Writer Theni Seerudayan's Veppanginaru Novel Book Review By Jananesan. Book Day is Branch of Bharathi Puthakalayam.சுந்தரராமசாமி எழுதிய புளியமரத்தின் கதையை நாம் வாசித்திருக்கிறோம். அந்நாவலில் நாகர்கோவில் பகுதியில் ஒரு புளியமரத்தை மைய்யமாக வைத்து அம்மரத்தைச் சுற்றி நிகழும் மக்களின் வாழ்வியல் மாற்றங்களை கவித்துவமாகச் சொல்லி இருப்பார்.

இது போலவே தேனிநகரை ஒட்டி கிழக்கே மலைக்கரட்டோர வனச்சாலைப் பகுதியில் வேப்பமரத்தை ஒட்டிய கிணற்றுப் பகுதியைச் சுற்றி சிறுநகர்ப்புறம் உருவாகிறது : அங்கு குடியேறும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், மனதின் மாண்புகளையும், சிக்கல் சிடுக்குககளையும், வேப்பங்கிணற்றில் ஊற்றெடுக்கும் தெளிந்த நீரைப் போல அப்பகுதி மக்களது வாழ்வு மலர்வதையும் , அப்பகுதி விரிவடைவதையும் மக்கள் மொழியில் தேனி சீருடையான் இந்த வேப்பங்கிணறு நாவலில் நவில்கிறார்.

தமிழ் மதி – கருணாகரன், ராக்கம்மா -கருப்பசாமி , நந்தினி – முருகேசன் ஜோடிகளின் காதல் துளிர்ப்பும், தடையும், தவிப்பும், களிப்பும் சொல்லப்படுகிறது. இவ்விணைகளில் பெண்களே காதலை முன்மோழிந்தும் நகர்த்தியும் செல்கிறார்கள்! இந்த ஜோடிகளில் படித்தவர்களாக. அறிமுகமாகும் தமிழ் மதி -கருணாகரன் காதல் மட்டும் சாதீய, கர்வ, கௌரவச் சகதியில் சிக்கி மிதிபடுகிறது . பிற இணைகள் தம்பதியர்களாகி வாழ்வில் இன்பம் எய்துகிறார்கள்.

இவ்விணையர்கள் தவிர, அகமணம் புரிந்த தம்பதியர் இணை மூன்று உள்ளன. வாழ்க்கைச்சூழலின் கட்டாயத்தில் இணைய நேரிட்டாலும் இவர்களது குடும்பத்தை இனிமை பொங்க முன் நகர்த்துவது பெண்களே. இந்த இணைகளில் சந்திரா – ராஜேந்திரன் ஜோடியின் வாழ்க்கை வாசக மனதை ஈர்க்கிறது. வீடற்றவர்களாய் சந்தைக் கடை மறைவில் ஒண்டி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பெரிய ராவுத்தர் அபுபக்கரின் உதவியால் வேப்பங்கிணற்று பகுதியில் குடிசை அமைத்து வாழத் தொடங்கியதும் அவர்களது வாழ்வில் வசந்தம் வீசி மணக்கத்தொடங்குகிறது. இதை வேப்பங்கிணற்று குடியிருப்பு பகுதி சிறுநகரப் பகுதியாகவும், தேனி நகராட்சிப்பகுதியின் விரிவாக்கமாகவும் விரிவதின் ஊடாக சீருடையான் சுவையாக விவரிக்கிறார்.

வேப்பங்கிணற்று குடியிருப்பு பகுதி பல சாதி அடுக்குககளாலும், இஸ்லாமிய குடும்பங்களாலும் நிரம்பிய நல்லிணக்கம் நிறைந்த நடுத்தர, அடித்தட்டு மக்கள் வாழும் பகுதி. இங்கு வேப்பங்கிணற்று ஊற்றுநீரைப் போலவே இப்பகுதியில் வாழும் மக்களிடை காதலும் காமமும் கமழ்கிறது. பலரது வாழ்வில் காதல் கனிந்து மணக்கிறது: காதல் சுடர்ந்து காமமாக ஜுவாலை விடும்போது அதில் குளிர்காயும் நேர்த்தி தவறிக் கருகிப்போன பிரேமலதா, தமிழ் மதி போன்றவர்களின் வாழ்வும் உண்டு: நேர்த்தியாக. குளிர்காயும் நந்தினி -முருகேசன், சந்திரா – ராஜேந்திரன், விருமாண்டி -பூங்கொடி தம்பதியர் போல பல இணைகளும் உண்டு. மானுடம் மகிமை பெறும் காதலின் பரிணாமமான காமத்தைக் கவனமாகக் கையாள வேண்டியதை வலியுறுத்தும் படைப்பாகவும் இந்நாவல் உள்ளது.

வேப்பங்கிணற்றுப் பகுதியை விற்கவும், அந்தப் பகுதி அடித்தட்டு மக்களின் நீராதரமான வேப்பங்கிணற்றை மூடவும் முயற்சிகள் நடக்கிறது. அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து பணம் திரட்டி , அறக்கட்டளை அமைத்து அந்த இடத்தை வாங்கி நாட்டுப்புற தெய்வமான வேம்பு மாரியம்மன் கோவிலை விரிவு செய்கின்றனர். அப்பகுதி நகராட்சியோடு இணைக்கப்பட்டு மூன்று வார்டுகளாக பிரிக்கப்படுகிறது. தேர்தலும் வருகிறது. ஊர்மக்ககள் கூடி ஏகமனைதாக மூவரை நிறுத்த முடிவு செய்யப்படுகிறது. இதைச் சில சுயநலவாதிகள் எதிர்க்கின்றனர். வேட்பாளர்களை நிறுத்துன்றனர். அவர்களை ஊர்மக்களின் ஒற்றுமை வெல்கிறது. இதற்கான பின்னணியில் இடதுசாரியான செந்திநாதன் இருந்து மக்களின் ஒற்றுமையை ஒருங்கிணைத்து வேப்பங் கிணற்றடி நகரை முன்னேற்றுகிறார். இப்படி சுவையாக நாவல் விரிகிறது.

வறுகடலை வறுக்கும் தொழிலும், புளி தட்டி பதப்படுத்தும் தொழிலும் கருப்பசாமி, செல்லியண்ணன், நந்தினி – முருகேசன் போன்ற பாத்திரங்கள் மூலமாக விவரிக்கப்படுவது ருசிகரம். இந்நாவலை வாசிக்கும் நாமும் வேப்பங்கிணற்றுப் பகுதி மக்களில் ஒருவராக உணரத் தோன்றுவது தேனிசீருடையானின் கைவண்ணத்தை மெய்ப்பிக்கிறது என்பதை நீங்களும் வேப்பங்கிணறு நாவலை வாங்கி வாசித்து உணருவீர்.

—————-

“ வேப்பங்கிணறு “ – நாவல்.
ஆசிரியர் : தேனி சீருடையான் (8903936875)
பக். 364.
விலை :₹ 350/.
வெளியீடு : அன்னம் பதிப்பகம். தஞ்சாவூர்.7. (04362 239 289)இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *