமாட்டீர்கள். அவளும் உங்களுக்கு மனைவி ஆகமாட்டாள் என்று பரத்தையிடம் சென்ற தன் கணவரை நினைத்து தலைவி மத்தி வருந்தினாள்.” (ப. 49)
“…காட்டில் தண்ணீர் தேடி அலைந்துகொண்டிருக்கும் பெண் யானைகளுக்கு ஆண் யானை ஓமை மரத்தின் பட்டைகளை தன் தந்தத்தால் குத்தி பெயர்த்துக் கொடுத்து பெண் யானையின் தண்ணீர் வேட்கையை எப்படி தீர்த்துக் காப்பாற்றுகின்றதோ, அதுபோன்று நாமும் நம் மனைவியின் தாகத்தைப் போக்கிக் காப்பாற்ற வேண்டும்…” (ப. 79)
“…இவர்கள் இருவரும் இந்தக் கடுமையான வெயிலிலும், ஆபத்தான பாதையில் நடந்து செல்வதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பாவமாக இருந்தது. இவர்கள் யாராக இருப்பார்கள்?…..யாராக இருந்தாலும் நல்லபடியாக இவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாகப் போய்ச் சேர வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொண்டோம்…” (ப. 100)
“…தலைவியைச் சந்திக்க இரவு நேரத்தில் வருவதைத் தவிர்த்துவிடுங்கள். உன் தலைவியை விரைவில் திருமணம் முடித்து உன்னுடன் அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை…” (ப. 139)
“…நம்முடைய முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்களை வைத்துக்கொண்டு அவற்றைச் செலவழித்து வாழ்க்கை வாழ்பவர்களைச் செல்வந்தர் என்று ஊரார் மதிக்க மாட்டார்கள். தாமாக உழைத்து மேலும் சம்பாதித்து வாழ முடியாதவர்களுடைய வாழ்க்கை அடுத்தவனிடம் பிச்சை கேட்டு வாழ்வதைக் காட்டிலும் இழிவானது…” (ப. 152)
“…எப்படி ஒரு தாய் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் நஞ்சுண்டால் அந்தத்தாய் எப்படித் துடித்து, தனது இரண்டு குழந்தைகளும் பிழைக்கவேண்டும் என நினைப்பாளோ, அவ்வாறே நானும் நீங்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும், இருவரும் சேர்ந்து இல்லற வாழ்வை இனிதாக வாழவேண்டும் என நினைக்கிறேன்…” (ப. 164)
“…எப்படி யானை தினைக் கதிர்களைத் தான் உண்டு மகிழும் அதே நேரத்தில் தன் குட்டிக்கும் பாலைக் கொடுத்து அதனை மகிழச் செய்கிறதோ அதேபோன்று என் தலைவியை மணம் முடித்து நீயும் இன்புற்று என் தலைவியையும் மகிழ்விக்கச் செய்தால் அதைக்கண்டு மகிழ்ச்சியடைவேன். …” (ப. 171)
“…அந்த வௌவால் எப்படி இரவிலே சுவை மிகுந்த இனிய மாங்கனியை உண்பதற்காக, துவர்ப்பும் புளிப்புச்சுவை கொண்ட நெல்லிக்கனியை உண்டுவிட்டு பகலெல்லாம் மூங்கிலில் தொங்கி தூங்கிவிடுவதுபோல நம் தலைவரும் என்னோடு முறையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தனிமையில், இந்நாள் வரையில் வெளியூரில் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிகொண்டு இருந்து வருகிறார். அவர் வந்ததும் நாங்களும் இல்லறத்து நல்லின்பத்தைப் பருகுவோம்.…” (ப. 188)
செயற்கை நுண்ணறிவும், அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியும் சமுதாயத்தில் பரவி பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நூலானது முக்கியத்துவம் பெறுகிறது. அக்கால வாழ்வின் பெருமையும், சிறப்பும் வாழும் தலைமுறையினரைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் பெருமுயற்சி மேற்கொண்டு இந்நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்) |
| ஆசிரியர்: | தஞ்சை சி.கேசவமூர்த்தி |
| வெளியீடு: | வைரமுல்லை பதிப்பகம், தஞ்சாவூர், அலைபேசி 94865 62972 |
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 முனைவர் பா.ஜம்புலிங்கம் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நூல் அறிமுகம் மிகவும் சிறப்பாக உள்ளது. பக்க எங்களையும் குறிப்பிட்டு அதன் சிறப்புகளை விளக்கிக்கியுள்ளது மேலும் சிறப்பு. அறிமுகமே இவ்வளவு அழகு எனில் புத்தகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற ஆவல் மெலோங்குகிறது. சம்புலிங்கம் அய்யாவின் நூல்அறிமுகம் இந்த நூலை நாம் எப்போது படிப்போம் என்ற ஏக்கத்தையும் ஆவலையும் தருகிறது.
சிறப்பு ஐயா 👌🏻
நூல் அறிமுகம் மிகவும் சிறப்பாக உள்ளது. பக்க எண்களையும் குறிப்பிட்டு அதன் சிறப்புகளை விளக்கிக்கியுள்ளது மேலும் சிறப்பு. அறிமுகமே இவ்வளவு அழகு எனில் புத்தகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற ஆவல் மெலோங்குகிறது. சம்புலிங்கம் அய்யாவின் நூல்அறிமுகம் இந்த நூலை நாம் எப்போது படிப்போம் என்ற ஏக்கத்தையும் ஆவலையும் தருகிறது.
சிறப்பு ஐயா 👌🏻
நூலைப் பற்றிய என்னுடைய விமர்சனத்தை வெளியிட்டமைக்கு புக் டே தளத்திற்கு மனமார்ந்த நன்றி.